Tuesday, October 30, 2012

"ஹலோ" விமான சேவை நிறுத்தம்

"ஹலோ" விமான சேவை நிறுத்தம்





பேசெலில் நடந்து வந்த "ஹலோ" என்ற விமான சேவை, நிதிப்பற்றாக்குறை காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத் தொழிலில் ஏற்பட்ட தடுமாற்றமும் நிறுவனத்தில் உண்டான நிதித் தவறுகளும் ஹலோ விமான நிறுவனத்தைத் திவலாடையச் செய்துள்ளன. இதனால் இந்நிறுவனத்தின் 140 பணியாளர்கள் வேலையிழந்தனர். நிறுவனம் புதிய முதலீட்டாளரை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது.

ஞாயிறன்று இரவு 11 மணிக்குப் பறந்த ஏர்பஸ் A320 என்ற விமான சேவையே ஹலோவின் கடைசிச் சேவையாகும். சுற்றுலா நிறுவனங்களோடிருந்த இரண்டு பெரிய ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டதால் இந்நிறுவனத்தின் நிதிநிலை மிகவும் மோசமடைந்து வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இது தவிர எரிபொருள் விலை உயர்வும் சுவிஸ் ஃபிராங்கின் மாறாத மதிப்பும் ஜெர்மனி நிறுவனத்துடனான ஒப்பந்தம் ரத்தாகக் காரணமாயிற்று. இத்தகைய நல்ல ஒப்பந்தங்கள் ரத்தான பின்பு தொழிலை நடத்துவது இயலாததாகிவிட்டது.

ஹலோவின் தலைமை நிர்வாக அதிகாரி ராபெர்ட் சோமெர்ஸ், செய்திதாளுக்கு அளித்த பேட்டியில், "புது முதலீட்டாளர் கிடைத்தால் இந்த நிறுவனம் திரும்ப இயங்கலாம்" என்றார். இன்று காலை பேசெலில் உள்ள நீதிமன்றம் இந்நிறுவனம் திவாலானதை அறிவித்தது. மறு முதலீட்டாளரைக் கண்டுபிடிப்பதற்கு நவம்பர் மாதம் வரை நீதிமன்றம் கால அவகாசம் அளித்துள்ளது.

முன்னாள் தலைமை நிதி அதிகாரியின் தவறான வழிகாட்டுதலால் ஹலோ நிறுவனத்தின் நிதிநிலை மோசமானதாக மாறியதாக சோமெர்ஸ் தெரிவித்தார். மோரிட்ஸ் ஸுட்டெர்(Moritz Suter) என்பவரே ஹலோவின் எட்டு பங்குதாரர்களில் அதிகமான பங்கிற்கு சொந்தக்காராவார். இவரே இந்நிறுவனத்தை 2003ம் ஆண்டில் தோற்றுவித்தார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!