Wednesday, May 30, 2012

நினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களே





தங்கள் வாழ்வில் நிகழ்ந்த மலரும் நினைவுகளை ஞாபகம் வைத்துக் கொள்வதில் பெண்களைக் காட்டிலும் ஆண்களே சிறந்தவர்கள் என்பது சமீபத்திய ஆய்வொன்றின் முடிவில் தெரியவந்துள்ளது. கனடாவின் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் இதுதொடர்பான ஆய்வினை சமீபத்தில் மேற்கொண்டனர். இவர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட 34 பேரிடம் இந்த ஆய்வை நடத்தினர். 

ஆய்வின் முடிவில், வாழ்வில் கடந்து வந்த உணர்ச்சிப்பூர்வமான நிகழ்வுகள், மலரும் நினைவுகள் உள்ளிட்டவைகளை ஞாபகம் வைத்து பின்னொரு நாளில் வெளிப்படுத்துவதில் பெண்களை காட்டிலும் ஆண்களே முன்னணியில் உள்ளனர் என தெரியவந்துள்ளது. இதன் முடிவுகள் தற்போது இண்டர்நேஷனல் ஜர்னல் ஆப் சைக்கோபிசியாலஜி என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தாகம் வந்தால் குளிர்ந்த தண்ணீரை ஏன் குடிக்கிறோம்?


மூளையின் அடிப்பகுதியில் நரம்பு உயிரணுக்களாலான வேட்கை மையம் எனும் ஒரு தொகுதி உள்ளது. இரத்தத்தில் நீரின் அளவு குறைந்து போகும்போது அந்த வேட்கை மையத்தால் அது உணரப்பட்டு நமக்கு தண்ணீர் தாகம் உண்டாகிறது. தொண்டை உட்பகுதியின் மென்தோல் வறண்டு போகும்போதும் வேட்கை மையத்தில் தண்ணீரின் வறட்சி உணரப்பெற்று அங்குள்ள நரம்புகளால் அவ்வறட்சி மூளைக்கும் உணர்த்தப்பெறுகிறது. வறட்சியால் கிளர்ச்சியுற்ற மேற்கூறிய நரம்புகள் குளிர்ந்த நீரை அல்லது பானங்களைப் பருகும்போது தடிமனாகி வறட்சி தணிந்து விடுகிறது. இவ்வறட்சித் தணிப்பு சூடான பானங்களை அருந்தும்போது நடைபெறுவதைவிட குளிர்ந்த பானங்களை உட்கொள்ளும்போது விரைந்தும், மிகுதியாகவும் நடைபெறுவதே இதற்கு காரணம்.

வாரத்தில் 40 மணி நேரத்திற்கு மேல் உழைத்தால் மூளை பாதிக்குமாம் : ஆய்வில் எச்சரிக்கை




இன்றைய சமுதாயத்தில் சொந்தமாக தொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி அடுத்தவர்களிடம் வேலை பார்ப்பவர்களாக இருந்தாலும் சரி குறிப்பிட்ட அளவில்தான் உழைக்க வேண்டும். வாழ்க்கையே உழைப்பு ஆனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஒரு வாரத்திற்கு 40 மணி நேரம்தான் உழைப்புக்கு செலவிட வேண்டும். உடல் உழைப்பை வெளிப்படுத்தி செய்யும் வேலையாக இருந்தாலும், சிந்தித்து செய்யும் வேலையாக இருந்தாலும் இந்த கால அளவை தாண்டி ஒருவர் வேலை செய்வது அவருக்கு நல்லதல்ல என்கிறது இந்த ஆய்வு. 

வாரத்திற்கு 40 மணி நேரத்தையும் தாண்டி வேலை செய்தால், அதனால் ஏற்படும் பாதிப்பு உடனே தெரியாது என்றும், நடுத்தர வயதை கடந்த பின்பு தான் இந்த பாதிப்பு தெரிய வரும் என்றும், குறிப்பாக, முளையின் சுறுசுறுப்பு குறைய ஆரம்பிக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள் ஆராய்சியாளர்கள். இதுகுறித்து மேலும் கூறிய ஆய்வாளர்கள், சாப்ட்வேர் நிறுவனங்களில் வாரத்திற்கு 5 நாட்கள் வேலை செய்பவர்கள் தினமும் 10 மணி நேரத்துக்கு குறையாமல் வேலை செய்கின்றனர். இதனால் தான் இவர்கள் எளிதில் சோர்வடைகின்றனர், மன அழுத்தத்துக்கும் ஆளாகின்றனர். அதில் இருந்து விடுபடத்தான் விடுமுறை நாட்களை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று கழிக்கின்றனர் என்றனர். யாராக இருந்தாலும் 40 மணி நேரத்தையும் தாண்டி, அலுவலகத்தையே கட்டி அழுபவர் என்றால் இப்போதே உஷாராகிவிடுங்கள். இல்லையென்றால் பிரச்சனை உங்களுக்குத்தான்!