Friday, January 3, 2014

AK 47 உம் சுவாரசியமான 20 சம்பவங்களும் (AK 47 ய் உருவாக்கியவரின் ஜாபகார்த்தமாக)

AK 47 உம் சுவாரசியமான 20 சம்பவங்களும் (AK  47 ய் உருவாக்கியவரின் ஜாபகார்த்தமாக) 


1980களில் நடைபெற்ற ஒரு சம்பவம். அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்களை சந்திக்க விரும்பம் தெரிவித்தார். அதையடுத்து புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் ராமாவாரம் தோட்டம் சென்று எம்.ஜி.ஆரை சந்தித்தார். விடுதலைப் புலிகள் இயக்கம் பற்றி பேசிக்கொண்டு இருந்தபோது, ஆயுதங்கள் வாங்குவதற்கு பணப் பற்றாக்குறை இருப்பதை தெரிந்து கொண்டார் எம்.ஜி.ஆர்.

சந்திப்பு முடிந்து ஆன்டன் பாலசிங்கம் திரும்பியபோது, புலிகள் இயக்கம் கனவில்கூட நினைக்காத அளவில் பணத்தை கொடுத்து அனுப்பினார். போலீஸ் காவலுடன் சென்னையில் இருந்த விடுதலைப்புலிகள் பிரபாகரனின் வீட்டுக்கு பெட்டிகளில் கொண்டுசெல்லப்பட்ட அந்த பணத்தை எண்ணி முடிக்கவே, வீட்டில் இருந்தவர்களுக்கு ஒரு இரவு முழுவதும் தேவைப்பட்டது.

அந்தப் பணத்தில் விடுதலைப் புலிகளின் முதலாவது பெரிய தொகை ஆயுதங்கள் வாங்கப்பட்டன. இந்த உதவிக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்க விரும்பிய விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், எம்.ஜி.ஆரை சந்தித்தார். அப்போது, ஞாபகப் பரிசாக ஒரு ஏ.கே.47 ரக துப்பாக்கியை எம்.ஜி.ஆரிடம் கொடுத்தார் பிரபாகரன்.

எம்.ஜி.ஆரின் இறுதிக் காலம்வரை, அந்த துப்பாக்கி எம்.ஜி.ஆரிடம் இருந்தது. அதன்பின் என்னவாயிற்று என்று தெரியவில்லை.

இப்போது, எம்.ஜி.ஆரும் இல்லை. ஆன்டன் பாலசிங்கமும் இல்லை. பிரபாகரனும் இல்லை. அப்படியானால், இந்த சம்பவத்தை எதற்காக சொல்கிறோம்?

மேலே குறிப்பிட்ட சம்பவத்தில் ஒரு துப்பாக்கி வருகிறது அல்லவா? Avtomat Kalashnikov-47 அல்லது, சுருக்கமாக ஏ.கே.47 என்று உலகம் முழுவதும் அறியப்பட்ட அந்த துப்பாக்கியை உருவாக்கிய மிக்ஹைல் கலாஷ்நிகோவ், நேற்று முன்தினம் (திங்கட்கிழமை)  ரஷ்யாவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 94.

‘உலகம் முழுவதும் அறியப்பட்ட துப்பாக்கி’ என்று குறிப்பிட்டோம் அல்லவா? அது வெறும் சம்பிரதாயத்துக்காக சொல்லப்பட்டதல்ல. நிஜமாகவே, ஆயுதங்களில் உலகப் புகழ்பெற்ற, உலகம் முழுவதும் அறியப்பட்ட துப்பாக்கி இதுதான் என்பது உங்களுக்கு தெரியுமா?

இன்றைய தேதியில் உலகம் முழுவதிலும் 100 மில்லியன் ஏ.கே.-47 துப்பாக்கிகள் பாவனையில் உள்ளன. தீவிரவாத அமைப்புகள் தொடக்கம், உலக நாடுகளின் ராணுவம் வரை ‘விருப்பத்துக்குரிய’ ஆயுதம், இந்த ஏ.கே.-47 துப்பாக்கிதான். இது ஒரு வெறும் துப்பாக்கி என நீங்கள் நினைத்திருந்தால், இந்தக் கட்டுரையை படித்தபின் உங்கள் நினைப்பை மாற்றிக் கொள்வீர்கள். கட்டுரையில் ஏ.கே.-47 துப்பாக்கியுடன் தொடர்புள்ள 20 விஷயங்களையும், 20 போட்டோக்களையும் தருகிறோம்.

அட, இதற்குப் பின் இவ்வளவு விஷயம் இருக்கிறதா என ஆச்சரியப்பட சான்ஸ் உள்ளது.

1) மிக்ஹைல் கலாஷ்நிகோவ், 2-ம் உலக யுத்தத்தின்போது ரஷ்ய ராணுவத்தில் டாங்கி கமாண்டராக இருந்தவர். 1942-ம் ஆண்டு பிரையன்ஸ்க் என்ற இடத்தில் நடந்த யுத்தத்தில் இவரது தோளில் காயம் ஏற்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அதே வைத்தியசாலையில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த மற்றைய ராணுவ வீரர்கள், தாம் யுத்தம் புரிந்தபோது உபயோகித்த ரஷ்ய துப்பாக்கிகள் சரியாக இயங்குவதில்லை என அடிக்கடி பேசிக்கொள்வதை கேட்க நேர்ந்தது.

தாமே ஒரு துப்பாக்கியை ஏன் டிசைன் பண்ணக்கூடாது என்று மிக்ஹைல் கலாஷ்நிகோவ்க்கு தோன்றியது. அந்த ஐடியாவுடன் வைத்தியசாலையில் இருந்து வெளியே வந்து டிசைன் பண்ணிய துப்பாக்கிதான், ஏ.கே.-47.

1-வது போட்டோஏ.கே.-47 துப்பாக்கியை இளவயது மிக்ஹைல் கலாஷ்நிகோவ் டிசைன் செய்தபோது எடுக்கப்பட்டது. 


2) முதலாவது ஏ.கே.-47 துப்பாக்கி 1947-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. 1949-ம் ஆண்டில் இருந்து, ரஷ்ய ராணுவத்தின் பிரதான துப்பாக்கியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ராணுவம் மட்டுமல்ல, 1970களில் இருந்து விடுதலை இயக்கங்களும், தமது பிரதான ஆயுதமாக ஏ.கே.-47 துப்பாக்கியையே பயன்படுத்த தொடங்கினர்.

2-வது போட்டோ, இலங்கையில் 1980களின் நடுப்பகுதியில், தமிழீழ விடுதலை இயக்க (டெலோ) போராளிகள், இலங்கை ராணுவத்துக்கு எதிரான தாக்குதல் ஒன்றை நடத்த ஏ.கே.-47 துப்பாக்கிகளுடன் வேனில் செல்லும் காட்சி. இதில் யாராவது இப்போது உயிருடன் இருக்கிறார்களா, தெரியவில்லை.

3) ஏ.கே.-47 துப்பாக்கியின் குறைந்த தயாரிப்பு செலவு, இலகுவில் பழுது பார்க்கும் வசதி ஆகியவை ஒரு பக்கமாக இந்த துப்பாக்கியை பிரபலமாக்கின. மற்றொரு பக்கமாக, இதன் பிளஸ் பாயின்ட், உலகின் எந்த பகுதியிலும், எந்த காலநிலையிலும் ஜாம் ஆகாது சுடக்கூடிய துப்பாக்கி இது என்பதால், அனைவராலும் விரும்பப்பட்டது.

அமெரிக்க தயாரிப்பு துப்பாக்கிகள் பாலைவன மணலிலும், கடும் மழையின்போதும், ஜாம் ஆகிவிடும் என்ற நிலையில் இருக்க, ஆப்கானிஸ்தான் ‘கிராம பாதுகாப்பு படையில்’ உள்ள பெண்களே ஏ.கே.-47 துப்பாக்கிகளுடன் நிற்பதை 3-வது போட்டோவில் பாருங்கள்.

4) ரஷ்யாவின் டாப் கூடைப்பந்து விளையாட்டு வீரரின் பெயர், அன்ட்ரே கிரிலென்கோ. சரி இவருக்கும் ஏ.கே.-47 துப்பாக்கிக்கும் என்ன தொடர்பு? கூடைப்பந்த விளையாட வரும்போது துப்பாக்கியுடன் வருவாரா? சேச்சே அதல்ல.

இவர் பிறந்த நகரத்தின் பெயர், துப்பாக்கி இஸ்கவ்ஸ்க். இந்த நகரத்தில்தான், ஏ.கே.-47 துப்பாக்கி தொழிற்சாலை உள்ளது. கூடைப்பந்து விளையாட்டில் இவரது இலக்கம் 47. இந்த இரண்டையும் சேர்ந்து இவருக்கு கிடைத்த பட்டப்பெயர், ஏ.கே.-47. ரஷ்ய விளையாட்டு ரசிகர்கள், “இதோ, ஏ.கே.-47 கையில் பந்து கிடைத்து விட்டது” என உற்சாக கூச்சல் எழுப்ப, 47-ம் இலக்கம் பொறிக்கப்பட்ட உடையுடன் ‘ஏ.கே.-47’ அன்ட்ரே கிரிலென்கோவை 4-வது போட்டோவில் பாருங்கள்.

5) கொலம்பியா நாட்டைச் சேர்ந்த இசைக் கலைஞர் சீசர் லோபஸ் சுமார் ஒரு டஜன் ஏ.கே.47 துப்பாக்கிகளை வாங்கி, அவற்றை கிடார் வாத்தியமாக மாற்றினார் (யுத்தம் கூடாது என்பதை சிம்பாலிக்காக காட்டுவதற்கு). 2007-ம் ஆண்டு ஐ.நா. பொதுச்செயலாளராக இருந்த கோபி அனனை சந்தித்த சீசர் லோபஸ் ஏ.கே.-47 கிடாரை பரிசாக கொடுத்தபோது எடுத்ததுதான், 5-வது போட்டோ.

6) பெலாரஸ் நாட்டில் மேல்நிலைப் பள்ளி வகுப்பறைகளுக்குள் ஆசிரியர்களால் எடுத்துச் செல்லப்படும் துப்பாக்கி, ஏ.கே.-47தான்! காரணம், அங்கு மேல்நிலைப் பள்ளியில், ராணுவ பாடம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. அதில் செய்முறைப் பயிற்சியாக ஏ.கே.-47 துப்பாக்கியை இயக்குதல் மற்றும், கழட்டிப் பூட்டும் பயிற்சிகளுக்கு நிஜ ஏ.கே.-47 துப்பாக்கிகளை பயன்படுத்துவதை 6-வது போட்டோவில் பாருங்கள்.

7) உலகப் புகழ் பெற்ற ஏ.கே.-47 துப்பாக்கி படம் பொறிக்கப்பட்ட நாணயம் ரஷ்யாவில் வெளியிடப்படுவது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஆனால், சமாதானத்தை விரும்பும் நியூசிலாந்து நாடு, 2 டாலர் நாணயம் ஒன்றில் ஏ.கே.-47 துப்பாக்கியின் படம் பொறித்து வெளியிட்டது. இந்த துப்பாக்கி தயாரிக்கப்பட்டு 60 ஆண்டுகள் பூர்த்தியானதை அடுத்து, இந்த நாணயம் வெளியிடப்பட்டது.

8) ஏ.கே.-47 துப்பாக்கியை, தேசியக் கொடியில் வைத்திருக்கும் நாடு எது தெரியுமா? மொசாம்பிக். இவர்களது தேசியக் கொடியில் ஏ.கே.-47 படம் இருப்பதை 8-வது போட்டோவில் பார்க்கவும். அதேபோல லெபனானின் ஹிஸ்பொல்லா இயக்கத்தின் கொடியிலும் ஏ.கே.-47 துப்பாக்கி உள்ளது.  

9) ஏ.கே.-47 துப்பாக்கியின் பெயர், கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. உலக அளவில் அதிக எண்ணிக்கையில் (100 மில்லியன்) பயன்பாட்டில் உள்ள துப்பாக்கி என கின்னஸ் பதிவு சொல்கிறது. 9-வது படத்தில் ஏ.கே.-47 எப்படி உபயோகிக்கப்படுகிறது பாருங்கள்.

போட்டோவில் உள்ளது, பாலஸ்தீன போலீஸ் படையில் ஆட்களை சேர்க்கும்போது வைக்கப்படும் ஒரு டெஸ்ட். அதாவது, ஏ.கே.-47 துப்பாக்கியால் சடசடவென்று மண்ணில் சுடுவார்கள். போலீஸ் வேலைக்கு விண்ணப்பித்த நபர் ‘டைவ்’ அடித்து தப்பிக்க வேண்டும். அடேங்கப்பா.. நம்ம மருதை ஏட்டையா இப்படி அடிப்பாரா டைவ்?

10) உலகில் 106 நாடுகளைச் சேர்ந்த ராணுவம், மற்றும் அதிரடிப் படையினர், ஏ.கே.-47 துப்பாக்கிகளை தற்போது உபயோகிக்கின்றனர். அதைவிட அதிக எண்ணிக்கையில் அந்த ராணுவத்துடன் யுத்தம் புரியும் விடுதலை இயக்கங்களும் இதே துப்பாக்கியை உபயோகிக்கின்றனர். 1980-ம் ஆண்டு ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், ஏ.கே.-47 ஏந்திய பாதுகாவலுடன் இருப்பதை 10-வது போட்டோவில் பார்க்கவும்.

11) ரஷ்ய துப்பாக்கி என அறியப்பட்ட ஏ.கே.-47, ரஷ்யாவில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது என்று நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை. சுமார் 30 நாடுகளில் ஏ.கே.-47 துப்பாக்கிகளை தயாரிக்க லைசென்ஸ் கொடுத்துள்ளது ரஷ்யா. அப்படி லைசென்ஸ் பெற்று ஏ.கே.-47 துப்பாக்கிகளை தயாரிக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா என்பது உங்களுக்கு தெரியுமா?

பாக்தாத் பல்கலைக்கழக மாணவர்களையும், மாணவிகளையும் துப்பாக்கி பயிற்சிக்கு வாருங்கள் என 1998-ம் ஆண்டு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களுக்கு பயிற்சி கொடுக்க உபயோகிக்கப்பட்ட துப்பாக்கிகள், ஏ.கே.-47தான். 11-வது போட்டோவில், பாக்தாத் பல்களைக்கழக மாணவி ஒருவர் ஏ.கே.-47 துப்பாக்கியை ஹான்டில் பண்ணுவதை பாருங்கள்.

12) கடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி, இத்தாலியின் ஜியோயா டோரோ துறைமுகத்துக்கு வந்த கப்பலில் இருந்த கன்டெயினர் ஒன்றை கஸ்டம்ஸ் அதிகாரிகள் சோதனையிட்டபோது, அதற்குள் 8,000 ஏ.கே.-47 துப்பாக்கிகள் இருந்தன. அப்போது எடுக்கப்பட்ட போட்டோதான், 12-வது போட்டோவாக இணைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு அதிக எண்ணிக்கையில் ஒரே ரக ஆயுதங்கள் (பெறுமதி 6 மில்லியன் யூரோ) இதுவரை பிடிபட்டதில்லை.

சரி. அந்தக் கப்பலில் ஆயுதங்கள் எங்கே போக இருந்தன? ரோமானியாவில் இருந்து அமெரிக்காவுக்கு சென்ற கப்பல் அது! அடப் பாவிகளா!

13) ஏ.கே.-47, தயாரிப்பு செலவு குறைந்த துப்பாக்கி என குறிப்பிட்டு இருந்தோம். இன்றைக்கு ஆயுத சந்தையில் இந்த துப்பாக்கியின் விலை என்ன தெரியுமா? ஒரு துப்பாக்கி சராசரியாக 540 டாலர்! மற்றொரு விஷயம், சில ஆபிரிக்க நாடுகளில் இருந்து கடத்தப்பட்டு, ஆயுத கறுப்பு சந்தையில் இதே துப்பாக்கி 200 டாலர் குறைவாக விற்பனையாகிறது.

இவ்வளவு மலிவாக உள்ளதால், மொன்ரோவியா டவுன்டவுனில் நடந்த ஒரு வீதிச் சண்டையிலும் ஏ.கே.-47 துப்பாக்கி உபயோகிக்கப்படுவதை, 13-வது போட்டோவில் பாருங்களேன்.

14) அதிர்ச்சியான ஒரு விஷயம் தெரியுமா? உலக அளவில் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில், மிக அதிக எண்ணிக்கையானவர்கள் ஏ.கே.-47 துப்பாக்கியில் இருந்து வந்த ரவையால்தான் உயிரிழந்துள்ளனர். ஆம். ஆட்டிலரி தாக்குதல், விமான தாக்குதல் மற்றும் ராக்கெட் தாக்குதல்களில் இறந்தவர்களின் மொத்த கூட்டுத்தொகையைவிட, ஏ.கே.47 துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்!

இன்றுகூட ஆண்டுக்கு சுமார் கால் மில்லியன் பேர் ஏ.கே.-47 துப்பாக்கியால் கொல்லப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்கிறது புள்ளிவிபரம். 14-வது போட்டோவில், இந்தோனேசியா காட்டுக்குள் ஏ.கே.-47 துப்பாக்கியுடன் பயிற்சி எடுப்பவர்களின் வயதைப் பாருங்கள்! 1999-ம் ஆண்டு எடுக்கப்பட்ட போட்டோ அது.

15) அமெரிக்க அதிரடிப் படையால் கொல்லப்பட்ட அல்-காய்தா தலைவர் ஒசாமா பின்லேடன், தமது வீடியோ பேட்டிகள் அனைத்திலும் தமக்கு அருகே ஏ.கே.-47 துப்பாக்கி இடம்பெறுமாறு பார்த்துக் கொண்டார் என்பதை 15-வது போட்டோவில் பார்க்கவும். காரணம், அவர் முதல் முதலில் இயக்கிய எந்திரத் துப்பாக்கி, ஏ.கே.-47 என்ற அபிமானத்தால்!

ஆமா.. பின்-லேடனுக்கு முதல் முதலில் ஏ.கே.-47 துப்பாக்கியை கொடுத்தது யார்? சாட்சாத், அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ.தான்!

ஆப்கானிஸ்தானில் ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக போர் புரிய அல்-காய்தாவுக்கு ஏ.கே.-47 ரக துப்பாக்கிகளை முதலில் கொடுத்தது சி.ஐ.ஏ.தான். பாகிஸ்தான் உளவுத்துறை மூலம் அந்த துப்பாக்கிகள் ஆப்கானிஸ்தானுக்குள் சென்றன!

16) வியட்நாம் யுத்தத்தில் நடந்த ஒரு தமாஷ் தெரியுமா? அநேக அமெரிக்க ராணுவ வீரர்கள், தமது (அமெரிக்க தயாரிப்பு) M16 எந்திரத் துப்பாக்கிகளை, (ரஷ்ய தயாரிப்பு) ஏ.கே.-47 துப்பாக்கிகளுக்கு மாற்றீடு செய்து கொண்டார்கள்.

யுத்தத்தில் வியட்நாமியர்களை சுட்டு வீழ்த்தியபோது, தமது M16 துப்பாக்கிகளை வீசிவிட்டு, உயிரிழந்த வியட்நாமியர்களின் உடலில் இருந்த ஏ.கே.-47 துப்பாக்கிகளை எடுத்து பயன்படுத்தினார்கள். காரணம், வியட்நாமிய காலநிலையில் அமெரிக்க துப்பாக்கிகள் அடிக்கடி ஜாம் ஆகின. ஏ.கே.-47 துப்பாக்கிகள் துல்லியமாக இயங்கின.

16-வது போட்டோவில் ஏ.கே.-47 துப்பாக்கிகளுடன் இருப்பது, நிக்கரகுவா நாட்டு அதிரடிப்படை. “COE” (Centro de Operaciones Especiales) என்ற பெயருடடைய இந்த அதிரடிப் படையினரின் தனித் திறமை என்ன தெரியுமா? சகதிகளுக்குள் விழுந்து புரண்டு சண்டையிடுவது. சகதிக்குள் விழுந்தாலும், அற்புதமாக இயங்கும் துப்பாக்கிகள் ஏ.கே.-47 என்கிறார்கள் இவர்கள்.

17) ரஷ்யாவில் பிரபலமான ஒன்று ஏ.கே.-47 துப்பாக்கி என்றால், மற்றொரு பிரபலமான விஷயம் என்ன தெரியுமல்லவா? ஆம். வாட்கா மதுபானம். இந்த வாட்கா மதுபானத்தை பயன்படுத்தி செய்யும் காக்டெயில் ஒன்றின் பெயர், ஏ.கே.-47ன் பெயர்தான்!

‘Kalashnikov shot’ எனப்படும் அந்த காக்டெயில், வாட்கா, அப்சிந்த், கறுவா, சர்க்கரை ஆகியவற்றின் கலவை. ரஷ்யா போகும்போது டேஸ்ட் பண்ணி பார்க்கவும். ஜாக்கிரதை… அடித்தால், ஆளை வீழ்த்திவிடும்! 17-வது ‘அதிர்ச்சி’ போட்டோவில், ஈராக்கிய பாதுகாப்பு படையினரின் கையில் உள்ள ஏ.கே.-47 துப்பாக்கி எந்த நிமிடமும் வெடிக்க போகிறது. அதில் இருந்து வெளியாகப்போகும் ரவைக்கு உயிரைவிட தயாராக உள்ளவர், அல்-காய்தா சந்தேக நபர் ஒருவர்.

18) ஈராக்கில் அமெரிக்கப் படைகள் சதாம் ஹூசேனின் மாளிகையை கைப்பற்றியபோது, அங்கிருந்தது எடுக்கப்பட்ட ஆயுதங்களில் ஒன்று, ஏ.கே.-47 துப்பாக்கி. அதில் அப்படியென்ன விசேஷம்? முழுமையாக தங்கத்தால் முலாம் பூசப்பட்டிருந்த துப்பாக்கி அது! 18-வது போட்டோவும் ‘அதிர்ச்சி’ போட்டோதான்.

தாய்லாந்தின் யாலா மாகாண காட்டுக்குள் சுட்டு வீழ்த்தப்பட்ட தீவிரவாதி ஒருவரின் போட்டோ அது. உயிரிழந்த நிலையிலும், தனது ஏ.கே.-47 துப்பாக்கியை விடாமல் பற்றியிருப்பதை பாருங்கள்.

19) இலங்கையில் யுத்தம் முடிந்தபின், இறுதி யுத்தம் பற்றிய விபரங்களுக்காக சில ராணுவ தளபதிகளை சந்தித்து பேட்டியெடுக்க வேண்டியிருந்தது. அப்போது இலங்கை ராணுவத்தின் பெரிய தளபதிகளில் ஒருவர், விடுதலைப்புலிகள் பற்றி தெரிவித்த ஒரு விஷயம், “புலிகள் இயக்கத்தில் இரு திறமைசாலியான தளபதிகள் இருந்தார்கள். இருவரும் உயிரிழந்ததுதான் சோகம். அவர்கள் எமது ராணுவத்தில் இருந்திருந்தால், நாம் எப்போதோ யுத்தத்தை முடித்திருப்போம்”

அவர் குறிப்பிட்ட இரு தளபதிகளில் ஒருவர், பால்ராஜ் (மற்றையவர் தீபன்). 19-வது போட்டோ, புலிகள் ராணுவ முகாம் ஒன்றை தாக்க சென்றபோது எடுக்கப்பட்டது. அதில், தண்ணீரைத் தாண்டி பால்ராஜ் செல்லும்போது, அவருக்கு பின்னால் உள்ள போராளி உயர்த்தி பிடித்துள்ள துப்பாக்கி, ஏ.கே.-47!

20) ஏ.கே.-47 துப்பாக்கியை உருவாக்கிய மிக்ஹைல் கலாஷ்நிகோவ், அந்த துப்பாக்கி மில்லியன் கணக்கானவர்களின் உயிர்களை எடுத்தது குறித்து என்ன சொன்னார்?

1997-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி அவர் கலந்துகொண்ட துப்பாக்கி கண்காட்சி ஒன்றில் பேசியபோது (அப்போது எடுக்கப்பட்ட போட்டோதான் 20-வது போட்டோ) “இது குறித்து நான் கவலைப்படவில்லை. மக்களை கொல்லும் பாவச்செயலை செய்வது அரசியல்வாதிகள்தான். துப்பாக்கியை வடிவமைத்த நான் அல்ல. நான் இப்போது படுத்தாலும், நிம்மதியாக தூங்க முடிகிறது. காரணம், அந்த பாவத்தின் சுமை, என் தலையில் இல்லை” என்றார்.

மிக்ஹைல் கலாஷ்நிகோவ், கடந்த திங்கட்கிழமை இறந்து போனார். ஆனால், அவர் உருவாக்கிய ஏ.கே.-47 துப்பாக்கி இன்னமும் பல ஆண்டுகளுக்கு வெடித்துக் கொண்டுதான் இருக்கப் போகிறது!


நன்றி
ரிஷி அண்ணா (விறு) 


வாவ்... மக்காவ் கேஸினோக்களின் 2013ம் ஆண்டு வரும்படி ரூ. 279 ஆயிரம் கோடியாம்!

வாவ்... மக்காவ் கேஸினோக்களின் 2013ம் ஆண்டு வரும்படி ரூ. 279 ஆயிரம் கோடியாம்! உலகின் மிகப் பெரிய சூதாட்ட மையம் என்ற பெருமையை 2013ம் ஆண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது சீனாவின் சின்னஞ் சிறிய சூதாட்ட நகரான மக்காவ். 

இங்குள்ள சூதாட்ட கேஸினோக்கள் 2013ம் ஆண்டில் ஈட்டிய வருவாய் ரூ. 279 ஆயிரம் கோடியாகும். வருடத்திற்கு வருடம் இங்குள்ள கேஸினோக்கள் ஈட்டும் வருவாயின் அளவு கூடிக் கொண்டேதான் போகிறதாம். மேலும் இங்குள்ள கேஸினோக்களுக்கு சூதாட வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியேதான் இருக்கிறதாம்.

குட்டி நகரம் 

மக்காவ், சீனாவின் மிக சிறிய நகரமாகும். இங்கு சூதாட்டம்தான் பிரதான தொழிலாகும்.


3 டஜன் கேஸினோக்கள் 

இந்த குட்டி நகரில் 3 டஜன் கேஸினோக்கள் உள்ளன. இந்த கேஸினோக்கள்தான் இப்படி வருவாயை அள்ளிக் கொட்டுகின்றன.


18.6 சதவீத வருவாய் உயர்வு 

2012ம் ஆண்டை விட 2013ம் ஆண்டில் இங்குள்ள கேஸினோக்கள் பெருமளவில் வருவாய் ஈட்டியுள்ளன. அதாவது 18.6 சதவீத உயர்வை இவை கண்டுள்ளன.


லாஸ் வேகாஸை விட 7 மடங்கு அதிகம் 

மக்காவ் கேஸினோக்கள் ஈட்டும் வருவாயானது, அமெரிக்காவின் சூதாட்ட நகரமான லாஸ் வேகாஸில் உள்ள கேஸினோக்கள் ஈட்டும் வருவுாயை விட 7 மடங்கு அதிகமாகும்.


போர்ச்சுக்கீசிய நகரம் 

முன்பு மக்காவ், போர்ச்சுகீசியர்களின் வசம் இருந்த நகராகும். அப்போதுதான் இது கேஸினோ நகரமாக அவதாரம் எடுத்தது. இப்போது அது பாரம்பரியத் தொழிலாகி விட்டது. மேலும் இங்கு பல்வேறு வெ்ளிநாட்டு கேஸினோக்களும் கூட சூதாட்டத்தை நடத்தி வருகின்றன.

ஹாங்காங்குக்கு அருகில் 

ஹாங்காங்குக்கு அருகில் உள்ளது மக்காவ். அங்கிருந்து படகு மூலம் ஒரு மணி நேரத்தில் வந்து விடலாம்.


மூன்று நாடுகள், மூன்று கப்பல்கள், ஒரு ஹெலிகாப்டர்: நடுக்கடலில் ஒரு சாகச மீட்பு!

மூன்று நாடுகள், மூன்று கப்பல்கள், ஒரு ஹெலிகாப்டர்: நடுக்கடலில் ஒரு சாகச மீட்பு!கடந்த மாதம் 24-ம் தேதியில் இருந்து பனிக்கட்டிகளுக்கு மத்தியில் சிக்கியிருந்த 52 பயணிகளும் நேற்று (வியாழக்கிழமை) ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். இவர்கள் பயணித்த ரஷ்ய கப்பல், பனிக்கட்டிகளுக்கு இடையே இன்னமும் சிக்கியபடி நிற்கிறது. அந்தக் கப்பலின் 22 மாலுமிகளும், தமது கப்பலிலேயே தங்கியுள்ளனர்.

52 பயணிகளையும் மீட்பதற்காக ஆஸ்திரேலிய கப்பலும், சீன கப்பலும் அங்கு சென்றிருந்தன என்றும், மீட்புப் பணியின்போது சீனக் கப்பலும் பனிக் கட்டிகளிடையே சிக்கி விட்டது எனவும் நேற்று வெளியிட்டிருந்தோம் அல்லவா?

சீனக் கப்பல் தற்போதும் பனிக்கட்டிகளிடையே சிக்கியுள்ள நிலையில் அசைய முடியாது சிக்கியுள்ளது என்ற போதிலும், அந்தக் கப்பலின் உதவியுடன்தான் இந்த 52 பயணிகளும் மீட்கப்பட்டனர். அது எப்படியென்றால், சீனக் கப்பலில் இருந்த ஒரு ஹெலிகாப்டர் மூலமாகவே ரஷ்யக் கப்பலில் இருந்து மீட்கப்பட்டு ஆஸ்திரேலிய கப்பலில் ஏற்றப்பட்டுள்ளனர்.

மொத்தம் 12 பயணிகள்தான் ஹெலிகாப்டரில் ஏற முடியும் என்பதால், பயணிகளுக்காக 5 ட்ரிப்பும், அவர்களது உடமைகளுக்காக இரு ட்ரிப்களும் அடித்தது ஹெலிகாப்டர்.

மீட்கப்பட்ட பயணிகள் ஆஸ்திரேலிய கப்பலில் கிளம்பி விட்டார்கள். ஆனால், அவர்கள் வீடு சென்று சேர இன்னமும் பல வாரங்கள் எடுக்கும். காரணம், இந்த ஆஸ்திரேலிய கப்பல், அவர்களது கேசி-அன்டார்க்டிக் கடல்தளம் சென்று எரிபொருள் நிரப்பி கொண்டுதான், ஆஸ்திரேலியாவின் தெற்கு துறைமுகமான ஹோபார்ட்டை சென்றடையும். அதற்கு சில வாரங்கள் பிடிக்கும்!

பனிக்கட்டிகளுக்கு நடுவே கப்பலை விட்டுவிட்டு அனைவரும் வெளியேறிவிட்டால், கப்பல் சேதமடைந்து விடலாம் என்ற காரணத்தால், கப்பல் கேப்டனும், 21 மாலுமிகளும் தாம் ஹெலிகாப்டரில் வரவில்லை என்று கூறிவிட்டு கப்பலில் தங்கியுள்ளனர். பனிக்கட்டிகளுக்கு இடையேயிருந்து கப்பல் மீட்கப்படும்போதுதான், அவர்கள் மீட்கப்படுவார்கள்.

மூன்று நாடுகள், மூன்று கப்பல்கள், ஒரு ஹெலிகாப்டர் தொடர்புபட்ட இந்த மீட்பு நடவடிக்கையின்போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் சிலவற்றை தேர்ந்தெடுத்து தந்துள்ளோம்.

கப்பலுக்கு வெளியே கடலின் மேல்ப்பகுதி ஐஸ் பாளமாக மாறியுள்ள நிலையில் ஐஸில் ஹெலிகாப்டர் இறங்குவதை 1-ம் போட்டோவில் பாருங்கள். ஹெலிகாப்டர் வந்து இறங்குவதை கப்பலின் மேல் தளத்தில் உள்ள பயணிகள் பார்ப்பதை 2-வது போட்டோவிலும், உதவி வந்துவிட்டது என பயணிகள் ஒரு ‘ஆட்டம் போடுவதை’ 3-வது போட்டோவிலும் பாருங்கள். (சந்தோஷமாக இருக்காதா அவிங்களுக்கு?)

கடலின் மேற்பகுதியில் பனிக்கட்டிக்கு மேல் எப்படி தற்காலிக ஏற்பாடு செய்து ஹெலிகாப்டரை இறக்கினார்கள் என்பதை 4-வது போட்டோவை பாருங்கள். 5-வது போட்டோவில் பயணிகள் ஹெலிகாப்டரில் ஏறுவதை காணலாம்.

6-வது போட்டோவை அவசியம் பாருங்கள். மீட்கச் சென்ற கப்பல் எப்படி ஐஸ் பாளங்களில் சிக்கியுள்ளது என்பதை, வானில் இருந்து பார்த்தால்தான் நிலைமை புரியும் என்பதால், 6-வது போட்டோவாக அதையும் இணைத்துள்ளோம்.

அய்யா ஆஸ்திரேலியா கேப்டனே… ஐஸ் பாறைகளில் மோதாமல் சாக்கிரதையாக ஓட்டிகிட்டு போங்கப்பு!
5 லட்சம் வானவேடிக்கைகளுடன் கின்னஸ் சாதனயோடு புத்தாண்டை வரவேற்ற துபாய்

5 லட்சம் வானவேடிக்கைகளுடன் கின்னஸ் சாதனயோடு புத்தாண்டை வரவேற்ற துபாய் புத்தாண்டையொட்டி நள்ளிரவில் 5 லட்சம் வானவேடிக்கைகள் வெடிக்கப்பட்டது. இது கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. 

புத்தாண்டு பிறக்கையில் அதை வரவேற்கும் விதமாக துபாயில் பிரமாண்டமாக வானவேடிக்கை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த வான வேடிக்கை நிகழ்ச்சியை பிரமாதமாக நடத்தி கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்க வேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்தனர். 

அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவில் சரியாக 12 மணிக்கு வானவேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை நடத்த கடந்த 10 மாதங்களாக திட்டமிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


5 லட்சம் வானவேடிக்கைகள் 

நேற்று முன்தினம் இரவு 12 மணி அடித்ததும் 5 லட்சம் வானவேடிக்கைகள் விடப்பட்டன. தொடர்ந்து 6 நிமிடங்கள் நடந்த நிகழ்ச்சி தான் இதுவரை உலகில் நடந்த பிரமாண்ட வானவேடிக்கையாகும்.

கின்னஸ் சாதனை 

துபாயில் நடந்த வானவேடிக்கை நிகழ்ச்சி புதிய சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இதற்கு முன்பு 2012ம் ஆண்டில் குவைத்தின் பொன் விழா ஆண்டு கொண்டாட்டத்தின்போது 77 ஆயிரத்து 282 வானவேடிக்கைகள் வெடிக்கப்பட்டது தான் கின்னஸ் சாதனையாக இருந்தது.

புர்ஜ் கலிபா 

வான வேடிக்கைகள் துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபா, பாம் ஜுமைரா, புர்ஜ் அல் அராப் உள்ளிட்ட கட்டிடங்களின் வடிவில் இருந்தது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

100 கம்ப்யூட்டர்கள் 

இந்த பிரமாண்ட வானவேடிக்கை நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க 100 கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சரியான நேரத்தில் நிகழ்ச்சி துவங்க வேண்டும் என்பதற்காக 200 நிபுணர்கள் பணியாற்றியுள்ளனர்.


Thursday, January 2, 2014

ஐஸ் கட்டிகளுக்குள் சிக்கி நிற்கும் ரஷ்ய கப்பலை மீட்க சென்ற சீன கப்பலும் ஐஸில் சிக்கியது!

ஐஸ் கட்டிகளுக்குள் சிக்கி நிற்கும் ரஷ்ய கப்பலை மீட்க சென்ற சீன கப்பலும் ஐஸில் சிக்கியது!2 பயணிகள் (இவர்களில் பெரும்பாலானோர் கடல் ஆராய்ச்சியாளர்கள்) மற்றும் 22 மாலுமிகளுடன் கடல் நடுவே ஐஸ்கட்டிகளுக்குள் சிக்கி நிற்கும் ரஷ்ய கப்பலில் உள்ளவர்கள், ஐஸ்கட்டிகளுக்கு நடுவே புத்தாண்டை கொண்டாடினார்கள். இவர்களது கப்பலை பனிக்கட்டிகளுக்கு வெளியே இழுத்து மீட்கும் முதலாவது முயற்சி தோல்வியடைந்தது பற்றி எழுதியிருந்தோம்.

இப்போது 2-வது முயற்சியும் தோல்வியடைந்துள்ளது.

இப்போது நிலைமை முன்பைவிட மோசமாகி விட்டது. எப்படியென்றால், கப்பலை பனிக்கட்டிகளுக்கு வெளியே இழுப்பதற்கு போன கப்பலும், அதே பனிக்கட்டிகளுக்கு நடுவே சிக்கிக் கொண்டது. இப்போது இரண்டு கப்பல்களையும் மீட்க வேண்டியுள்ளது.

இந்தக் கப்பலை பனிக்கட்டிகளில் இருந்து வெளியே இழுக்கும் மீட்பு நடவடிக்கைகளுக்காக இரு பெரிய கப்பல்கள் விரைகின்றன என எழுதியிருந்தோம். அவற்றில் முதலாவதாக அங்கு சென்றடைந்த ஆஸ்திரேலிய கப்பலான அவுரோரா அவுஸ்திரேலிஸ், ரஷ்யக் கப்பலை சூழ்ந்துள்ள ஐஸ் கட்டிகளை உடைக்கும் முயற்சியில் இறங்கியபோது வெற்றி பெறவில்லை.

கடல் கொந்தளிப்பும், வேகமாக காற்றும் சேர்ந்து ஆஸ்திரேலிய கப்பலை ஐஸ் கட்டிகளுக்குள் தள்ளிவிடக்கூடிய நிலை ஏற்பட்டது. அதையடுத்து, ஆஸ்திரேலிய கப்பலின் கேப்டன் முர்ரே டோய்ல், மீட்பு முயற்சியை கைவிட்டு, தமது கப்பலை 2 கடல் மைல்கள் பின்வாங்க செய்து, அங்கேயே காத்திருந்தார்.

இந்த நிலையில்தான் இரண்டாவது மீட்புக் கப்பல் அங்கு வந்து சேர்ந்தது. இது சீனாவின் கப்பல். இதுவும் ஐஸ்கட்டிகளை உடைக்கும் திறன்கொண்ட ஐஸ்பிரேக்கர் கப்பல்தான். சீனக் கப்பலின் பெயர், சூ லொங் (அர்த்தம், பனி ட்ராகன்).

இந்தக் கப்பல் ரஷ்ய கப்பலை நெருங்க முயன்றது. சுமார் அரை கி.மீ. தொலைவுக்கு ஐஸ் கட்டிகளை உடைத்துக்கொண்டு முன்னேறிய சீனக் கப்பல், அதற்குமேல் முன்னேற முடியவில்லை. பலத்த முயற்சியின் பின் இனியும் முன்னே செல்ல முடியாது என்று தெரிந்துவிட்ட நிலையில் சீனக் கப்பல் திரும்பி வர முயன்றபோது, அதுவும் முடியவில்லை.

காரணம், மீட்கச் சென்ற சீனக் கப்பலும் ஐஸ்கட்டிகளுக்கு நடுவே சிக்கிக் கொண்டது (5-வது போட்டோவை பார்க்கவும்).

இப்போது ஒரே வழி, ஹெலிகாப்டர் மூலம் முதலில் சிக்கிய ரஷ்யக் கப்பலில் இருந்தவர்களையும் மீட்க வேண்டும். அதை மீட்கச் சென்ற சீனக் கப்பலில் உள்ளவர்களையும் மீட்க வேண்டும். தமது கப்பலுக்கு எதிரேயுள்ள ஐஸை சீனக் கப்பலின் கேப்டன் சுட்டிக் காட்டுவதை 6-வது போட்டோவில் பார்க்கவும்.

ரஷ்யக் கப்பலில் உள்ளவர்களுக்கு, சூழ்நிலையின் தீவிரத்தையும், மீட்பு பணியின் புரோகிரஸ் பற்றியும் விளக்கம் அளிக்க கப்பலுக்கு உள்ளே பிரீஃபிங் கூட்டங்கள் தினமும் நடைபெறுகின்றன (3-வது போட்டோ). கடல் நடுவே, பனிக்கட்டிகளுக்கு மேலே ஹெலிகாப்டர் வந்திறங்க தளம் (ஹெலிபேட்) ஒன்றை அமைப்பது பற்றி ஆலோசனை செய்யப்படுகிறது.

பனிப் பாறைகளுக்கு நடுவே கப்பல் தென்படுவதை 1-வது போட்டோவில் தொடங்கி, பனிக் கட்டிகளுக்கு நடுவே சிக்கிக் கொண்ட பயணிகள் தற்போது என்ன செய்கிறார்கள் என்பதை ஒவ்வொரு போட்டோவாக பார்க்கவும். சாதாரண கடல் பயணங்களின்போது காண முடியாத, வித்தியாசமான காட்சிகள் இவை.


ஐஸ் கட்டிகளுக்குள் சிக்கி நிற்கும் ரஷ்ய கப்பலை மீட்கும் முதல் முயற்சி தோல்வி!

ஐஸ் கட்டிகளுக்குள் சிக்கி நிற்கும் ரஷ்ய கப்பலை மீட்கும் முதல் முயற்சி தோல்வி!52 பயணிகள் (இவர்களில் பெரும்பாலானோர் கடல் ஆராய்ச்சியாளர்கள்) மற்றும் 22 மாலுமிகளுடன் கடல் நடுவே ஐஸ்கட்டிகளுக்குள் சிக்கி நிற்கும் ரஷ்ய கப்பல் பற்றிய கட்டுரையையும் போட்டோக்களையும் வெளியிட்டிருந்தோம்.  (அந்த கட்டுரையை தவறவிட்டவர்கள் இங்கே கிளிக் செய்யவும்)

இந்தக் கப்பலை பனிக்கட்டிகளில் இருந்து வெளியே இழுக்கும் மீட்பு நடவடிக்கைகளுக்காக இரு பெரிய கப்பல்கள் விரைகின்றன எவும் அந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம்.

ரஷ்யக் கப்பலை மீட்க அனுப்பி வைக்கப்பட்ட ஆஸ்திரேலிய கப்பல், பனிக்கட்டிகளுக்குள் சிக்கியுள்ள ரஷ்ய கப்பலை இன்னமும் நெருங்க முடியவில்லை. இன்று காலை 6 மணிக்கு (சிட்னி நேரம்) ரஷ்யக் கப்பல் உள்ள பகுதிக்கு ஆஸ்திரேலிய கப்பல் சென்றடைந்து விட்ட போதிலும், ரஷ்யக் கப்பலை சுற்றியுள்ள பனிக்கட்டிகளை உடைத்துச் செல்ல முடியாமல் தத்தளிக்கிறது ஆஸ்திரேலிய கப்பல். (ஆஸ்திரேலிய ஐஸ்பிரேக்கர் கப்பலின் மேல் தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட போட்டோவை மேலே பார்க்கவும்)

மீட்பு பணிக்காக சென்ற ஆஸ்திரேலியக் கப்பலின் பெயர், அவுரோரா அவுஸ்திரேலிஸ். ஐஸ்பிரேக்கர் (icebreaker) ரக கப்பல் இது. அதாவது இந்த ரக கப்பல்களின் அடிப்பாகம், கடலில் உள்ள ஐஸ் கட்டிகளை உடைத்துச் செல்லக்கூடியவை.

காலை 6 மணியில் இருந்து 9 மணிவரை ரஷ்யக் கப்பலை கூழ்ந்துள்ள ஐஸ் கட்டிகளை உடைக்கும் முயற்சியில் ஆஸ்திரேலிய கப்பல் ஈடுபட்ட போதிலும், அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. மாறாக, ஆஸ்திரேலிய கப்பலும் ஐஸ் கட்டிக்குள் சிக்கிக் கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டு விட்டது.

இதையடுத்து, ஆஸ்திரேலிய கப்பலின் கேப்டன் முர்ரே டோய்ல், மீட்பு முயற்சியை கைவிட்டு, தமது கப்பலை 2 கடல் மைல்கள் பின்வாங்க செய்துள்ளார்.

இங்குள்ள கடலில் ஐஸ்கட்டிகளுக்கு வெளியே உள்ள பகுதியில் அலைகள் மிக மோசமாக உள்ளதாக கூறியுள்ளார் ஆஸ்திரேலியக் கப்பல் கேப்டன். அத்துடன் தென்கிழக்கு நோக்கி மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்றும் வீசிக்கொண்டு உள்ளதால், மீட்பு முயற்சியில் எப்படி ஈடுபடுவது என்று தெரியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த சிக்கல் இந்த கடல் பகுதியில் கடல்மட்ட பனிப் புகார் (low-hanging fog) காரணமாக ஏற்பட்டுள்ள, எதிரே பார்க்க முடியாத தன்மை (no visibility). இதனால், ரஷ்ய கப்பலை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மீட்பு நடவடிக்கைகளுக்காக சென்ற ஆஸ்திரேலியக் கப்பல் தனது முதல் முயற்சியில் இருந்து பின்வாங்கியுள்ள நிலையில், மீட்புப் பணிக்காக வந்துள்ள இரண்டாவது ஐஸ்பிரேக்கர் கப்பல் இங்கு வந்து சேர்ந்துள்ளது. இந்த இரண்டாவது கப்பல், சீனக் கப்பல். பெயர், சூ லொங்.

தற்போதுள்ள சூழ்நிலையில் அந்த கப்பலும் ஐஸ் பாளங்களில் இருந்து விலகியே நிற்கிறது.

மொத்தத்தில் ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது போல இந்த மீட்பு நடவடிக்கை சுலபமாக இருக்கப் போவதில்லை. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஒருவேளை இரு கப்பல்களாலும் ரஷ்ய கப்பலை அணுக முடியாவிட்டால், ஹெலிகாப்டர் மூலம் பயணிகளை மீட்கும் நடவடிக்கை தொடங்கப்பட வேண்டும். அதற்கு, ஹெலிகாப்டர் தாங்கி கப்பல் ஒன்று இங்கு வந்து சேர வேண்டும்.கடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல்! வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது!!

கடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல்! வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது!!


50 பயணிகள் (இவர்களில் பெரும்பாலானோர் கடல் ஆராய்ச்சியாளர்கள்) மற்றும் 20 மாலுமிகளுடன் கடல் நடுவே பனிக்கட்டிகளுக்குள் சிக்கி நிற்கிறது, ரஷ்ய கப்பல் ஒன்று. இந்தக் கப்பலை பனிக்கட்டிகளில் இருந்து வெளியே இழுக்கும் மீட்பு நடவடிக்கைகளுக்காக இரு பெரிய கப்பல்கள் விரைகின்றன என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

கடல் ஆராய்ச்சிக்காக அன்டார்க்டிக்கா பகுதிக்கு சென்று கொண்டிருந்த ரஷ்யக் கப்பல் எம்.வி. அகாடிமிக் சொகால்ஸ்கி, ஆஸ்திரேலியா கடலுக்கு அருகே கடலில் ஏற்பட்ட ஐஸ் பாளங்களுக்கு இடையே சிக்கிக் கொண்டது. பல ஆண்டுகளுக்கு முன், பிரிட்டனின் டைட்டானிக் சொகுசுக் கப்பலுக்கு ஏற்பட்ட அதே கதிதான் இது.

ஆனால், டைட்டானிக் கப்பலை கட்டிய காலத்தைவிட, தற்போது கப்பல் கட்டும் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டதில், ஐஸ் பாளங்களில் மோதினால், கப்பலின் அடித்தளம் (hull) உடைந்து விடாத அளவில் தற்போது கப்பல்கள் கட்டப்படுகின்றன. இதனால், தற்போது இந்த ரஷ்யக் கப்பல் கடலில் மிதக்கும் ஐஸ் பாளங்களில் மோதியபோதும், அதன் கீழ்ப்பகுதி உடைந்து போகவில்லை.

அன்டார்க்டிக்கா போன்ற அதிக கப்பல் நடமாட்டமற்ற பகுதிகளில் இந்த மாதங்களில் கடல் தண்ணீர் பனிக்கட்டியாக மாறுவது சஜம்தான். பனிக்கட்டி என்றால், நீங்கள் குளிர்பானத்தில் மிதக்கவிடும் அளவான ஐஸ் கட்டி அல்ல. சில நூறு மீட்டர் தடிப்புக்கு ஐஸ் கட்டிகள் கடலின் மேல் பரப்பில் உருவாகிவிடும். இதில் இறங்கி நடக்கலாம் (ரஷ்ய கப்பலில் சென்றவர்கள் ஜாலியாக நடுக்கடலில் ஐஸ் பாளங்களின் மேல் நடப்பதை 6-வது, 7-வது போட்டோக்களில் பாருங்கள்).

இந்தக் கப்பல் நியூசிலாந்தில் இருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தபோதே நடுக்கடலில் ஐஸ் பாளங்களில் சிக்கி நிற்கிறது.

கப்பல் நகர முடியாது போகவே கப்பலின் கேப்டன் ரேடியோ மூலம் அபாய சிக்னல் அனுப்பியதில், இந்தக் கப்பல் சிக்கிக் கொண்ட விபரம் ஆஸ்திரேலிய கடல் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. ஆனால், கப்பல் சிக்கிக்கொண்டுள்ள இடம், வழமையான கப்பல் போக்குவரத்து பாதையல்ல என்பதால், அந்த இடத்துக்கு மிக அருகில் உள்ள பெரிய கப்பல்கள் மீட்பு நடவடிக்கைக்கு சென்றடைய இரு தினங்கள் பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பலில் உள்ள பயணிகளின் உயிர்களுக்கு எந்த ஆபத்தும் கிடையாது.

கப்பல் இன்னமும் அங்கிருந்து அசையவில்லை. ஆனால், கப்பலில் இருந்த பயணிகள் எடுத்து அனுப்பிய சில போட்டோக்கள் சட்டலைட் ட்ரான்ஸ்மிஷன் மூலம் வந்து சேர்ந்து விட்டன. கப்பலில் நடுக்கடலில் பயணம் செய்தபோது ஐஸ் பாளங்களில் சிக்கிக் கொண்ட அனுபவம் உங்களுக்கு உள்ளதா? இல்லையென்றால், சுவாரசியமான அந்தக் காட்சியை நாம் இணைத்துள்ள போட்டோக்களில் பாருங்கள்.

1-வது போட்டோவில் கப்பல் பயணித்த பாதை, மற்றும் சிக்கிக் கொண்ட இடத்தின் வரைபடம் உள்ளது. 2-வது, 3-வது போட்டோக்களில் ஐஸில் சிக்கிக் கொண்ட கப்பலை வெவ்வேறு கோணங்களில் காணலாம். 3-வது 4-வது போட்டோக்களில் உள்ளதுதான், கப்பலை இயக்கும் கன்ட்ரோல் ரூம். கப்பல் செல்லும்போது இதிலிருந்து கடலை பார்த்துத்தான் கப்பலை செலுத்த வேண்டும் (தற்போது கப்பல் அசையாது நிற்பதால், 4-வது போட்டோவில் பயணிகள் கன்ட்ரோல் ரூமுக்குள் இருக்கிறார்கள்).

இந்தக் கப்பலின் உட்பகுதி வசதியானதா? 8-வது போட்டோவில் கப்பலுக்கு உள்ளேயுள்ள உணவுக் கூடத்தை பார்க்கலாம். 9-வது போட்டோவில், கப்பலில் உள்ள பயணிகள் அறையை (கேபின்) பார்க்கலாம். பெரும்பாலும் மேல்தளத்தில் உள்ள கேபினில் தங்கி பயணிக்க கட்டணம் அதிகம். காரணம், நல்ல வியூ கிடைக்கும். கீழ்த்தள கேபின் என்றால் கட்டணம் குறைவு. வெளியே தண்ணீர் மட்டும் தெரியும்!

நீங்கள் நாளைக்கே கப்பலில் போகலாம். ஆனால், நீங்கள் பயணிக்கும் கப்பல் ஐஸில் சிக்கிக் கொள்ளும் என்று சொல்ல முடியாது அல்லவா? எனவே, கடலில் எப்போதாவதுதான் நடக்கும் இந்த சம்பவத்தின் போட்டோக்களை கீழேயுள்ள லிங்க்கில் கிளிக் செய்து பார்த்து வையுங்களேன்…