Friday, February 8, 2013

சூரிய புயல் விரைவில் பூமியை தாக்கும் அபாயம்? : விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

சூரிய புயல் விரைவில் பூமியை தாக்கும் அபாயம்? : விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்


 விரைவில் சூரிய புயல் பூமியை தாக்கும். இதனால் தொலைதொடர்பு சாதனங்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சூரியனில் இருந்து அதிசக்தி வாய்ந்த வெப்பம் வெளிப்படும் போது புயலாக மாறி அண்ட வெளியில் அவ்வப்போது பரவி வருகிறது. இதனால் பூமிக்கு ஆபத்து என்று பல முறை கூறப்பட்டது. எனினும், இதுவரை எந்த ஆபத்தும் இல்லாமல் பூமி சுற்றிக் கொண்டிருக்கிறது. சூரியனில் இருந்து நெருப்பு போன்ற சிறுசிறு துண்டுகள் சிதறி பூமியை அடைவதற்குள் அவை கரைந்து விடுகின்றன. ஆனால், இப்போது மீண்டும் சூரிய புயல் பூமியை விரைவில் தாக்கும் அபாயம் உள்ளது. அது எப்போது நடக்கும் என்று அரை மணி நேரத்துக்கு முன்புதான் தெரிய வரும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சூரிய புயல் பூமியை தாக்கினால், கம்ப்யூட்டர் நெட்வொர்க், போன் உள்பட எல்லா தொலைதொடர்பு சாதனங்களும் ஸ்தம்பிக்கும்.

பூமி முழுவதும் மின்தடை ஏற்படும். இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், சூரியனில் இருந்து வெளிப்படும் அதிசக்தி வாய்ந்த வெப்ப புயல் ஒரு மணி நேரத்துக்கு 16 லட்சத்து 9 ஆயிரத்து 344 கி.மீ வேகத்தில் பூமியை நோக்கி பாயலாம். எனினும் புயல் ஏற்படுவதை 30 நிமிடங்களுக்கு முன்புதான் துல்லியமாக கணிக்க முடியும்’ என்றனர். இதுபோல் 100 அல்லது 200 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் சூரிய புயல் ஏற்படும் என்று லண்டனில் உள்ள இன்ஜினியரிங் ராயல் அகடமி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 1989ம் ஆண்டு இதுபோல் சூரிய புயல் சிறிய அளவில் கனடாவை தாக்கியது. அப்போது மின் தடை ஏற்பட்டது. எலக்ட்ரானிக் உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், சூரிய புயல் தாக்குதல் குறித்த பயம் வேண்டாம். இப்போதுள்ள அதிநவீன தொழில்நுட்பம் மூலம் சூரிய புயல் தாக்குதலின் தீவிரத்தை குறைக்க எல்லா நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம் என்று இங்கிலாந்து அரசு கூறியுள்ளது.

Tuesday, February 5, 2013

உலகம் முழுவதும் 680 கால்பந்து போட்டிகளில் அரங்கேறிய 'மேட்ச் பிக்சிங்' அம்பலம்!!


உலகம் முழுவதும் 680 கால்பந்து போட்டிகளில் அரங்கேறிய 'மேட்ச் பிக்சிங்' அம்பலம்!!



உலகம் முழுவதும் நடந்த மொத்தம் 680 கால்பந்து போட்டிகளில் மேட்ச் பிக்சிங் நடந்து இருப்பது அம்பலமாகியுள்ளது.

கால்பந்து போட்டிகள் பெரும்பாலும் களேபரங்களில் முடிவது வாடிக்கை.. கிரிக்கெட் போட்டிகள் அனைத்துமே 'மேட்ச் பிக்சிங்கில்தான்' இப்படி ஆடுகிறார்களோ என்ற சந்தேகத்தை உருவாக்குபவை.. தற்போது கிரிக்கெட்டுக்கு இருந்த 'மேட்ச் பிக்சிங்' பெயரை தட்டிப் பறித்திருக்கிறது களேபர கால்பந்து போட்டிகள்...

கால்பந்துக்கு பிரபலமான ஐரோப்பாவில் மேட்ச் பிக்சிங் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதில் உள்ளூர் கால்பந்து போட்டிகளில் மட்டுமின்றி உலகக் கோப்பை, யூரோ கோப்பை போட்டிகளிலும் 'மேட்ச் பிக்சிங்' கொடிகட்டிப் பறந்திருப்பது அம்பலத்துக்கு வந்துள்ளது.

இப்படியாக 680 போட்டிகளில் மேட்ச் பிக்சிங் அரங்கேறியுள்ளது. 15 நாடுகளைச் சேர்ந்த 425 அதிகாரிகள், வீரர்கள் இந்த மேட்ச் பிக்சிங் சூதாட்டத்தில் புரண்டு விளையாடி இருக்கின்றனர். ரூ 44 கோடிக்கு மேல் மேட்ச் பிக்சிங் மூலம் இந்த கும்பல் சம்பாதித்திருக்கிறது.

மேட்ச் பிக்சிங் தொடர்பாக 150 வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் அனைத்தும் 2008-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடைபெற்றவை. இதில் 380 போட்டிகள் ஐரோப்பிய நாடுகளிலும், 300 போட்டிகள் ஆசியா, ஆப்பிரிக்கா, தெற்கு மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில் நடைபெற்றவை.



"கார் பார்க்கில் கிடைத்த எலும்புக்கூடு 15ஆம் நூற்றாண்டு இங்கிலாந்து மன்னருடையதுதான்"

"கார் பார்க்கில் கிடைத்த எலும்புக்கூடு 15ஆம் நூற்றாண்டு இங்கிலாந்து மன்னருடையதுதான்"




இங்கிலாந்தின் லெஸ்டர் நகர மையத்தில் கார்கள் நிறுத்துமிடம் ஒன்றில் அண்மையில் தோண்டி எடுக்கப்பட்ட யுத்த தழும்புகள் கொண்ட எலும்புக்கூடு 15ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தை ஆண்ட மன்னர் மூன்றாம் ரிச்சர்டின் சடலம் தான் என்பதை அந்நாட்டின் விஞ்ஞானிகள் உறுதிசெய்துள்ளனர்.

பழம்பெரும் நாடகாசிரியர் ஷேக்ஸ்பியரால் ஒரு கூண் விழுந்த வில்லன் என்று வர்ணிக்கப்பட்டிருக்கும் மன்னர் மூன்றாம் ரிச்சர்ட் 1485ஆம் ஆண்டு நடந்த பொஸ்வொர்த் யுத்தத்தில் கொல்லப்பட்டிருந்தார்.

அதற்கு சுமார் அரை நூற்றாண்டு காலம் கழிந்து துறபற மடங்கள் கலைக்கப்பட்டபோது, இவரது உடல் எச்சங்கள் அது புத்தைக்கப்பட்ட இடத்திலிருந்து காணாமல் போயிருந்தன.

வளைந்த முதுகெலும்பு கொண்ட இந்த எலும்புக்கூட்டை அகழ்வாராய்ச்சியாளர்கள் கடந்த செப்டம்பரில் தோண்டி எடுத்த பின்னர் அதிலே விஞ்ஞானிகள் பலவிதமான அறிவியல் பரிசோதனைகளை நடத்தி அது மன்னர் மூன்றாம் ரிச்சர்ட் என்பதை தற்போது கண்டறிந்துள்ளனர்.
மன்னர் ரிச்சர்ட் தோற்றது இங்கிலாந்தின் சரித்திரத்தில் ஒரு பெரிய திருப்பு முனை ஆகும்.


கனடாவில் சீனத்தொழிலாளருக்கு முன்னுரிமை: உள்நாட்டுத் தொழிலாளர்கள் வழக்கு

கனடாவில் சீனத்தொழிலாளருக்கு முன்னுரிமை: உள்நாட்டுத் தொழிலாளர்கள் வழக்கு


கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத் தொழிற்சாலையில் சீனாவிலிருந்து 201 தொழிலாளரைத் தற்காலிகப் பணியில் அமர்த்த HD சுரங்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கனடாவிலிருந்து விண்ணப்பித்திருந்த அனுபவம் மிக்க பணியாளர்களைக் கூட குறித்த நிர்வாகம் நிராகரித்ததனால் தொழிற்சங்கங்கள் மத்தியக் கூட்டரசு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளன.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடபகுதியில் முர்ரே ஆற்று நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை பார்க்க கனடாவைச் சேர்ந்த பலர் விண்ணப்பித்த போதும் அவர்களை முற்றாக நிர்வாகம் நிராகரித்து விட்டது குறித்து கனடாவின் சர்வதேசப் பொறியாளர் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் பிரையான் கோசிரேன் கூறுகையில், விண்ணப்பித்தவர்களில் பலரை நேர்முகத் தேர்வுக்குச் கூட சுரங்க நிர்வாகம் அழைக்கவில்லை.

வழக்குத் தொடுத்த பின்னர் தான் நிராகரித்தவர்களின் 300 விண்ணப்பங்களில், சுரங்கப் பணியில் 30 ஆண்டு கால அனுபவம் பெற்றவர்களும், சுரங்கப்பணி மற்றும் மேற்பார்வைப் பணியில் 20 ஆண்டு அனுபவம் பெற்றவர்களும், ஆறாண்டு கால அனுபவம் உள்ளவர்கள் பலரும் விண்ணப்பத்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இச்சுரங்கப்பணிக்கான கல்விச் சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பித்த போதும், இந்த அனைவருடைய விண்ணப்பங்களும் நிராகரிப்பட்டு தற்காலிகமாகப் பணி செய்ய சீனாவில் இருந்த ஆட்களை இறக்குமதி செய்கின்றனர் என்று ஊடகத்தினருக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

அடுத்த வழக்கு விசாரணை ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளநிலையில் கனடாவில் தகுதியான பணியாளர் கிடைக்கவில்லை என்று இந்த HD சுரங்க நிர்வாகம் இதற்கு பதிலளித்துள்ளது.

மேலும், சீனாவிலிருந்து பணியாளரைக் கொண்டு வர இன்னும் முடிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.