Showing posts with label செவ்வாய் கிரகம். Show all posts
Showing posts with label செவ்வாய் கிரகம். Show all posts

Tuesday, December 3, 2013

நிலவின் சுற்றுவட்ட பாதையை கடந்தது மங்கல்யான்

நிலவின் சுற்றுவட்ட பாதையை கடந்தது மங்கல்யான்



செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக ரூ.450 கோடி செலவில் உருவாக்கப்பட்ட மங்கல்யான் விண்கலம் பி.எஸ்.எல்.வி சி-25 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 5ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியை சுற்றிக் கொண்டிருந்த மங்கல்யான் விண்கலம், நேற்று முன்தினம் அதிகாலை 12.49 மணியளவில் புவி சுற்றுவட்ட பாதையில் இருந்து வெற்றிகரமாக விலக்கப்பட்டது. மங்கல்யான் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள நியூட்டன் திரவ இன்ஜின் சுமார் 20 நிமிடங்கள் இயக்கப்பட்டு,  விண்கலத்தை புவி சுற்றுவட்டபாதையிலிருந்து விலக்கி செவ்வாய் கிரகத்தை நோக்கி செல்ல வைக்கும் ‘டிரான்ஸ் மார்ஸ் இன்ஜெக்ஷன்’ என்ற சிக்கலான பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக செய்தனர். 

செவ்வாய் கிரகத்தை நோக்கிய 300 நாள் பயணத்தை மங்கல்யான் நேற்று முன்தினம் வெற்றிகரமாக தொடங்கியது. தற்போது நிலவின் சுற்றுவட்டப்பாதையையும் கடந்து மங்கல்யான் சென்று கொண்டிருக்கிறது. ஒரு நாளைக்கு 10 லட்சம் கி.மீ தூரம் மங்கல்யான் பயணிக்கிறது. இந்திய விண்கலம் நிலவின் சுற்றுவட்டபாதையை கடந்து விண்வெளியின் வெகு தூரத்தில் பயணிப்பது இதுவே முதல் முறை. மங்கல்யான் பயணத்தை பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. 

Thursday, November 21, 2013

செவ்வாய் கிரகத்தில் கிரானைட் பாறைகள்

செவ்வாய் கிரகத்தில் கிரானைட் பாறைகள்




செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழ்வதற்கு உரிய சாத்திய கூறுகள் குறித்து உலகின் பல நாடுகளும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன.
இதற்காக இந்நாடுகள் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலங்களை அனுப்பி ஆராய்ச்சி நடத்தி வருகின்றன.

அமெரிக்காவின் நாசா மையம், செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான தடயங்களை கண்டுபிடித்துள்ளது.

தற்போது இக்கிரகத்தில் கிரானைட் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இத்தகவலை நாசாவை சேர்ந்த பூமி மற்றும் விண்வெளி அறிவியல் தொழில்நுட்ப விஞ்ஞானி ஜேம்ஸ் விரே தெரிவித்துள்ளதுடன், ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆய்வின் மூலம் செவ்வாய் கிரகத்தின் புவியியல் நிலை குறித்து மேலும் அறிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.


Tuesday, November 5, 2013

இந்தியாவின் செவ்வாய் கிரக முயற்சி சாதனை படைக்குமா?

இந்தியாவின் செவ்வாய் கிரக முயற்சி சாதனை படைக்குமா? 




செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு செய்வதற்காக மங்கள்யான் விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது. இத்திட்டத்துக்காக ரூ450 கோடி செலவிடப்பட்டுள்ளது. 

இந்தியாவின் செவ்வாய் கிரக ஆராய்ச்சியை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இந்த விண்கலம் ஏவுவதற்கான கவுண்ட்டவுன் நேற்று முன்தினம் தொடங்கின. 

செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு செய்ய அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகள் ஏற்கனவே விண்கலத்தை அனுப்பி உள்ளன. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமும் ஒரு விண்கலத்தை அனுப்பி இருக்கிறது. 

4வது நாடு 

இந்த விண்கலம் வெற்றிகரமாக ஏவப்படும் நிலையில் செவ்வாய் கிரகத்தை எட்டிய நாடுகளில் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியனுக்கு அடுத்ததாக இந்தியா இடம்பெறும்.

என்ன ஆராய்ச்சி? 

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான வாய்ப்புள்ளதா என்பது குறித்தும் அங்குள்ள கனிம வளம் மற்றும் வளிமண்டலம் ஆகியவற்றை ஆராய்வதற்காகவும் இந்த விண்கலம் செலுத்தப்படுகிறது.

என்ன உபகரணங்கள்? 

மங்கள்யான் செவ்வாயின் சுற்றுப்பாதையில் மிதந்தபடி இதுவரை அறியப்படாத செவ்வாய் கிரகத் தகவல்களைச் சேகரிக்கும். 15 கிலோ எடையுள்ள மங்கள்யான், லைமன் ஆல்பா போட்டோமீட்டர் உள்பட 5 உபகரணங்களைக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்று மீத்தேன் வாயுவைக் கண்டறியும். மற்றொன்று ஹைட்ரஜன் மூலம் செவ்வாயின் மேல்மண்டல வெளியேற்ற முறைகளை ஆய்வு செய்யும். செவ்வாய் கிரகத்திலுள்ள தாது வளத்தை தெர்மல் இமேஜிங் ஸ்பெக்ட்ரோ மீட்டர் ஆய்வு செய்யும். செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் இருப்பதைக் கண்டறிவதுதான் மங்கள்யானின் முக்கிய நோக்கமாக இருக்கும். ஏனெனில் கரியமில வாயு சார்ந்த மீத்தேனின் இருப்பு, உயிரின இருப்புக்கான ஆதாரம்

1,340 கிலோ எடை 

இந்த மங்கள்யான் விண்கலம் 1,340 கிலோ எடை கொண்டது.

ரூ450 கோடி 

இத்திட்டத்துக்காக மொத்தம் ரூ.450 கோடி செலவிடப்பட்டுள்ளது.

டிசம்பர் 1-ல் செவ்வாய் நோக்கி பாயும் 

பூமியின் சுற்றுப்பாதையில் 20 முதல் 25 நாட்களுக்கு சுற்றியபின் டிசம்பர் 1-ந் தேதி நள்ளிரவு செவ்வாய் கிரகத்தை நோக்கிய பயணத்தைத் தொடங்கும். தொடர்ந்து 280 முதல் 300 நாள்கள் பயணித்து அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையை விண்கலம் அடையும்.

40-ல் 23தான் வெற்றி 

செவ்வாய் கிரகத்தை ஆராயும் எந்த ஒருநாட்டின் முயற்சியும் முதல் கட்டத்திலேயே வெற்றி பெற்றது இல்லை. இதுவரை 40 முறை மேற்கொள்ளப்பட்ட செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பும் முயற்சிகளில் 23 தான் வெற்றி பெற்றிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Monday, September 30, 2013

நாம் கண்டுபிடித்த அன்னிய கிரகங்களின் எண்ணிக்கை 1000ஐத் தொடப் போகிறதாம்

நாம் கண்டுபிடித்த அன்னிய கிரகங்களின் எண்ணிக்கை 1000ஐத் தொடப் போகிறதாம் 




மனித வாசனையே இல்லாத அன்னிய உலகங்களைக் கண்டுபிடிக்க நாம் ஆரம்பித்து 20 வருடங்களாகி விட்டன. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிரகங்களின் எண்ணிக்கை விரைவில் ஆயிரத்தைத் தொடவுள்ளது. அது சில நாட்களில் தெரியலாம் அல்லது சில வாரங்களில் தெரியலாம் என்று வி்ஞ்ஞானிகள் கூறுகின்றனர். 

மலைக்க வைக்கும் விஷயம்தான் விஞ்ஞானம். அதை விட ஆச்சரியமானது விண்வெளியியல். உலகத்தை கீழே பார்ப்பதை விட சற்று மேலே நிமிர்ந்து பாருங்கள்.. எத்தனை எத்தனை ஆச்சரியங்கள், அற்புதங்கள், அமர்க்களங்கள் நமது அண்டவெளியில் கொட்டிக் கிடக்கின்றன தெரியுமா... 

நம்மைப் போலவே யாராச்சும் எங்கேயோவது இருக்கிறார்களா என்பதை அறியும் ஆய்வுகள் பல வருடங்களாகவே நடந்து வருகின்றன. அதிலும் நம்மைப் போன்ற கிரகங்கள் வேறு உள்ளதா என்பதை அறியும் கண்டுபிடிப்புகள் 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கின. இது நாள் வரை 900க்கும் மேற்பட்ட கிரகங்களை உலக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு இப்போது 1000ஐத் தொடவுள்ளதாம். 

900 அந்நிய கிரகங்கள் 

புதிய கிரகங்கள் தொடர்பான கண்டுபிடிப்புகளை ஐந்து தகவல் தொகுப்புகளாக வகுத்துள்ளனர். அதில் நான்கு தகவல் தொகுப்புகளின் கணக்குப்படி நமது உலகுக்கு வெளியே 900 புதிய உலகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளாக கூறப்படுகிறது.

சரியான எண்ணிக்கை 986 

அதேசமயம், இரண்டு தகவல் தொகுப்புகளின் கணக்குப்படி, இதுவரை 986 புதிய உலகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.

விரைவில் 1000மாவது உலகம் 

இன்னும் சில வாரங்களில் 1000மாவது உலகத்தின் கண்டுபிடிப்பு குறித்த தகவல் வெளியாகலாம் என்றும் செய்திகள் கூறுகின்றன.

92ல் கண்டுபிடிக்கப்பட்ட 2 கிரகங்கள் 

1992ம் ஆண்டு முதல் முறையாக 2 கிரகங்களை விஞ்ஞானிகள் க ண்டுபிடித்தனர். அதில் ஒன்று பல்சார் அல்லது நியூட்ரான் நட்சத்திரத்தை சுற்றி வருவது தெரிய வந்தது. இந்த பல்சாரானது, பூமியிலிருந்து 1000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பாலான தொலைவில் உள்ளது.

கெப்ளர்தான் நிறைய கண்டுபிடித்தது 

நாசாவின் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கிதான் பெரும்பாலான புதிய கிரகங்களைக் கண்டுபிடித்த பெருமைக்குரியதாகும்.

3588 புதிய விஷயங்களைக் கண்டுபிடித்த கெப்ளர் 

கெப்ளர் தொலைநோக்கியானது, 3588 பூமிக்கு அப்பால் உள்ள புதிய விஷயங்களை நமக்கு அடையாளம் காட்டி அசத்தியுள்ளது.


160 பில்லியன் உலகங்கள் இருக்கிறதாம் 

ஆயிரம் உலகங்கள் குறித்துத்தான் நாம் இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம். ஆஐனால் நமது பால்வழிப் பாதையில் கிட்டத்தட்ட 160 பில்லியன் புதிய உலகங்கள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் ஆச்சரியப்படுத்துகின்றனர். எங்கேயாச்சும் தண்ணீர், காத்து நல்லதா இருந்தா சொல்லுங்கப்பா... பொல்லூஷன் மற்றும் பொலிடீசியன்களால் பூமி ரொம்பவே நாறிப் போய்க் கிடக்கு... இடத்தை மாத்தனும்.  


Thursday, June 20, 2013

செவ்வாய்க் கிரகத்தில் அதிக கதிர்வீச்சு ஆபத்து: நாசா

செவ்வாய்க் கிரகத்தில் அதிக கதிர்வீச்சு ஆபத்து: நாசா


எதிர்காலத்தில் செவ்வாய்க் கிரகத்திற்கு செல்லக்கூடிய விண்வெளி வீரர்கள் கடுமையான கதிரியக்கத் தாக்கத்துக்கு உள்ளாக நேரிடும் என்று அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா எச்சரித்துள்ளது.
பாதுகாப்பு விதிமுறைகள் உடன்படும் அளவைவிட கூடுதலான அளவுக்கு அங்கு கதிர்வீச்சுத் தாக்கத்துக்கு விண்வெளி வீரர்கள் இலக்காக நேரிடும் என்று நாசா கூறுகிறது.

உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய புற்றுநோய்களுக்கான அபாயத்தை அதிகரிக்கக்கூடிய அளவில் இந்த கதிர்வீச்சு இருக்கும் என்றும் விண்வெளி வீரர்களை நாசா எச்சரித்துள்ளது.

கியூரியாசிட்டி ரோவர் விண்ணூர்தியைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் மூலம் இதனை நாசா உறுதிப்படுத்தியுள்ளது.
செவ்வாயின் தரையில் ஊர்ந்துசென்று ஆய்வு நடத்திய ஒரு கார் அளவிலான இந்த ரோபோ- ஊர்தியை அங்கு கொண்டுசெல்லும் அரை-பில்லியன் கிலோமீட்டர் தூர பயணத்துக்கு 8 மாதங்களுக்கும் அதிககாலம் எடுத்துள்ளது.
இந்தப் பயணத்தை கிழமைகள் கணக்கில் விரைவு படுத்துவதற்கு போதுமான உந்துசக்திக்கான தொழிநுட்ப வசதி இன்னும் இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Monday, May 20, 2013

விண்வெளி டூர் போன எலிகள், பல்லிகள் மற்றும் நத்தைகள்


விண்வெளி டூர் போன எலிகள், பல்லிகள் மற்றும் நத்தைகள்: உயிருடன் திரும்பியதில் ரஷிய விஞ்ஞானிகள் மகிழ்ச்சி


விண்வெளிக்கு முதற்கட்டமாக அனுப்பப்பட்ட எலிகள், பல்லிகள் மற்றும் நத்தைகள் ஆகியவை உயிருடன் பத்திரமாக திரும்பி வந்துள்ளதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

2030-ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்ப திட்டமிட்டுள்ள ரஷியா, அதன் சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய முதல்கட்டமாக விண்வெளிக்கு உயிரினங்களை அனுப்பி ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது.

முதல் கட்ட முயற்சியாக 45 எலிகள், 15 பல்லிகள், நத்தைகள் மற்றும் தாவரங்களை வைத்து கடந்த ஏப்ரலில் பியான்-எம். என்ற விண்கலத்தை ரஷ்யா விண்ணுக்கு அனுப்பியது.

அந்த விண்கலம் பூமியில் இருந்து சுமார் 575 கி.மீட்டர் தூரத்தில் ஒரு மாத காலமாக விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது ஆய்வு முடிந்த நிலையில் அந்த விண்கலம் ஓரன்பர்க் மாகாணத்தில் தரை இறக்கப்பட்டுள்ளது.

அப்போது, விண்வெளிக்கு அனுப்பப்பட்ட எலிகள், பல்லிகள் மற்றும் நத்தைகளில் பெரும்பாலானவை உயிருடன் இருந்தது தெரிய வந்துள்ளது.

பொதுவாக விண்வெளிக்கு சென்றதும் உடல் எடை குறையும் , அந்நிலையில் உடல் உறுப்புகள் பணிபுரியும் தன்மை குறித்து ஆராய்வதற்காக இந்த சோதனை முயற்சி செய்யப்பட்டதாக ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Monday, May 6, 2013

''கண்மணி உன் வீட்டில் சவுக்கியமா''.. செவ்வாய் கிரகத்துக்கு உங்கள் கவிதையை அனுப்ப ஆசையா?

''கண்மணி உன் வீட்டில் சவுக்கியமா''.. செவ்வாய் கிரகத்துக்கு உங்கள் கவிதையை அனுப்ப ஆசையா?




 செவ்வாய் கிரகம் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும், அந்த கிரகத்துக்கு விரைவில் மனிதர்களை அனுப்பி வைக்கும் திட்டத்துக்கு வேகம் தரவும் சில முயற்சிகளில் இறங்கியுள்ளது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாஸா.

செவ்வாய் கிரகத்துக்கு சில விண்கலன்களை அனுப்பி, தரையிறக்கி, மண் பரிசோதனை, பாறைகளைக் குடைந்து பரிசோதனைகளை நடத்திவிட்டது அமெரிக்கா. அந்த நாடு அனுப்பிய ஒரு ரோவர் இன்னும் செவ்வாய் கிரகத்தில் தனது ஆயுளையும் தாண்டி மிகச் சிறப்பாக செயல்பட்டு, அந்த கிரதத்தை தொடர்ந்து ஆய்வு செய்து கொண்டுள்ளது.

'மேவென்' என்றொரு விண்கலம்... 

இந் நிலையில் வரும் நவம்பர் மாதம் செவ்வாய் கிரகத்துக்கு 'மேவென்' (Mars Atmosphere and Volatile Evolution-MAVEN) என்ற ஒரு விண்கலத்தை அனுப்பப் போகிறது நாஸா. இந்த விண்கலத்தில் நாம் எழுதி அனுப்பும் கவிதைகள், தகவல்களையும் எடுத்துச் சென்று செவ்வாய் கிரகத்தில் ஒலிபரப்பப் போகிறார்கள். ''ஓ.. செவ்வாயே உன் வாய் தான் செவ் வாயோ'' என்று டுபாக்கூர் கவிதைகளாக இல்லாமல் 'நச்' என்று மூன்றே வரிகளில் ஒரு ஹைகூ மாதிரி விஷயத்தைச் சொல்லுங்கள் என்கிறது நாஸா.

ஜூலை 1ம் தேதி வரை... 


வரும் ஜூலை 1ம் தேதி வரை நாஸாவுக்கு வாசகங்கள், தகவல்கள், கவிதைகளை அனுப்பலாம். ஜூலை 15ம் தேதி முதல் இதில் எது மிகச் சிறந்த வாசகம், தகவல், கவிதை என்பது குறித்து ஆன்லைனில் போட்டி நடத்தப்படும். அதில் 3 சிறந்த தகவல்/கவிதை/வாசகம் தேர்வு செய்யப்பட்டு 'மேவென்' மூலம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படும். இந்தப் போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் ஆன்லைனிலேயே ஒரு சான்றிதழும் தரப்படும். 

போட்டியில் பங்கேற்க... 


இந்த 'மேவென்' விண்கலம் செவ்வாய் கிரகத்தின் மேல் பரப்பு வளி மண்டலத்தை ஆய்வு செய்யப் போகிறது. இந்தக் கோளில் ஒரு காலத்தில் தண்ணீர் இருந்ததாகக் கருதப்படுகிறது. இதற்கான ஆதாரங்கள் அதன் காற்று மண்டலத்தில் கிடைக்கலாம் என்று திடமாக நம்புகிறது நாஸா. http://lasp.colorado.edu/maven/goingtomars என்ற லிங்க் மூலம் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம்.

Thursday, March 14, 2013

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே- உறுதிப்படுத்திய க்யூரியாசிட்டி

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே- உறுதிப்படுத்திய க்யூரியாசிட்டி



செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வது சாத்தியமே. அங்கு ஒரு காலத்தில் உயிரினங்கள் வாழ்ந்திருப்பதற்கான ஆதாரங்கள், சூழல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழும் சூழல் குறித்து ஆராய அனுப்பப்பட்டுள்ள ரோவர் விண்கலமானது அங்கிருந்து பாறைகளின் மாதிரிகளை சேகரித்து, அதன் மூலக்கூறுகள், வேதிக் கட்டமைப்பு தகவல்களை கடந்த மாதம் பூமிக்கு அனுப்பியது.

இதில் உயிர் வாழ்வதற்கு அடிப்படை வேதிப் பொருட்களான சல்ஃபர், நைட்ரஜன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், கார்பன் உள்ளிட்டவைகள் தேவையான அளவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.




மேலும் பாறைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்ட இடத்தில் முன்னதாக நதியோ அல்லது ஏரியோ இருந்ததும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து செவ்வாய் கிரகத்தில் முன்னொரு காலத்தில் உயிரினங்கள் வாழ்ந்தது உண்மையே என்றும், எதிர்காலத்தில் உயிர் வாழ்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

க்யூரியாசிட்டிக்கு முன் செவ்வாய் கிரகத்தின் இன்னொரு பகுதியில் தரையிறங்கிய மார்ஸ் எக்ஸ்பிரஸ், அங்குள்ள மிகப் பெரிய ஆற்றின் படத்தை அனுப்பியது நினைவிருக்கலாம். இந்த ஆறு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஓடிக் கொண்டிருந்தது. இப்போது ஈரமிக்க மணற்பரப்பும் ஆற்றின் வழித்தடமும் மட்டும் அப்படியே உள்ளதைப் படம் பிடித்திருந்தது.


Wednesday, December 5, 2012

செவ்வாய் மண்ணில் 'கார்பன்' .. உயிரினம் இருந்திருக்க வாய்ப்பு?

செவ்வாய் மண்ணில் 'கார்பன்' .. உயிரினம் இருந்திருக்க வாய்ப்பு?





செவ்வாய் கிரக ஆராய்ச்சில் இன்னும் ஒரு முக்கிய திருப்பமாக அந்த கிரகத்தின் மண்ணில் கார்பன் இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் ஒரு காலத்தில் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்திருக்கலாம் என்ற நம்பிக்கை வலுப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்திற்கு நாசா அனுப்பியுள்ள கியூரியாசிட்டி விண்கலத்தின் ஆய்வின் மூலம் இது தெரிய வந்துள்ளது. இருப்பினும் இது ஆரம்ப கட்ட கண்டுபிடிப்புதான். இந்த ஆய்வை வைத்து அங்கு உயிரினங்கள் இருந்திருக்கலாம் என்ற முடிவுக்கு உறுதியாக வந்து விட முடியாது என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கியூரியாசிட்டி விண்கலமே நடத்திய மண் மாதிரி ஆய்வின்போது, மண்ணில் கார்பன் மூலக்கூறுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த கார்பன், உயிரினங்களின் உருவாக்கத்தை நிர்ணயிக்கும் கார்பனா அல்லது வேறு ஏதேனுமா என்பது குறித்து விரிவாக ஆராயப்பட வேண்டியுள்ளது. மேலும் இந்தக் கார்பன் எங்கிருந்து வந்தது என்பது குறித்தும் ஆராயப்பட வேண்டியுள்ளது.

ஒரு வேளை இந்த கார்பன், செவ்வாய் கிரக மண்ணிலேயே இயற்கையாகவே இருந்தது என்றால் நிச்சயம் உயிரினம் இருந்திருக்கலாம் என்ற நம்பிக்கைக்கு வர முடியும் என்றும் நாசா கூறுகிறது.

உயிரினம் வாழ மொத்தம் மூன்று விஷயங்கள் அவசியம். முதலில் தண்ணீர், சக்தி ஆதாரம் மற்றும் கார்பன். இது போக சல்பர், ஆக்சிஜன், பாஸ்பரஸ், நைட்ரஜன் ஆகியவையும் கூட தேவை.

கடந்த நான்கு மாதமாக செவ்வாய் கிரகத்தில் நிலை கொண்டுள்ள கியூரியாசிட்டி விண்கலம், பல்வேறு வகையான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளது. அதில் முக்கியக் கண்டுபிடிப்பாக தற்போது கியூரியாசிட்டி போய் இறங்கியுள்ள பகுதியில் ஒரு காலத்தில் அபரிமிதமான தண்ணீர் இருந்தது என்பதுதான்.

மேலும் அங்குள்ள நீர்ப்படுகையில், தாதுக்களும் அடங்கியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Wednesday, October 31, 2012

செவ்வாய் கிரகத்தில் கனிம வளங்கள் இருப்பதாக கியூரியாசிட்டி கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தில் கனிம வளங்கள் இருப்பதாக கியூரியாசிட்டி கண்டுபிடிப்பு





அமெரிக்காவின் நாசா, ஆய்வுக்காக அனுப்பியுள்ள கியூரியா சிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தின் பல்வேறு ரகசியங்களை தந்து வருகிறது.
ஏற்கனவே பனியாறுகள் ஓடிய அடையாளங்களை காண்பித்த கியூரியா சிட்டி, தற்போது அங்குள்ள பாறைகளை வெட்டி எடுத்ததில் பூமியில் உள்ளதைப் போன்ற கனிமவளங்கள் அங்கே இருப்பதை கண்டுபிடித்திருக்கிறது.

அதற்குரிய புகைப்படங்களை அனுப்பிய போது நாசா விஞ்ஞானிகள் ஆராய்ந்து கண்டுபிடித்தனர்.

இது ஹவாய் தீவில் உள்ள எரிமலை பகுதியில் இருப்பது போன்றே தெரிகிறது. இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் உள்ள மணல் பூமியின் மணல் பரப்பை ஒத்துள்ளது.

இந்த தகவலை கியூரியாசிட்டி விண்கல ஆய்வகத்தின் தலைமை விஞ்ஞானி டேவிட் பிளேக் தெரிவித்துள்ளார்.

Monday, October 8, 2012

செவ்வாய் கிரகத்தில் மண் துகள்களை ஆராயவுள்ள ரோவர் விண்கலம்

செவ்வாய் கிரகத்தில் மண் துகள்களை ஆராயவுள்ள ரோவர் விண்கலம்






செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ள கியூரியாசிட்டி ரோவர் விண்கலம், அங்குள்ள மண் துகள்களை தோண்டி எடுப்பதற்கு தயாராகி வருவதாக நாசா அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா சார்பில் செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக "கியூரியாசிடி ரோவர்" என்ற விண்கலம் அனுப்பப்பட்டது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது.

இந்த விண்கலம் மேற்கொண்ட முதல் கட்ட ஆய்வில், செவ்வாய் கிரகத்தில் நீரோடை இருந்ததற்கு ஆதாரமாக சரளை கற்களாலான பாறைகள் காணப்படுவதை புகைப்படம் எடுத்து அனுப்பி இருந்தது.

மண் குவியல்கள் காணப்படுவது போன்ற புகைப்படங்களையும், அந்த விண்கலம் அனுப்பியிருந்தது.

இந்நிலையில் இன்னும் சில நாட்களில் அங்குள்ள மண் துகள்களை தோண்டி எடுத்து ஆய்வு மேற்கொள்ள உள்ளது.

இதற்காக அந்த விண்கலத்தில் நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதுதவிர விண்கலத்தில் உள்ள கமெராவிலும் இந்த காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு, உடனுக்குடன் நாசா தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

விண்கலத்தால் சேகரிக்கப்படும் மண் துகள்கள் ரசாயன மற்றும் கனிம வளம் என்ற இரண்டு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படவுள்ளன.

நாசா அதிகாரிகள் கூறுகையில், ரசாயன ஆய்வின் மூலம் மனித வாழ்வுக்கு தேவையான அடிப்படை பொருட்கள் செவ்வாய் கிரகத்தில் உள்ளனவா என்றும், கனிம வள ஆய்வின் மூலம் செவ்வாய் கிரகத்தின் கடந்த கால சூழ்நிலை குறித்தும் கண்டறிய முடியும் என்றனர்.

Thursday, October 4, 2012

ஏலத்தில் விடப்படுகிறது செவ்வாய் கிரக கல்

ஏலத்தில் விடப்படுகிறது செவ்வாய் கிரக கல்




செவ்வாய் கிரகத்திலிருந்து பூமியில் விழுந்த சிறிய கல் ரூ.1.35 கோடிக்கு ஏலத்தில் விடப்பட உள்ளது.
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தில் சிறிய கோள் மோதியதால் உருவான சிறிய பாறை(விண்கல்) கடந்தாண்டு வட ஆப்பிரிக்காவில் உள்ள மொராக்கன் பாலைவனப் பகுதியில் சிறு சிறு துண்டுகளாக விழுந்துள்ளது.

இவை வித்தியாசமாக இருந்ததால், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சேகரித்து வைத்தனர்.

இதையறிந்த அமெரிக்க நிறுவனம் ஒன்று, அவர்களிடம் இருந்து 1.1 எடை கொண்ட விண்கற்களை சேகரித்து, லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திடம் விற்றது.

இதில் பத்திரப்படுத்தி வைத்திருந்த சிறு பகுதியை இப்போது ஏலத்தில் விற்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கு விலை ரூ.1.35 கோடி என நிர்ணயித்துள்ளது.

இதுபற்றி பழங்கால பொருள்களை ஏலமிடும் அமெரிக்காவைச் சேர்ந்த ஜிம் வால்கர் கூறுகையில், சகாரா பாலைவனப் பகுதியில் இதுபோன்ற விண்கற்கள் அடிக்கடி விழுகின்றன. இவற்றை சேரிக்கும் அப்பகுதி மக்களுக்கு இவற்றின் மதிப்பு தெரிவதில்லை.

ஏலம் விடப்பட உள்ள செவ்வாய் கிரக சிறிய கல் மிகவும் அழகாக உள்ளது. இது கூடுதல் விலை கிடைக்க உதவும். அக்டோபர் 14ஆம் திகதி நியூயார்க்கில் இந்தக் கல் ஏலத்துக்கு வருகிறது என்றார்.

செவ்வாயில் நீரோடை: கியூரியாசிட்டி கண்டுபிடிப்பு

செவ்வாயில் நீரோடை: கியூரியாசிட்டி கண்டுபிடிப்பு






செவ்வாய் கிரகத்தில் நீரோடை சரளை கல் படுகை இருப்பதை கியூரியா சிட்டி விண்கலம் கண்டுபிடித்துள்ளது.
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறது.

இந்த ஆய்வுகளை மேற்கொள்வதற்காக கியூரியாசிட்டி என்ற விண்கலம் செவ்வாயில் இறங்கி ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் தற்போது அங்கு மிகப் பெரிய அளவில் நீரோடை சரளை கல் படுகை இருப்பதை கியூரியா சிட்டி விண்கலம் கண்டுபிடித்துள்ளது.

எனவே இங்கு நீரோடை மற்றும் சிற்றாறுகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

இதை 'கேத்தாக்' என நாசா விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். இந்த சரளை கற்களின் பாறைகள் உருண்டை வடிவத்தில் உள்ளன.

காற்றின் மூலம் அடித்து வரப்பட்டால் இது போன்று உருவம் கிடைக்காது. நீரோட்டத்தின் வேகத்தை பொறுத்து வடிவம் மாறியிருக்கலாம் என கருதப்படுகிறது.

மேலும், அந்த பாறைகளின் வடிவத்தின் அடிப்படையில் நீரோடை மற்றும் சிற்றாறுகளில் வினாடிக்கு 3 அடி தண்ணீர் ஓடியிருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.



Wednesday, October 3, 2012

செவ்வாய் கிரகத்தில் பிரமிடு கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தில் பிரமிடு கண்டுபிடிப்பு





செவ்வாய் கிரகத்தில் பிரமிடு வடிவ பாறை ஒன்று இருப்பதை கியூரியாசிட்டி விண்கலம் கண்டுபிடித்துள்ளது.
அமெரிக்காவின் நாசா, செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியுள்ள கியூரியா சிட்டி விண்கலம் தினசரி ஒரு புதுமையான அரிய தகவல்களை பூமிக்கு வழங்கி வருகின்றது.

இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் பிரமிடு வடிவ பாறை ஒன்றை கியூரியாசிட்டி படமெடுத்து அனுப்பியுள்ளது.

செவ்வாயில் கிளன்லெக் என்ற இடத்தை நோக்கி கியூரியாசிட்டி செல்லும் பாதையில் இந்த பிரமிடு வடிவ பாறை உள்ளது.

இந்தப் பாறையானது கியூரியாசிட்டி விண்கலத்திற்கு முன்பாக 2.5 மீற்றர் தூரத்தில் உள்ளது.

இதன் உயரம் 25 சென்டிமீற்றராகவும் 40 சென்டி மீற்றர் அகலம் கொண்டதாகவும் இந்த பிரமிடு வடிவ பாறை உள்ளது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாறைக்கு ஜேக் மெடிஜெவிக் என்று நாசா பெயரிட்டுள்ளது.

ஜேக் மெடிஜெவிக் என்பவர், நாசாவின் செவ்வாய் அறிவியல் ஆய்வகத்தில் பணியாற்றிய முதன்மைப் பொறியாளர் ஆவார்.

கியூரியாசிட்டி விண்கலத்தின் முக்கியப் பணிகளில் இவரது பங்கும் உண்டு.

64 வயதான இந்தப் பொறியாளர், கியூரியாசிட்டி விண்கலம், செவ்வாய் கிரகத்தில் கால் பதித்த அடுத்த நாள் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த பாறைக்கு ஜேக் மெடிஜெவிக் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த பிரமிடு வடிவ பாறை அதிசயமானதல்ல என்று கூறியுள்ள நாசா, இது காற்றின் அரிப்பால் இந்த வடிவத்தை அடைந்திருக்கலாம் என்று கருதுவதாக கூறியுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் சூரிய கிரகணம்: படம் பிடித்து அனுப்பியது கியூரியாசிட்டி

செவ்வாய் கிரகத்தில் சூரிய கிரகணம்: படம் பிடித்து அனுப்பியது கியூரியாசிட்டி




செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து கொண்டிருக்கும் கியூரியாசிடி ரோவர் விண்கலம், அங்கு காணப்பட்ட சூரிய கிரகணத்தை படம் பிடித்து அனுப்பியுள்ளது.
செவ்வாய் கிரகத்தை பற்றி ஆராய அமெரிக்காவின் கியூரியாசிடி ரோவர் விண்கலம், கடந்தாண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி விண்ணில் செலுத்தப்பட்டது.

பத்து மாத பயணத்துக்கு பின், 56 கோடியே 30 லட்சம் கிலோ மீற்றர் தூரம் பயணித்து கடந்த ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி செவ்வாயில் தரையிறங்கியது.

பிரமாண்ட விண் கற்களால் ஏற்பட்ட காலே பள்ளப் பகுதியில், பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே இந்த ரோவர் செவ்வாய் கிரகத்தில் 13ஆம் திகதி காணப்பட்ட சூரிய கிரகணத்தை படம் பிடித்து அனுப்பியுள்ளது.

தற்போது நாசா மையம் இந்த படத்தை வெளியிட்டுள்ளது.



செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ முடியுமா? ஆய்வு செய்கிறது கியூரியாசிட்டி

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ முடியுமா? ஆய்வு செய்கிறது கியூரியாசிட்டி






செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து கியூரியாசிட்டி ரோவர் ஆய்வு செய்ய உள்ளது.
செவ்வாய் கிரகத்தை பற்றி ஆராய கியூரியாசிட்டி ரோவர் என்ற விண்கலம் கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி விண்ணில் செலுத்தப்பட்டது.

பத்து மாத பயணத்துக்குப் பின் 56 கோடியே 30 லட்சம் கி.மீ தூரம் கடந்து, கடந்த ஆகஸ்டு 6ஆம் திகதி செவ்வாயில் தரையிறங்கியது கியூரியாசிட்டி விண்கலம்.

பிரமாண்ட விண் கற்களால் ஏற்பட்ட காலே பள்ளப் பகுதியில் "ஏலிஸ் பாலஸ்" என்று பெயரிடப்பட்ட இடத்தில் கடந்த ஐந்து வாரமாக பல்வேறு சோதனைகளை மேற்கொண்டது.

அணுசக்தியால் இயங்கும் கியூரியாசிட்டி நாசா விஞ்ஞானிகளின் முக்கிய கட்டளையான, உயிரைத் தேடும் பயணத்தை மேற்கொள்ள தயாராகி வருகிறது.

கடந்த ஒரு வார காலமாக நடந்த பல கட்ட சோதனைகளுக்கு பின், இறுதியாக அதன் ரோபோ கை சோதிக்கப்பட்டு வருகிறது.

இக்கையில் பொருத்தப்பட்ட, அற்புத கமெரா கையின் அடிப்பகுதியில் வாரப்படும் மணலை சோதிக்க வேண்டும்.

எல்லாம் திருப்தி என்றால் உடனடியாக கியூரியாசிட்டி தொடர் பயணத்தை மேற்கொள்ள வேண்டியதுதான்.

அதன் பின் "ஓட்டம்... ஓட்டம்... உயிர் பொருள் தென்படும் வரை ஓட்டம்" என்பதுதான் கியூரியாசிட்டியின் இலக்காக இருக்கும்.

உயிர் மூலக் கூறுகள், உயிர் வாழத் தேவையான விஷயங்களை தேடும் கியூரியாசிட்டி விஞ்ஞானிகள் உத்தரவிடும் இடத்தில், நின்று கிடைக்கும் பாறை அல்லது மணலை ரோபோ கையால் அள்ளி, அதிநவீன கமெரா மூலம் உடனுக்குடன் ஆராய்ச்சி நடத்தும்.

பெறப்படும் தகவல்கள் அவ்வப்போது விஞ்ஞானிகளின் பார்வைக்கு சென்று விடும். செவ்வாய் கிரகத்தை சுற்றி வரும் நிலவான "போபோஸ்" பற்றிய வீடியோ படங்களையும் பெறவும் விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

கியூரியாசிட்டி வாழும் காலம் இரண்டு ஆண்டு. இதற்குள் 7 கி.மீ பயணம். பின், மவுன்ட் ஷார்ப் எனப்படும் மலை பகுதியில் ஏறும் வகையில், சகல அம்சங்களுடன் இதை உருவாக்கி உள்ளனர்.