Thursday, May 16, 2013

வணிக வளாகம் கட்ட ரூ20 லட்சம் செலவில் 35 அடி தூரம் செயற்கையாக நகர்த்தப்பட்ட வீடு

கோவை: வணிக வளாகம் கட்ட ரூ20 லட்சம் செலவில் 35 அடி தூரம் செயற்கையாக நகர்த்தப்பட்ட வீடுகோவையில் பெரிய பங்களா வீட்டை பாதியாக பிரித்து, அதில் ஒரு பாதியை 35 அடி தூரத்திற்கு நகர்த்தி தனியார் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. கோவை, சாய்பாபா காலனியில் உள்ள மூன்று தலைமுறை பழமையான மாடி வீடொன்று அதன் உள்ளே உள்ள அனைத்து பொருட்களுடனும் 35 அடி தூரம் நகர்த்தி வைக்கப்பட்டது. வீட்டை நகர்த்தும் இம்முயற்சியை ஹரியானாவைச் சேர்ந்த கட்டுமானக் கம்பெனி ஒன்று வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது.

இது குறித்து அவ்வீட்டின் உரிமையாளரின் தந்தை ஆறுச்சாமி கூறியதாவது, ‘ கோவை மேட்டுப்பாளையம் சாலையில் எனது மகன் தங்கவேலுக்கு சொந்தமாக 2400 சதுர அடி பரப்பளவில் முதல் தளத்துடன் கூடிய வீடு உள்ளது. கடந்த 2000-ஆவது ஆண்டு கட்டப்பட்ட வீட்டின் தற்போதைய மதிப்பு ரூ.70 லட்சம் ஆகும்.

வீட்டின் முன்புறம் தங்கவேலுக்கு சொந்தமாக உள்ள காலி இடத்தில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால் வணிக வளாகம் கட்டுவதற்கு 40 அடி அளவிற்கு இடப் பற்றாக்குறை ஏற்பட்டது. இதற்காக வீட்டை இடித்து புதிய வீடு கட்ட ரூ. 1 கோடிக்கு மேல் செலவு ஆகும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ஹரியானாவை சேர்ந்த டி.டி.பி.டி. நிறுவனத்தினர், சாயிபாபா காலனியில் உள்ள ஒரு வீட்டை சில அடிகள் உயர்த்தினர்.

இதையடுத்து டி.டி.பி.டி. நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, தங்கவேலு வீட்டை இடிக்காமல் எவ்வித பாதிப்பும் இன்றி இடமாற்றம் செய்ய அவர்கள் உறுதியளித்தனர். இதற்கு ரூ.20 லட்சம் வரை செலவாகும் எனவும் தெரிவித்தனர். எனவே வீட்டை இடிக்காமல் இடமாற்றுவது என முடிவு செய்யப்பட்டு, பிப்ரவரி மாதம் பணி தொடங்கியது.

இதற்காக 300 ஜாக்கிகள் மூலம் சுமார் 1.5 அடிக்கு வீட்டை உயர்த்தி அஸ்திவாரத்தை துண்டித்து செங்கல் வைக்கப்பட்டது. பின்னர் 300 ரோலர்கள் பொருத்தப்பட்டு, ஒரு நாளைக்கு 3 முதல் 4 அடி வரை வீட்டை பின்னோக்கி நகர்த்தி வருகின்றனர்.

இந்த வீட்டின் கழிவுநீர் தொட்டி இணைப்பு மட்டும் துண்டிக்கப்பட்டுள்ளது. குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட இணைப்புகள் துண்டிக்கப்படவில்லை. ஜன்னல், கதவு போன்றவையும் அகற்றப்படவில்லை. தற்போது 15 பணியாளர்கள் உதவியுடன் 35 அடி தூரத்திற்கு வீடு நகர்த்தப்பட்டுள்ளது' என்றார்.

டி.டி.பி.டி. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுஷில் ஷிசோடியா கூறும்பொழுது, 'இது வரை சுமார் 150 டன் எடையுள்ள வீடுகளை மட்டுமே நகர்த்தியுள்ளோம். முதல் தளத்துடன் 400 டன் எடையுடன் கூடிய கட்டடத்தை இப்போதுதான் முதல் முறையாக நகர்த்தி வருகிறோம்.

வீட்டின் சுவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் 35 அடி தூரத்திற்கு நகர்த்தியுள்ளோம். மே மாத இறுதிக்குள் 50 அடி தூரத்திற்கு நகர்த்தி, புதிதாக கட்டப்பட்டுள்ள அஸ்திவாரத்தில் வீடு நிலைநிறுத்தப்படும்' என்று தெரிவித்தார்.

Wednesday, May 15, 2013

ஐபில் 'பெட்'டில் 30 லட்சம் இழப்பு: 13 வயது சிறுவனை கடத்தி கொலை செய்த கல்லூரி மாணவன்


ஐபில் 'பெட்'டில் 30 லட்சம் இழப்பு: 13 வயது சிறுவனை கடத்தி கொலை செய்த கல்லூரி மாணவன்


ஐபில் கிரிக்கெட்டில் பெட் வைத்து 30 லட்சத்தை இழந்த எம்.பி.ஏ கல்லூரி மாணவன், பணத்தை ஈடுகட்ட 13 வயது உறவுக்கார சிறுவனை கடத்தினான். பிணையத் தொகை தர மறுத்ததால் சிறுவனை கொலை செய்து, தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறான்.

வயது வித்தியாசமின்றி அனைவரும் ரசிக்கும் விளையாட்டுகளில் ஒன்று கிரிக்கெட். விளையாட்டு என்பது பொழுதுபோக்கிற்கான ஒன்று என்பதைத் தாண்டி விளையாட்டால், வாழ்க்கையை வினையாக்கிக் கொள்பவர்கள் ஏராளம்.

உலகின் சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை வைத்து ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விளையாட்டிற்கு கிரிக்கெட் ரசிகர்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.

மும்பையை சேர்ந்த எம்பிஏ படிக்கும் ஹிமான்ஷு ரங்கா என்ற மாணவன் இந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெட் வைத்து ரூ. 30 லட்சத்தை இழந்துள்ளார். இதனால் வெறுப்படைந்த அந்த மாணவன் அந்த பணத்தை மீண்டும் பெறவேண்டும் என்ற வெறியில் இருந்துள்ளான்.

பணம் பறிக்கும் நோக்கில், தனது பணக்கார உறவினர் ஒருவரின் 13 வயது சிறுவன் ஆதித்தியாவை கடத்தியிருக்கிறான். ஆதித்யாவின் அப்பா ஜிஜேந்திராவிடம் 30 லட்சம் பிணையத்தொகையாக கேட்டிருக்கிறான். ஆனால், ஜிஜேந்திராவோ போலீசை அனுகியுள்ளார்.

சாலையில் நின்றிருந்த காருக்கு அடியில் ஆதித்தியாவின் செருப்பை கண்ட ஜிஜேந்திரா. உடனே போலீசுக்கு தகவல் தந்துள்ளார். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் ரத்தக்கறை படிந்த தரைப்பகுதியை கண்டனர். மேலும் விசாரணை நடத்தி ஹிமான்ஷூவை பிடித்து விசாரித்ததில் பணம் தர மறுத்ததால் விகேஷ் சிங்கவி என்பவனுடன் சேர்ந்து இந்த சிறுவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டான்.

கிரிக்கெட்டினால், படித்து முடித்து நல்ல வேலைக்கு சென்று, வாழ்க்கையில் பல முன்னேற்றங்களைக் காண வேண்டிய அந்த இளைஞன் தற்போது ஒரு சிறுவனின் வாழ்க்கையை முடித்து தன் வாழ்க்கையையும் அழித்துக் கொண்டுள்ளான் என்பது நிச்சயம் வேதனைக்குரிய விஷயமே.

Tuesday, May 14, 2013

ரூ. 100 கோடியில் மதுரையில் தமிழ்த்தாய்க்கு சிலை - ஜெயலலிதா அறிவிப்பு


ரூ. 100 கோடியில் மதுரையில் தமிழ்த்தாய்க்கு சிலை - ஜெயலலிதா அறிவிப்பு


அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையைப் போல மதுரையில் பிரமாண்ட அளவில் தமிழ்த் தாய்க்கு ரூ. 100 கோடி செலவில் சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் விதி எண் 110ன் கீழ்இந்த அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார். அவர் கூறுகையில், துரையில் 100 கோடி ரூபாய் மதிப்பில் தமிழ்த் தாய் சிலை அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

பெருமை வாய்ந்த தமிழ் மொழியை சிறப்பிக்கும் வண்ணம், அமெரிக்கா நாட்டின் பெருமையையும் புகழையும் உலகளவில் பரப்பும் வகையில் அமைந்துள்ள சுதந்திர தேவி சிலையைப் போல, தமிழர்களின் நாகரீகம், பண்பாடு, இலக்கியச் செல்வங்கள், கட்டடக் கலைத் திறன் ஆகியவற்றை உலகிற்கு எடுத்துக் காட்டும் வகையில், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்த் தாய் சிலை அமைக்கப்படும் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்த் தாய்ப் பூங்கா மேலும், ஐவகை நிலங்களான குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை ஆகியவற்றின் மாதிரிகளை உருவாக்கி தமிழர்களின் தொன்மைச் சான்றுகளாய் விளங்கும் சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள மரம், செடி, கொடிகளுடன் தமிழ்த் தாய்ப் பூங்கா ஒன்றும் அங்கு உருவாக்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தார்.

Monday, May 13, 2013

‘மகாசென்’ புயல்!- இலங்கைக்கு இன்னும் அச்சுறுத்தல்!

‘மகாசென்’ புயல்!- இலங்கைக்கு இன்னும் அச்சுறுத்தல்! வடக்கு, கிழக்கில் தாழமுக்கம்! மட்டக்களப்பில் மினி சூறாவளி


வங்காள விரிகுடாவின் தென்மேற்கே உருவாகியுள்ள மகாசென் என்ற புயல் சின்னமானது இலங்கைக்கு இன்னும் அச்சுறுத்தலாகவே உள்ளதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த புயல் சின்னமானது முல்லைத்தீவில் இருந்து 600 கிலோமீற்றர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இது இலங்கையின் வடமேல் திசை நோக்கி நகர்ந்து வருகிறது.

இதனால் இலங்கையின் காலநிலையிலும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் இரண்டொரு நாட்களில் இந்த புயல் இலங்கையின் வடபகுதியை தாக்கும் வாய்ப்பும் இருப்பதாக அஞ்சப்படுகிறது.
அத்துடன் கிழக்கு கடற்பகுதியில் மீன்பிடிக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு கடலில் தாழமுக்கம்: மட்டக்களப்பில் மினி சூறாவளி


முல்லைத்தீவுக்குக் கிழக்காக 700 கிலோ மீற்றர்கள் தூரத்தில் காணப்படும் ‘மகாசென்’ தாழமுக்கம் மேலும் தீவிரமடையக் கூடிய அச்சுறுத்தல் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் தற்போது மணித்தியாலத்திற்கு 10-20 கிலோ மீற்றர்கள் வேகத்தில் வடமேற்காக நகர்ந்து கொண்டிருக்கும் இத்தாழமுக்கம் வடகிழக்காகி பங்களாதேஷையோ அல்லது மியன்மாரையோ ஊடறுக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இத்தாழமுக்கம் காரணமாக வடக்கு, கிழக்கு கடல் கொந்தளிப்பாகக் காணப்படுவதால் கிழக்கு கடலில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

இத்தாழமுக்கத்தினால் இலங்கைக்குப் பாதிப்பு ஏற்படாது. என்றாலும், அடிக்கடி காற்றின் வேகம் அதிகரிக்கும்.

மேல், சப்ரகமுவ, மத்தி ஆகிய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும், என்றாலும் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் மாலை வேளையில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை இன்று அதிகாலை முதல் மட்டக்களப்பு மாவட்டத்தில் மினி சூறாவளி வீசியுள்ளது. இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கான முன் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 3.00 மணியளவில் ஆரம்பித்த இடி, மின்னல், மழை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய காலநிலை அம் மாவட்டத்தில் தற்போதும் தொடர்கிறது.

யாழ்ப்பாணத்திலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மழை இன்று  காலை முதல் தொடர்ந்து பெய்து வருகிறது.

அம்மோனியா வாயுக் கசிவினை சரி செய்த விண்வெளி வீரர்கள்..!

அம்மோனியா வாயுக் கசிவினை சரி செய்த விண்வெளி வீரர்கள்..!


சர்வதேச விண்வெளி நிலையத்தில் அம்மோனியா வாயு கசிவு ஏற்படுவதை வியாழனன்று வீரர்கள் கண்டுபிடித்தனர்.

1998-ம் ஆண்டு 150 பில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்ட சர்வதேச விண்வெளி நிலையம் சுமார் 400 கிலோமீட்டர் மேலே ஆகாயத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் உள்ள இயந்திரங்களை குளிர்விக்கும் குளிரூட்டும் பகுதிகளில் இருந்தே இவ் வாயுக் கசிவு ஏற்ப்பட்டுள்ளது.

இந் நிலையில் விண்வெளி நிலையத்தில் முகாமிட்டுள்ள கிரிஸ் காசிடி மற்றும் டாம் மார்ஷ்பர்ன் என்ற இரு அமெரிக்க வீரர்கள் விண்வெளியில் கடந்து மிதந்தவாறு அந்த கசிவை சரி செய்தனர்.

இதனால் அங்கு தங்கியுள்ள விண்வெளி வீரர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

அடுத்த வாரம் டாம் மார்ஷ்பர்ன் மற்ற இரு விஞ்ஞானிகளுடன் பூமிக்கு திரும்ப உள்ளதால் இந்த கசிவை உடனடியாக சரி செய்யப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

7 கோடி ஆண்டுகள் பழையான டைனோசரஸ் படிமங்கள் கடத்தல்

7 கோடி ஆண்டுகள் பழையான டைனோசரஸ் படிமங்கள் கடத்தல்: மங்கோலியாவிடம் ஒப்படைகிறது அமெரிக்காமங்கோலியா நாட்டிலிருந்து 7 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசரஸ் எலும்புக்கூடுகளின் படிமங்கள் கடந்த 2010ம் ஆண்டு அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டன.
இந்நிலையில் மங்கோலியா அரசு, டைனோசரஸ் அருங்காட்சியகம் ஒன்றை அமைக்க இருப்பதாக அறிவித்தது.

இதனையடுத்து மங்கோலியாவில் இருந்து அமெரிக்காவிற்கு கடத்தி வரப்பட்ட 10க்கும் மேற்பட்ட டைனோசரஸ் எலும்புக்கூடுகளின் படிமங்களை கொடுக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

ஒரு நாட்டின் கலாச்சார நலனை கொள்ளை அடிப்பவர்களையும், சதிகாரர்களின் செயலையும் அனுமதிக்க முடியாது என்று அமெரிக்கா கூறியுள்ளது.

நாளை நியூயார்க்கில் நடக்கும் நிகழ்ச்சியில் இவைகள் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.