Wednesday, October 31, 2012

சான்டி புயலால் 2000 கோடி டொலர் சேதம்: இருளில் மூழ்கிய நியூயார்க்

சான்டி புயலால் 2000 கோடி டொலர் சேதம்: இருளில் மூழ்கிய நியூயார்க் - Pictures






அமெரிக்காவில் சான்டி புயலால் 2,000 கோடி அமெரிக்க டொலர் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. 62 லட்சம் பேர் மின்சாரம் இன்றித் தவித்து வருகின்றனர்.
அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் மையம் கொண்டுள்ள சான்டி புயல், கடற்கரையோர நகரங்களை நிலைகுலையச் செய்துள்ளது.

13 அடி உயரத்துக்கு மேல் எழும்பிய அலைகள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு பெய்துள்ள மழையால் நியூயார்க், நியூஜெர்ஸி மாகாணங்கள் வெள்ளக்காடாகியுள்ளன.

மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய காற்றால், மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்துள்ளன.

புயல் காரணமாக நிகழ்ந்த பல்வேறு விபத்துகளில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மின்சாரம் இன்றி 62 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நியூயார்க் உள்பட கிழக்கு அமெரிக்கப் பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.

அணு உலை எச்சரிக்கை: அமெரிக்க அணுசக்தி ஒழுங்காற்று ஆணையம், ஓய்ஸ்டர் கிரீக் அணு மின்நிலையம் தொடர்பாக உஷார் நிலையை அறிவித்துள்ளது.

அங்கு வெளியில் இருந்து வரும் நீரின் அளவு அதிகபட்ச நிலையை எட்டியுள்ளதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பராமரிப்பு, எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட காரணங்களால் ஏற்கெனவே அந்த அணு உலையின் செயல்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக எந்த அணு உலையும் மூடப்படவில்லை, அனைத்து உலைகளும் பாதுகாப்பாக உள்ளன என்று அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து முடக்கம்: போக்குவரத்து தொடர்ந்து 2ஆவது நாளாக முடங்கியுள்ளது. நியூயார்க்கின் ஜான் எஃப் கென்னடி விமான நிலையம் மூடப்பட்டு, 13 ஆயிரம் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

கனெக்டிகட், டெலாவர், மேரிலேண்ட், மாசாசூசெட்ஸ். நியூயார்க், நியூஜெர்ஸி, பென்சில்வேனியா, ரோத் தீவு பகுதிகளில் அவசரநிலைப் பிரகடனம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒபாமா ஆலோசனை: பிரசாரத்தை ரத்து செய்துள்ள ஒபாமா, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜானெட் நெப்போலிடனோ உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தேர்தல் பற்றி எனக்குக் கவலையில்லை. மக்கள், போக்குவரத்து, பொருளாதாரம் பற்றியே இப்போது கவலையடைகிறேன். மக்களின் உயிர்களைக் காப்பதற்கே முன்னுரிமை அளிக்கப்படும். பொருளாதாரம் விரைவில் சீரடையும் என்றார்.

சேத மதிப்பு: புயல் காரணமாக 2,000 கோடி அமெரிக்க டொலர்கள் வரை பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நியூயார்க் பங்குச்சந்தை 2ஆவது நாளாக தொடர்ந்து மூடப்பட்டது. சூழல் அனுமதித்தால் இன்று சந்தை செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்புப்படை: 140 ஹெலிகாப்டர்களுடன் 6,700 மீட்புப்படையினர் ஆயத்த நிலையில் இருப்பதாக பென்டகன் ராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

50 லட்சம் லிட்டர் குடிநீர், 30 லட்சம் உணவுப் பொருள்கள், 9 லட்சம் போர்வைகள், 1 லட்சம் கட்டில்கள் தயாராக உள்ளன என்று அவசரக்கால மேலாண்மைப் பிரிவு தெரிவித்துள்ளது.

புகலிடமாக மாறும் குருத்வாரா: அமெரிக்காவில் உள்ள குருத்வாராக்கள், புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசரகால தங்குமிடமாகப் பயன்படுத்தப்படும் என்று சர்வதேச சீக்கிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பெரும் வளாகங்கள் கொண்ட குருத்வாராக்களில் போதுமான உணவு, குடிநீர் ஆகியவை இருப்பு வைக்கப்பட்டுள்ளன. புயலால் பாதிக்கப்பட்டவர்களை அங்கு தங்க வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அமெரிக்க குருத்வாரா பிரபந்தக் குழு(ஏஜிபிசி) தெரிவித்துள்ளது.







































No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!