Saturday, June 30, 2012

உலகளாவிய நேரப்படி இன்று ஒரு விநாடி அதிகரிக்கும்



உலகளாவிய நேரப்படி, இன்று சனிக்கிழமை இரவு ஒரு விநாடி நேரம் அதிகரிக்கும் என சர்வதேச நேரக் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதாவது ஜூன் மாதம் 30ஆம் திகதி இரவு(சனிக்கிழமை) 11:59:59 மணிக்குப் பிறகு, ஜூலை 1ஆம் திகதிக்கு(ஞாயிற்றுக்கிழமை) முன் 11:59:60 என்று ஒரு விநாடி நேரம் அதிகரிக்கும்.

இந்த நேர மாற்றத்தை அனைவரும் திருத்திக் கொள்ள வேண்டும் என்று பிரான்சின் தலைநகர் பாரீசில் செயல்பட்டு வரும் சர்வதேச புவியியல் ஆராய்ச்சி மையத் தலைவர் டேனியல் காம்பிஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Wednesday, June 27, 2012

இலங்கையின் சனத்தொகை 2 கோடியே 8 இலட்சத்து 69 ஆயிரம் பேர்

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட குடிசன வீட்டு வசதிகள் மதிப்பீட்டின் பிரகாரம் ஒருகோடியே மூன்று இலட்சத்து 57 ஆயிரம் ஆண்களும் (10357000) ஒரு கோடியே ஐந்து இலட்சத்து 12 ஆயிரம் பெண்களுமாக (10512000) மொத்தம் இரண்டு கோடியே எட்டு இலட்சத்து 69 ஆயிரம் பேர் (20,869000) நாட்டில் வசிப்பதாகத் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதென நிதி திட்டமிடல் அமைச்சு நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தது.
மேற்படி கணக்கீட்டின்படி ஆண்களை விட ஒரு இலட்சத்து 55 ஆயிரம் பெண்கள் அதிகமாக இருப்பதாகவும் மதிப்பிடப்பட்டிருப்பதாக அமைச்சு சமர்ப்பித்துள்ள புள்ளி விபரத்தில் கூறப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அமர்வின் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. ரவி கருணாநாயக்கவினால் எழுப்பப்பட்டிருந்த கேள்விக்கு நிதி திட்டமிடல் அமைச்சினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த பதிலிலேயே மேற்கண்டவாறு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அண்மைய குடிசன மதிப்பீடு தொடர்பான மேற்படி கேள்வி குறித்த முழு விபரம் வருமாறு,
நாட்டில் மொத்தமாக 36 ஆயிரத்து 807 கிராமங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் சராசரியாக 123 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
அத்துடன் நாடு முழுவதிலும் 14 ஆயிரத்து 22 கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகள் இருக்கின்ற அதேவேளை, அதே எண்ணிக்கையிலான உத்தியோகத்தர்கள் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும் 313 பிரதேச செயலகங்கள் உள்ள நிலையில் தற்போதைய கணக்கெடுப்பின் பிரகாரம் 309 பிரதேச செயலாளர்கள் கடமையில் உள்ளனர்.
உதவி அரசாங்க அதிபர் அலுவலகங்களின் எண்ணிக்கை 19 ஆக கணக்கிடப்பட்டுள்ள அதேவேளை, உதவி அரச அதிபர், உதவி பிரதேசசெயலக தலைவர் என்ற அடிப்படையில் 17 பேர் கடமையாற்றி வருகின்றனர்.
இது இவ்வாறிருக்க நாடு முழுவதுமான கணக்கெடுப்பின் பிரகாரம் ஒரு கோடியே மூன்று இலட்சத்து 57 ஆயிரம் ஆண்களும் ஒரு கோடியே ஐந்து இலட்சத்து 12 ஆயிரம் பெண்களுமாக மொத்தம் இரண்டு கோடியே எட்டு இலட்சத்து 69 ஆயிரம் பேர் வசித்து வருவதாக தொகை மதிப்பு புள்ளி விபரத் திணைக்களம் மதிப்பிட்டுள்ளது.



நாட்டின் சனத் தொகை மாவட்ட மட்டத்தில் நோக்குகையில்,

மாவட்டம் ஆண்கள் பெண்கள் மொத்தம்

1) கொழும்பு 1321000  1263000  2584000

2) கம்பஹா 1070000  1121000  2191000

3) களுத்துறை 566000    578000  1144000

4) கண்டி 706000    741000  1447000

5) மாத்தளை 251000   253000    504000

6) நுவரெலியா 382000   386000    768000

7) காலி 533000   563000  1096000

8) மாத்தறை 411000   436000    847000

9) அம்பாந்தோட்டை 288000   288000    576000

10) யாழ்ப்பாணம் 292000   325000    617000

11) கிளிநொச்சி 81000     79000    160000

12) மன்னார்55000     50000    105000

13) வவுனியா 86000     91000    177000

14) முல்லைத்தீவு 70000  74000  144000

15) மட்டக்களப்பு 265000  285000  550000

16) அம்பாறை 321000  333000  654000

17) திருகோணமலை 89000  191000  380000

18) குருணாகல் 781000  796000  1577000

19) புத்தளம் 392000  397000  789000

20) அனுராதபுரம் 429000  411000  840000

21) பொலன்னறுவை 217000  198000  415000

22) பதுளை 446000  451000  897000

23) மொனராகலை 227000  218000  445000

24) இரத்தினபுரி 575000  564000  1139000

25) கேகாலை 403000  420000  823000

மொத்தம்10512000 20869000 10357000


Monday, June 25, 2012

எரிகற்களின் மோதலால் தான் தங்கம் வந்ததாம் : ஆராய்ச்சியில் தகவல்



தங்கம் மற்றும் பெருமதிப்பு வாய்ந்த தனிமங்கள் எங்கிருந்து வந்தன என்பது குறித்து புதிய ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அவை அனைத்தும் அண்ட வெளியிலிருந்து பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு வந்தன என்பதுதான் தற்போது அறிவியலாளர்கள் கூறும் செய்தி. இந்த கண்டுபிடிப்பு குறித்த தகவல்களை இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களே தெரிவித்துள்ளனர். கீரீன்லாண்டில் நான்கு பில்லியன் ஆண்டுகள் பழமையான படிமங்களை அராய்ந்த பிறகே தாங்கள் இந்த முடிவுக்கு வந்ததாக அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தப் படிமங்களில் இருந்த ஐசோடோப்புகள், பூமியிலிருந்து உருவான ஐசோடோப்புகளிலிருந்து தெளிவாக மாறுபட்டிருந்ததை பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே தங்களது இந்தக் கண்டுபிடிப்பானது, நாம் வாழும் பூமி சுமார் இருநூறு மில்லியன் வருடங்கள் பழமையானதாக இருக்கும் போது, அண்ட வெளியிலிருந்து வந்த மிகப்பெரிய எரிகற்களின் மோதல் காரணமாக, இன்று நாம் பயன்படுத்தும் பெருமதிப்பு வாய்ந்த இந்தத் தனிமங்கள் பூமியை வந்தடைந்தன என்கிற கோட்பாட்டை உறுதிபடுத்துகின்றது என்று அந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பூமியின் ஆரம்பகாலங்களில் இந்த மோதல்கள் காரணமாக கொதித்து உருகிய நிலையில் இருந்த புவியின் மையப் பகுதிக்குள் தங்கம் மற்றும் இதர பெருமதிப்பு வாய்ந்த இந்தத் தனிமங்கள் மூழ்கின என்றும் அந்த ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் நாம் நமது திருமண மோதிரங்கள் போன்றவற்றில் பயன்படுத்தும் தங்கமானது எப்படி உருவானது என்கிற கதை இன்னமும் ஆச்சரியாமாக உள்ளது. இந்தப் பிரபஞ்சத்தில் இதுவரை பார்த்திராத வகையில், அனுவின் ஒரு உட்கருவான நியூட்ரான்களின் மிகச் சக்தி வாய்ந்த மோதல்களிலேயே நாம் இன்று பயன்படுத்தும் தங்கம் உருவானது என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

உயிரை பறிக்கும் அதிகளவு பாராசிட்டமால் மாத்திரைகள்


தொடர்ந்து அளவுக்கதிகமாக பாராசிட்டமால் வலி நிவாரணி மருந்தை உட்கொண்டுவரும் ஆட்களுக்கு சில சந்தர்ப்பங்களில் உடலில் தேங்கும் அந்த மருந்தின் அளவு அதிகமாகி உயிரிழப்பு ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். படிப்படியாக உடலில் சேர்ந்தாலும் கூட மருந்தின் அளவு கூடிப்போய் மரணம் ஏற்படலாம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறாக உயிரிழந்திருப்பதை எடின்பர்க் நகர மருத்துவமனைகள் பதிவுசெய்துள்ளன என்று அந்நகர பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு நபர் உட்கொள்வதற்குரிய அளவை விட சற்று கூடுதலான அளவில் பாரசிட்டமால் மருந்தை உட்கொள்கிறோம் என்பதை பலர் உணராமலேயே இருந்துவிடுகின்றனர் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஒரு தடவையில் மருந்தின் அளவு கூடிப்போவதை கண்டுபிடிப்பதென்பதை விட படிப்படியாக உடலில் மருந்தின் அளவு கூடிப்போவதை கண்டுபிடிப்பது சிரமமான விஷயமாகவே இருந்துவந்துள்ளது.