Wednesday, May 22, 2013

அருமருந்தாகும் தயிர்

அருமருந்தாகும் தயிர்

 

தயிர் ஒரு அருமருந்து என்பது பலருக்கு தெரிவதில்லை. சிலருக்கு தயிரை கண்டாலே பிடிக்காது, சிலருக்கு தயிர் இல்லாமல் சாப்பாடு இறங்காது.
தயிர் உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு, நல்ல ஜீரண சக்தியையும் தருகிறது. பால் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில 32 சதவீதம் ஜீரணமாகியிருக்கும்.

தயிர், சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில 91 சதவீதம் ஜீரணப்பட்டிருக்கும். தயிரில் உள்ள லாக்டோபேசில் என்ற என்சைம் ஜீரண சக்தியை தூண்டி வயிற்றுக் கோளாறுகளை சரி செய்கிறது. வயிறு சரியில்லாதபோது தயிர் சோற்றை சாப்பிட மருத்துவர்கள் சொல்வது இதனால்தான்.

அதிகமாக வயிற்றுப் போக்கு ஏற்படும் போது வெந்தயத்துடன் தயிர் ஒரு கப் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப் பொறுமல் அடங்கும்.

பிரியாணி போன்ற உடலுக்கு சூடுதரும் உணவு வகைகளை சாப்பிடும் போது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் வெங்காயம் சாப்பிடுகிறோம்.

மெனோபாஸ் எட்டப் போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் தேவையானது உடலுக்கு தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.

தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துக்களும், புரதச்சத்துகளும் அடங்கியுள்ளன. கால்சியமும், ரிபோபிளேவின் என்ற வைட்டமின் பி-யும் தயிரிலிருந்தே பெறப்படுகின்றன.

தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும். நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்கும். சூரிய ஒளியால் பாதிக்கப்டும் நரம்புகளையும், தோல்பகுதிகளையும் தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு போன்றவற்றுக்கு தயிர்தான் சிறந்த மருந்து.

குடல்வால் மற்றும் வயிற்றுப்போக்குக்கு காரணமான கிருமிகள் தயிர், மோரில் உள்ள லாக்டிக் அமிலத்தால் விரட்டியடிக்கப்படும். மஞ்சள் காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனை கலந்து உட்கொள்வது சிறந்த உணவாகும்.

மலம் கழித்த பின்னர் சிலருக்கு மலக்குடல் எரிச்சல் ஏற்படும். தயிர் மற்றும் எலுமிச்சை சாறு அருந்தி இதை குணப்படுத்தலாம். சில தோல்வியாதிகளுக்கு மோரில் நனைத்த துணியை பாதிக்கப்பட்ட இடத்தில் கட்டி வருவது சிறந்த மருந்தாகும். தோல் வீக்க நோய்க்கும் மோர்க்கட்டு சிறந்த மருந்தாகும்.

தயிரை சோற்றுடன் கலந்து சாப்பிடபிடிக்காதவர்கள் தயிரில் சர்க்கரை கலந்து லஸ்ஸியாக குடிக்கலாம். பன்னீர் கட்டிகளாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

இதனை அதிகம் சேர்த்துக் கொண்டால் கொழுப்பு சத்தை அதிகப்படுத்தும். மோராக கடைந்து உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக சாப்பிடும் போது தயிரை தவர விட்டுவிடாதீர்கள்.

புதிய சாதனை படைத்தது ரோவர் விண்கலம்!

புதிய சாதனை படைத்தது ரோவர் விண்கலம்! 


செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய நாசாவால் அனுப்பப்பட்டுள்ள, ஆப்பர்சூனிட்டி ரோவர் விண்கலம், புவிக்கு அப்பால் மிக அதிக தூரம் பயணித்து புதிய சாதனையை படைத்துள்ளது.

35.750 கிலோ மீட்டர் பயணித்து 40 ஆண்டுகளாக இருந்து வந்த சாதனையை ஆப்பர்சூனிட்டி ரோவர் விண்கலம் முறியடித்துள்ளது. கடந்த 16-ஆம் தேதி, 80 மீட்டர் தூரத்தை கடந்து ஆப்பர்சூனிட்டி ரோவர் விண்கலம் இந்த சாதனையை நிகழ்த்தியதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

1973-ஆம் ஆண்டு சோவியத் யூனியன் அனுப்பிய, லுனாகோட் 2 ரோவர் விண்கலமே புவிக்கு அப்பால் மிக அதிக தூரம் பயணித்த விண்கலம் என்ற பெயரை பெற்றிருந்தது.

லுனாகோட் 2 ரோவர், 37 கிலோ மீட்டர் தூரம் பயணித்துள்ளது. 2003-ஆம் ஆண்டு நாசா செலுத்திய ஆப்பர்சூனிட்டி ரோவர் விண்கலம் 9 ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.


பூமியை நெருங்கிக் கொண்டிருக்கும் 2.7 கி.மீ நீள விண்கல்!


பூமியை நெருங்கிக் கொண்டிருக்கும் 2.7 கி.மீ நீள விண்கல்!


சுமார் 2.7 கி.மீ நீளமுள்ள ஒரு விண்கல் (asteroid) பூமியை நெருங்கிக் கொண்டுள்ளது. இது வரும் மே 31ம் தேதி பூமியை மிக அருகே கடந்து செல்லப் போகிறது.

1998 QE2 என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த விண்கல் எங்கிருந்து வந்தது என்பதை உறுதி செய்ய முடியவில்லை.


பல சந்தேகங்கள்... 

பெரும்பாலான விண்கற்கள் செவ்வாய் கிரகத்துக்கும் ஜூபிடர் கிரகத்துக்கும் இடையிலான asteroid belt எனப்படும் பகுதியில் தான் சுற்றி வருகின்றன. ஆனால், 1998ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளி மையத்தால் இந்த விண்கல் கண்டுபிடிக்கப்பட்டபோது, இது எங்கிருந்து வந்தது என்பதில் பல சந்தேகங்கள் எழுந்தன. இதன் மேல் பகுதி கருப்பு நிறத்தில், வளவளப்பான திரவம் படிந்த நிலையில் உள்ளது.


உடைந்து சிதறிய வால் நட்சத்திரத்தின் ஒரு பகுதி... 

இதனால் சூரியனுக்கு மிக அருகே சென்று உடைந்து சிதறிய வால் நட்சத்திரத்தின் ஒரு பகுதியாக இந்த விண்கல் இருக்கலாம் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸாவின் ஜெட் புரபல்சல் லெபாரட்டரியின் ஆய்வாளரான ஆமி மெய்ன்ஸர் கூறியுள்ளார்.

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள US Minor Planet Center தான் இந்த விண்கல்லின் திசையை வேகத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.


மே 31ம் தேதி இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு... 

வரும மே 31ம் தேதி இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு இந்த விண்கல் பூமியிலிருந்து 5.8 மில்லியன் கி.மீ. தூரத்தில் கடந்து செல்லப் போகிறது. இது பூமிக்கும் நிலவுக்கும் உள்ள தூரத்தைப் போல 15 மடங்காகும். இது மிகப் பெரிய இடைவெளி மாதிரி தோன்றினாலும் அண்டசராரங்களோடு ஒப்பிடுகையில் ஒரு கல் எறி தூரம் தான்.


டைனோசர்களை அழித்து ஒழித்த விண்கல் மாதிரியே... 

இந்த அளவிலான ஒரு விண்கல் தான் சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியில் மோதி மாபெரும் அழிவை ஏற்படுத்தி டைனோசர்களை அழித்து ஒழித்ததாகக் கருதப்படுகிறது.

அதே நேரத்தில் இந்தமுறை இந்த விண்கல் பூமியை எட்டிப் பார்த்துவிட்டு சென்றுவிடப் போகிறது.


200 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வரும்.... 

இதே விண்கல் 200 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பூமிக்கு அருகே வருமாம்! இதற்கிடையே பூமிக்கு மிக அருகே வரும் விண்கற்களை விண்வெளியிலேயே எதிர்கொண்டு உடைக்கும் அல்லது திசை திருப்பும் திட்டத்தை தயாரித்து வருகின்றன நாஸாவும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஎஸ்ஏவும் (European Space Agency- ESA).


Didymos .. போட்டுத் தள்ள திட்டம்... 

இந்தத் திட்டத்தின் கீழ் முதன்முதலாக வரும் 2022ம் ஆண்டில் Didymos என்ற விண்கல்லை விண்வெளியில் சந்தித்து உடைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விண்கல் 2022ம் ஆண்டில் பூமிக்கு 11 மில்லியன் கி.மீ. அருகே வரப் போகிறது. இது இரட்டை கற்களைக் கொண்ட விண்கல். 800 மீட்டர் விட்டம் கொண்ட ஒரு விண்கல்லும் அதை 150 மீட்டர் விட்டம் கொண்ட ஒரு விண்கல் பூமியை நிலா சுற்றி வருவது மாதிரி சுற்றிக் கொண்டிருக்கிறது.

நம்ம மேல விண்கற்களுக்கு எவ்வளவு பாசம்.. கூட்டம் கூட்டமா இங்கே வருதே.. !டம்ப்ளர் இணையத்தளத்தை ரூ. 5,000 கோடிக்கு வாங்கும் யாகூ!

டம்ப்ளர் இணையத்தளத்தை ரூ. 5,000 கோடிக்கு வாங்கும் யாகூ!பிளாக்கிங் செய்ய உதவும் டம்ப்ளர் இணையத்தளத்தை யாகூ நிறுவனம் ரூ. 5,000 கோடிக்கு வாங்க திட்டமிட்டுள்ளது.

இன்டர்நெட்டில் 18 முதல் 24 வயதினரிடையே மிகப் பிரபலமாக உள்ள பிளாக்கிங் இணையத்தளமான டம்ப்ளரை வாங்குவதன் மூலம் இளம் வயதினரை ஈர்க்க யாகூ திட்டமிட்டுள்ளது. 2007ம் ஆண்டு நிறுவப்பட்ட டம்ப்ளர் இணையத்தளத்தில் 107 மில்லியன் பிளாக்குகள் உள்ளன. 12 மொழிகளில் ஆன இந்த இணையத்தில் 50 பில்லியன் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 13 மில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டியுள்ள இந்த நிறுவனம் இந்த ஆண்டில் 100 மில்லியன் டாலர்களை ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. வெறும் 175 ஊழியர்களைக் கொண்டு இந்த இணையத்தளம் இந்த சாதனையைச் செய்துள்ளது. இந் நிலையில் இதை வாங்க யாகூ திட்டமிட்டுள்ளது.

துபாயில் குடும்பத்தை அங்கு அழைத்துக் கொள்ள புதிய நடைமுறை!


துபாயில் பணிபுரிபவர்கள் குடும்பத்தை அங்கு அழைத்துக் கொள்ள புதிய நடைமுறை!


துபாயில் தங்கியிருந்து பணிபுரிபவர்கள் தமது குடும்பத்தை துபாய்க்கு அழைத்துக் கொள்ள விண்ணப்பிக்கும்போது, இனி வங்கி கணக்கு ஸ்டேட்மென்ட்டுகள் தேவை என்ற நடைமுறை வரவுள்ளது.

இதுவரை காலமும், பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து கடிதம் (salary certificate) கொடுத்தால் போதும் என்று இருந்த நடைமுறையில் மாற்றம் ஏற்படுகிறது.

துபாயில் உள்ள  GDRFA (General Directorate of Residency and Foreigners Affairs) அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “ஏற்கனவே துபாயில் பணிபுரிந்து கொண்டிருப்பவாக இருந்தால், 3 மாதங்களுக்கான பேங்க் ஸ்டேட்மென்ட் தேவை. அதில் அவரது சம்பளம் பதிவாகி இருக்க வேண்டும். துபாய்க்கு புதியவராக இருந்தால், குடும்பத்தை ஸ்பான்சர் செய்ய 1 மாத பேங்க் ஸ்டேட்மென்ட் தேவை” என்றார்.

Dh10,000 ஊதியம் பெறுவதாக பணியிடத்தில் இருந்து கடிதம் வாங்கிவந்த சிலர், Dh2,500 ஊதியத்திலேயே பணிபுரிவதை நாம் அறிந்திருக்கிறோம். இதனால், இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது” என்றும் தெரிவித்தார் அவர்.

இதுவரை காலமும், குடும்பத்தை ஸ்பான்சர் பண்ண விரும்பும் ஒருவர், labour contract, salary certificate ஆகியவற்றுடன் விண்ணப்பித்தால் போதுமானது. இனி புதிதாக விண்ணப்பிப்பவர்கள், இந்த இரு ஆவணங்களுடன், பேங்க் ஸ்டேட்மென்டையும் கொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதில் ஒரு நல்ல விஷயம், இந்த நடைமுறை புதிதாக விண்ணப்பிக்கும் ஆட்களுக்கு மட்டுமே. ஏற்கனவே குடும்பத்தை அழைத்துக் கொண்டவர்கள் விசாவை நீடிப்பு (renewing residency visas) செய்யும்போது இந்த நடிவடிக்கை கிடையாது.

அதாவது, பேங்க் ஸ்டேட்மென்ட் தேவையில்லை.வருகிறது 'டாட் இன் டாட் நெட்'.. ஜூனில் இந்தியாவுக்கு கிடைக்கும் புதிய இன்டர்நெட் அட்ரஸ்


வருகிறது 'டாட் இன் டாட் நெட்'.. ஜூனில் இந்தியாவுக்கு கிடைக்கும் புதிய இன்டர்நெட் அட்ரஸ்


வரும் ஜூன் மாதத்தில் இந்தியாவுக்கு புதிய இன்டர்நெட் முகவரி கிடைக்க உள்ளது. இந்தியாவில் டொமைன் நேம்களின் மிகப் பெரிய வினியோகஸ்தரான டைரக்டி குழுமம் டாட் இன் டாட் நெட் (.IN.NET) என்ற புதிய இன்டர்நெட் முகவரியை அறிமுகப்டுத்தியுள்ளது. அதாவது முகேஷ்அன்ட்சன்ஸ்.இன் அல்லது .காம் என்று பதிவு செய்வதற்கு பதிலாக முகேஷ்.இன்.நெட் என்று பதிவு செய்யலாம்.

உலக அளவில் இன்டர்நெட்டை அதிகமாகப் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 3 மில்லியன் டொமைன் நேம்கள் மற்றும் இன்டர்நெட் முகவரிகள் பயன்பாட்டில் உள்ளன.

டாட் இன் டாட் நெட் முகவரியை முன்பதிவு செய்ய விரும்புவர்கள் வரும் ஜூன் மாதம் 18ம் தேதி முதல் செய்யலாம். இதையடுத்து ஆகஸ்ட் 1ம் தேதி முதல் முதலில் வருவோருக்கு முதல் உபசரிப்பு என்ற முறையில் டொமைன் நேம்கள் பதிவு செய்து கொடுக்கப்படும். இது குறித்து டைரக்டி குழும நிறுவனரும், சிஇஓவுமான பவின் துகாரியா கூறுகையில்,

வாடிக்கையாளர்களில் 65 சதவீதம் பேருக்கு தங்களுக்கு பிடித்த டொமைன் நேம் கிடைக்கவில்லை என்பது நாங்கள் சேகரித்த தகவலின் மூலம் தெரிய வந்துள்ளது. அதனால் அவர்கள் கிடைத்த டொமைன் நேம்களை பெற்று பயன்படுத்தி வருகின்றனர். இப்படி நேம்களுக்கு பஞ்சமில்லாமல் அனைத்து இந்தியர்களும் தங்களுக்கு பிடித்த நேம்களை குறைந்த விலையில் வாங்கி பயன்படுத்த வேண்டும் என்பது தான் எங்களின் குறிக்கோள் என்றார்.

Monday, May 20, 2013

விண்வெளி டூர் போன எலிகள், பல்லிகள் மற்றும் நத்தைகள்


விண்வெளி டூர் போன எலிகள், பல்லிகள் மற்றும் நத்தைகள்: உயிருடன் திரும்பியதில் ரஷிய விஞ்ஞானிகள் மகிழ்ச்சி


விண்வெளிக்கு முதற்கட்டமாக அனுப்பப்பட்ட எலிகள், பல்லிகள் மற்றும் நத்தைகள் ஆகியவை உயிருடன் பத்திரமாக திரும்பி வந்துள்ளதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

2030-ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்ப திட்டமிட்டுள்ள ரஷியா, அதன் சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய முதல்கட்டமாக விண்வெளிக்கு உயிரினங்களை அனுப்பி ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது.

முதல் கட்ட முயற்சியாக 45 எலிகள், 15 பல்லிகள், நத்தைகள் மற்றும் தாவரங்களை வைத்து கடந்த ஏப்ரலில் பியான்-எம். என்ற விண்கலத்தை ரஷ்யா விண்ணுக்கு அனுப்பியது.

அந்த விண்கலம் பூமியில் இருந்து சுமார் 575 கி.மீட்டர் தூரத்தில் ஒரு மாத காலமாக விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது ஆய்வு முடிந்த நிலையில் அந்த விண்கலம் ஓரன்பர்க் மாகாணத்தில் தரை இறக்கப்பட்டுள்ளது.

அப்போது, விண்வெளிக்கு அனுப்பப்பட்ட எலிகள், பல்லிகள் மற்றும் நத்தைகளில் பெரும்பாலானவை உயிருடன் இருந்தது தெரிய வந்துள்ளது.

பொதுவாக விண்வெளிக்கு சென்றதும் உடல் எடை குறையும் , அந்நிலையில் உடல் உறுப்புகள் பணிபுரியும் தன்மை குறித்து ஆராய்வதற்காக இந்த சோதனை முயற்சி செய்யப்பட்டதாக ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தந்தையாக போகிறீர்களா? இது உங்களுக்காக!!!

தந்தையாக போகிறீர்களா? இது உங்களுக்காக!!!


கருத்தரித்த நாள் தொடங்கி குழந்தையை பூமியில் தவழவிடும் நாள் வரை பெண்கள் படும் சிரமங்களும் குறைவு இல்லை.
பிரசவத்தோடு பெண்ணின் கஷ்டங்கள் தீர்ந்துவிடுகின்றனவா என்ன? அந்தக் குழந்தையைப் பராமரித்துப் பாதுகாக்கும் அத்தனை வேலைகளும் தாய்க்குத்தானா? அப்போ... அப்பாக்களுக்கு? மனைவி கருவுற்றபோதும் பிரசவித்தபோதும் சக நண்பர்களுக்கு 'பார்ட்டி’ கொடுப்பதோடு சரியா?

குழந்தையைப் பெற்றெடுப்பது முதல் பேணிக்காப்பது வரை தாய்க்கு நிகரான பணியைத் தந்தையும் செய்ய வேண்டும்.

மனைவியுடன் கூடவே இருந்து குழந்தையைக் கவனிக்க வேண்டிய பெரும் பொறுப்பு கணவனுக்கு உண்டு என்றுச் சொல்லும் மகப்பேறு மருத்துவர்கள் மனைவியின் கர்ப்பகாலத்தில் கணவர் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதையும், தந்தையாகப் போகும் தன்னிகரில்லா உறவை, வரவேற்க எப்படிக் காத்திருக்கவேண்டும் என்பதையும் விளக்கினர்.

இந்த விடயத்தில் திருமணம் ஆனதில் இருந்தே ஆண்களின் பங்கும் தொடங்கிவிடுகிறது.

முதலில் தற்போது நமக்குக் குழந்தை அவசியம்தானா என்பதைத் தம்பதிகள் இருவரும் கலந்துபேசி முடிவெடுக்க வேண்டும். தற்போதைக்கு குழந்தை வேண்டாம் என்பது உங்கள் முடிவு என்றால் தகுந்த கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கருவுற்ற பின்பு தொடர்ந்து செக்-அப்கள் செய்வது அவசியம். இதை தேவையற்ற செலவு என்று ஒருபோதும் நினைக்காமல் ஒத்துழைப்பு தரவேண்டியது முக்கியம்.

டொக்டர் சொல்லும் நேரத்தை ஒருபோதும் தவிர்க்காமல், அழைத்துச் செல்லுங்கள். அதைவிட முக்கியமானது, ஒவ்வொரு முறையும் செக்-அப்பிற்கு நீங்களே உடன் இருந்து அழைத்துச் செல்லவேண்டும். ஆபீஸ் வேலையைக் காரணம் காட்டி தப்பிக்காதீர்கள்.

திருமணம் ஆன புதிதில் பெண்ணுக்குப் புகுந்த வீட்டில், பிறந்த வீடு அளவுக்கு அந்நியோன்யம் இருக்காது. அதனால் கணவனாகிய நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் அந்தப் பெண்ணுக்கு, இதுவும் நம் வீடுதான் என்ற எண்ணத்தை மனதில் ஆழ பதிக்கவேண்டும்.


அந்த அளவுக்கு மனைவிக்கான உரிமைகளையும், பொறுப்புகளையும் வழங்குவது முக்கியம். ஏனெனில் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அடிக்கடி ஏதாவது சாப்பிடத் தோன்றும் அல்லது பிடித்த தின்பண்டங்களை உண்ணத் தோன்றும்.

விரும்பிக் கேட்கும் பதார்த்தங்களை வாங்கிக் கொடுப்பது சரிதான். அவை தரமானதாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். முடிந்தவரை எண்ணெய்ப் பதார்த்தங்களை தவிர்த்திடுங்கள்.

அடிக்கடி மனைவியை வெளி இடங்களுக்கு அழைத்துச் சென்று அவருடன் மனம் விட்டுச் சிரித்துப் பேசி, கொஞ்சி விளையாடுங்கள். இது கர்ப்பக் காலத்தில் அவருக்கு இருக்கும் தேவையற்ற பயத்தைப் போக்க உதவும்.

கர்ப்பம் ஆன முதல் மூன்று மாதங்களில் ஒரு பெண்ணுக்கு எடைக் குறைவு இருப்பது இயல்புதான். அதைப் புரிந்துகொள்ளுங்கள். இதுகுறித்து தேவை இல்லாமல் பயம்வேண்டாம்.

கர்ப்பக் காலத்தில் சில பெண்களுக்குச் சிறுநீர் வெளியேறுவதில் பிரச்னைகள் இருக்கலாம். உங்கள் துணைக்கு, இந்தப் பிரச்னைகள் இருக்கிறதா என்பதைத் தயக்கம்கொள்ளாமல் கேட்டுத் தெரிந்து, பிரச்னை இருப்பின் அதற்குரிய தீர்வுகள் கிடைக்க வழிவகை செய்யுங்கள்.

எந்த விடயத்திலும் இருவருக்குள்ளும் ஒளிவுமறைவு வேண்டாம்.

கர்ப்பக் காலத்தில் சரியான உணவுகள் எடுத்துக்கொள்வது அவசியம். மனைவி சரியாகச் சாப்பிடுகிறாரா என்பதைக் கவனியுங்கள். நேரம் கிடைக்கும்போது, நீங்களே ஊட்டிவிடுங்கள். அப்போது உங்கள் மனைவி, நிச்சயம் குறைந்தது ஒரு கைப்பிடியாவது அதிகம் சாப்பிடுவார்.

வெவ்வேறு மருத்துவர்களைச் சந்தித்து ஆலோசனை பெற்றிருந்தாலும் ஒரே இடத்தில் ஆலோசனை பெற்று வந்தாலும் அனைத்து டாக்குமென்ட்களையும் திகதிவாரியாக வைத்துக்கொள்ளுங்கள். இது சரியான சிகிச்சைக்குப் பேருதவியாக இருக்கும்.

மூட நம்பிக்கைகளை ஆதரிக்காதீர்கள். உதாரணமாக 'சித்திரை மாதம் குழந்தை பிறந்தால், மாமனுக்கு ஆகாது’ என்பன போன்ற மூட நம்பிக்கைகளைக் காரணம் காட்டி, சித்திரை மாதம் பிறக்கவேண்டிய குழந்தையை முன்கூட்டியே அறுவைசிகிச்சை செய்து பங்குனி மாதமே வெளியில் எடுப்பார்கள். இது முற்றிலும் தவறானது.

இது முதலில் இரண்டு உயிர்கள் சம்பந்தப்பட்ட விடயம் என்பதை மறவாதீர்கள்.

பிரசவ நேரத்தில் கணவன் அருகில் இருந்தாலே பெண்ணுக்குத் தனி தைரியம் பிறக்கும். அதே சமயம் இதில் அனுபவம் மிக்க பெண் ஒருவரையும் அருகில் இருத்திக்கொள்வதும் மிகவும் நல்லது.

 குழந்தை பிறந்த பின்னர் சில பெண்கள், தாய்ப்பால் கொடுக்கக் கூச்சப்படுவார்கள். இந்த நேரத்தில் அருகில் இருந்து, தாய்ப்பாலின் மகத்துவத்தைச் சொல்லி மனைவிக்குப் புரியவைப்பதும், தேவையற்ற கூச்சத்தைப் போக்குவதும் உங்கள் கடமை.

சில குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்ரீதியாகச் சின்ன சின்னப் பிரச்னைகள் இருந்துகொண்டே இருக்கும். அந்த நேரங்களில் கணவன், குழந்தையையும் மனைவியையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் ஆரம்பித்து, மருந்து, மாத்திரைகள் சரியாகக் கொடுக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பது வரை எல்லாவற்றிலும் பொறுப்பாகச் செயல்படுங்கள்.

ஒரு குழந்தைக்கும், மறு குழந்தைக்கும் போதுமான இடைவெளி இருக்கவேண்டும். வயிற்றில் அடுத்த குழந்தையைச் சுமக்கும்போது பிறந்த பச்சிளம் குழந்தைப் போதிய கவனிப்பு இல்லாமல் சவலைப் பிள்ளையாகிவிடக்கூடாது.

உளவியல்ரீதியில் பல பயனுள்ள விடயங்களை பார்ப்போம்

திருமணம் ஆனவுடனேயே குழந்தை பெற்றுக்கொண்டாக வேண்டும் என்று இல்லை. உங்களின் விருப்பத்தையும், கடமைகளையும், பொருளாதாரத்தையும் கணக்கில்கொண்டு இருவரின் பரஸ்பர சம்மதத்துடன் குழந்தைப் பெறுவதைப்பற்றி முடிவெடுங்கள்.

இல்லையெனில் குழந்தை பிறந்த பின்னர் 'இப்ப நான் குழந்தை கேட்டேனா?’ என்ற வாக்குவாதம் ஏற்படலாம்.

கர்ப்பமான பின்னர், நல்லபடியாகக் குழந்தை பெற்றுக்கொள்வது மனைவியின் வேலை நமக்கு இதில் என்ன இருக்கிறது? என்று இருக்காதீர்கள். குழந்தையை பெற்றெடுப்பதில் இருவருக்குமே சம அளவில் பொறுப்பு இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.

கர்ப்ப காலத்தில் மனைவிக்கு வாந்தி எடுப்பது, பசியின்மை போன்ற உடல்ரீதியான பிரச்னைகள் ஏற்படும்போது, கணவன் கூடுமானவரை அருகிலேயே இருந்து, அனுசரனையாகப் பேசினால், இந்தப் பிரச்னைகள் அவர்களை மனதளவில் பாதிக்காது.

மனைவியுடன் வாக்கிங் போவது, உணவு ஊட்டிவிடுவது, சிரிக்கச் சிரிக்கப் பேசுவது, நெறிக் கதைகளைச் சொல்வது இதெல்லாம் மற்ற நேரத்தைவிட இந்த நேரத்தில் மிகவும் அவர்களைக் கவரும். இதன் மூலம் உங்கள் மீதான காதலும் பெருகும்.

சில பெண்கள் பிரசவக் காலத்தில் பிறந்த வீட்டிற்குச் செல்வார்கள். சில பெற்றோர்கள் தங்கள் மகளை விரும்பி அழைத்துச் செல்வதில் தவறே இல்லை.

சிலர் வற்புறுத்தி அனுப்பிவைப்பதும் உண்டு. இது தவறு. தன் பெற்றோர்களுக்கு ஏற்படும் பொருளாதார நெருக்கடி, அந்த பெண்ணுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். இதைத் தவிர்ப்பது கணவனின் கையில்தான் இருக்கிறது.
குழந்தை பிறந்த சில மாதங்கள் வரை, மனைவி கணவனுடன் செலவிடும் நேரம் குறைவது இயல்பு. குறிப்பாக உடலுறவில் சிறிய இடைவெளி ஏற்படலாம். இதைக் கணவன் சகஜமாக எடுத்துக்கொள்ளவேண்டும். மனைவியை வற்புறுத்தவோ, சண்டை போடவோ செய்யாதீர்கள்.பொதுவாக வீட்டு வேலைகளை இருவருமே பகிர்ந்துகொள்வது நல்லது. குறைந்தபட்சம் குழந்தை பிறக்கும் காலகட்டத்திலாவது வீட்டு வேலைகளைக் கணவரே செய்யுங்கள். தவறில்லை.

'இது என் குழந்தையும் இல்லை, உன் குழந்தையும் இல்லை; நம் குழந்தை’ என்ற நினைப்பதை இருவருமே உணர்ந்திருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தையின் மனநிலையும் ஆரோக்கியமாக இருக்கும்.

நீண்ட நேரம் உட்காருவதால் உயிருக்கு ஆபத்து: ஆய்வில் தகவல்

நீண்ட நேரம் உட்காருவதால் உயிருக்கு ஆபத்து: ஆய்வில் தகவல்


ஒரு நாளில் 11 மணி நேரம் வரை உட்கார்ந்து இருப்பவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரை விடும் ஆபத்து அதிகம் என்று ஒரு ஆய்வு மிரட்டுகிறது.
அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழக பொதுநல மருத்துவ பிரிவு பேராசிரியர் ஹைட் வான் டெர் பிளாஜ் தலைமையில் ஒரு குழு நடத்திய ஆய்வில் 2 லட்சம் பேர் பங்கேற்றனர். அதன் அறிக்கை ஏஐஎம் என்ற மருத்துவ இதழில் வெளியானது.

அதில் இடம்பெற்ற விபரங்கள்:

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதே பல்வேறு உடல் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. பருமன், டயபடீஸ் ஆகியவை அவற்றில் முக்கியமானவை.

ஒரு நாளில் 4 மணி நேரத்துக்கு குறைவாக உட்கார்ந்தே இருப்பவர்களுடன் ஒப்பிடுகையில், 11 மணி நேரத்திற்கு அதிகமான நேரம் உட்கார்ந்து இருப்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரிழக்கும் அபாயம் இருக்கிறது.

2 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட உடல் உழைப்பு, எடை, உடல் ஆரோக்கிய நிலை ஆகியவற்றின் அடிப்படையில் துல்லியமாக நடத்திய ஆய்வில் இது தெரிய வந்தது. ஜிம்முக்கு போய் உடற்பயிற்சி செய்வது, நீண்ட நடைபயிற்சி ஆகியவையும் அவசியம்தான்.

ஆனால், அவற்றை விட மிக முக்கியமானது நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காராமல் இருப்பது. உட்கார்ந்தே இருந்தால் பல உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

அலுவலக நேரத்தில் எத்தனை முறை முடியுமோ 20 முதல் 30 வினாடிகள் வரை எழுந்து நிற்கலாம். போன் பேசும் போது நிற்கலாம். லிப்ட், எஸ்கலேட்டரை தவிர்த்து படிகளில் ஏறலாம். இமெயில், இன்டர்காம் தகவல் பரிமாற்றம் தவிர்த்து நேரில் சென்று பார்க்கலாம்.

ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை இருக்கையை விட்டு எழுந்து சில நிமிடங்கள் நடக்கலாம். குறைந்தபட்சம் உட்கார்ந்த பொசிஷனை மாற்றி தோள்பட்டையை அசைத்து, நீண்ட மூச்சிழுத்து விட்டு தசைகள் அழுத்தத்தை ரிலாக்ஸ் செய்யலாம்.

ஆய்வில் கவனிக்க வேண்டிய விடயங்கள்:

45 வயதுள்ள 2 லட்சம் பேரிடம் 2009 முதல் 2013 வரை, 5 ஆண்டுகள் ஆய்வு நடத்தப்பட்டது.

ஒரு நாளில் 3 மணி நேரம் வரை உட்கார்ந்திருப்பவரை விட 6 மணி நேரம் உட்கார்ந்திருப்பவர் 15 ஆண்டுகளுக்குள் இறக்க நேரிடலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பணி நேரம் மட்டுமின்றி ஓய்வை சேர்த்து ஒருநாளில் 90 சதவீத நேரத்தை பெரும்பாலோர் உட்கார்ந்தே செலவிடுகின்றனர். இது முற்றிலும் ஆபத்தானது

ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும் எலுமிச்சை!!!

ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும் எலுமிச்சை!!!திடீரென்று குறிப்பிட்ட நாளில் ஆண்மை பலகீனத்திற்குக் காரணம் மனத்தில் உள்ள ஒருவித பயம், தகாத எண்ணம், வாதம் போன்ற நோய்கள் மற்றும் சரியாக சுத்திகரிக்கப்படாத போதை மருந்துகளை அருந்துவது போன்றவைதான்.

எலுமிச்சம்பழச்சாற்றை அதிக அளவில் பயன்படுத்தினால் விந்து நீர்த்து விடும். மேலும் தொடர்ந்து 10 எலுமிச்சை விதைகளை அரைத்து ஒருவன் 40 நாட்களுக்கு உட்கொண்டு வந்தால் அவன் ஆண்மையற்றவனாய்ப் போய்விடுவான் என்று சித்தநூல் கூறுகிறது.

பழங்காலத்தில் தாம்பத்ய உறவின் போது வெளிப்படும் உயிர்ச்சத்தை கெட்டிப்படுத்தி நீண்ட நேரம் இன்பம் காண சில மருந்துகளைச் சாப்பிட்டிருக்கிறார்கள். யாருமே தாம்பத்ய உறவு கொள்ளும் நாள்களில் எலுமிச்சை ரசத்தை தவிர்ப்பது நல்லது.

மற்றபடி எலுமிச்சை சாறை சாதாரணமாக எடுத்துக் கொள்வதால் எந்த பிரச்சனையும் இல்லை.

குறிப்பிட்ட அந்த நாட்களில் தாம்பத்ய உறவு கொள்ளும் முன்னர் சிறிய வெங்காயம் ஒன்றை வாய்க்குள் அடக்கி கொஞ்சம் கொஞ்சமாக சாற்றை உள்ளே இறக்க வேண்டும். உறவு முடியும் வரை வாய்க்குள் வெங்காயம் இருக்கும் படி பார்த்துக் கொண்டால் வெற்றியில் முடியும்.

சாதிக்காய், குல்கந்து, காமஸ்துகி வகைக்கு 20 கிராம். பழைய வெல்லம், இலவங்கம், சாம்பிராணி, கவாப்பு சின்னி வகைக்கு 10 கிராம் எடுத்து வெல்லத்தைத் தவிர மற்றவற்றை நன்றாக இடித்துப் பின்னர் தேன்விட்டுக் குழைத்துத் தினமும் மாலையில் ஒரு நெல்லியளவு சாப்பிட்டுப் பசும்பால் சாப்பிடவும்.

இவ்வண்ணம் 20 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலுறவில் தோல்வி என்பது இராது.

மருந்து உண்ணும் பொழுது உடலுறவு கூடாது. மது மாமிசம் சாப்பிடக்கூடாது, உணவில் புளி சேர்த்துக் கொள்ளக் கூடாது.

கண் பார்வையை பாதிப்பு ஏற்படுத்தும் LED விளக்கு

கண் பார்வையை பாதிப்பு ஏற்படுத்தும் LED விளக்கு


எல்இடி(LED) விளக்குகளால் மனிதர்களின் கண் பார்வைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விலை குறைவான குண்டு பல்புகளைத்தான் மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர். ஆனால், இவை வெப்பத்தை அதிகளவில் உமிழ்வதாகவும், மின்சாரத்தை அதிகளவில் உறிஞ்சுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கு மாற்றாக எல்இடி எனப்படும், ‘லைட் எமிட்டிங் டையோடு’ (Light Emitting Diode) விளக்குகள் அறிமுகம் ஆனது.

இவை குண்டு பல்புகள் பயன்படுத்தும் மின்சாரத்தில் 5ல் ஒரு பகுதியை மட்டுமே பயன்படுத்துவதாகவும், சுற்றுச்சூழலுக்கு மிக சிறப்பானது என்றும் கூறப்பட்டது.

இதனால், ஐரோப்பிய யூனியனில் பல ஆண்டுகளுக்கு முன்பே குண்டு பல்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது. இந்தியாவில் 2009ம் ஆண்டில் 100 வாட்ஸ் குண்டு பல்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், செல்போன்கள், தொலைக்காட்சி என்று பல்வேறு மின்னணு சாதனங்களில் எல்இடி பயன்பாடு அதிகரித்துவிட்டது.

தற்போது மக்களிடம் எல்இடி பல்புகளை பற்றி மின்சாதன நிறுவனங்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றன. சென்னையில் குடிசைகளுக்கு இந்த வகை பல்புகளை இலவசமாக வழங்குவது குறித்து மாநகராட்சியும் ஆலோசித்து வருகிறது.

ஆனால், எல்இடி பல்புகளால் மனிதர்களின் கண் பார்வைக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர் தற்போது பகீர் தகவல் வெளியிட்டுள்ளார்.

மேட்ரிட்டில் உள்ள கம்ப்லூடென்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டொக்டர் செலியா சான்செஜ் ரமோஸ் என்பவர் தலைமையில் ஒரு குழு, எல்இடி பல்புகள் குறித்து ஆராய்ச்சி நடத்தி முடிவை வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து ரமோஸ் கூறுகையில், எல்இடி பல்புகள் சுற்றுச்சூழலுக்கு சிறப்பானது என்றாலும் அதில் இருந்து நீல மற்றும் செங்கரு நீல (வயலட்) கதிர்கள் வெளியாகின்றன.

இவை சிறிய அலைவீச்சை கொண்ட சக்திவாய் ந்த கதிர்கள். இவை அதிக சக்திவாய்ந்தவை என்றாலும், குளுமையாக இருப்பதால் சாதாரணமாக அதை பார்த்து கொண்டிருக்க முடியும். இதுபோன்று எல்இடி விளக்குகளின் வெளிச்சத்தை பார்க்கும்போது, அது கண்ணின் விழித்திரையை பாதிக்கும்.

கண்கள், வெளிச்சத்தின் துணையுடன் பார்க்கக்கூடிய தன்மை கொண்டது. மாறாக வெளிச்சத்தை மட்டும் பார்க்கக்கூடியது அல்ல என்றும் எல்இடி விளக்குகள் உமிழும் வெளிச்சம் குளுமையாக இருப்பது போல் தோன்றினாலும், அதனால் கண் பார்வைக்கு ஆபத்து அதிகம் எனவும் கூறியுள்ளார்.


750 மில்லியன் பயனர்களை எட்டியது கூகுள் குரோம்

750 மில்லியன் பயனர்களை எட்டியது கூகுள் குரோம்
இணையப் பாவனையில் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படும் இணைய உலாவிகளில் முன்னிலையில் திகழ்வது கூகுளின் குரோம் உலாவி ஆகும்.
இவ் உலாவியானது தற்போது உலகெங்கிலும் 750 மில்லியன் பாவனையாளர்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

இதில் கடந்த வருடத்தில் மட்டும் 300 மில்லியன் பயனர்கள் புதிதாக இணைந்துள்ளதுடன் டெக்ஸ்டாப் கணனி, மடிக்கணனி, மற்றும் டேப்லட் கணனி போன்றவற்றில் குரோம் உலாவிகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தற்போது 750 மில்லியனை எட்டிவிட்டதாக அந்திநிறுவனம் அறிவித்துள்ளது.

இவ்விரைவான வளர்ச்சிக்கு குரோம் உலாவியின் எளிமையான வடிவமைப்பும், விரைவான செயற்பாடும் காரணமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.