Friday, June 15, 2012

சீனப் பெருஞ்சுவரின் நீளம் என்ன?

உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக திகழும் சீனப் பெருஞ்சுவரின் நீளம் குறித்து புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது.
கிறிஸ்து பிறப்புக்கு 7 நூற்றாண்டுகளுக்கு முன்பாக கட்டத் தொடங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சீனப் பெருஞ்சுவரின் நீளம் 8 ஆயிரத்து 851 கி.மீ. என அளவிடப்பட்டிருந்தது.

ஆனால் இப்போது மேற்கொள்ளப்பட்ட சர்வேயில் சீனப் பெருஞ்சுவரின் நீளம் ஏற்கனவே கணக்கிடப்பட்டதை விட சுமார் இரண்டரை மடங்கு அதிகம் என தெரிய வந்துள்ளது.

இந்த சர்வேயின்படி சீனப் பெருஞ்சுவரின் நீளம் 21 ஆயிரத்து 196 கி.மீ. ஆகும். பல்வேறு பேரரசர்களின் காலத்தில் கட்டப்பட்ட சுவர்கள் அனைத்தும் இதில் அடங்கும்.

சீனப் பெருஞ்சுவரை முதன் முதலாகக் கட்டியவர் ஓயின் ஷி குவாங் என்ற கின் வம்சத்தின் முதலாவது பேரரசர் என்பது குறிப்பிடத்தக்கது.


Thursday, June 14, 2012


அலுவலகம் செல்லும் இல்லத்தரசிகள்அலாரம் அடித்தது. பதறிக் கொண்டு எழுந்தாள். பால் பூத்துக்குச் சென்று பாலை வாங்கி வந்து, ஏழரை மணிக்கு ஸ்கூலுக்கு அனுப்ப வேண்டிய மகளை எழுப்பி விட்டு முரண்டு செய்கின்ற அவளைக் குளிக்க வைத்து அதற்கிடையே காபி போட்டு, ‘காபின்னு ஏதோ கொடுப்பாங்களே’ என்று நக்கலாக கேட்கும் கணவனுக்கு காப்பி கொடுத்து விட்டு, சமையல் செய்து, மகளுக்கு மதிய சாப்பாட்டுக்கு எடுத்து வைத்து, காலையில் சாப்பிட டிபன் கொடுத்து, இவளை வேன் வரை கொண்டு விட்டு வரக் கூடாதா என்று கணவனிடம் சொல்ல அவன் ஏதோ சொல்ல அவனிடம் கொஞ்சம் சண்டை போட்டு ஒரு வழியாக மகளை ஸ்கூலுக்கு அனுப்பி விட்டு, தான் குளித்து, தனக்கும் கணவனுக்கும் மதிய உணவு எடுத்து வைத்து, நேற்று இஸ்திரி போட்டு வந்த தன்னுடைய உடைகளை எங்கு வைத்தாய் என்று கத்தும் கணவனுக்கு தேடிக் கொடுத்து தான் சாப்பிட்டு வெளியில் வந்தால், பக்கத்து வீட்டு அம்மா, ஒரு கவரை எடுத்து வந்து, சாயங்காலம் இந்தக் கவரை கொரியர் அனுப்பணுமே உங்க ஆபிஸூக்குத் தான் கொரியர்காரன் வருவானே என்று நீட்டி முழங்குகின்றவர்களிடம் சமாளித்து பஸ் நிறுத்தத்திற்கு வருவதற்குள் மூச்சு வாங்கி விட்டது.

பஸ்ஸில் ஏறினால், பக்கத்தில் நிற்கின்ற ஒருவன் சில்மிஷம் செய்கிறான்; அவனையும் சமாளித்து, அலுவலகத்திற்குச் சென்றால், பக்கத்து சீட்டில் உள்ளவர் வரவில்லையாம்.

அவர் வேலையையும் செய்து, மறக்காமல் பக்கத்து வீட்டு அம்மாவின் கவரை மாலை கொரியர்காரனிடம் கொடுத்து விட்டு, மாலை வீட்டுக்குத் திரும்ப, பஸ்ஸில் சில்மிஷத்தை சமாளித்து வீட்டுக்கு வந்தால் மகள் மீண்டும் முரண்டு, அவளுக்குப் பசி, காபி போட்டுக் கொடுத்து, பிஸ்கட் எடுத்துக் கொடுத்து விட்டு, அவளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தால், அவள் டி.வி. பார்க்கச் செல்கிறாள்.

அவளோடு போராடிக் கொண்டு இருக்கும் பொழுது, கணவன் தன் இரண்டு நண்பர்களோடு வந்து விட்டான். அவர்களுக்கு காபி, டிபன் கொடுத்து அந்தப் பாத்திரங்களை துலக்கி வைத்து விட்டு, வேண்டா வெறுப்பாக படிக்கும் மகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து விட்டு இரவு சாப்பாட்டிற்கு பிறகு படுக்கச் சென்றால் கணவன் பாடம் எடுக்க ஆரம்பித்து விட்டான். இப்பொழுது இவள் வேண்டா வெறுப்பாக பாடம் கற்றாள்.

இது ஏதோ ஒரு பெண்ணின் கதையல்ல. வேலைக்குச் செல்கின்ற அனைத்துப் பெண்களின் கதை தான்.

அதற்காக கணவனையும் குழந்தையையும் அவர்கள் வேலையை அவர்களே செய்து கொள்ளட்டும் என்று விட்டு விட்டாலும் மனசு கஷ்டப்படுகிறது. நாமே அனைத்து வேலைகளையும் செய்யவும் முடியவில்லை.

கோபம் தான் வருகிறது. இதை வெளியில் காட்டினால் இவர்களுக்காக நாம் படுகின்ற இந்த அனைத்துக் கஷ்டங்களும் வீணாகி விடும். வேலைக்காரி வைத்துக் கொண்டோ அல்லது கணவன் குழந்தைகளுக்குத் தன்னிலை விளக்கித் தன்னுடன் ஒத்துழைக்குமாறு செய்வதன் மூலமாகவோ, நமது அலுவலகப் பணி, இல்லறம் என்ற இரட்டை குதிரைச் சவாரியை மிக லாவகமாகச் செய்ய முடியும்.

எல்லா வேலையும் நாம் தான் செய்ய வேண்டும் என்று இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து, பிறகு எரிச்சல் அடைந்து, குடும்பத்தில் மற்றவர்கள் சந்தோஷத்தையும் கெடுத்துக் கொள்வதை விட வேலைகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டால், அமைதியும் மகிழ்ச்சியும் தொடரும்.

இல்லறம் நல்லறமாவது இல்லத்தரசிகளின் கையில் மட்டுமல்ல வாழ்க்கைத் துணைவனின் சகிருதய மனோபாவத்திலும் உள்ளது. சகிருதய மனோபாவத்தை கணவனிடத்தில் கொண்டு வருவது கடினம். ஆண்களுக்கு அவரவர் வேலையே பெரிது. பெண்கள் சற்று ஆயாசமாக அவர்கள் அலுவலகத்தில் நடைபெறுவதை தெரிவித்தால் கூட, அது சுவாரசியமாக இருந்தால் கூட கணவன்மார்களுக்கு எரிச்சல் ஏற்பட்டு "போதும்மா உன் ஆபீஸ் புராணம்" என்று முடித்து வைப்பதைத்தான் நாம் பார்க்கிறோம்.

ஆனால் கணவனுக்கு ஒரு கஷ்டம் அலுவலகத்தில் ஏற்பட்டது என்றால் அவனது புலம்பல் அத்தனையும் மனைவி கேட்க வேண்டிய கட்டாயம்! இந்த முரண்பாடுகளைப் போக்குவது எப்படி. சும்மா விட்டுக் கொடுத்து போவது என்பதெல்லாம் பொய். ஏனெனில் விட்டுக் கொடுக்கும் பொறுப்பு எப்போதும் பெண்கள் தலையிலேயே விழுகிறது. ஆண்கள் தங்கள் வேலை தங்கள் சம்பளம் தங்கள் நண்பர்கள், தங்கள் பொழுது போக்கு என்று சுயநலமிகளாக இருப்பதைத் தவிர்த்தால் அலுவலகம் செல்லும் இல்லத்தரசிகளை ஹிஸ்டீரியா' மன நோயிலிருந்து காப்பற்றலாம்!


மொபைல் போன்களிலிருந்து தங்கம் பிரித்தெடுப்பு


சீனாவில் தூக்கியெறிக்கப்பட்ட 100 மில்லியன் மொபைல்போன்களிலிருந்து 1,500 கிலோ தங்கம், 1 மில்லியன் கிலோ அளவிற்கு தாமிரம், 30 ஆயிரம் கிலோ அளவிற்கு வெள்ளி உள்ளிட்டவைகள் பிரித்து எடுக்கப்பட்டுள்ளது என்றால் நம்ப முடிகிறதா?


ஆனால் அதுதான் உண்மை என்கிறது சீனா. இதுகுறித்து, சீனாவிலிருந்து வெளிவரும் பீபிள்ஸ் டெய்லி பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் 400 மில்லியன் அளவிற்கு மொபைல்போன்கள் தூக்கி வீசப்படுவதாகவும், சீனாவில் மட்டும் 100 மில்லியன் மொபைல்போன்கள் தூக்கியெறிக்கப்படுகின்றன. இதன்மூலம், சீனாவில் மட்டும் 150 கிராம் தங்கம், 100 கிலோ காப்பர் மற்றும் 3 கிலோ சில்வர் பிரித்தெடுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நிமிடத்தில் அப்படி என்னதான் நடக்கிறது இன்டர்நெட்டில்..!இன்டர்நெட் யுகம் என்று அனைவரும் கூறுகையில், அப்படி இன்டர்நெட்டில் என்னதான் நடக்கிறது என்பதையும் ஒரு பார்வை பார்ப்போம். ஒரு நிமிடத்தில் என்னவெல்லாம் நடக்கிறது இன்டர்நெட்டில்.

உலகம் முழுவதும் தகவல் களஞ்சியமாக பயன்படுத்தப்பட்டு வரும் கூகுள் மூலம் 1 நிமிடத்திற்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தேடுதல்கள் நிகழ்கின்றன. சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் 60 லட்சம் பேரால் பார்க்கப்படுகின்றன. அது மட்டும் அல்லாமல் ஃபேஸ்புக்கில் ஒரு நிமிடத்திற்கு 2 லட்சத்தி 77 ஆயிரம் லாகின்கள் செய்யப்படுகின்றன.

மனதில் தோன்றியவற்றை அப்பொழுதே நம்மை ட்விட் செய்ய சொல்லும் ட்விட்டரில் ஒரு நிமிடத்திற்கு 1 லட்சம் ட்விட்கள் செய்யப்படுவதோடு, 320-திற்கும் மேற்பட்ட ட்விட்டர் அக்கவுன்டுகள் உருவாக்கப்படுகின்றன. ஃபோட்டோ ஷேரிங் மூலமாக மனதில் பட்டென்று ஒட்டி கொள்ளும் ஃப்லிக்கரில் ஒரு நிமிடத்திற்கு 3 ஆயிரம் ஃபோட்டோக்கள் அப்லோட் செய்யப்படுகின்றன. 2 கோடி ஃபோட்டோக்கள் பார்க்கப்படுகின்றன.

ப்ரொஃபெஷனல் தோரணையில் கலக்கும் லின்க்டுஇன் சமூக வலைத்தளத்தில் 100-க்கும் மேற்பட்ட அக்கவுன்டுகள் புதிதாக ஆரம்பிக்கப்படுகின்றன. 47 ஆயிரம் அப்ளிக்கேஷன்கள் டவுன்லோட் செய்யப்படுகின்றன. இப்பொழுதெல்லாம் அதிக மக்களால் மொபைலில் நெட் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 1 நிமிடத்திற்கு 1,300 பேர்கள் மொபைல் மூலம் இன்டர்நெட்டிற்கு வருகை தருகிறார்கள்.

சமூக வலைத்தளங்கள் பெருகி வரும் காலத்தில் கூட இ-மெயில் மவுசு குறையவில்லை தான். 20 கோடியே 40 லட்சம் இ-மெயில்கள் ஒரு நிமிடத்திற்கு பரிமாறி கொள்ளப்படுகிறது. எதை பற்றிய சரியான குறிப்பேடுகள் தேவைப்பட்டாலும் பட்டென்று ஞாபகம் வருவது விக்கிப்பீடியா. இதில் 1 நமிடத்திற்கு 6 பக்கங்கள் உருவாக்கப்படுகின்றன.

இப்பொழுது பயன்படுத்தப்பட்டு வருவதைவிட 2015-ஆம் ஆண்டில் 2 மடங்கு அதிகமாக நெட் டிவைஸ்கள் பயன்படுத்தப்படும் என்றும் சில முக்கிய தகவல்கள் கூறுகின்றன. 6 லட்சத்தி 39 ஆயிரத்தி 800 ஜிபி அளவு ஐபி தகவல் பரிமாற்றங்களும் நிகழ்கின்றன. அது மட்டும் அல்லாமல் ஆன்லைன் மூலம் அதிகமான புத்தகங்களை விற்பனை செய்து வரும் அமேசானில் 1 நிமிடத்திற்கு 83 டாலர் அதாவது ரூ.4,230 மதிப்புக்கு புத்தகங்கள் விற்பனையாகின்றன.

இப்படி அடுத்து அடுத்து இன்டர்நெட் பற்றிய பெரிய தகவல்களை கூறுகிறது ஒரு பரபரப்பான ரிப்போர்ட். இந்த தகவலை படித்தவர்கள் மற்றவர்கள் போல் சும்மா இன்டர்நெட் உலகம் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒரு நிமிடத்தில் என்னவெல்லாம் நடக்கிறது என்ற புள்ளி விவரத்தினையும் தெரிந்து கொண்டு சொல்லலாம், இது இன்டர்நெட் யுகமென்று.

சாப்பிட்ட உடன் பல் துலக்கினால் ஆபத்துதினமும் இரண்டு வேளை பல் துலக்குவது நல்லது என்று பல் மருத்துவர்கள் கூறுகின்றனர். அதற்காக உணவோ அல்லது குளிர்பானமோ சாப்பிட்ட உடனே பல் துலக்கிக் கொண்டிருந்தால் அது பல்லுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி விடும் என அமெரிக்காவில் உள்ள பொது பல் மருத்துவ பேரவையின் தலைவர் ஹோவர்ட் கேம்பிள் எச்சரித்துள்ளார்.

குறிப்பாக வாயு நிறைந்த மற்றும் அமிலத்தன்மை கொண்ட குளிர்பானங்களை குடித்தவுடன் பல் துலக்கினால் அந்த அமிலம் பல் ஈறுகளையும் அதன் அடியில் உள்ள படலத்தையும் எரித்து சேதப்படுத்தி விடுகிறதாம்.

அதாவது பல் துலக்குகிறோம் என்ற பெயரில் அந்த அமிலத்தை ஈறுகளுக்குள் ஆழமாக தள்ளும் வேலையைத்தான் நாம் செய்கிறோம் என அவர் கூறுகிறார்.

அதே சமயத்தில் குளிர்பானம் குடித்த ஒரு மணி நேரத்துக்கு பிறகு பல் துலக்கினால் எந்த பாதிப்பும் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.

Monday, June 11, 2012

அறிவைத் தூண்டும் நறுமணங்கள்


நறுமணங்களை நுகர்வது நாசிக்கு நலம் தரும் சுகமான அனுபவம். `நறுமணங்கள் அறிவைத்தூண்டி நம்மை அமைதிப்படுத்தும்` என்பது புதிய கண்டுபிடிப்பு.

இயற்கையான நறுமண பொருட்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு விசேஷ சக்தி உள்ளதாக சித்த மருத்துவம் சொல்கிறது. சில நறுமணங்கள் அமைதிப்படுத்தும். சில நறுமணங்கள் அறிவை தூண்டும். சில உடல் இறுக்கத்தை குறைக்கும். மேலும் சில நம்மை கலகலப்பாக்கி, உற்சாகப்படுத்தும். இப்படி இயற்கை நறுமணங்கள் எல்லாமே இயற்கை தந்த வரங்கள்.
பொதுவாகவே நறுமணங்களுக்கு நினைவை புதுப்பிக்கும் ஆற்றல் இருக்கிறது. நினைவுகளை இழந்த பலருக்கு இந்த நறுமண வைத்தியம் மூலம் நினைவாற்றல் கிடைத்திருக்கிறது.
நறுமணத்தை நுகரும்போது உமிழ்நீர் அதிகம் சுரந்து, பசி தூண்டப்படுகிறது. இது இயல்பாக நடைபெறுவதால் உடல் உறுப்புகளின் இயக்க சக்தி அதிகரிக்கிறது. உடல் வலியை மறக்கவைக்கும் ஆற்றலும் இயற்கை நறுமணங்களுக்கு இருக்கிறது. மனதை ஒருநிலைப்படுத்தவும் நறுமணம் பயன்படுகிறது.
இயற்கை நறுமணப் பொருட்களில் இயற்கை சக்தி மிக அதிகமாக இருக்கிறது. சந்தனம் உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. அதன் நறுமணம் ஆன்மாவுக்குள் இருக்கும் தேவ குணங்களுக்கு வலிமை அளிக்கிறது. அந்த ஆன்மா, தேவ குணங்களை பெற்று தேவ சக்திகளுடன் நாம் இணைந்து மகிழும் ஆற்றலை சந்தனத்தின் நறுமணம் தருகிறது. அதனால்தான் சந்தனத்தை பூஜைக்கும், சுபகாரியங்களுக்கும் பயன்படுத்துகிறோம்.
சாம்பிராணியின் நறுமணம் மனிதர்களுக் குள் இருக்கும் துர் குணங்களை போக்கும் ஆற்றல்கொண்டது. தீய சக்திகளை அழிக்கும் ஆற்றல்கொண்ட துர்க்கைக்கு பூஜையில் மிக முக்கிய பொருளாக சாம்பிராணி வாசனை பயன்படுத்தப்படுகிறது.
பெண்களுக்கு சாந்த குணங்களை ஏற்படுத்த மலர்களின் நறுமணம் பயன்படுகிறது. பெண்கள் பூச்சூடுவதின் தாத்பார்யமே அதுதான். வாசனை ஒரு ரம்யமான சூழலை உருவாக்கி நம்மை லயிக்கச் செய்து மகிழ வைக்கிறது.
அகில் கட்டையின் நறுமணமும் ஆன்மிகத்தோடு தொடர்புடையது. அதனால்தான் பெரிய யாகங்கள் செய்யும்போது அதில் எரிக்க அகில் கட்டையை பயன்படுத்துவார்கள். இதன் நறுமணம் மனதிற் கும், உடலுக்கும், ஆன்மாவிற்கும் ஏற்புடையது. அரசர்களின் பட்டாபிஷேகம், கோவில் கும்பாபிஷேகம் போன்ற புனித காரியங்களில் அகில் பயன்படுத்தப்படுகிறது.
பழைய காலத்தில் முனிவர்களும், மாகான்களும் காடுகளை தேடி சென்று தவம் புரிவதற்கு மரம், செடி, கொடிகளில் இருந்து கிடைக்கும் நறுமணமே காரணமாக இருந்திருக்கின்றன. அந்த மணம் மனதை சாந்தப்படுத்தி எளிதாக மனதை ஒருநிலைப்படுத்தி தவத்திற்கு வலிமை சேர்க்கும்.
கற்பூரத்தின் நறுமணம் காற்றில் கலந்து வரும்போது ஒரு தெய்வீக ஆற்றல் நமக்குள் உருவாகி, மனதில் இருக்கும் நல் எண்ணங்களை வலிமைப்படுத்தும்.
ஆமணக்கு எண்ணையின் நறுமணத்தில் ஒரு தனித்தன்மை இருக்கிறது. அதில் பஞ்சு திரி போட்டு மண் விளக்கில் ஏற்றினால், அது தூய பிராணவாயுவை புவி மண்டலத்தில் இருந்து ஈர்த்து பரவ விடும். அதை நுகரும்போது மனம் அமைதி பெறும். நரம்புகள் சுறுசுறுப்பாகும். மூளை நன்றாக சிந்திக்கும் திறன் பெறும். அதன் மூலம் நம்மை சுற்றி இருக்கும் சூழலில் இருந்து நன்மை, தீமையை பகுத்தறியும் ஆற்றலை நம் அறிவு பெறும்.
அதனால்தான் அந்த காலத்தில் ஆமணக்கு எண்ணெயை விளக்கேற்ற பயன்படுத்துவார்கள். எனவே அதை விளக்கெண்ணெய் என்று கூறுவார்கள்.
உங்கள் மனம் சமநிலையில்லாமல் தவித்தாலும், தேவையற்ற டென்ஷன் உங்களை பாடாய்படுத்தினாலும் அதற்கு எளிமையான தீர்வு. உங்கள் வீடுகளில் மண் அகல் விளக்கில் விளக்கெண்ணெய் விட்டு பஞ்சு திரி போட்டு விளக்கேற்றுங்கள். அந்த நறுமணமும், அதனால் ஏற்படும் சுத்தமான காற்றும் உங்கள் மனதை அமைதிப்படுத்தி, டென்ஷனை குறைக்கும்.
ஏலக்காயின் நறுமணம் கோபத்தை குறைக்கும். எல்லோரும், எப்போதும் சாந்தமாக இருக்கவேண்டும் என்பதற்காக நரசிம்ம பெருமாளுக்கு ஏலக்காய் மாலை சாத்தி பிரார்த்திப்பார்கள்.
துளசியின் நறுமணம் ஆன்மிக மயமானது. துளசி செடி வளர்ந்திருக்கும் வீட்டில் ஆன்மிகமும், ஆரோக்கியமும், அமைதியும் குடியிருக்கும். காற்றில் கலந்து வரும் துளசியின் நறுமணத்தை நுகர்ந்தாலே உடலிலுள்ள நோய் கிருமிகள் கட்டுப்படும். உடலில் நச்சுகளும் தங்காது. அதனால்தான் ஒவ்வொரு வீட்டின் முன்பும் துளசி மாடம் அமைக்கிறார்கள். பன்னீர் ரோஜாவின் நறுமணம் நினைவாற்றலை பெருக்கும். நம் மனதை பக்குவப்படுத்தி மென்மையான குணத்தை வெளிப்படுத்த உதவும்.
மல்லிகை நறுமணம் எல்லோரையும் ஈர்க்கும். அதனால் அதனை வசிய மலர் என்று கூறுவார்கள். வேப்பம் பூவின் நறுமணம் வீர உணர்வை உருவாக்கும்.
எலுமிச்சையின் நறுமணம் உடனடி புத்துணர்ச்சியை தரும். நரம்புகளுக்கு புதிய உற்சாகத்தை வழங்கும். மருதாணியின் வாசம் உடலை குளிர்ச்சியடைய செய்யும். பெண்கள் உடலில் இருக்கும் ஹார்மோன்களை சீராக இயங்க வைக்கும்.
இப்படி இயற்கை நறுமணங்கள் மனிதர்களுக்கு பல நன்மைகளை செய்கிறது. 

கோடை வியர்வையில் குளிப்பவரா நீங்கள்?


கோடை வந்தாலே அழையா விருந்தாளியாக வியர்வையும் சேர்ந்து கொள்கிறது. சிலரது வியர்வை நாற்றம் தாங்க முடியாதது. இத்தனைக்கும் பார்க்க `டிப்டாப்’பாக இருப்பார்கள். இன்னும் சிலர் வாசனைத் திரவியங்களை உடம்பில் தேவைக்கு அதிகமாகவே தெளித்திருப்பார்கள். ஆனால் அதையும் தாண்டி இந்த வியர்வை நாற்றம் எட்டிப்பார்த்து விடுவது தான் கொடுமை. அக்கினி நட்சத்திர வெயிலுக்கும் வியர்வைக்கும் பயந்து ஏ.சி. தியேட்டரே கதி என்று கிடப்பவர்களும் இருக்கிறார்கள்.

வியர்வையின்அளவை வைத்துத்தான் நமது பாடி டெம்பரேச்சரையே கணக்கிட முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.மனிதர்கள் அனைவருக்கும் வியர்வைச் சுரப்பி ஒரே எண்ணிக்கையில் தான் இருக்கும். அந்த சுரப்பிகள் இயங்கும் தன்மையில் தான் அதிகம்-குறைவு என்று வேறுபடும். உண்மையில் வியர்க்காமல் இருந்தால் தான் பிரச்சினை. அதேநேரம் அதிகம் வியர்ப்பதும் ஒருவித நோய்ப்பாதிப்பின் தன்மையாக இருக்கலாம். இப்படிப்பட்டவர்கள் மருத்துவரை சந்தித்து தங்கள்அதிக வியர்வைக்கான காரணத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்ப சிகிச்சை மேற்கொள்ளலாம்.
வியர்வையினால் நம் உடலில் துர்நாற்றம் வருவதில்லை. உடலில் சேர்ந்துள்ள நச்சுப்பொருள் வியர்வையோடு வெளியேறும்போது தான் வியர்வை துர்நாற்றம் வீசுகிறது. வியர்த்த இடத்தை உடனே சுத்தப்படுத்தாமல் போகும்போது உருவாகும் பாக்டீரியா இன்பெக்ஷனால், வியர்வை ஒருவித கெட்ட வாசனையை வெளியிடுவதும் நடக்கிறது.
வியர்வையில் இரண்டு விதங்கள் உண்டு. சிலருக்கு உடல் முழுக்க ஒரேமாதிரி வியர்க்கும். சிலருக்கு முகம், தலை, வயிறு, தொடை, அக்குள் என்று குறிப்பிட்ட இடங்களில் மட்டும் வியர்க்கும். உடல் பருமன் அதிகமாக இருப்பதும் வியர்வைக்கு காரணமாக அமைந்து விடுகிறது.
சிலர் மசாலா நிறைந்த உணவை ஆர்வமாய் அள்ளித் திணிப்பார்கள். இவர்களிடம் இருந்து வெளிப்படும் வியர்வை துர்நாற்றம் நிறைந்ததாய் மாறி விடுகிறது. துர்நாற்ற வியர்வையால் அவதிப்படுகிறவர்கள் மசாலா, பூண்டு, வெங்காயம் தவிர்ப்பது நல்லது. உடம்பு நன்றாக வியர்த்து விட்டால் உடனே குளிப்பவர்கள் பாக்டீரியா இன்பெக்ஷனில் இருந்து தப்பி விடுவார்கள். இப்படி குளிப்பவர்கள்ஒருமாத்திரைஅளவு கற்பூரத்தை பக்கெட் தண்ணீரில் போட்டு முகத்தில் படாமல் உடலுக்குமட்டும் ஊற்றிக் குளிக்கலாம். வியர்வை நாற்றம் விலகி விடும்.

கோடையை சமாளிக்கும் விதத்தில் தினமும் 3 லிட்டர் தண்ணீர் பருகுங்கள். அதோடு இந்த கோடையில் தவறாமல் கிடைக்கும் இளநீர், பனை நுங்கு, பதநீர் பருகுங்கள். வியர்வை கட்டுப்படுவதோடு வெளிப்படும் கொஞ்ச வியர்வையும் நாற்றம் இல்லாததாக இருக்கும்.