Friday, November 23, 2012

சிவசேனா தலைவரை விமர்சித்த மாணவிகள் மீதான வழக்கு தள்ளுபடி

சிவசேனா தலைவரை விமர்சித்த மாணவிகள் மீதான வழக்கு தள்ளுபடி



சிவசேனா தலைவர் பால் தாக்கரேவை ஃபேஸ்புக்கில் விமர்சித்தற்காக 2 கல்லூரி மாணவிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது.
சிவசேனா தலைவர் பால் தாக்கரே கடந்த 17ம் திகதி மரணமடைந்தார். அவரது இறுதி சடங்குகள் அடுத்த நாள் நடைபெற்றன. இறுதி ஊர்வலம் நடைபெற்ற நாளில் மும்பை நகரமே வெறிச்சோடியது. கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டன. பஸ், ஆட்டோ மற்றும் டாக்சிகள் இயங்கவில்லை. பொது மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாயினர்.

இதுகுறித்து கீன் தாதா என்ற கல்லூரி மாணவி ஃபேஸ்புக்கில் விமர்சனம் செய்திருந்தார். சிவசேனா தொண்டர்களுக்கு பயந்துதான் கடைகள் அடைக்கப்பட்டதாக கூறியிருந்தார். இதை கீனின் தோழி ரேணு சீனிவாசன் வரவேற்றிருந்தார். இது சிவசேனா தொண்டர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தானே காவல் நிலையத்தில் இந்த 2 பெண்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

ஃபேஸ்புக்கில் கருத்து சொன்னதற்காக பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதை தொடர்ந்து பெண்கள் கைது நடவடிக்கை தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மகாராஷ்டிர முதல்வர் பிருதிவிராஜ் சவான் உத்தரவிட்டார்.

கொங்கண் பிராந்திய பொலிஸ் ஐஜி சுக்விந்தர் சிங், விசாரணை அறிக்கையை நேற்று அரசிடம் ஒப்படைத்தார். இதை தொடர்ந்து பால் தாக்கரேவை விமர்சித்த 2 மாணவிகள் மீதான வழக்கை வாபஸ் பெற மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது.

பெண்கள் மீது வழக்கு பதிவு செய்த பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை மகாராஷ்டிர உள்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!