Wednesday, November 21, 2012

லுப்தான்சா போயிங் 747: நடுவானில் நினைவு இழந்த பைலட்! விமானத்தை லேன்ட் செய்த பயணி!!

லுப்தான்சா போயிங் 747: நடுவானில் நினைவு இழந்த பைலட்! விமானத்தை லேன்ட் செய்த பயணி!!




விமானப் பயணத்தின்போது ஒரு பயணிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டால், “இங்கே யாராவது டாக்டர் இருக்கிறீர்களா?” என்ற அறிவிப்பு மேற்கொள்ளப்படுவது சகஜம். ஆனால், விமானத்தின் கோ-பைலட் உடல்நலம் பாதிக்கப்பட்டால்?

லுஃப்தான்சா (ஜெர்மன்) ஏர்லைன்ஸ் போயிங் 747 ரக விமானத்தில் நேற்று, “இங்கே யாராவது விமானி இருக்கிறீர்களா?” என்ற அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆச்சரியகரமாக பயணிகளிடையே ஒரு விமானியும் இருந்தார். போயிங் 747 விமானத்தை இயக்க லைசென்சை வைத்திருக்கும் நபராகவும் அவர் இருந்தார்.

அமெரிக்கா நியூஜெர்சியில் (Newark) இருந்து, ஜெர்மனியின் பிராங்பர்ட் நோக்கி பறந்து கொண்டிருந்த 747 விமானத்தின் போ-பைலட்டே உடல்நலம் குன்றி, நினைவிழந்து, தொடர்ந்து விமானத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அந்த விமானத்தில் இருந்த பயணிகளில் ஒருவர், அமெரிக்க விமான நிறுவனம் ஒன்றின் போயிங் 767 பைலட். அத்துடன், 747 விமானம் செலுத்துவதிலும் பயிற்சி பெற்றவர்.

விமானத்தின் கேப்டனும், இந்த பயணி விமானியுமாக சேர்ந்து, விமானத்தை திசைதிருப்பி, அதிகாலை 5.30 மணிக்கு அயர்லாந்து விமான நிலையம் டப்ளினில் தரையிறக்கினர். விமானத்தில் 264 பேர் இருந்தனர்.

உடல்நலம் குன்றி செயலிழந்த கோ-பைலட் அயர்லாந்தில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட, புதிய விமானி வந்து சேர்வதற்காக 6 மணி நேரம் தாமதித்து, பிராங்பர்ட்டுக்கு கிளம்பிச் சென்ற விமானம், மாலை 4 மணிக்கு பிராங்பர்ட்டில் தரையிறங்கியது. (ஒரிஜினலாக காலை 7.40க்கு தரையிறங்கியிருக்க வேண்டும்)

இக்கட்டான நிலையின் தமக்கு உதவிய அமெரிக்க விமான நிறுவன விமானிக்கு, லுஃப்தான்சா நன்றி தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!