Wednesday, December 5, 2012

பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை...

பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை...


மனிதனில் எவனும் கடவுள் இல்லை, எந்த ஒரு மனிதன் தன்னை கடவுள் என்கிறானோ?அவன் மனிதனல்ல, விலங்கு என்பதை உணர வேண்டும்.

திரு.கமலஹாசனின் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். என்னும் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும்.கடவுள் இல்லை என்பவர்களையும் நம்பலாம்,கடவுள் உண்டு என்பவனையும் நம்லாம், நான் தான் கடவுள் என்பவனை நம்பவே கூடாது என்று. இவை கல்வெட்டு வார்த்தைகள். இதனை எல்லோரும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. நான் ஒரு நாத்திகன். எனவே எந்த சாமியார்கள் மீதும் எனக்கு மதிப்பு கிடையாது. ஆனால், பொதுமக்களில் பலர் எத்தனை நிகழ்வுகளை கண்டாலும் இன்னும் திருந்தாமல் சாமியார்களை நம்பி மோசம் போகும் போது வேதனையாக உள்ளது. ஒழுக்கக்கேட்டின் மொத்த உருவமாக சாமியார்கள் திகழ்கின்றனர்.

தந்தை பெரியார் தனது மூச்சு உள்ளவரை, தமிழ்ச் சமுதாயத்திற்கு மானமும், அறிவும் உணர்த்த வேண்டும் என்பதற்காக உழைத்தார். எதையும் ஏன்? ஏதற்கு? எப்படி? ஏன்று கேட்கச் சொன்னார்.
தனது வாயில் வாழைப்பழத்தை மென்று, அப்பழத்தை தனது பக்தைக்கு அவளின் வாயில் வழங்கினால் குழந்தை பிறக்கும் என்ற மூட நம்பிக்கை இன்றும் தொடர்கின்றது. கோவை குப்பனூர் தாசன் கோவிந்தசாமியின் செய்தி படித்தேன்.
நம்மில் பலர் பகுத்தறிவை பயன்படுத்துவதே கிடையாது. சாமியார்கள் இரண்டே வகை தான், பிடிபட்ட சாமியார், பிடிபடாத சாமியார். அரசு புலனாய்வுத் துறையின் மூலம் தீவிரமாக கண்காணித்தால் பிடிபட்டு விடுவார்கள். கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வராவிட்டாலும்,மனிதனில் எவனும் கடவுள் இல்லை என்ற முடிவுக்கு உடன் வாருங்கள்.

பிரபல நடிகையுடன் காமலீலை புரியும் ஒரு காமுகனை சாமியார் என்று வழிபட்டு, அவனுக்கு சிலை வைத்து, ஆசிரமம் அமைத்து,அவனை பேச அழைத்து,கௌரவித்தது சில பெண்கள் கல்லூரிகள். சுpலர் அவனை தரிசிக்க எட்டாயிரம் ரூபாய் வரை செலுத்தி உள்ளனர். சிலர் சில இலட்சங்களையும் இழந்து உள்ளனர். இப்போது மக்களுக்கு விழிப்புணர்வு வந்து அவனது படத்தை செருப்பால் அடிப்பது, அவனது சிலையை தகர்ப்பது, ஆசிரமத்திற்கு தீ வைப்பது என்று கிளம்பி விட்டனர். இப்படிப்பட்ட அயோக்கியனின் அருளுரை என்று சில பத்திரிகைகளும் பிரசுரம் செய்து பணம் சேர்த்தன. பிரபல நடிகை பறக்கும் முத்தம் தருகிறார், சாமியார் நடிகையின் இடுப்பை கிள்ளுகிறான். பத்திரிகைகளில் புகைப்படங்கள் சாமியாரின் முகத்திரையைக் கிழித்தன.

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வை வரிகள் இச்செயலிலும் நினைவிற்கு வந்தது. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத் தான் செய்வார்கள். மக்கள் தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
சில அடிவருடிகள் ஆரம்பித்து விடுவார்கள் பஜனையை. ஒரு சிலர் தவறு செய்ததற்காக எல்லா சாமியாரையும் குத்தம் சொல்ல முடியாது, சில நல்ல சாமியார்கள் இருக்கின்றனர் என்று. போலீஸில் மாட்டாத வரை அவர் நல்ல சாமி தான். மாட்டினால் அவரும் கெட்ட சாமி தான்.

தன்னைக் கடவுளாக கூறிக் கொள்ளும், காட்டிக் கொள்ளும் எந்த ஒரு மனிதனும்,அந்த போலி மனிதனை கடவுள் என்று நம்பி துதிக்கம் பிற மனிதர்களும் திருந்த வேண்டும். எந்த ஒரு மனிதனையும் கடவுளாகப் பார்க்கும் அவலத்திற்கு முடிவு கட்டுங்கள். நம் எதிர்காலம் பற்றிக் கூறி அவன் யார்? மாட்டிக் கொண்ட சாமியாருக்கு கடந்த வாரம் வரை தாம் மாட்டப் போகிறோம் என்பது தெரிந்து இருக்குமா? இருக்காது, தனது எதிர்காலத்தையே கணிக்க முடியாதவன், நம் எதிர்காலத்தை எப்படி கணிப்பான். சிலரை சிலகாலம் ஏமாற்றலாம், பலரை பலகாலம் ஏமாற்றலாம், ஆனால் எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது என்பதை உணர்ந்து இனியாவது திருந்துங்கள்.

தனியார் நிதி நிறுவனங்கள் மோசடி செய்கின்றனர் என்பதனை தெரிந்தே சிலர் ஏமாறுவதைப் போல, சாமியார்களின் மோசடி தொடர்கதையாக தொடர்ந்தும், இன்னும் ஏமாறும் ஏமாளிகள், கோமளிகள் முட்டாள்கள்.

ஆத்மாவை திற ஆனந்தம் பெருகட்டும் என்று தொடர் எழுதிய நித்யானந்தா ஆத்மா என்பது வெறும் உப்புமா என்று காமகளியாட்டத்தால் நிரூபித்து உள்ளார். இவருடைய எழுத்திற்கும், செயலுக்கும் எவ்வளவு வேறுபாடு யோசியுங்கள்.

உலகில் உள்ள உயிரினங்களில், மனித இனத்திற்கு மட்டுமே பகுத்தறிவு என்ற ஆறாவது அறிவு உள்ளது. அதைப்பயன்படுத்த தயக்கம் தேவை இல்லை. சாக்ரடீஸ் கூற்றுப்படி அவர் சொல்லி விட்டார், இவர் சொல்லி விட்டார் என்பதற்காக எதையும் நம்பாதீர்கள், சொல்வது யாராக இருந்தாலும், சொல்லிய சொல்லில் உண்மை உள்ளதா என்பது பற்றி உங்களது பகுத்தறிவில் ஆராயுங்கள்.

கணினி யுகத்திலும் காட்டுமிராண்டிகளைப் போல, சாமியார்களின் காலைக் கழுவுவது மண்டியிட்டு வணங்குவது, காணிக்கை கொட்டுவது என்று ஏமாறுவதை நிறுத்துங்கள், நித்தியானந்தா நித்தமும் ஆனந்தமாக இருந்துள்ள காமுகன், அவனைப் போய் சாமியாக வணங்கியதற்கு வெட்கப்பட வேண்டும்.

நான் கடவுள் என்று இனி எவன் சொன்னாலும் அவன் தலையில் கொட்டுங்கள், கொட்டிப் பாருங்கள் அவன் சக்தியற்றவன் என்பதை நீங்களே உணருவீர்கள். மூளைச் சலவை செய்து முட்டாளாக்கும் மூடக்கருத்திற்கு இனி செவி சாய்க்காதீர்கள். மனிதனாக வாழப்பழகுங்கள். உங்களிடம் உள்ள பகுத்தறிவை தயக்கமின்றி பயன்படுத்துங்கள். இனியும் எவனையும் சாமியார் என்று நம்பி மோசம் போகாதீர்கள்.

நன்றி : கவிஞர் இரா .இரவி

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!