Tuesday, December 4, 2012

எம்.எல்.ஏ. இலவச ரயில் பாஸ் மோசடி! ஒரே நாளில் 3 திசைகளில் ரயில் பயணங்கள்!!

எம்.எல்.ஏ. இலவச ரயில் பாஸ் மோசடி! ஒரே நாளில் 3 திசைகளில் ரயில் பயணங்கள்!!



ஒரே நாளில் 3 வெவ்வேறு திசைகளில் தொலைதூர ரயிலில் பயணிக்க முடியுமா? ஒரே நகரில் இருந்து ஒரே நாளில் ரயில் மூலமும், விமானம் மூலமும் மற்றொரு நகருக்கு செல்ல முடியுமா? சர்வ சாதாரணமாக இதை செய்து காட்டியுள்ளார்கள் நமது எம்.எல்.ஏ.க்கள். பிகார் மாநிலத்திலேயே இப்படியான துடிதுடிப்பான எம்.எல்.ஏ.க்கள் அதிகம் உள்ளது தெரியவந்துள்ளது.

இன்னமும் வெளியிடப்படாத பி.ஏ.ஜி. (PAG – Principal Accountant General) ஆடிட் அறிக்கை ஒன்று, இந்த விபரங்களை உள்ளடக்கியுள்ளது. பிகாரில், 243 எம்.எல்.ஏ.க்களும், 75 எம்.எல்.சி.க்களும் உள்ளனர். இவர்கள் அரசிடம் கிளெயிம் செய்த பயண விபரங்களை ஆடிட் செய்ததில் தலை கிறுகிறுத்து போயுள்ளது பி.ஏ.ஜி.

எம்.எல்.ஏ., எம்.எல்.சி.க்கள் பயணம் செய்வதற்கு, இலவச ரயில், விமான பயண கூப்பன்கள் (RTC – Rail Travel Coupons & ATC – Air Travel Coupons) வழங்கப்படுகின்றன. அநேக மக்கள் பிரதிநிதிகள் அவற்றை வைத்து புகுந்து விளையாடியுள்ளது பி.ஏ.ஜி. ஆடிட் அறிக்கையில் தெரியவந்துள்ளது.

54 எம்.எல்.ஏ.க்கள், இரே இடத்தில் இருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட திசைகளில் 142 தடவைகள் பயணம் செய்துள்ளனர். இதில் 6 பேர், ஒரே நாளில் மூன்று திசைகளில் பயணித்துள்ளனர். ஒரு எம்.எல்.ஏ. பட்னாவில் இருந்து அசாம் நகர் ரோடு, பட்னாவிலிருந்து புதுடில்லி, புதுடில்லியிலிருந்து பட்னா ஆகிய 3 ரயில் பயணங்களை 2010-ம் ஆண்டு, பிப்ரவரி 15-ம் தேதி மேற்கொண்டுள்ளார்.

இவரைவிட கில்லாடியான மற்றொருவர், அதே ஆண்டு நவம்பர் 17-ம் தேதி, பட்னாவில் இருந்து போர்பெஸ்கான்ஜ் சென்று, அங்கிருந்து திரும்பி வந்து, மீண்டும் அங்கேயே சென்று சாதனை புரிந்துள்ளார். பட்னாவில் இருந்து போர்பெஸ்கான்ஜ், 300 கி.மீ. தொலைவில் உள்ளது. மற்றொருவர் ஒரே தினத்தில் பட்னாவில் இருந்து டில்லிக்கு இரு தடவைகளும், அதே தினத்தில் பிஷான்கான்ஜூக்கும் சென்றுள்ளார்.

நம்ம தமிழக எம்.எல்.ஏ.க்கள், ரொம்ப அப்பாவிகளாக இருப்பார்கள் போலிருக்கிறதே!

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!