Wednesday, December 5, 2012

யாசர் அராபத் உடலிருந்து 60 மாதிரிகள் சேகரிப்பு: உடல் மீண்டும் அடக்கம்

யாசர் அராபத் உடலிருந்து 60 மாதிரிகள் சேகரிப்பு: உடல் மீண்டும் அடக்கம்



பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத், 2004ம் ஆண்டு பிரான்சில் உள்ள தனியார் மருத்துவமனையில் மர்மமான முறையில் மரணமடைந்தார்.
75 வயதான அவரை இஸ்ரேல் நாட்டின் உளவாளிகள் விஷம் வைத்து கொன்று விட்டதாக பாலஸ்தீன அதிகாரிகள் கடந்த 8 ஆண்டுகளாக குற்றம் சாட்டி வந்தனர்.

யாசர் அராபத்தின் மனைவி சுகாவும் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து கூறி வந்தார். இந்த மரணத்தில் உள்ள மர்மத்தை தெளிவாக்க, சர்வதேச குழுவினர் விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் வற்புறுத்தினார்.

இதனடிப்படையில் பிரான்ஸ், ரஷ்யா, பாலஸ்தீன நாடுகளை சேர்ந்த நிபுணர்கள் குழு அராபத்தின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து பரிசோதனை செய்ய ஆலோசனை செய்து வந்தனர்.

இந்நிலையில் மரணத்தின்போது அராபத் அணிந்திருந்த உடைகளில் கதிர் வீச்சு தன்மை கொண்ட பொலோனியம் 210 என்ற நச்சுப்பொருள் படிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த வாரம் அவரது சமாதி இடிக்கப்பட்டு உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பாலஸ்தீன அரசின் தடயவியல் நிபுணர் ஒருவர் மட்டுமே அராபத்தின் உடலை தொட்டு, பரிசோதனைக்கான மாதிரிகளை எடுக்க அனுமதிக்கப்பட்டார்.

இதற்காக பரிசோதனைக்கான 60 மாதிரிகள் எடுக்கப்பட்ட பின்பு, அவரது உடல் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. இந்த மறு அடக்கத்தின்போது ராணுவ மரியாதை ஏதும் அளிக்கப்படவில்லை என்று தெரிகின்றது.

இந்த 60 மாதிரிகளும் 3 நிபுணர்கள் குழுவிடம் பகிர்ந்து அளிக்கப்படும். பரிசோதனை முடிவுகள் வெளியாக 3 முதல் 4 மாதங்கள் ஆகலாம்.

அராபத் விஷம் வைத்துதான் கொல்லப்பட்டால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாலஸ்தீன அரசு வழக்கு தொடுக்கும் என்று அராபத்தின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் பாலஸ்தீன குழுத்தலைவர் தவ்பீக் திராவி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!