Monday, November 26, 2012

திருவண்ணாமலையில் கார்த்திகை உற்சவம்

திருவண்ணாமலையில் கார்த்திகை உற்சவம் நாளை மகா தீபம் ஏற்றப்படுகிறது இத்தாலி நாட்டினர் நெய் காணிக்கை




திருவண்ணாமலையில் நாளை மகா தீபத்திருவிழாவையொட்டி 2,668 அடி உயர மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த 18ம் தேதி முதல் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது.

விழாவின் 7ம் நாளான நேற்று முன்தினம் மகா தேரோட்டமும், 8ம் நாள் உற்சவமான நேற்று தங்கமேரு வாகனத்தில் பிச்சாண்டவர் உற்சவமும் நடைபெற்றது.

தீப உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீப பெருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. நாளை அதிகாலை 4 மணிக்கு கோயிலினுள் ‘ஏகன் அனேகன்‘ எனும் தத்துவத்தை விளக்கும் வகையில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயரமுள்ள கிரிவல மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

மகா தீபத்தை முன்னிட்டு வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணப்பன் தலைமையில் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மகா தீப தரிசனம் காண நாடு முழுவதும் இருந்து திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

நாளை ஏற்றப்படும் மகாதீபம் தொடர்ந்து 11 நாட்கள் மலை உச்சியில் பிரகாசிக்கும். மகாதீபத்துக்கு பக்தர்கள் நெய் காணிக்கை செலுத்தி வருகின்றனர். கால் கிலோ 50 ரூபாய், அரை கிலோ 100 ரூபாய் என நெய் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் கோயில் நிர்வாகம் சார்பில் 3500 கிலோ நெய் வாங்கப்படுகிறது. இந்த மகாதீபத்துக்கு கடந்த 8 ஆண்டாக இத்தாலி நாட்டில் உள்ள சிவலோக ஆசிரமம் சார்பில் நெய் காணிக்கை செலுத்தப்பட்டு வருகிறது.

நாளை நடைபெறும் மகாதீபத்தை காண சிவலோக ஆசிரம தலைவர் சர்ஜோபீட்டர் தலைமையில் 120 இத்தாலி நாட்டு பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்துள்ளனர். அவர்கள் நேற்று அண்ணாமலையார் கோயில் மகாதீபத்துக்கு கோயில் இணை ஆணையர் பரஞ்சோதியிடம் ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் நெய் காணிக்கை செலுத்தினர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!