Monday, November 26, 2012

சிவகங்கை கிராமத்தில் இந்துக்கள், மொஹரம் பண்டிகைக்காக தீ மிதிப்பு!

சிவகங்கை கிராமத்தில் இந்துக்கள், மொஹரம் பண்டிகைக்காக தீ மிதிப்பு!



சிவகங்கை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாக, இந்துக்கள் தீ மிதித்து மொஹரம் பண்டிகையின் 8-வது நாளை அனுஷ்டித்தனர். ஷியா பிரிவு முஸ்லிம்கள் தம்மை வருத்திக் கொள்ளும் விதத்திலான நடவடிக்கைகளில் ஈடுபடும் தினம் இது.

முகமதி நபியின் பேரனான இமாம் உசேனை அதே இனத்தை சேர்ந்த யஜீர் என்பவர் துன்புறுத்தி கொலை செய்தார். அத்துடன், இமாம் உசேனை சேர்ந்தோரையும் கூண்டில் அடைத்து தண்ணீர் கொடுக்காமல் கொலை செய்தார். இந்த நாளை ஷியா பிரிவு முஸ்லிம்கள் தியாக தினமாக, தம்மை வருத்தி கடைப்பிடிக்கின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் அருகே முதுவன் திடல் என்ற கிராமத்தைச் சேர்ந்த இந்துக்கள் ஆண்டுதோறும் மொஹரம் பண்டிகையின் 8-வது நாளை தீ மிதித்து அனுஷ்டித்து வருகின்றனர். இதற்கு ஒரு பின்னணியும் உள்ளது.

முதுவன் திடலில் 60 ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமான இஸ்லாமியர்கள் வசித்து வந்தனர். இதனையொட்டி இந்த ஊரில் இஸ்லாமியர்களும், இந்துக்களும் இணைந்து ரம்ஜான், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். இங்குள்ள பாத்திமா பள்ளிவாசல் பிரசித்தி பெற்றது.

நாளடைவில் இங்கு வசித்த இஸ்லாமியர்கள் அனைவரும் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்திற்கு இடம் பெயர்ந்து விட்டனர். ஆனாலும் இங்குள்ள இந்துக்கள் அனைவரும் இஸ்லாமியர்களின் பண்டிகையை தவறாது கொண்டாடுகின்றனர். பள்ளிவாசலையும் பராமரித்து வருகின்றனர்.

இங்குள்ள இந்துக்கள், மொஹரம் பண்டிகையின் 8-வது நாளன்று அதிகாலை 3 மணிக்கு பள்ளிவாசல் முன்பு 15 அடி ஆழத்தில் குழி வெட்டி அதில் தீ வளர்த்து, மிதித்தனர். இதற்காக இவர்கள் ஒரு வாரம் விரதம் கடைபிடித்துள்ளனர். பெண்கள் அனைவரும் தீ மிதித்த பின்னர் முக்காடு போட்டுக்கொண்டு தங்கள் தலையில் தீயை அள்ளி கொட்டிக்கொண்டனர். இவ்வாறு செய்வதன் மூலம் பேய், பிசாசு எதுவும் அண்டாது என்பது நம்பிக்கை.

உலகம் முழுவதும் பல இடங்களில் மத ரீதியான உரசல்கள் உள்ள இந்த நாட்களில், இப்படியான நடைமுறை ஒரு கிராமத்தில் இருப்பதை, யாரும் பெரியளவில் வெளியே கொண்டுவருவதில்லை என்பதே இங்குள்ள சோகம்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!