லண்டன் குழு ஆய்வில் தகவல் கோடையில் பிறந்த குழந்தைகள் கணக்கில் கொஞ்சம் ‘வீக்’
கோடை காலத்தில் பிறந்த குழந்தைகள் கணக்கில் கொஞ்சம் ‘வீக்’ ஆக இருப்பார்கள் என்று லண்டனில் நிபுணர்கள் நடத்திய சர்வே முடிவு தெரிவிக்கிறது.
லண்டனில் ‘எவரி சைல்டு ஏ சான்ஸ் டிரஸ்ட்’ என்ற அமைப்பின் சார்பில் கணிதவியல் நிபுணர்கள் ஒரு சர்வே நடத்தினர். கணிதத்தில் குழந்தைகளின் அறிவுக் கூர்மை குறித்து இந்த சர்வேயில் ஆய்வு நடத்தப்பட்டது. 6 மற்றும் 7 வயது சிறுவர், சிறுமிகள் 47,237 பேரிடம் எண் கணிதம் குறித்து தேர்வுகள் நடத்தப்பட்டன. மேலும், அவர்களிடம் கணிதம் தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இதன் முடிவு குறித்து நிபுணர்கள் கூறியதாவது:
குழந்தைகளின் பிறந்த தேதி, அவர்களின் குடும்பம் மற்றும் பள்ளி சூழ்நிலைகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதத்திற்குள்ளாக பிறந்த குழந்தைகள் கணக்கில் கொஞ்சம் ‘வீக்’ ஆக உள்ளனர். அவர்கள் கணிதத்தில் சக வயதுள்ள குழந்தைகளை விட 13 மாதங்கள் அளவுக்கு பின் தங்கியுள்ளனர். அதாவது அவர்களின் அறிவுக் கூர்மை முந்தைய வகுப்பில் படிப்பவர்களுக்கு சமமாகவே உள்ளது.
எனவே, அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட வேண்டியது அவசியமாகிறது. இந்த ஆய்வு முடிவு, மற்ற நாடுகளின் குழந்தைகளுக்கு இதே அளவில் பொருத்தமாக இருக்காது. சராசரி வித்தியாசப்படலாம் என ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இத்தகவலை டெய்லி மெயில் பத்திரிகை வெளியிட்டுள்ளது.


No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!