Monday, November 26, 2012

உச்சநீதிமன்றம் கருத்து : ஆயுள் தண்டனை என்றால் சாகும்வரை சிறைவாசம்தான்

உச்சநீதிமன்றம் கருத்து : ஆயுள் தண்டனை என்றால் சாகும்வரை சிறைவாசம்தான்



கைதிக்கு வழங்கப்படும் ஆயுள்தண்டனை என்பது 14 ஆண்டுகள் அல்ல. வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதுதான் அர்த்தம் என உச்சநீதிமன்றம் ஆணித்தரமாக தெரிவித்துள்ளது. ஆயுள் தண்டனை தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மதன் பி லோகுர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்று கூறியதாவது:

ஆயுள் தண்டனை கைதி, 14 ஆண்டுகள் அல்லது 20 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்துவிட்டால், விடுதலையாக அவருக்கு உரிமை உள்ளது போல் தவறான கருத்து நிலவுவதுபோல் தெரிகிறது. அது போல் எந்த உரிமையும் ஆயுள் தண்டனை கைதிக்கு இல்லை. ஆயுள் தண்டனை அனுபவிக்கும் குற்றவாளி, தனது வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும். இதை குறைத்து குற்றவாளியை விடுவிக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு உள்ளது.

ஆனால் 14 ஆண்டுகளுக்கு முன்பாக குற்றவாளியை மாநில அரசு விடுவிக்க முடியாது.  பண்டிகை மற்றும் கொண்டாட்ட காலங்களில் ஆயுள் தண்டனை கைதிகளை அதிகளவில் மாநில அரசுகள் விடுவிக்கும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆயுள் தண்டனை கைதியை விடுவிப்பதற்கு முன் அவர் மீதான வழக்குகள் ஒவ்வொன்றாக தீர ஆய்வு செய்ய வேண்டும்.

மரண தண்டனை விதிப்பதிலும் சீரான விதிமுறை பின்பற்றப்படுவதில்லை. தண்டனை அளிக்கும் போது குற்றம், குற்றவாளியின் தன்மையை ஆராய வேண்டும். துரதிருஷ்டவசமாக தண்டனை அளிக்கும் நடவடிக்கை கவனமாக பின்பற்றப்படுவதில்லை. அது விதிமுறைப்படியான தண்டனையாக இல்லாமல்,  நீதிபதி எடுக்கும் முடிவாகவே உள்ளது. இந்த முறையை பரிசீலனை செய்து மாற்றியமைக்க வேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!