Friday, November 30, 2012

2012 உலகம் அழியுமா? உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு! கட்டாயம் படியுங்கள் - பாகம் 11

2012 உலகம் அழியுமா? உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு! கட்டாயம் படியுங்கள் - பாகம் 11

கடந்த அத்தியாயத்தை படிக்க இங்கே கிளிக் செய்யவும்மீண்டும் ஒன்றை நினைவுபடுத்த வேண்டிய அவசியம் எனக்கு இப்போதும் உள்ளது. இங்கு நான் கொடுக்கும் எந்தத் தகவலும், எனக்குச் சொந்தமானவை அல்ல. இவைகளின் உண்மைத் தன்மை பற்றி என்னிடம் எந்த ஆதாரங்களும் இல்லை. ஆனால் பல ஆராய்ச்சியாளர்களின் கட்டுரைகள், பேட்டிகள், காணொளிகள் என இணையங்களிலும், அச்சு வடிவங்களிலும் ஆதாரங்கள் என்று சொல்லப்படுபவை கொட்டிக் கிடக்கின்றன. ‘சதித் தத்துவம்’ (Conspiracy Theory) என்னும் பெயரில், இவை காணொளிகளாக வெளிவருகின்றன. இவை இப்படி இப்படி இருக்கின்றன என்று உங்களுக்குச் சுட்டிக் காட்டுவது மட்டுமே எனது வேலை. அத்துடன் என் கடமை முடிந்து போய் விடுகிறது. படித்த பின் சரியான முடிவுகளை எடுப்பது உங்கள் பொறுப்பு. நான் சொல்லும் ஒவ்வொரு சம்பவத்தைப் பற்றியும் நீங்கள் இணையத்தில் தேடிப் பார்த்தால், நான் சொன்னவை சிறிதளவோ என்று நீங்களே பிரமித்துப் போவீர்கள். சொல்லாதவை மிக அதிகமாக இருக்கும். இதற்கு மேலும் இது பற்றி நான் விளக்கம் அளிக்க வேண்டியதில்லை என்ற நம்பிக்கையுடன் தொடர்கிறேன்………..!

கடந்த பதிவில், டென்வெர் விமான நிலையம் பற்றியும் நோர்வேயில் அமைக்கப்பட்ட மரங்களின் பாதுகாப்பு மையத்தைப் பற்றியும் நான் எழுதியது உங்களைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்திருக்கும் என்றே நம்புகிறேன். அவற்றை யார் முன்னின்று நடத்துகிறார்கள் என்ற கேள்வியும் நமக்குள் எழுந்திருந்தது. அவர்கள் யார் என்பதற்கு ஆதாரம் டென்வெர் விமான நிலையத்திலேயே எமக்குக் கிடைத்தது. டென்வெர் விமான நிலையக் கட்டுமானத்தின்போது, அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டு ஒன்றைப் பற்றிக் கடந்த பதிவில் கூறியிருந்தேன். அதன் முழுமையான வடிவம் மேலே உள்ள படத்தில் காணப்படுகின்றது. அந்தப் படத்தைச் சரியாகப் பார்த்தீர்களானால், அதில் ஒரு சின்னம் (Symbol) காணப்படுகிறது. அத்துடன் கீழே ‘புதிய உலகம்’ (New World) என்னும் வார்த்தைகளும் காணப்படுகிறது. இவை இரண்டுமே எல்லா மர்மங்களையும் எமக்கு தீர்க்கப் போதுமானவையாக இருக்கலாம்.
அவை என்ன என்றுதான் பார்ப்போமே!

‘புதிய உலக ஒழுங்கு’ என்று தமிழில் சொல்லப்படக்கூடிய ‘The New World Order’ என்னும் அமைப்பு, உலகத்தின் கோடீஸ்வரர்களையும், தொழிலதிபர்களையும், அரசியல் பெரு முதலைகளையும், அதிகார மையங்களின் உச்சங்களில் அமர்ந்திருப்பவர்களையும் தன் அங்கத்தவர்களாகக் கொண்டது என்று சொல்கிறார்கள். ஒரு மாயச் சங்கிலி மூலம் இவர்கள் அனைவரையும் இந்த அமைப்பு இணைத்து வைத்திருக்கிறது. அந்தச் சங்கிலியின் எந்த ஒரு வளையத்திலும் சாதாரண பாமர மக்களான நாங்கள் இருக்கவே முடியாது. இவர்களின் கொள்கை ஒரே ஒரு உலகம், ஒரே ஒரு பணம், ஒரே ஒரு வங்கி என்பதுதான். அதாவது உலக மக்கள் அனைவரையும் ஒரே ஒரு சக்தி ஆள வேண்டும். அவர்களுக்குப் பணமாக ஒரே ஒரு பணம் இருக்க வேண்டும். அந்தப் பணத்தை நடை முறைப்படுத்துவதற்கு ஒரே ஒரு வங்கி இருக்க வேண்டும்.

‘என்னடா இவன் கதைவிடுகிறானே!’ என்று நீங்கள் நினைக்கலாம். சம்பந்தம் உண்டோ, இல்லையோ, இங்கு சொன்னது போல, சம்பவம் ஒன்று சமீபத்தில் நடைபெற்று இருக்கின்றது. பதினைந்துக்கும் மேற்பட்ட, உலகத்தில் மிக முக்கியத்துவமும், சக்தியும் வாய்ந்த நாடுகள் ஒன்றாகச் சேர்ந்து தனி ஒரு பணமான ‘யூரோ’வை (Euro) உருவாக்கியது எம் கண் முன்னாலேயே நடந்தது. ஆசிய நாட்டிலுள்ளவர்கள் அனேகருக்கு ‘புதிய உலக ஒழுங்கு’ அமைப்புப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. தன் முகத்தை ஆசிய நாட்டினர்களுக்குப் பெரிதாகக் காட்டாத இந்த அமைப்பைப் பற்றி அமெரிக்க, ஐரோப்பிய நாட்டு மக்கள் நிறையவே தெரிந்து வைத்திருக்கின்றனர்.
இதில் மறைந்திருக்கும் இன்னுமொரு செய்தி என்னவென்றால், The New World Order என்னும் அமைப்பை, ‘Free Mason’ என்னும் அமைப்பே கொண்டு நடத்துகிறது என்று சொல்கிறார்கள். இந்த Free Mason அமைப்பு மிகவும் பிரபலம் வாய்ந்தது. அது மட்டுமில்லாமல் பலரால் மர்மம் நிறைந்தது என்றும் வர்ணிக்கப்படுவது. இந்த அமைப்பை ‘மேசனிக்ஸ்’ (Masonics) என்றும் அழைப்பார்கள். இந்த மேசனிக்ஸ் என்பது மதம் சார்ந்தது என்றும், கடவுளுக்கு எதிரானது என்றும் இரண்டு விதமான கருத்துக்கள் இருந்தாலும், நாம் அதற்குள் போகத் தேவையில்லை. ஆனால் இந்த அமைப்பு மிகவும் ஆளுமையுள்ள அமைப்பு என்பது மட்டும் உண்மை ஆகும்.
இந்த அமைப்புக்கு எனப் பல சின்னங்கள் இருந்தாலும்,  கீழே படத்தில் கொடுத்திருப்பதுதான் அதன் முக்கிய சின்னமாகும்.இந்தப் படத்தில் உள்ள அடையாளத்தையும், டென்வெர் விமான நிலையக் கல்வெட்டில் இருந்த அடையாளத்தையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள். அது மட்டுமல்லாமல் மேசனிக்ஸ் அமைப்பு மேலும் சில சின்னங்களைத் தமக்கென வைத்திருக்கின்றது. மேலே படத்தில் காட்டப்பட்ட கணித வரை கருவிகள், ஒற்றைக் கண், ஐந்து நட்சத்திர வடிவம், ஆறு நட்சத்திர வடிவம், கைவிரல்களை மடக்கிக் காட்டும் ஒருவித சைகையான அடையாளம், ஆங்கில ‘G’ என்னும் எழுத்து என்பவற்றுடன் ஆச்சரியகரமாக பிரமிட் சின்னமும் மேசன்களின் சின்னங்களாகும்.இந்த மேசனிக்ஸ் அமைப்பின் ஆளுமை பற்றிச் சொல்வதானால், நான் ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் சொன்னால் உங்களுக்கு அதன் தீவிரமும், அதிகாரமும் புரியும். அமெரிக்காவின் ஒரு டாலரை உங்களில் அநேகர் பார்த்திருக்கலாம். அந்த ஒரு டாலரில் (One Dollar Note) இருக்கும் படம் இது.
இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் படத்தில் உள்ள ‘NERVUS ORDO SECLORUM’ என்னும் லத்தீன் வார்த்தைகள் ‘Secular New Order’ என ஆங்கிலத்தில் அர்த்தம் தருகிறது. இது New World Order என்று தவறாக அர்த்தப்படுத்தப்படுகின்றது என்று விக்கிப்பீடியா (Wikipedia) தெரிவித்தாலும், இல்லை இது மறைமுகமாக அதையே குறிக்கின்றது எனப் பலர் அடித்துச் சொல்கின்றனர். அவற்றின் விபரங்களை நீங்கள் பல இணையத் தளங்களில் காணலாம். அது தவிர அமெரிக்க டாலரில் ஏன் லத்தீன் வார்த்தைகள் வரவேண்டும் என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, மேசன்களின் அடையாளமான ஒற்றைக் கண்ணும், பிரமிட் அடையாளமும் அங்கு வர வேண்டிய அவசியமே இல்லை எனக் கேள்விகள் வருகின்றது. அத்துடன் அந்தப் பிரமிட்டின் அடுக்குகள் மொத்தமாக 13 ஆகவும் ஏன் இருக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. இந்தப் 13 என்னும் இலக்கம் மேசன்களின் முக்கிய இலக்கங்களில் ஒன்று என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டும். சரி, இந்தப் 13 படிகள் என்பது தற்செயலாக அமைந்தது என்று நாம் எம்மைச் சமாதானப்படுத்தினால், அதே டாலரில் இருக்கும் இன்னுமொரு படம் எம்மை அசர வைக்கிறது. அந்தப் படத்தில் இருக்கும் அமெரிக்கக் கழுகு, தன் இடது காலில் வைத்திருக்கும் இலைகளின் எண்ணிக்கையும், வலது காலில் வைத்திருக்கும் அம்புகளின் எண்ணிக்கையும் தற்செயலில்லாமல் 13 ஆக இருக்கிறது. அது மட்டுமா? அதில் செங்குத்தாக வரையப்பட்டிருக்கும் கறுப்பு வெள்ளைக் கோடுகளின் எண்ணிக்கை 13. மேலே இருக்கும் லத்தீன் எழுத்துகள் மொத்தம் 13. அதற்கும் மேலே இருக்கும் நட்சத்திரங்கள் 13. இதற்கு மேலும் 13 என்பது தற்செயல்தானா என்பதை நீங்களே முடிவு செய்துவிட்டு, படத்தில் எண்ணிப் பாருங்கள்(13 இந்த எண்ணை நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள் )


“அடப் போங்கப்பா! எதைப் பார்த்தாலும் உங்களுக்குச் சந்தேகம்தான். எல்லாவற்றிற்கும் ஏதாவது ஒன்று சொல்லிக் கொண்டே இருப்பீர்கள்” என்று நீங்கள் சொல்லலாம். இருக்கட்டும், இதையும் பாருங்கள். அந்த டாலரில் இருக்கும் படத்தில் மேசனின் ஆறுகோண அடையாளத்தை வரையும்போது என்ன வருகிறது என்று தெரிகிறதா? MASON.


ஆச்சரியம் இத்துடன் முடிந்து விடவில்லை. அமெரிக்க ஒரு டாலரின் முன் பக்கம் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டனே (George Washington) ஒரு மேசன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆபிரகாம் லிங்கன், கென்னடி ஆகிய இருவர் தவிர்த்து, அமெரிக்க ஜனாதிபதிகளில் அனைவரும் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இந்தக் கருத்துகளை முன்னணியில் வைத்து ‘நிக்கலஸ் கேஜ்’ (Nicolas Cage) நடித்து வெளிவந்த National Treasure (The Book of Secrets) என்னும் ஆங்கிலப் படம் இரண்டு பாகங்களாக வெளிவந்திருக்கின்றன. முடிந்தால் அவற்றைப் பாருங்கள். அத்துடன் அந்தப் படத்தின் போஸ்டர்களில் பிரமிட்டுக்குள் இருக்கும் ஒற்றைக் கண்ணையும் கவனிக்கத் தவறிவிடாதீர்கள்.


இந்து மதத்தின் சின்னங்களில் ஒன்றான ஸ்வஸ்திக் சின்னத்தை, ஹிட்லர் தனக்கென்று ஒரு சின்னமாக மாற்றிவிட்டது சரித்திரத்தில் நடந்தது. அது போல, இன்னுமொரு சின்னத்தையும் தங்களுக்கென வைத்துக் கொண்டார்கள் மேசன்கள். அது அவர்கள் கைகளாலேயே காட்டும் ஒரு சின்னம். அதை அமெரிக்காவின் எத்தனை பெருந் தலைகள் பாவித்திருக்கின்றனர் என்று நீங்களே பாருங்கள். இவையெல்லாம் சில உதாரணங்கள்தான். பல கொடுக்க முடியவில்லை.
இங்கு ஒரு விசயத்தை நான் குறிப்பிட்டே ஆக வேண்டும். இவர்களெல்லாம் மேசனாக இருந்தால், அப்படி இருப்பதில் எந்தத் தவறும் கிடையாது. மேசன் என்பது மறைந்து தொழிற்படும் ஒரு அமைப்பல்ல. வெளிப்படையாகவே இயங்கும் ஒரு அமைப்பு அது. அதில் அங்கத்தவர்களாக இருப்பது ஒன்றும் தவறானது அல்ல. உலகில் அதி உச்சத்தில் இருப்பவர்கள் பலர் ‘நான் ஒரு மேசன்’ என்று சொல்லத் தயங்கியதே இல்லை. ஆகையால் இங்கு அமெரிக்க ஜனாதிபதிகளைக் குறிப்பிடும்போது, அவர்கள் தவறு செய்பவர்கள் என்று சொல்வது என்பதல்ல அர்த்தம். மேசன்கள் பற்றிய ஒரு மர்மமான கருத்து உலகில் பலமாக உலவுகிறது என்பதை இங்கு சொல்லி, அதற்கு மேலும் சொல்வதற்காக இவற்றையும் சொல்ல வேண்டி இருக்கிறது அவ்வளவுதான். அதிகம் ஏன், ஜார்ஜ் வாஷிங்டன் போல, ஜார்ஜ் புஷ் கூட மேசன்களுடன் இருக்கும் படங்கள் வெளிப்படையாகவே கிடைக்கின்றன. நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது நிச்சயம் புரியும் என்று நினைக்கிறேன்.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, இன்னுமொரு அதிர்ச்சியும் எம்மை வேறொரு புறத்தில் இருந்து தாக்குகிறது. நீங்கள் யாருமே எதிர்பார்க்காத ஒரு அதிர்ச்சி அது. எதிர்பார்க்காதது என்பது மட்டுமல்ல, அது பற்றிச் சொன்னால் நீங்கள் நம்பப் போவதே இல்லை. “நாம் பார்த்துக் கொண்டிருக்கும்போது நடப்பதையே இப்படி மாற்றிச் சொல்கிறீர்களே, நீங்கள் எதைத்தான் மாற்றிச் சொல்ல மாட்டீர்கள்?” என்று திருப்பி என்னையே கேள்வி கேட்பீர்கள். அந்த அளவுக்கு நீங்கள் நம்பும் ஒன்று இது. இதை நான் சொன்னால், இதுவரை நான் சொன்னவை எல்லாமே, இப்படிப்பட்ட அபத்தங்கள்தான் என்று முடிவைக் கூட நீங்கள் எடுத்துவிடுவீர்கள்.

“அட! எதற்கு இவ்வளவு பீடிகை?” என்றுதானே கேட்கிறீர்கள். விசயம் அப்படி. நான் சொல்லப் போவதை முதலில் நீங்கள் நம்பாவிட்டாலும், சொல்லி முடிக்கும் வரை கொஞ்சம் பொறுமையாக வாசியுங்கள். முடிந்தால் அது பற்றி இணையங்களில் தகவல்களையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள். சரி, இப்போ விசயத்துக்கு வருகிறேன்.

உலகம் வெப்ப மயமாதல் (Global Warming) என்பது தற்போது, மிகவும் பரவலாகப் பேசப்படும் ஒரு பாரிய பிரச்சினை. இதற்குக் காரணமாகச் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதைக் குறிப்பிட்டுச் சொல்கின்றனர். அதிலும் குறிப்பாக உலகமெங்கும் பயணித்துக் கொண்டிருக்கும் வாகனங்கள் வெளிவிடும் புகையால், சுற்றுச்சூழல் மாசடைகிறது என்கிறார்கள். வாகனங்கள் வெளிவிடும் காபனீரொக்சைட் (CO2) என்னும் வாயுவும், மீதேன் (Methene – CH4) என்னும் வாயுவும் சுற்றுச்சூழலை நஞ்சாக்குகிறது என்றும் சொல்லப்படுகிறது. அதாவது எமது பூமி சூரியனின் வெப்பக் கதிர்களிலிருந்து எம்மைப் பாதுகாக்க தன்னைச் சுற்றி ‘கிறீன் ஹவுஸ் விளைவு’ (Greenhouse effect) எனப்படும் ஒன்றை, பூமியைச் சுற்றிப் பல வாயுக்களால் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கிறீன் ஹவுஸ்தான் எம்மை இதுவரை காத்து வருகிறது. இந்த கிறீன் ஹவுஸை மேற்படி இரண்டு வாயுக்களும் பழுதடைய வைக்கின்றன எனச் சொல்லப்படுகிறது.


ஆனால் தற்போது விஞ்ஞானிகள் மிகப்பெரிய எழுத்துகளில், ‘குளோபல் வார்மிங் என்பதே பொய்’ என்று அலறுகிறார்கள். ஆமாம், நீங்கள் சரியாகத்தான் வாசித்தீர்கள். குளோபல் வார்மிங் என்று சொல்லப்படுவதே முழுப் பூசணியை சோற்றுக்குள் மறைக்கும் பொய் என்கிறார்கள். உலகம் வெப்பமாவது என்பது உண்மையிலும் உண்மைதான். அதை எந்த விஞ்ஞானியும் மறுக்கவில்லை. ஆனால் அதற்குச் சொல்லப்படும் காரணமான மேற்படி வாயுக்களின் மாசுத் தன்மைதான் என்பது மகா பொய் என்கிறார்கள். இதைச் சொல்வது ஒருவர், இரண்டு பேர் கிடையாது. அமெரிக்காவில் மட்டுமே 31457 விஞ்ஞானிகள் இதற்கு எதிராக பெட்டிசன் ஒன்றை உருவாக்கி, அமெரிக்க அரசுக்கு அனுப்பினார்கள். அதில் 9029 பேர் Ph.D என்று சொல்லப்படும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள். இவர்கள் அனைவருமே குளோபல் வார்மிங் என்பது பொய் என்கிறார்கள். குளோபல் வார்மிங் என்பது உண்மைதான் என்று சொல்லும் விஞ்ஞானிகள் வெறும் 3100 பேர் மட்டுமே! அரசுக்கு விஞ்ஞானிகள் அனுப்பிய கடிதத்தின் ஒரு உதாரணம் இது.


விஞ்ஞானிகள் சொல்லும் காரணம், காபனீரொக்சைட், மீதேன், நைட்ரஸ் ஒக்சைட், நீராவி, ஓஸோன் ஆகிய ஐந்து வாயுக்களே, கிறீன் ஹவுஸ் விளைவுக்குக் காரணமாக இருக்கின்றன. இந்த உலக மாசுபடுதலுக்குக் காரணம் என்று சொல்லப்படும் காபனீரொக்சைட்டும் (CO2), மீதேனும்தான் (CH4) இந்த கிறீன் ஹவுஸ் உருவாவதற்கு முக்கிய காரணியாக இருக்கும் வாயுக்கள். அடிப்படையில் எமக்கு உதவியாக CO2, CH4 ஆகிய இரு வாயுக்களும் இருக்க, அந்த வாயுக்களால் எப்படி எங்கள் பூமி மாசுபட முடியும் என்று கேட்கிறார்கள். இந்த இரு வாயுக்களும் எமக்கு உதவிதான் செய்ய முடியுமே ஒழிய, தீமையைச் செய்ய முடியாதவை. அப்படி இந்த வாயுக்களால்தான்

பூமி வெப்பமாகின்றது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும், இதுவரை வெளியிடப்பட்ட வாயுக்களால் அதிகபட்சம் ஒரு சதம பாகை வெப்பம்தான் அதிகரித்திருக்கலாம் என்கிறார்கள்.

அப்படி என்றால் உலகம் வெப்பமாதல் இல்லையா என்கிறீர்களா? நிச்சயமாக வெப்பமாகிறது. நாங்கள் நினைப்பது போல இல்லாமல், மிகவும் அதிகமாகவே வெப்பமாகிறது. ஆனால் அப்படி வெப்பமாவதற்குக் காரணமே வேறு. சூரியன் சமீப காலங்களாக மிகவும் ஆவேசமாகத் தன் சீற்றத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதன் வெப்பக் கதிர்த் தாக்குதல் முன்னைவிட மிகவும் அதிகரித்துப் போய் உள்ளது. சொல்லப் போனால், 2012 இல் உலகம் அழியாவிட்டாலும் எதிர்வரும் மிகக் குறுகிய காலத்தில் உலகம் அழியும் அளவுக்கு சீற்றத்தைக் கொடுக்கிறது சூரியன்.


ஆனால் இவற்றையெல்லாம் மறைத்துவிட்டு, உலகம் மாசாவதால் பூமி வெப்பமாகின்றது என்று கதைவிட ஆரம்பித்திருக்கிறார்கள் சிலர் என்று சொல்கிறார்கள் விஞ்ஞானிகள். இப்படிப் பொய் சொல்வதில் “இவர்களுக்கு அப்படி என்ன நோக்கம் உண்டு?” என்றுதானே கேட்கிறீர்கள். ஒன்றுமில்லை, வெறும் பணமும் அதனால் கிடைக்கும் அதிகாரமும்தான் அவர்கள் நோக்கம். அதுவும் சாதாரணமான பணம் அல்ல. பில்லியன், ட்ரில்லியன் டாலர் பணம். ஆம்! புவி மாசடைதல் என்பதை வைத்து அறவிடப்படும் பெட்ரோலிய வரி என்பது நீங்கள் கற்பனையே பண்ண முடியாதது. குளோபல் வார்மிங் என்று சொல்லி மாசுக் கட்டுப்பாட்டிற்காக உள்ளீடு செய்யப்பட்ட பணம் மிக மிக மிக அதிக அளவிலான பணம்.

இதில் இரண்டு விசயங்கள் உள்ளன. 1. புவி வெப்பமாதலுக்கான உண்மையான காரணம் மறைக்கப்படுகிறது. 2. புவி வெப்பமாதல் தவறாக வழி நடத்தப்பட்டு பணம் சம்பாதிக்கப்படுகிறது. முதலாவதில் எங்கள் தொடருக்குச் சம்பந்தமான உலக அழிவு உள்ளடக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவதாகச் சொல்லியதில், உலகம் அழிந்தால் யார் தப்புவதற்கு முயற்சி செய்வார்களோ அவர்கள், அப்படித் தப்புவதற்குக் காரணமாக இருக்கும் கோடி கோடியான பணம் சம்பாதிப்பது. பின்னர் அதன் மூலம் அசைக்க முடியாத சக்தியாக மாறுவது உள்ளடங்கி இருக்கிறது.

இந்த குளோபல் வார்மிங் சிக்கலில் முக்கியமாகப் பலர் கையைக் காட்டும் நபர்கள் இருவர். அதில் ஒருவர் அமெரிக்க ஜனாதிபதி போட்டியில், போட்டியிட்ட மாபெரும் கோடீஸ்வரர் ஒருவர். அடுத்தவர் ஐ.நா. சபையில் மிக முக்கிய பதவியை வகித்துப் பின்னர் ஒரு சிக்கலில் பதவியைத் துறந்து, உலகின் உச்சியில் இருக்கும் கோடீஸ்வரர்களில் ஒருவர். இதில் நகைச்சுவை என்னவென்றால், அந்த இரண்டாவது நபர், தற்சமயம் தனது நாடான கனடாவை விட்டுவிட்டு சீனாவில் குடியிருக்கிறார். இந்தச் சம்பவம் உங்களுக்கு ’2012′ என்னும் ஹாலிவுட் படத்தை நினைவுபடுத்தினால் அதற்கு நான் பொறுப்பல்ல. இந்தத் தொடரில் நான் இவர்கள் இருவரின் பெயர்களையும் உங்களுக்குச் சொல்லப் போவது இல்லை. ஆனால் இணையம் இருக்கும் நிலையில் இதைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சிக்கலான விசயமாக உங்களுக்கு இருக்கப் போவதில்லை. உங்கள் தேடலுக்கு இது ஒரு சவாலாக அமையும், தேடுங்கள்.

இதுவரை நான் சொன்னவற்றில் எங்குமே மாயா வரவில்லை. மாயா இனம் பற்றிச் சொல்லப் போய் எங்கேயோ சென்று விட்டேனோ என்று கூட நீங்கள் நினைக்கலாம். ஆனால் இவற்றுக்கும் மாயாவுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. எப்படி டென்வெர் விமான நிலையத்தில் வரையப்பட்டிருந்த சித்திரத்தில் மாயா இனச் சிறுமி இருந்தாளோ அதுபோல, இவற்றிலும் மாயா கலந்தே இருக்கிறது.

அப்படி இங்கு மாயாபற்றி என்ன உள்ளது என்றுதானே கேட்கிறீர்கள். சொல்கிறேன்.


இந்தத் தொடரை வாசித்து வரும் பலர், ‘இப்படியும் இருக்குமா?’ என்ற தங்கள் ஆச்சரியத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இறுதியாக வந்த தொடரை வாசித்த ஒரு நண்பர், “இது நிறையக் கண் திறப்பைத் தருகிறது” என்றார். அவர் இதை எந்த அர்த்தத்தில் சொல்லியிருந்தாலும், ‘கண் திறப்பு’ என்பதற்கும், இன்று நான் எழுதும் தொடரின் இந்தப் பகுதிக்கும் நிறையவே தொடர்பு இருக்கிறது. கடைசித் தொடரில் நான் ‘மாயன்களுக்கும், மேசனிக்ஸுக்கும் ஒரு விதத்தில் சம்பந்தம் வருகிறது என்று சொல்லி முடித்திருந்தேன். அந்தச் சம்பந்தமே ஒரு ‘கண் திறப்பில்தான்’ ஆரம்பமாகிறது என்றால், என் நண்பர் சொன்னது, என்னை ஆச்சரியப்பட வைத்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இதற்கு மேலும் கண் திறப்பைப் பற்றிச் சொல்லாமல் போனால் சட்டென்று மூடிவிட்டு ஓடிவிடுவீர்கள். எனவே அதைச் சொல்கிறேன்.

மேசனிக்ஸின் மிக முக்கியமான அடையாளம் (Symbol) என்பது, ஒரு பிரமிட்டின் உச்சியில், விழித்திருக்கும் ஒற்றைக் கண்தான். அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் அதிகமாக வளர்ந்தது இந்த மேசனிக்ஸ் அமைப்பு. ஆனால் இந்த இரண்டு கண்டங்களுக்குமே சம்பந்தம் இல்லாதது பிரமிட். உலகில், பிரமிட் என்பது விசேசமாக உணரப்பட்டது இரண்டே இரண்டு இடங்களில்தான். ஒன்று எகிப்து மற்றது மாயன்களின் பிரதேசம். அதிலும் குறிப்பாக, நான் முன்னர் சொல்லியிருந்த ‘ஷிசேன் இட்ஷா’ (Chichen Itza) என்னும் மாயன்களின் பிரமிட்டில், 13 என்னும் இலக்கத்துக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒன்பது அடுக்குகளாகக் கட்டப்பட்டிருக்கும் ஷிசேன் இட்ஷா, பூமியின் ஆரம்ப வரலாற்றை அப்படியே சொல்கிறது என்கிறார்கள். அதற்கமையவே அது கட்டப்பட்டும் இருக்கிறது என்கிறார்கள். அந்தப் பிரமிட்டில் உள்ள ஒன்பது அடுக்குகளையும், தனித் தனியாக 13 பிரிவாகப் பிரித்திருந்தார்கள் மாயன்கள். அவற்றை ஏழு பகல்கள், ஆறு இரவுகள் என மொத்தமாக 13 ஆகப் பிரித்திருக்கிறார்கள். அவற்றின் விபரத்தை இப்போது சொல்லப் போனால் நேர விரயம் அதிகமாகும் என்பதால் படம் தருகிறேன், அதன்மூலம் அது புரிகிறதா எனப் பாருங்கள். புரியாவிட்டாலும் ஒன்றும் பரவாயில்லை. எமக்குத் தேவை அந்த 13 ஆகப் பிரிக்கப்பட்டதன் முக்கியத்துவம் மட்டும்தான்.
இந்த 13 இலக்கம் எப்படி மாயன்களுக்கு முக்கியத்துவமாக இருந்ததோ, அது போல அமெரிக்க ஒரு டாலரிலும் (One Dollar) அந்த 13 இலக்கம் முக்கியமானதாக இருந்ததை நாம் கடந்த தொடரில் அவதானித்திருந்தோம். ஆனால் அதில் அமெரிக்கக் கழுகின் உடம்பில் வரையப்பட்டிருக்கும் கறுப்பு வெள்ளைக் கோடுகளைச் சரியாக நாம் கவனித்திருக்க மாட்டோம். அவையும் 13 கோடுகள் என்று நாம் கவனித்திருந்தாலும், அவை ஏழு வெள்ளைக் கோடுகளும், ஆறு கறுப்புக் கோடுகளுமாக இருக்கின்றன. இது மாயன்களின் பிரமிட்டில் உள்ளது போல, ஏழு பகல்களையும், ஆறு இரவுகளையும் குறிப்பது போல இருக்கின்றன அல்லவா? இது எப்படி சாத்தியமாகியது? அத்துடன் நீங்கள் அந்த டாலரில் இன்னுமொன்றையும் கவனித்து வையுங்கள். அதன் விபரம் கீழே ஆராயப்பட்டாலும் இப்போதே அதைப் பார்த்து வைப்பது நல்லது. படத்தில் மொத்தமாக 13 நட்சத்திரங்கள் இருக்கின்றன. ஆனால் அவை எப்படிப்பட்ட உருவத்தினுள் இருக்கிறது? ஆறுகோண வடிவில் அமைந்த ஒரு வடிவத்தின் உள்ளே அல்லவா காணப்படுகிறது. இந்த ஆறுகோண வடிவத்தின் விசேசத்தைப் பின்னர் ஆராயலாம்.


இப்போது கூட, ‘இருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேய்’ என்னும் மிக எளிமையான பழமொழி மூலம், நான் சொல்லும் மாயன் தொடர்பை நீங்கள் மறுக்கலாம். ஆகவே, இப்போ தருவதைப் பாருங்கள். மாயன்களின் பிரதேசமான ‘மெசோ அமெரிக்க’ (Mesoamerica) பிரதேசத்துக்கு சற்றுக் கீழே இருக்கும் நாடுதான் ‘எக்வாடோர்’ (Ecuador). மாயன் இனம் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருந்த சமயம் எஞ்சிய மாயன்கள் இந்தப் பிரதேசங்களில்தான், ஓடிச் சென்று வாழ்ந்தார்கள். அந்த எக்வாடோரில் 300 அடி ஆழத்துக்குக் கீழே ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்த பிரமிட் போன்ற ஒரு கல், அவர்களைப் பிரமிப்பின் உச்சத்துக்கே கொண்டு சென்றது. அது உங்களையும் ஆச்சரியத்தின் உச்சத்துக்குக் கொண்டு செல்லும் என்பதில் எனக்கு ஆச்சரியமே இல்லை.

‘அதே கண்கள்’ என்று நாங்களும் அலறலாம் போல இருக்கிறது. ஆம்! அதே பிரமிட். அதன் உச்சியில் அதே கண்கள். அது மட்டுமல்ல, அந்தப் பிரமிட்டின் அடுக்குகளை எண்ணிப் பாருங்கள். அவை மொத்தமாக 13. இந்தப் பிரமிட் வடிவக் கல்லின் பெயர் ‘லா மனே பிரமிட்’ (La Mane Pyramid) என்பதாகும். இதற்கு மேலும், மாயனுக்கும், அமெரிக்க டாலருக்கும், மேசனுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று நான் விவரிக்க வேண்டிய அவசியமே இல்லை என்றே நினைக்கிறேன். இருந்தாலும் அவநம்பிக்கை என்பது நமது பிறப்பிலேயே அமைந்த ஒரு சுபாவம். யார், எதை, எப்படிச் சொன்னாலும் நம்ப மறுக்கும் சுபாவம் நமக்கு என்றுமே இருந்து வருகிறது.

அதில் ஒன்றும் தப்பு கிடையாது. நம்பும் வரை புரிய வைக்க வேண்டியது என் கடமை. மிருகங்கள் போல காட்டுவாசிகளாக வாழ்ந்த மாயன்களை, நாகரீகத்தின் உச்சத்தில் இருந்த அமெரிக்க அரசாவது கண்டுகொள்வதாவது என்று நீங்கள் நினைத்தால், அதற்கு இன்னும் ஒரு முக்கிய உதாரணத்தைத் தந்துவிட்டு நகர்கிறேன்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அமைந்த ‘காப்பிடல் பில்டிங்’ (Capitol building in Washington D.C.) என்பது கி.பி. 1793 களில் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. இதைக் கட்டுவதற்கு மூலகர்த்தாவாக இருந்தவர் வேறு யாருமல்ல, ஒரு டாலரில் அமர்ந்திருக்கும் அதே அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் வாசிங்டன்தான். இவர் மேசனிக்ஸ் அமைப்பின் மிகமிக முக்கிய உறுப்பினர் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டும்.


அந்த காப்பிடல் பில்டிங்கின் பிரதான மண்டபத்தில், சுவரில் அமைந்திருக்கும் ஒரு சிலை அமைப்புத்தான் இன்று நம்மை ஆச்சரியப்படுத்தப் போகும் ஒன்று. அதை நான் வார்த்தைகளால் சொன்னால் புரியாது. நீங்களே படத்தில் பாருங்கள்.
படத்தில் உள்ளவர்கள் சுட்டிக் காட்டுவதும், வணங்குவதும் எதைத் தெரியுமா? சரியாகப் பாருங்கள். இன்று உலகம் அழியப் போகின்றது என்று மாயன் சொல்லும் அதே காலண்டர்தான் அதில் இருக்கிறது. மாயன் காலண்டரை இவ்வளவு முக்கியமாக இவர்கள் இங்கு ஏன் அமைக்க வேண்டும்? நன்றாக யோசியுங்கள்? இதை விட வேறு என்ன ஆதாரங்கள் உங்களுக்கு வேண்டும்? அதே கட்டடத்தின் மேலே சுவரின் உச்சியில் வரையப்பட்டிருக்கும் இன்னுமொரு சித்திரத்தையும் பாருங்கள். அதில், ஆறுகோண வடிவில் சுற்றிவரப் படங்களும், நடுவே கண் போன்ற அமைப்பில் ஜோர்ஜ் வாசிங்டன் பெண்களுடன் அமர்ந்திருப்பது போலவும் இருக்கிறது.


 கண் என்கிறோம், ஆறுகோண வடிவம் என்கிறோம் அப்படி என்னதான் இவை இரண்டிலும் முக்கியத்துவம் இருக்கிறது? இவற்றை மேசனிக்ஸ் ஏன் இவ்வளவு முக்கியத்துவப்படுத்துகின்றனர்? இந்தக் கேள்விகள் நம்மையறியாமலே நமக்கு ஏற்படுவதை, நாம் தவிர்க்க முடியாது. அதற்கு இந்த மேசனிக்ஸ் என்பவர்கள் யார், இவர்களின் New World Order என்னும் அமைப்பு என்ன என்பதை நாம் கொஞ்சம் புரிந்து கொள்ள வேண்டும். சொல்வதற்கு முன்னர் இன்னுமொன்றையும் சொல்லி விடுகிறேன். இதில் எந்தக் கருத்தும் என் சொந்தக் கருத்தல்ல.

இதைச் சொல்வதற்கு நான் பைபிளின் (Bible) பழைய ஏற்பாட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். கடவுள் ஆதாமையும், ஏவாளையும் படைத்துவிட்டு அவர்களை ஏடன் (Eden) தோட்டத்தில் வசிப்பதற்கு விடுகிறார். அப்போது கடவுள் ஒரு குறிப்பிட்ட மரத்தைக் காட்டி, “அந்த மரத்தில் உள்ள கனியை மட்டும் உண்ண வேண்டாம். அதை உண்டால் சாகவே சாவீர்கள்” என்று சொல்லி விட்டுச் செல்கிறார். ஆதாமும், ஏவாளும் கடவுள் சொன்னபடியே வாழ்கிறார்கள். அப்போது அங்கு வந்த ‘சாத்தான் (Satan), “நீங்கள் அந்த மரத்தின் கனிகளைச் சாப்பிடுங்கள். அந்த மரத்தின் கனிதான், அறிவைக் கொடுக்கும் கனி. அதைச் சாப்பிட்டால் நீங்கள் சாகவே மாட்டீர்கள்” என்கிறான். சாத்தானை நம்பிய ஆதாமும், ஏவாளும் அந்த மரத்தின் கனியை உண்கிறார்கள். அதை உண்டதால், அறிவையும் பெறுகிறார்கள். தாங்கள் இருவரும் அதுவரை நிர்வாணமாக இருப்பதைக் கூட, கனியை உண்டதால் பெற்ற அறிவின் மூலம்தான் உணர்கிறார்கள். அப்புறம் சாத்தானின் பேச்சைக் கேட்டு கனியை உண்டதால் ஏடன் தோட்டத்திலிருந்து கடவுளால், அவர்கள் விரட்டப்படுவது தனிக் கதை.


மேற்படி பைபிள் கதையைப் படிக்கும் கிருஸ்தவர்கள் அந்தக் கதையை எடுக்கும் விதம் வேறு. ஆனால் சிலர் எடுத்த விதமே வேறு. அதாவது ஆதாமும், ஏவாளும் அறிவைப் பெறுவது கடவுளுக்கு ஏனோ பிடிக்காமல் இருந்தது. ஆனால் சாத்தானுக்கு மனிதன் அறிவைப் பெறுவது பிடித்திருந்தது. சாத்தான் மனிதர்களுக்கு உதவி செய்தான். அவன் சொன்னது போல, ஆதாமும், ஏவாளும் அறிவைப் பெற்றார்கள். அத்துடன் அவர்கள் சாகவும் இல்லை. இன்று இந்த அளவுக்கு மனிதன் அறிவியல் வளர்ச்சியடைந்திருக்கிறான் என்றால் அது சாத்தானால்தான். இந்த இடத்தில் கடவுள் மனிதர்களுக்கு எதிராகவும், சாத்தான் ஆதரவாகவும் இருந்திருக்கிறான். அதாவது கடவுள் சாத்தான் போலவும், சாத்தான் கடவுள் போலவும் இருந்திருக்கிறார்கள். அமைதி…. அமைதி… இதை நான் சொல்லவில்லை. சிலர் சொல்கிறார்கள். அப்படிச் சொல்பவர்கள் யாரென்று தெரிய வேண்டுமல்லவா? சொல்கிறேன்!

சாத்தானை வழிபடுபவர்களை ‘லூசிபேரியன்’ (Luciferien) என்பார்கள். ஏன் தெரியுமா? நாம் சாத்தான் என்று சொல்பவன் உண்மையில் கடவுளுடன் இருந்த ஒரு ஏஞ்சல் (Angel). அவன் பெயர் லூசிபெர் (Lucifer). இவனை வெளிச்சத்தின் கடவுள் என்றும் சொல்வார்கள். அதாவது அவனும் ஒரு கடவுள்தான் என்கிறர்கள். அதனால் இந்த லூசிபெர் என்பவனைக் கடவுளாக வழிபடுகிறார்கள் அந்தச் சிலர். அவர்களைப் பொறுத்தவரை லூசிபெர் நன்மை செய்த ஒருவனே ஒழிய கெட்டவன் கிடையாது. நேர்மாறாக கடவுள்தான், மனிதர்களுக்கு, சாவீர்கள் என்ற பொய்யைச் சொல்லிப் பயமுறுத்தி அறிவு கிடைக்காமல் தீமை செய்தவர்.

இந்த லூசிபெரை வழிபடுபவர்கள்தான் உலகத்திலேயே மிக வலிமையாக இருக்கும் மேசனிக்ஸ். இவர்களின் தொடர்ச்சிதான் நியூ வேர்ல்ட் ஆர்டர் என்னும் அமைப்பு. இதை நம்புவது உங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். ‘அமெரிக்க ஜனாதிபதிகளும், உலகின் மிகமிகச் சக்தி வாய்ந்தவர்களும் அங்கத்தவர்களாக இருக்கும் மேசனிக்ஸ், நாம் சாத்தான் என்று சொல்பவனையா கடவுளாக வணங்குகிறார்கள்?’ என்னும் கேள்வி உங்களுக்கு எழுவதில் ஆச்சரியமே இல்லை. ஆனால் இதுதான் மிகவும் ஆச்சரியமான உண்மை. இவர்களே ‘புதிய உலகம்’ என்பதினூடாக அனைத்து உலக மக்களையும் ஒன்றிணைக்க விரும்புகிறார்கள். மதங்களாலும், மத உணர்வுகளாலும் ஊறிப் போன நமக்கு, இது வெறுப்பையே தரும். ஆனால் அவர்கள் சொல்வதோ வேறு. சரி, நம்ப முடியவில்லையா? இவர்களால் ‘லூசிபெர் ட்ரஸ்ட்’ (Lucifer Trust- Lucis Trust) என்ற ஒரு உதவும் ஸ்தாபனம் உருவாக்கப்பட்டு நடத்தப்படுகிறது என்று சொன்னால் நம்புவீர்களா? இந்த அமைப்பு ஐ.நா. சபையினாலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அவ்வளவு பலம். உலகம் முழுவதும் தனது கிளைகளைப் பரப்பி இருக்கிறது இது. உலகின் முதல் பணக்காரராக இருந்த ரொக்கபெல்லர் (Rockefeller), ஹென்றி கிஸ்ஸிஞ்ஞர் (Henry Kissinger) ஆகியோர் கூட இந்த ‘ட்ரஸ்ட்டில்’ இருந்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

சனிக்கிரகத்தை (Saturn) லூசிபெரின் இடமாகக் கருதுகிறார்கள் இவர்கள். Satan-Saturn என்னும் பெயர் ஒற்றுமையையும் இங்கு நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளலாம். உலகத்தில் எந்த மதமும், சனியை தீமைக்கான கிரகமாக எடுப்பது இதனால்தான். இந்தச் சனிக்கிரகத்தை ஆறுகோண நட்சத்திரத்தாலும், கண் ஒன்றின் வடிவத்தாலும் ஆதிகால மக்கள் குறித்து வந்திருக்கிறார்கள். அப்படி ஏன் குறித்து வந்தார்கள் என்பதற்கான காரணம் சரியாகப் புரியாவிட்டாலும், சனிக்கிரகம் அதனைச் சுற்றியிருக்கும் வளையத்தினால் கண் போன்ற அமைப்பைக் கொண்டிருப்பதால் அப்படிக் குறிப்பிட்டிருக்கலாம் என நம்பப்பட்டது.


சனிக்கிரகத்தின் அடையாளமாக இந்த ஆறுகோண நட்சத்திர அமைப்பையும், கண்ணையும் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சுமேரியர்களே அவதானித்துச் சொல்லியிருக்கிறார்கள். எப்படி இவர்கள் வெறும் கண்ணால் இதை அவதானித்தார்கள் என்ற ஆச்சரியம் எப்போதும் இருந்தது. ஆனால் இதற்கு மிகச் சமீபத்தில் விடை கிடைத்தது. நாஸாவினால் சனிக்கிரகத்தை ஆராய என அனுப்பப்பட்ட ‘காஸ்ஸினி’ (Cassini) என்னும் விண்கலம், சனிக்கிரகத்தைப் பலவிதங்களில், பல கோணங்களில் படங்களாக எடுத்து அனுப்பியது. அப்படி அது அனுப்பிய படங்களில், குறிப்பிட்ட இரண்டு படங்களைப் பார்த்து உலகமே பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு வந்தது. “ஐயோ! இப்படியும் இருக்குமா? இதை எப்படி எமது மூதாதையர்கள் அறிந்திருந்தார்கள்? ” என்ற ஆச்சரியமும் வந்தது. நமது மூதாதையர்களின் அறிவைப் பற்றிய சந்தேகம் மேலும் அதனால் அதிகரிக்கவும் தொடங்கியது. சனிக்கிரகத்தின் வட துருவத்தையும், தென் துருவத்தையும் காஸ்ஸினி எடுத்த படங்களை நீங்களே பாருங்கள்.
கேத்திர கணிதத்தின் மூலம் மிகச் சரியாகக் கோடு போட்டு வரைந்தது போல, ஒரு ஆறுகோண வடிவம் சனிக்கிரகத்தின் வட துருவத்தில் காணப்பட்டது. நான்கு பூமிகளைத் தன்னுள் அடக்கும் அளவுக்கு மிகப் பிரமாண்டமாக இருக்கும் அந்த ஆறுகோண வடிவம், எல்லாப் பக்கங்களும் ஒரே அளவானதாக இருப்பது போல அமைந்திருக்கிறது. அதைவிட ஆச்சரியம், தென் துருவத்தில் கண் போன்ற வடிவமும் காணப்படுவதுதான். இது எந்த வகையான மர்மம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். சனிக்கிரகத்தின் வட துருவமும், தென் துருவமும் இந்த அமைப்புகளில் இருக்கின்றன என்று எப்படி ஆதிகால மனிதர்கள் கண்டுகொண்டார்கள்? யார் இவர்களுக்கு இதைச் சொன்னார்கள்? நிச்சயமாக வெறும் கண்களால் இதைப் பார்க்கவே முடியாது. அதிகம் ஏன்? தற்போது உள்ள நவீன தொலைநோக்குக் கருவிகளால் கூட அதை அவதானிக்க முடியாது. காரணம், இவை இரண்டும் அமைந்திருப்பது, நமது காட்சிகளிலிருந்து விலகிய துருவப் பகுதிகளில்.

சனிக்கிரகத்தில் மட்டுமல்ல, மேசனிக்ஸ் என்னும் ஆதிக்க சக்தியினால் இந்தக் கண்ணும், ஆறு கோணமும், பிரமிட்டும் அடையாளங்களாகவும், சின்னங்களாகவும் உலகெங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. அவை எங்கே யார் யாரால் சின்னங்களாக பாவிக்கப்படுகின்றன என்பதை இங்கு நான் சொல்வது நன்றாக இருக்காது என்பதால், அவற்றை இணையம் மூலம் பார்க்கும் சந்தர்ப்பத்தை உங்களுக்கே அளிக்கிறேன். அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளின் பிரபல கம்பெனிகளில் பல இவற்றை அடையாளங்களாக வைத்திருக்கின்றன.

மாயன்களின் பிரமிட்டை அடையாளமாக வைத்து மிகப்பெரும் வளர்ச்சியை அடைந்த ஐரோப்பியர்கள், மாயன்களின் அறிவின் அடையாளங்கள் அழியவும் காரணமாக இருந்தார்கள் என்பதுதான் கசப்பான வரலாறு. மாயன்களின் அறிவுசார் சாட்சியங்கள் அனைத்துமே ஐரோப்பியர்களால் அழிக்கப்பட்டன. அப்படி அழிந்தவற்றில் எஞ்சியவை மிக மிகச் சொற்பமே! அந்தச் சொற்பத்திலேயே இவ்வளவு ஆச்சரியங்கள் மாயன்கள் மூலம் எமக்குக் கிடைத்திருக்கின்றன என்றால், அவை அழிக்கப்படாமல் முழுவதும் கிடைத்திருந்தால், என்ன என்ன அதிசயங்கள் எல்லாம் எமக்குக் கிடைத்திருக்குமோ….?

மாயன்களின் அறிவின் அடையாளமாக என்னதான் அழிந்தது? அவற்றை யார் அழித்தார்கள்? எஞ்சியவை என்ன? இந்தக் கேள்விகளின் விடைகளுடன் அடுத்த தொடரில் சந்திப்போம்.

அடுத்த தொடரில் சந்திக்கும் வரை, மேசனிக்ஸின், ‘பிரமிட் கண்கள்’ உலகெங்கும் உள்ள சமய வழிபாட்டுத் தலங்களில் ஊடுருவியிருப்பதைப் படங்கள் மூலமாகப் பாருங்கள். சிலவற்றை மட்டும் தருகிறேன்.
மாயாவின் அழிவுக்குக் காரணமாக யார் இருந்தார்கள் என்ற கடந்த பகுதியின் கேள்வியுடன், மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் மீண்டும் மாயா! மாயா இனத்தவர் சொன்ன உலக அழிவைப் பற்றிப் பேசும் நாம், மாயாக்கள் பற்றிய சரித்திரத்தை சிறிதளவேனும் அறிந்திருக்க வேண்டும் அல்லவா. அறிவியல், கணிதம், கட்டடக் கலை, வானியல், விவசாயம், சித்திரம், சிற்பம் என்னும் பன்முகத் திறமை பெற்றிருந்த மாயன் இனத்தவருக்கு, இன்னுமொரு ஆச்சரியமான ஒரு முகமும் இருந்திருக்கிறது. அது யாருமே ரசிக்க முடியாத, சகிக்க முடியாத ஒரு முகமாகவும் இருந்திருக்கிறது. மாயன்களிடம் இதுவரை நாம் பார்த்த முகங்கள் எல்லாமே நல்ல முகங்கள். ஆனால் அந்த மற்ற முகமோ மிகக் கொடுமையானது, கொடூரமானது.


மாயன் இனத்தவர்கள் கடவுள் பக்தி மிகவும் அதிகம் உள்ளவர்கள். அவர்களின் அதிகப்படியான கடவுள் பக்தியே, அவர்களைக் காட்டுமிராண்டிகள் எனப் பார்க்கும்படி வைத்தது. உலகில் இருக்கும் அனைத்து மதங்களிலும் காணிக்கை செலுத்தும் பழக்கம் இருந்து வந்தது, இன்றும் இருந்து வருகிறது. ஆனால், மாயன்கள் கடவுளுக்குச் செலுத்திய காணிக்கை கொஞ்சம் வித்தியாசமானவை. அது என்ன தெரியுமா…? மனிதர்களின் தலைகளும், இருதயங்களும்தான்.

உயிருடன் இருக்கும் ஒரு மனிதனை, ஒரு பீடத்தில் படுக்க வைத்து, அவன் இருதயத்தை நோக்கிக் கத்தியைச் செலுத்தி, இருதயத்தை வெளியே எடுத்துக் கடவுளுக்கு அர்ப்பணிப்பதும், ஒரே வெட்டாகத் தலையைத் துண்டிப்பதும் மாயன்களின் வெகு சாதாரணமான ஒரு வழிபாட்டுமுறை. மாயன்கள், இந்து மதத்தைப் போலவே, பல கடவுள்களை வணங்கும் வழக்கம் கொண்டவர்கள். சிலை வணக்கமும் அவர்களிடம் இருந்தது.

அவர்கள் வணங்கும் கடவுள்களில், முக்கியமான கடவுள்களுக்காகப் பல பிரமிடுகளையும் கட்டியிருந்தார்கள். அப்படிக் கட்டப்பட்ட பிரமிடுகளின் உச்சிகளில்தான் கடவுள் தொழுகை நடக்கும். அங்குதான் பலிகொடுக்கும் மனிதர்களைக் கொண்டு சென்று, அவர்களை உச்சியில் உள்ள பீடத்தில் படுக்க வைத்து……… கூரிய வாளால் கழுத்தில் ஒரே போடு………..! வெட்டப்பட்ட தலை பிரமிடின் உச்சியிலிருந்து படிகள் வழியே உருண்டபடி கீழே விழும்.


“இவ்வளவு நாளும் மிக நாகரீகம் உள்ளவர்களாக, அறிவாளிகள் போலப் பார்க்கப்பட்ட மாயாக்கள் இப்படி ஒரு காட்டுமிராண்டிகளா?” என நீங்கள் இப்போது முகம் சுழிப்பீர்கள். அதில் ஆச்சரியம் ஏதுமில்லை. நாகரீகத்தில் வளர்ந்த நாம் அதைக் கற்பனைகூடப் பண்ண முடியாது என்பதால் முகஞ்சுழிக்கிறோம். ஆனால் இந்த நரபலி முறை அந்தக் காலத்தில் எல்லா மதங்களிலும் இருந்திருக்கிறது. எங்கள் இந்து மதத்திலும் இருந்திருக்கிறது. போருக்குச் செல்லும்போது ஒவ்வொரு அரசனும், தன் போர் வீரன் ஒருவனை நரபலியாக கொடுத்துவிட்டே சென்றிருக்கிறான் என்பது வரலாறு. சாக்தம், பைரவம் என்னும் இந்து மதப் பிரிவு மதங்களில்,

இந்த நரபலி அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ‘கால பைரவன்’ என்பவரே நரபலி கேட்பவர்தான். அதிகம் ஏன், இன்றும் கூட காசியில், கங்கை ஆற்றங்கரைக்கு அருகில் தவம் செய்யும் ‘அகோரிகள்’, எரியும் பிணத்தை உண்ணுவது உண்டு. சமீபத்தில் ‘நான் கடவுள்’ என்னும் படத்தில், நடிகர் ஆர்யா கூட ஒரு அகோரியாகத்தான் வருகிறார். இதைச் சொல்வதால் நரபலியை நான் நியாயப்படுத்துவதாக அர்த்தம் கிடையாது. ஆதிகாலத்தில் இது தப்பான ஒரு விசயமாக கருதப்படவில்லை என்பதையும், தெய்வீகமான ஒன்றாகத்தான் பார்க்கப்படது என்பதையுமே சொல்ல வருகிறேன். இதில் மாயன்களும் விதிவிலக்காக இருக்கவில்லை.


“அட..! அப்படியென்றால் இந்து மதமும், மாயாக்களும் மட்டுமே நரபலியைக் கொடுப்பவர்களா?” என்று நீங்கள் கேட்டால், “அப்படி இல்லை. இது அனைத்து மதங்களிலும் இருந்திருக்கிறது” என்றே பதில் சொல்ல வேண்டும். கிருஸ்தவ, முஸ்லிம், யூத மதங்களுக்குச் சொந்தமான வேதங்களிலும் இந்த நரபலி இருந்திருக்கிறது. தீர்க்கதரிசியான ஆபிரகாம், அவரது மகனான ஈசாக்கை கடவுளுக்குப் பலி கொடுக்க மலையுச்சிக்கு அழைத்துப் போனதும், பலி கொடுக்கப் போகும் கடைசிக் கணத்தில் கடவுள் அதைத் தடுத்ததும் வேதத்தில் இருக்கிறது. யூத, கிருஸ்தவ, இஸ்லாம் மதங்களின் வரலாறுகளிலும் நரபலியின் அடையாளங்கள் இருந்திருக்கின்றன.


ஆனாலும் மத ரீதியாக எங்கள் மூதாதையர்கள் நரபலி கொடுத்த போது, தெய்வீகமாகப் பார்க்கப்பட்டு அலட்சியம் செய்யப்பட்டது, மாயன்கள் செய்த போது கொடுமையாகப் பார்க்கப்பட்டது. அதுவே அவர்களின் வரலாறு அழிவதற்கும் காரணமாகியது. இந்தக் காரணம் ஆராயப்பட வேண்டிய ஒன்று. மாயனை, மாயன் கலாச்சாரத்தை, மாயன் மதங்களை என அனைத்தையும் அழிக்க, மேற்படி ஒரு மனநிலை திட்டமிட்டே விதைக்கப்பட்டது. மாயன் என்றாலே மிகவும் கொடூரமானவர்கள் என்னும் அபிப்பிராயம் ஆதிகாலத்தில் இருந்தே புகுத்தப்பட்டது. இப்படி ஏன் புகுத்த வேண்டும் என்று ஆராய்வதற்கு முன்னர், நாம் ஒரு ஹாலிவுட் ஆங்கிலத் திரைப்படம் பற்றிப் பார்க்க வேண்டும்.

2006ம் ஆண்டு ‘மெல் கிப்சன்’ (Mel Gibson) என்பவரால் ‘அபோகலிப்டோ’ (Apocalypto) என்னும் ஹாலிவுட் திரைப்படம் வெளியிடப்பட்டது. மிகவும் பரபரப்பாகவும், வெற்றிகரமாகவும் ஒடிய அந்தப் படம், மாயன் என்னும் இனத்தவர்கள் உலக மகாக் கொடியவர்கள் எனச் சொல்லியது. அந்தப் படத்தைப் பார்த்தவர்கள் எவரும் மாயன் இனத்தவர் மேல், அவர்கள் எவ்வளவுதான் புத்திசாலிகளாக இருந்திருந்தாலும், மதிப்புக் கொள்ள மாட்டார்கள். மாயன் இனம் அழிக்கப்பட வேண்டிய இனம்தான் என நினைப்பார்கள். அவ்வளவு மோசமாக ‘அபோகலிப்டோ’ படத்தில் மாயன்கள் சித்தரிக்கப்பட்டார்கள். அதாவது, மாயன்களின் கலாச்சார அழிவுக்கு யார் காரணமாக இருந்திருந்தாலும், அவர்கள் மேல் எமக்குச் சிறிதேனும் கோபம் வராது. இதுவே மெல் கிப்சனின் உள்மன நோக்கமாகவும் இருந்தது. “மெல் கிப்சன் அந்தப் படத்தில் அப்படி எதுவுமே செய்யவில்லையே? அவர் வெளியிட்டது ஒரு மிக நல்லதொரு படமாச்சே!” என நீங்கள் நினைக்கலாம்
உண்மைதான்! ‘அபோகலிப்டோ’ என்னும் படம், சாதாரணமாகப் பார்க்கும் போது மிக நல்லதொரு படம்தான். ஆனால், அதில் உள்ள நுண்ணரசியலை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அது பற்றி மேலும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், மெல் கிப்சன், 2004ம் ஆண்டில் வெளியிட்ட இன்னுமொரு படமான ‘த பாசன் ஆஃப் த கிரைஸ்ட்’ (The Passion of the Christ) படத்தையும் பார்த்திருக்க வேண்டும். ‘த பாசன் ஆஃப் த கிறைஸ்ட்’ படம் ஏன் மெல் கிப்சனால் எடுக்கப்பட்டது என்பதையும் நீங்கள் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்.


யேசுநாதரின் சரித்திரத்தைச் சொல்கிறேன் பேர்வழி என்றே இந்தப் படத்தை எடுத்திருந்தார் மெல் கிப்சன். ஆனால் யூதர்கள், யேசுநாதரை எப்படி, எப்படி எல்லாம் சித்திரவதை செய்து கொன்றார்கள் என்பதே இப்படத்தில் மிக முக்கிய பகுதியாக அமைக்கப்பட்டது. படத்தின் காட்சி வடிவங்களை மிகவும் அதிர்ச்சிகரமாக உருவாக்கியிருந்தார். படத்தைப் பார்த்த அனைவரின் அடிவயிறே கலங்கும் வண்ணமாக காட்சிகள் அமைந்திருந்தன. இதனால், பலதரப்பினரிடமிருந்து கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டது அந்தப் படம்.
முடிந்தால் ‘த பாசன் ஆஃப் த கிரைஸ்ட்’ படத்தைப் பாருங்கள். உங்களால் பல காட்சிகளைக் காண முடியாத அளவிற்கு கொடூரமாகக் காட்சிகள் இருக்கும். யேசுவின் சரித்திரம் இதுவரை இப்படிச் சொல்லப்பட்டதே இல்லை. படத்தைப் பார்க்கும் உங்களுக்கு, யேசுநாதரைச் சித்திரவதை செய்தவர்கள் மேல் இனந் தெரியாத வெறுப்பும், கோபமும் உருவாகும். மெல் கிப்சனுக்கு வேண்டியதும் அதுதானோ என்ற சந்தேம் பலருக்கு எழுந்தது. தனது படங்களின் மூலம், பார்ப்பவர்கள் ஒரு இனத்தில் மொத்தமாக வெறுப்படைய வேண்டும், கோபப்பட வேண்டும் என்பதுதான் அவரின் நோக்கமோ, என விமர்சகர்களை நினைக்க வைத்தது.

அதில் உண்மையும் கூட இருக்கலாம். மெல் கிப்சன் அடிப்படையில், மிகத் தீவிரமான பழமைவாத கிருஸ்தவ மதவாதி. பழமைவாத கிருஸ்தவ மதத்தை நிலைநிறுத்த, எந்த விதமான படங்களை எடுக்கலாம் என்பதில் அவர் ஒரு ‘டாக்டர்’ பட்டமே பெற்றவர் போல சிந்திப்பார் என்கிறார்கள். இந்த மெல் கிப்சன் என்பவர் ஒரு ஹாலிவுட் நடிகர். ஆனால் அவர் வெளியிட்ட மேற்படி இரண்டு படங்களையும் தானே தயாரித்தும், இயக்கியும் வெளியிட்டிருந்தார். ஆனால் நடிக்கவில்லை.


தயவுசெய்து இனி நான் சொல்லும், சொல்லப் போகும் கருத்துகளை மதம், நம்பிக்கை என்னும் இடங்களிலிருந்து பார்க்காமல், எட்ட இருந்து பாருங்கள். அப்படிப் பார்த்தால், பல உண்மைகளைத் தொலைத்துவிடுவீர்கள். யேசுநாதரின் வரலாற்றைப் படமாக எடுத்த மெல் கிப்சன், ஏன் மாயனின் வரலாற்றை மையப்படுத்தி படம் எடுக்க வேண்டும்? ‘அபோகலிப்டோ’ என்னும் படத்தின் மூலம், மெல் கிப்சன் யாரைக் காப்பாற்ற நினைக்கிறார்? மாயன் இனத்திற்கும், மெல் கிப்சனுக்கும், கிருஸ்தவ மதத்துக்கும் என்ன சம்பந்தம்? இங்கு ஏன் தேவையில்லாமல் கிருஸ்தவ மதத்தை நான் இழுக்க வேண்டும்?’ என்ற கேள்விகளுக்குப் பதில்களை மாயன் கலாச்சாரம் அழிக்கப்பட்ட சரித்திரத்துடன் நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும்.
எல்லாவறையும் விளக்கமாகச் சொல்கிறேன்…….!

பாகம் 12