Monday, November 26, 2012

யாசிர் அராபாத்தின் உடல் வெளியே எடுக்கப்படுகிறது!

யாசிர் அராபாத்தின் உடல் வெளியே எடுக்கப்படுகிறது! விஷம் வைத்து கொலை சந்தேகம்!! - Photo Essay



பாலஸ்தீன தலைவர் யாசிர் அராபாத்தின் புதைக்கப்பட்ட உடல், வரும் செவ்வாய்க்கிழமை மருத்துவ சோதனைக்காக வெளியே எடுக்கப்படுகிறது. விஷம் கொடுக்கப்பட்டதால் அவர் மரணமடைந்தார் என்ற குட்டச்சாட்டு உண்மையா என ஆராய்வதே இதன் நோக்கம்.

கடந்த 2004-ம் ஆண்டு நவம்பரில் பாலஸ்தீன தலைவர் யாசிர் அராபாத் மரணமடைந்தார். திடீரென உடல்நலம் குன்றிய அவர், மருத்துவ சிகிச்சைக்காக பிரான்ஸ் கொண்டுசெல்லப்பட்டு, அங்குள்ள ராணுவ வைத்தியசாலை ஒன்றில் உயிரிழந்தார். ஆரோக்கியமாக இருந்த அவருக்கு திடீரென உடல்நலம் குன்றியது எப்படி என்று பலரும் சந்தேகம் எழுப்பினர்.

அராபாத்துக்கு விஷம் வைக்கப்பட்டது எனவும், இஸ்ரேலிய உளவுத்துறையால் செய்யப்பட்ட சதிச் செயல் எனவும், பாலஸ்தீனியர்களில் பெரும்பாலானோர் நம்புகின்றனர். அராபாத்தின் மனைவி சுஹா அராபாத், மகள் ஸாவ்ரா ஆகியோரும் அதே குற்றச்சாட்டை சொல்கின்றனர்.

இந்தக் குற்றச்சாட்டை இஸ்ரேல் மறுத்திருக்கிறது. அராபாத் மரணத்துக்கும் தமக்கும் எந்த தொடர்பும் கிடையாது என இஸ்ரேலிய உளவுத்துறையும் கூறியது.

இந்த வருட தொடக்கத்தில், இந்த குற்றச்சாட்டு மீண்டும் சூடு பிடித்தது. காரணம், இறந்துபோன அராபாத் அணிந்திருந்த ஆடைகளை சோதனை செய்தபோது, அதில் ஆபத்தான் கதிர்வீச்சு பொருளின் பயோலாஜிகல் துணுக்குகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, அராபாத் கதிர்வீச்சு பொருள் ஒன்றின் மூலம் உடல்நலம் குன்ற வைக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் தொடங்கப்பட்டன.

இந்த விசாரணைக்காக, புதைக்கப்பட்ட அரபாத்தின் உடலை வெளியே எடுத்து, அவரது எலும்புகள் சோதனையிடப்பட அனுமதி கோரப்பட்டது. தற்போது, அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வரும் செவ்வாய்க்கிழமை, அராபாத்தின் உடல் வெளியே எடுக்கப்பட்டு, அவரது எலும்புகளில் சோதனை செய்யப்பட்டபின், மீண்டும் ராணுவ மரியாதையுடன் புதைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இரண்டாவது ராணுவ மரியாதை அடக்கத்துக்கு, பொதுமக்கள் யாருக்கும் அனுமதி கிடையாது.

மேலேயுள்ள போட்டோவில், திடீரென உடல்நலம் குன்றிய அராபாத், மருத்துவ சிகிச்சைக்காக பிரான்ஸ் செல்ல தயாராவதைப் பாருங்கள்.

அராபாத் பாரிஸ் செல்வதற்காக விமானம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அவர் இருந்த இடத்தில் அந்த விமானம் வந்து இறங்குவதற்கு தகுந்த ரன்வே இல்லாத காரணத்தால், விமானம் ஜோர்தான் தலைநகர் அமான் விமான நிலையத்துக்கு வந்தது. அவரை அமான் வரை கொண்டுசெல்ல, ஜோர்தான் அரசு தமது ராணுவ ஹெலிகாப்டர் ஒன்றை அனுப்பி வைத்தது.

கீழேயுள்ள போட்டோவில், ஹெலிகாப்டர் வந்து விட்ட தகவல் கூறப்பட்டவுடன், பயணம் செய்ய கிளம்பும் அராபாத், தனது மனைவி சுஹா அராபாத்துடன்.






 கீழேயுள்ள போட்டோவில், ஜோர்தானிய ஹெலிகாப்டரில் ஏறிய அராபாத், தனது ஆதரவாளர்களுக்கு கையைசைத்து விடைபெறும் காட்சி. 2004-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி ஆரம்பித்த இந்தப் பயணம்தான் அவரது இறுதிப் பயணமாக இருக்கப்போகிறது என அப்போது யாருக்கும் தெரியாது.

அவர் சிகிச்சை முடித்துக்கொண்டு திரும்புவார் எனவே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவரது இறந்த உடல்தான் திரும்பி வந்தது.






கீழேயுள்ள போட்டோவில், ஜோர்தானில் காத்திருந்த பிரத்தியேக விமானத்துக்குள் அராபாத்தும், அவரை அழைத்துச் செல்ல வந்த பிரான்ஸ் மருத்துவக் குழுவும். தமக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளது என்றோ, அல்லது உயிர் பிரியப்போகிறது என்றோ எந்த சந்தேகமும் இல்லாமல், சிரித்த முகத்துடன் அவர் பயணம் செய்வதைப் பாருங்கள்.






அராபாத் பிரான்ஸில் உள்ள ராணுவ வைத்தியசாலை ஒன்றில் உயிரிழந்தபின், ராணுவ மரியாதையுடன் அவரது உடல் அனுப்பி வைக்கப்படுவதை கீழேயுள்ள போட்டோவில் காணலாம்.





2004-ம் ஆண்டு நவம்பர் 12-ம் தேதி, அராபாத்தின் இறுதிச் சடங்குகளுக்காக அவரது உடல் ரமல்லா கொண்டுவரப்பட்டபோது, அவரது ஆதரவாளர்கள் திரண்டிருப்பதை கீழேயுள்ள போட்டோவில் பாருங்கள்.





அராபாத்தின் மனைவி சுஹா அராபாத், மகள் ஸாவ்ரா ஆகியோரும் அராபாத் விஷம் வைத்து கொல்லப்பட்டார் என்ற குற்றச்சாட்டை சொல்கின்றனர். அவரது உடலை மீண்டும் வெளியே எடுத்து சோதனை செய்யப்படுவதை வரவேற்றிருக்கிறார்கள் இவர்கள். சுவிட்சலாந்து மற்றும் ரஷ்ய நிபுணர்கள் அராபாத்தின் எலும்புகளில் சோதனை செய்வார்கள் என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!