Monday, November 5, 2012

நிலம் புயல் தாக்குதல் 3655 மரங்கள் சாய்ந்தன 1125 மின்கம்பங்கள் சேதம்

நிலம் புயல் தாக்குதல் 3655 மரங்கள் சாய்ந்தன 1125 மின்கம்பங்கள் சேதம்






வங்கக் கடலில் உருவான ‘நிலம்‘ புயல் நேற்று முன்தினம் இரவு மாமல்லபுரத்தில் கரையை கடந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாமல்லபுரம், கல்பாக்கம், திருப்போரூர், கோவளம், கேளம்பாக்கம், கடப்பாக்கம் மற்றும் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் நெம்மேலி, புதுகல்பாக்கம், புதுப்பட்டினம், உய்யாலிக்குப்பம் போன்ற பகுதிகளில் 22 புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் பள்ளிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உணவு மற்றும் கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தன. புயல் கரையை கடந்தபோது மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். சாலை, பஸ் நிலையம் மற்றும் முக்கிய இடங்கள் வெறிச்சோடின. மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், திருப்போரூர் போன்ற பகுதிகளில் 24 அடி உயரம் கொண்ட 660 மின் கம்பங்களும், 30 அடி உயரமுள்ள 250 மின் கம்பங்களும், உத்திரமேரூர் பகுதிகளில் 35 மின் கம்பங்கள் உள்பட மாவட்டத்தின் மற்ற பகுதிகளையும் சேர்த்து 1125 மின் கம்பங்கள் சேதம் அடைந்தன. 3655 மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் போக்குவரத்து முடங்கியது.

தீயணைப்பு படையினர், போலீசார் உதவியுடன் தானியங்கி மரம் அறுக்கும் இயந்திரம் மூலம் மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டது. 16 டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைந்துள்ளது. 45 இடங்களில் குறைந்த மின்னழுத்த வயர்கள், 15 இடங்களில் உயரழுத்த மின் வயர்கள் அறுந்தன.
உத்திரமேரூர் பகுதியில் சுமார் 50 ஏக்கர் நெல்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. காஞ்சிபுரம், திருக்கழுக்குன்றம் பகுதிகளில் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியது. பயிர்கள் சேதம் அடைந்தன. இதனால் அனைத்து தரப்பினரும் வெகுவாக பாதிக்கப்பட்டனர். காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் மூலம் 3125 புதிய டூவீலர்கள் வந்திறங்கியது. இதில், புளிய மரம் சாய்ந்து விழுந்ததில் லி30 லட்சம் மதிப்பிலான 50 பைக்குகள் நொறுங்கியது. மாவட்டம் முழுவதும் 1899 கிராமங்கள் இருளில் மூழ்கின. கோவளத்தில் இருந்து கடப்பாக்கம் வரையில் 52 மீனவ கிராமங்களில் உள்ள படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதம் அடைந்தன.
மாவட்ட எஸ்பி மனோகரன், செங்கல்பட்டு ஆர்டிஓ செல்லப்பா, மாமல்லபுரம் டிஎஸ்பி கணேசன், திருக்கழுக்குன்றம் தாசில் தார் ஜஹாங்கீர் மற்றும் தீயணைப்பு மற்றும் மின்சார வாரிய அதிகாரிகள் மாமல்லபுரம் பகுதியில் முகாமிட்டிருந்தனர். புயல் சேத விவரங்களை கணக் கிட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளனர்
.
மாவட்டத்தின் முக்கிய நீர்பாசன ஏரிகளின் நீர்வரத்து விவரம்:

தாமல் கொள்ளளவு 18.6 அடி இருப்பு 3.6 அடி. தென்னேரி கொள்ளளவு 18 இருப்பு 8 அடி. மானாமதி கொள்ளளவு 14 இருப்பு 13. கொண்டங்கி கொள்ளளவு 16 இருப்பு 11. சிறுதாவூர் கொள்ளளவு 13.5 இருப்பு 11. தையூர் கொள்ளளவு 13.5 இருப்பு 13 மதுராந்தகம் கொள்ளளவு 21.3 இருப்பு 15.7 ஸ்ரீபெரும்புதூர் கொள்ளளவு 17 இருப்பு 6, பிள்ளைப்பாக்கம் கொள்ளளவு 13 இருப்பு 3.6, கொளவாய் கொள்ளளவு 15 இருப்பு 12, மணிமங்கலம் கொள்ளளவு 18.5 இருப்பு 5, பொன்விளைந்தகளத்தூர் கொள்ளளவு 15 இருப்பு 9.6, காயார் கொள்ளளவு 15 இருப்பு 11, பல்லவன்குளம் கொள்ளளவு 15 இருப்பு 4.6, உத்திரமேரூர் கொள்ளளவு 15 இருப்பு 4.6, பாலூர் கொள்ளளவு 15 இருப்பு 4.6 ஏரிகளில் குறைந்தளவே நீர் உள்ளன.

ஏரிகள் நிரம்பின
மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 912 ஏரிகள் உள்ளன. இதில் 43 சிறிய ஏரிகள் 100 சதவீதமும், 73 ஏரிகள் 75 சதவீதமும், 366 ஏரிகள் 50 சத
வீதத்துக்கும், 430 ஏரிகள் 50 சதவீதத்துக்கு கீழேயும் நிரம்பியுள்ளன.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!