Monday, January 14, 2013

பக்தர்கள் பார்க்க வசதியாக ஏழுமலையான் ஆபரணங்கள் மியூசியத்தில் வைக்க ஏற்பாடு

பக்தர்கள் பார்க்க வசதியாக ஏழுமலையான் ஆபரணங்கள் மியூசியத்தில் வைக்க ஏற்பாடு





திருப்பதி ஏழுமலையான் சுவாமிக்கு அணிவிக்கப்பட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால ஆபரணங்கள் பக்தர்கள் பார்வையிடும் வகையில் திருமலை மியூசியத்தில் வைக்கப்பட உள்ளது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் சுப்பிரமணியம் அளித்த பேட்டி:  திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் கடந்த 1952 முதல் சுவாமிக்கு பயன்படுத்தி வரும் ஆபரணங்கள், பயன்படுத்தாத ஆபரணங்கள், நாணயங்கள் என அனைத்தையும் தேவஸ்தான கருவூலத்தில் வைத்து பத்திரமாக பாதுகாத்து வருகிறது. இவற்றில் காணிக்கை உண்டியலில் செலுத்தப்பட்ட பழங்கால புராண வரலாற்று நாணயங்கள் 10 டன் வரை உள்ளது.

இவற்றை மூத்த பேராசிரியர்கள் மற்றும் தொல்லியியல் துறை அதிகாரிகளுடன் இணைந்து வருங்கால இளம் தலைமுறையினர் சுவாமி மீது பக்தியோடு, அவை எந்த காலத்தில் இருந்து எந்தெந்த நாடுகளில் இருந்து உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டது என்பதையும் நாணயங்களின் வரலாற்றையும் தெரிந்து கொள்ளக்கூடிய வகையில் ஆராய்ச்சி செய்து ஆங்கிலத்தில் தயாரான புத்தகத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி திருப்பதியில் சமீபத்தில் நடந்த விழாவில் வெளியிட்டார்.

மேலும் சுவாமிக்கு பயன்படுத்தப்பட்ட மற்றும் நன்கொடையாக வழங்கப்பட்ட தங்க வளையல், கடயம் உள்ளிட்ட 250 வகையான ஆபரணங்கள், கிருஷ்ணதேவராயர் காலம் முதல் 1000 ஆண்டுகள் பழமையான சுவாமிக்கு பயன்படுத்தப்பட்ட மற்றும் பயன்படுத்தாத ஆபரணங் களை பக்தர்கள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் திருமலையில் உள்ள எஸ்.வி. மியூசியத்தில் வைக்கப்பட உள்ளது. மியூசியத்தினுள் சென்றாலே குறைந்தது 4 மணி நேரமாவது ஆபரணங்களை பார்வையிட்டு அவை பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன என்றார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!