Friday, January 18, 2013

மதுரை மல்லிக்கு ''புவிசார் குறியீடு''

மதுரை மல்லிக்கு ''புவிசார் குறியீடு''



குண்டு குண்டாக பால் வெண்மை கலந்த தூக்கல் வாசனை கொண்ட மதுரை மல்லிகைப் பூவிற்கு மத்திய அரசின் அறிவுசார் சொத்துரிமைக் கழகம் ''புவிசார் குறியீடு'' அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. ''புவிசார் குறியீடு'' தமிழகத்தில் மலருக்கு என முதல் முறையாக மதுரை மல்லிக்கு தற்போது கிடைத்திருக்கிறது. மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மதுரை மல்லி விவசாயிகள் சங்கத்தினர் மதுரை வேளாண்மைக் கல்லூரி, தானம் அறக்கட்டளை உதவியில் கடந்த 2010 ஜூன் 3ல் இதற்கு விண்ணப்பித்தனர்.

மத்திய அரசின் வணிகவியல் துறையின்கீழ் இயங்கும் அறிவுசார் சொத்துரிமைக் கழகம் 27 மாதங் களுக்குப் பிறகு கடந்த செப்டம்பரில் மதுரை மல்லிக்கு இக்குறியீடு வழங்க முடிவு எடுத்தது. தனது 45ம் இதழில் இதற்கான அறிவிப்பை அப்போது வெளியிட்டது. இதற்கு எதிர்கருத்துக்கள் இருப்பின் அது குறித்து தெரிவிக்க 4 மாதம் கால அவகாசமும் வழங்கியது. ஆனால், இந்த 4 மாதங்களில் மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு தருவதற்கு என எந்த ஆட்சேபக் கருத்தும் வரவில்லை. எனவே தற்போது மதுரை மல்லிக்கு ''புவிசார் குறியீடு'' அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த குறியீட்டினை 20 ஆண்டுகளுக்கு மதுரை மல்லி விவசாயிகள் பயன்படுத்தலாம். மதுரை மல்லி விவசாயிகள் சங்கத்தினரிடம் பெறும் மல்லிகையை மட்டுமே உலகளவில் ''மதுரை மல்லி'' என்றழைக்க வேண்டும். ஏற்றுமதிக்கு இக்குறியீடு உதவும். மல்லி விவசாயிகளுக்கு கூடுதல் விலை உள்ளிட்ட பலதரப்பட்ட பலன்கள் கிடைக்கும். மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளின் இந்த ''மதுரை மல்லி'' பெயரில் மற்ற பகுதி மல்லிகைப் பூவை விற்பதோ அல்லது பிற பூக்களை இதனு டன் கலப்படம் செய்வதோ தண்டனைக்குரிய குற்ற மாகும். இதற்கு 2 லட்சம் அபராதத்துடன், 5 ஆண்டு சிறைத்தண்டனை உண்டு.

மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மண்ணில் கந்தகம், கால்சியம் அதிகம். ராமநாதபுரம் மாவட்டத்தில் பதியன் (செடி)களைப் பெற்று வந்து வளர்த்தாலும் இந்த 5 மாவட்டங்களில் வளரும்போதுதான் அவை ''மதுரை மல்லி''யைத் தருகின்றன. இதே செடியை நட்டு வளர்த்தாலும் கோவை போன்ற ஊர்களில் இவ்வகை ''மதுரை மல்லி'' விளையாது.

மதுரை மல்லி விவசாயிகள் சங்கச் செயலாளர் அரவிந்தன் கூறுகையில், ''மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. மதுரை மல்லி வளர்ப்பில் இப்பகுதியில் 20ஆயிரம் விவசாயிகள் இருக்கின்றனர். 50ஆயிரம் ஏக்கர் நிலத்தில் ஆண்டுக்கு 60ஆயிரம் டன் பூக்கள் கிடைக்கின்றன. இந்த புவிசார் குறியீடு அறிவிப்பு தென்மாவட்ட விவசாயிகளுடன், தமிழக மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியளித்துள்ளதுÕ என்றார்.

''பதியனுக்கு'' புவிசார் குறியீடு 
ராமநாதபுரம் விவசாயிகள் முடிவு

மதுரை மல்லிக்கான செடிகள் ராமநாதபுரம் மாவட்டத்தின் தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், நொச்சியூரணி, தண்ணீரூற்று, செம்மமடம் எனும் 20க்கும் அதிக கிராமங்களின் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் வளர்கின்றன. தாய்ச் செடிகளை 20 ஆண்டுகள் வைத்திருக்கும் இவர்கள், கிளைத்தண்டுகளை ஒடித்தெடுத்து பாத்தி கட்டி நெருக்கமாக நட்டு மூன்றே மாதங்களில் ஒன்றரை அடி உயரம் வளர்த்து விற்பனை செய்கின்றனர்.

அடுத்த 3மாதத்திற்குள் பூக்கள் தரும் இச்செடிகளை தலா நான்கு ரூபாய்க்குள் மதுரை பகுதியினர் வாங்கி வந்து விவசாயம் செய்கின்றனர். எனினும் ராமநாதபுரம் தவிர்த்து மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வளரும் மல்லிகைப்பூக்களுக்கே தற்போது ''புவிசார் குறியீடு'' வழங்கப்பட்டிருக்கிறது. ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் தங்கள் மாவட்டத்தில் விளையும் ''பதியன்(செடி)களுக்கென தனி புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்க முடிவு எடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!