Monday, January 6, 2014

பின்லேடனை சுட்டு கொன்றதாக கூறிய வீரர், பாய்ந்து பதுங்கினார் ஹோட்டல் ருமில்!!

பின்லேடனை சுட்டு கொன்றதாக கூறிய வீரர், பாய்ந்து பதுங்கினார் ஹோட்டல் ருமில்!!




“ஒசாமா பின்லேடனை சுட்டுக் கொல்வதற்காக சென்ற அமெரிக்க நேவி சீல் (Navy SEAL) அதிரடிப்படையில் நானும் ஒருவன். பின்லேடனை சுட்டு வீழ்த்தியது எனது துப்பாக்கிதான்” இப்படி தம்மைப் பற்றி பெருமையாக கூறிக்கொண்டிருந்தஅமெரிக்கர் ஒருவர், தற்போது தலைமறைவாகியுள்ளார். இவர்மீது மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நபர் பொழுதுபோகாமல் சும்மா வீதியில் நின்ற நபரல்ல. அமெரிக்க தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றை நடத்தியவர். ஐ.நா.வின் வெளிநாட்டு பாதுகாப்பு கான்ட்ராக்ட் ஒன்றை பெற்ற நிறுவனத்தின் உரிமையாளர். ஆபிரிக்க நாடான புருண்டியில் ஐ.நா. ஆபரேஷனுக்காக வழங்கப்பட்ட இந்த பாதுகாப்பு கான்ட்ராக்ட்டின் பெறுமதி, சுமார் ஐம்பது மில்லியன் டாலர்!

இந்த நபரின் பெயர், ஏ.ஜே.டிக்கன். அமெரிக்க ராணுவத்தில் மேல் மட்டங்களுடன் நெருக்கமானவர் என தம்மை கூறிக்கொண்ட இவர், ராணுவ பயிற்சி மையம் பாணியில் அமெரிக்கா நெவாடா, கார்சன் சிட்டியில் தொடங்கினார்.



அங்கு பணியில் இணைபவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டது. (பக்கத்தில் உள்ள போட்டோவில், கார்சன் சிட்டி பயிற்சி மையத்தில் ஆயுதப் பயிற்சி வழங்குகிறார் ஏ.ஜே.டிக்கன்.)

இது ஒன்றும் அமெரிக்காவில் சட்டவிரோத செயல் அல்ல. இன்றைய தேதியில் பணம் கொழிக்கும் பிசினெஸ்களில் இதுவும் ஒன்று. காரணம் இப்போதெல்லாம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் முதல், அமெரிக்க ராணுவம் வரை வெளிநாட்டு ஆபரேஷன்களில் தனியார் பாதுகாப்பு படைகளைதான் உபயோகிக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் என்று பொதுப்படையாக கூறப்படும் துப்பாக்கி ஏந்திய நபர்களில் பலர், தனியார் பாதுகாப்பு படைகளை சேர்ந்தவர்கள்தான். இந்த கான்ட்ராக்ட்டுகள், பல மில்லியன் டாலர் பெறுமதியானவை.

அவர்களுக்கான ஆயுதப் பயிற்சி எல்லாமே, தனியார் பாதுகாப்பு நிறுவனத்தால் வழங்கப்பட்டு, ஆயுதம் கொடுத்து களத்தில் இறக்கி விடுவார்கள். சம்பளம் கொடுப்பதும், தனியார் பாதுகாப்பு நிறுவனம்தான். மொத்தமாக பல மில்லியன் டாலர் பில் போட்டு, அமெரிக்க ராணுவத்திடம் வாங்கி விடுவார்கள் நிறுவனத்தினர். ஏகப்பட்ட லாபம் அள்ளலாம்!

பொதுவாகவே, அமெரிக்க ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகளே இப்படியான நிறுவனங்களை நடத்துகின்றனர்.

இப்படியான ஒரு பாதுகாப்பு நிறுவனத்தைதான் அமெரிக்கா நெவாடா, கார்சன் சிட்டியில் தொடங்கினார் ஏ.ஜே.டிக்கன்.

நிறுவனத்தை தொடங்கி, ஆயுதப் பயிற்சி கொடுக்க பணம் வேண்டுமே.. அதற்கு எங்கே போனார் இவர்?

இரு பிரபல டாக்டர்கள் பைனான்ஸ் செய்ய முன்வந்தார்கள். “நான் அமெரிக்க சீல் அதிரடிப் படையில் இருந்து ஓய்வு பெற்றவன். அத்துடன் முன்னாள் சி.ஐ.ஏ. அதிகாரி” என்று ஏ.ஜே.டிக்கன் ‘அள்ளி விட்டதை’ நம்பி இந்த இரு டாக்டர்களும், $850,000 முதலீடு செய்தனர். நிறுவனம் இயங்க தொடங்கியது. Global Resources and Logistics என்பது, நிறுவனத்தின் பெயர்.


அமெரிக்க ராணுவ கான்ட்ராக்ட்டுகளுக்கு போகாமல் வெளிநாட்டு கான்ட்ராக்ட்டுகளை ‘பிட்’ பண்ணியது இந்த நிறுவனம். அந்த வகையில் கிடைத்ததுதான் ஐ.நா. கான்ட்ராக்ட் ஒன்று. ஆபிரிக்க நாடான புருண்டியில் ஐ.நா. தமது அமைதிப் படையை இறக்கி விட்டுள்ளது. அதில் ஒரு பகுதியாக, ஏ.ஜே.டிக்கனின் நிறுவனத்தை சேர்ந்தவர்களும் பணி புரிவதற்கான கான்ட்ராக்ட் அது.

அங்கேதான் இவரது குட்டு வெளிப்பட்டு விட்டது!

இப்படியான நிறுவனங்கள் தமக்கு கான்ட்ராக்ட் பிடித்துக் கொடுக்க மார்க்கெட்டிங் பிரதிநிதிகளை பணியில் அமர்த்துவார்கள். அப்படியான பணிக்கு வந்தவர்தான், காரொல் ராபர்ட்ஸ் என்ற பெண். கார்சன் சிட்டியில் உள்ள பயிற்சி மையத்தில் வழங்கப்பட்ட பயிற்சிகளை பார்த்த காரொல், ஏ.ஜே.டிக்கன் எடுத்து விட்ட கதைகளையும் நம்பினார்.

“ஆகா.. இந்த நிறுவனம் ராணுவ வர்த்தகத்தில் ஓகோ என்று வரக்கூடிய நிறுவனம்” என நினைத்து, பணியில் இணைந்து கொண்டார்.

நிறுவனத்துக்கு கிடைத்த முதலாவது கான்ட்ராக்ட்டை மேற்பார்வை செய்ய ஆபிரிக்க நாடான புருண்டிக்கு, ஏ.ஜே.டிக்கனுடன் போய் இறங்கினார் இந்தப் பெண்!

அதுவரைக்கும் எல்லாமே சரியாகத்தான் போனது. புருண்டி நாட்டு ஹோட்டல் அறையில்தான் நம்ம அதிரடிப்படை வீரரின் ‘வீரம்’ வெளிப்பட்டது.

இவர்கள் புருண்டி போய் இறங்கிய இரண்டாவது நாள் இரவு, இவங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் பவர்கட் ஏற்பட்டது. ரூமுக்குள் இருந்த ஏ.ஜே.டிக்கன் மிரண்டு போனார். அமெரிக்க அதிரடிப்படைக்காக பின் லேடனையே போட்டுத் தள்ளியவராக தம்மை கூறிக்கொண்ட ஏ.ஜே.டிக்கன், பவுகட் ஏற்பட்டதும், ஒவ்வொரு ரூமாக ஓடிப் பதுங்க தொடங்கினார். “ஐயோ.. இங்குள்ள தீவிரவாத அமைப்பினர் எங்களை தேடி வரலாம்.. என்ன செய்வது? எப்படி தப்புவது?” என்றெல்லாம் புலம்பவே தொடங்கி விட்டார்.

இவருடன் சென்ற காரொல் ராபர்ட்ஸ் என்ற பெண்ணுக்கு, இந்த வீரரின் பதுங்கல்லில் சந்தேகம் ஏற்பட்டு விட்டது.

“அமெரிக்க நேவி சீல் படையினருக்கு வழங்கப்படும் ராணுவ பயிற்சி, உலக அளவில் உச்சக்கட்ட பயிற்சியாக கருதப்படுகிறது. அப்படி உச்சக்கட்ட பயிற்சி பெற்றதாக கூறிக்கொள்ளும் ஆள், சாதாரண பவர்கட்டுக்கே உச்சா போகும் அளவுக்கு பதறுகிறாரே.. சம்திங் ராங்” என்று நினைத்துக்கொண்ட காரொல் ராபர்ட்ஸ், அமெரிக்கா திரும்பியதும் பல வழிகளிலும் இவரது பின்னணியை ஆராயத் தொடங்கினார்.

அப்போது தெரியவந்த விபரங்கள் அவரை அதிர வைத்தன.

“பின்லேடனை சுட்டு வீழ்த்தியது நான்தான்” என்று கூறிக்கொண்டிருந்த இவர், எந்த ஒரு காலத்திலும் அமெரிக்க நேவி சீல் படையில் இருந்தவர் அல்ல. துப்பாக்கி சுடுவதை விடுங்கள், ராணுவத்தில் ரொட்டி கூட சுட்டவரல்ல இவர் என்ற விஷயம் தெரிந்தது. 57 வயதான ஏ.ஜே.டிக்கன் இதற்குமுன் பணிபுரிந்தது எங்கே தெரியுமா? பார் ஒன்றில்! அங்கு மது பரிமாறும் நபராக இருந்திருக்கிறார்.

இந்த விவகாரம் வெளியே வந்ததும், இப்போது தலைமறைவாகி விட்டார் நம்ம அதிரடிப்படை வீரர், ஏ.ஜே.டிக்கன்.

இவரால் பயிற்சி கொடுக்கப்பட்டு, புருண்டி நாட்டிலுள்ள ஐ.நா. பாதுகாப்பு படைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களை, திருப்பி அனுப்பும் ஏற்பாடுகளை செய்ய தொடங்கி விட்டார்கள். ஏ.ஜே.டிக்கன் அலாபாமா பக்கத்தில் பதுங்கியிருப்பதாக மீடியா செய்திகள் சொல்கின்றன.

பின்லேடனை வலைவீசி தேடிப் பிடித்ததுபோல, பின்லேடனை சுட்டுக் கொண்டதாக கூறிய ஏ.ஜே.டிக்கனையும் வலைவீசி தேட வேண்டுமோ சி.ஐ.ஏ.?



No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!