Thursday, October 18, 2012

வலுக்கிறது காற்றழுத்தம் தமிழகத்தில் மழை நீடிக்கும்..!

வலுக்கிறது காற்றழுத்தம் தமிழகத்தில் மழை நீடிக்கும்..!






வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெற்று வருகிறது. இதனால் தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று, வானிலை மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கேரளா, கர்நாடகாவில் இதுவரை பெய்து வந்த தென்மேற்கு பருவமழை இன்றுடன் முடிவுக்கு வந்தது. இதற்கிடையே தென் கிழக்கு வங்கக் கடலில் நேற்று முன்தினம் மாலை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டது. அதன் காரணமாக தமிழகத்தில் நேற்று மாலை முதல் கனமழை பெய்தது. சென்னையிலும் பல இடங்களில் நேற்று இரவு முழுவதும் நல்ல மழை பெய்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 25 மிமீ மழை பெய்துள்ளது.  இந்நிலையில், தென் கிழக்கு வங்க கடலில் மையம் கொண்டு இருந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெற்று மேற்கு நோக்கி நகர்ந்து, தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி கடலோரப்பகுதியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். மற்ற இடங்களில் மிதமான மழை பெய்யும். வடகிழக்கு பருவமழையை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


முதலாம் பதிப்பு


 இலங்கை அருகே தென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை  உருவாகியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு பருவமழை முடிவுக்கு வந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் லட்சத் தீவு பகுதியில் வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி ஏற்பட்டு இரண்டு நாட்களாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்கக் கடலில் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகியுள்ளதால், தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்யும்  வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியதாவது: கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை பெய்து வந்த தென் மேற்கு பருவமழை இன்றுடன் முடிவுக்கு வந்தது. அடுத்து பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தோன்றியுள்ளன.

வழக்கமாக அக்டோபர் 20ம் தேதியில் தொடங்கும் வட கிழக்கு பருவ மழை இந்த ஆண்டும் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே தொடங்குவதற்கு வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு ஆதாரமாக  இலங்கை அருகே தென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது மெல்ல வட மேற்கு திசையில் தமிழகம் நோக்கி நகரத் தொடங்கும். அப்படி நகரும் போது தமிழக கடலோரப் பகுதியில் மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யும். 

இவ்வாறு ரமணன் கூறினார். வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்று காலை முதலே தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்துகொண்டே இருந்தது. நேற்று மாலை மழையின் அளவு அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக தென் மாவட்டங்களில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது.

அதிகபட்சமாக நேற்று பழனியில் 90 மிமீ மழை பெய்துள்ளது. பெரியபாளையம் 80 மிமீ, தாராபுரம், வால்பாறை 70 மிமீ, சூளூர், ராமநாதபுரம் 60 மிமீ, பெரியகுளம், திருவண்ணாமலை, இளையான்குடி 50 மிமீ, சத்திரப்பட்டி, பெரம்பலூர் 40 மிமீ, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, கல்லணை, தொழுதூர், பாளையங்கோட்டை, கோவை விமான நிலையம், தேனி, வேம்பாவூர், சமயபுரம், வேடச்சந்தூர், ஸ்ரீவைகுண்டம், சிதம்பரம், சேத்தியாதோப்பு, லால்குடி 30 மிமீ மழை பெய்துள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!