Thursday, October 18, 2012

சிங்கப்பூர், ஐரோப்பிய பாணியில் கொழும்பில் அதி நவீன வீதி போக்குவரத்து நடைமுறை

சிங்கப்பூர், ஐரோப்பிய பாணியில் கொழும்பில் அதி நவீன வீதி போக்குவரத்து நடைமுறை






சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகளைப் போன்று அதி நவீன வீதி போக்குவரத்து நடைமுறையை கொழும்பிலும், அதன் அயல் நகரங்களிலும் முன்னெடுக்க இலங்கையின் போக்குவரத்து அமைச்சு பாரிய திட்டங்களை வகுத்துள்ளது.
யுத்தம் முடிவுற்ற பின்னர் கொழும்பு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதனால் இத்திட்டம் அதிக முக்கியத்துவம் பெறுவதுடன் வாகன நெரிசல் விபத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக அமையு மெனவும் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்தார்.

இத்திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பிலான சாத்தியவள கற்கையினை அமைச்சு ஜய்க்கா நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுத்து வருகிறது.

அதிநவீன போக்குவரத்து திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பயிற்சிப்பட்டறை நேற்று கொழும்பு சினமன் கிரேன்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது உரையாற்றிய செயற்திட்ட குழுத் தலைவர் வாச்சி டொமகாசு, திட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஏதுவாக வீடுகளில் கருத்துக் கணிப்புகள் நடத்த தீர்மானித்திருப்பதனால், பொதுமக்கள் இதற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

இத்திட்டத்திற்கான முழுமையான செலவீனம் இன்னமும் மதிப்பிடப்படவில்லையென சுட்டிக்காட்டிய அமைச்சின் செயலாளர் கெ. தம்மிக்க பெரேரா, எதிர்வரும் 21 மாதங்களுக்குள் இத்திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படுமெனவும் கூறினார்.

கொழும்பிலும் அதன் அயல் நகரங்களிலும் அதிநவீன வீதி போக்குவரத்து முறையை ஏற்படுத்த ஜப்பானிய அரசாங்கத்தின் ஜய்க்கா நிறுவனம் நிதி உதவி மற்றும் முழுமையான ஒத்துழைப்பினை அரசாங்கத்திற்கு வழங்கி வருகிறது.

2014ஆம் ஆண்டு ஜனவரியில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. வாகன நெரிசல், வாகன தரிப்பிடத்திற்கு போதிய இடவசதியின்மை, பாதசாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினை, வீதி விபத்துக்கள், சூழல் மாசடைதல், பஸ் போக்குவரத்திலுள்ள குறைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினை களுக்கு விமோசனமாக அமையும் வகையிலேயே இத்திட்டத்தின் சாத்தியவள கற்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!