Tuesday, December 18, 2012

இலங்கை: மாத்தறையில் கொட்டிய மீன்மழை

இலங்கை: மாத்தறையில் கொட்டிய மீன்மழை



இலங்கையில் பொதுமக்களை அச்சுறுத்திய சிவப்பு மழையைத் தொடர்ந்து மீன்மழை கொட்டி ஓய்ந்திருக்கிறது.



இலங்கையின் பல பகுதிகளில் சிவப்பு மழை கொட்டி மிரட்டி வருகிறது. இந்த சிவப்பு மழை பெய்யக் கூடிய இடங்களில் நாய்கள் இறந்து போய்விடுகின்றன.



இதேபோல் நேற்றும் மாத்தறையில் சிவப்பு மழை கொட்டித் தீர்த்தது. இந்த சிவப்பு மழை கொட்டித் தீர்த்த சிறிது நேரத்தில் இன்னொரு மழை பெய்தது. அதுதான் மீன்மழை!



மாத்தறை கம்புறுபிட்டிய மாபளானையில் ருஹுனு பல்கலைக்கழகத்தின் விவசாய பிரிவு வளாகத்தினுள் இந்த மீன் மழை பெய்திருக்கிறது.



கொட்டிய மீன்களில் நன்னீரில் இருக்கக் கூடிய உங்கா மற்றும் லூலா வகை மீன்கள் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. தற்போது இந்த மீன்கள் பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.



பொதுவாக சுழற்காற்றின் போது கடல் அல்லது நன்னீர் மேலே இழுக்கப்படும் போது மீன்களும் இழுக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. சுழற்காற்றோடு மழை பெய்கின்ற போது மீன்களும் விழும். இருப்பினும் உலகம் அழியப் போகிறது, மாயன் காலண்டர், விண்கற்கள், சிவப்பு மழை என உச்சபீதியில் இருக்கும் இலங்கையருக்கு இந்த மீன் மழையும் மர்மம்தான்!

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!