Tuesday, February 26, 2013

இனி யாருமே வீட்டிலிருந்து வேலை பார்க்கக் கூடாது - யாஹூ சிஇஓ அதிரடி உத்தரவு


இனி யாருமே வீட்டிலிருந்து வேலை பார்க்கக் கூடாது - யாஹூ சிஇஓ அதிரடி உத்தரவு



யாஹூ நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான மரிசா மேயர் தனது தொடர் அதிரடி நடவடிக்கைகளால் தொடர்ந்து பரபரப்பான செய்தியாகவே இருந்து வருகிறார். தற்போது அவர் புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளார். அதாவது யாஹூ ஊழியர்கள் யாரும் இனிமேல் வீட்டிலிருந்து பணியாற்ற முடியாது, கூடாது என்பதே அந்த புதிய நடவடிக்கை.

கிட்டத்தட்ட மரணப்படுக்கையில் இருக்கிறது யாஹூ. கூகுள் விஸ்வரூபத்தின் எதிரொலியாக இன்று யாஹூவைத் தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்து, யாஹூவை தூக்கி நிறுத்தும் பணியில் மரிசா மேயர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

பணியில் அமர்ந்ததும், ஒவ்வொரு யாஹூ ஊழியருக்கும் இலவச உணவு, புத்தம் புதிய ஸ்மார்ட் போன்கள் வழங்க உத்தரவிட்டார் மேயர். ஊழியர்களைத் தட்டிக் கொடுத்த கையோடு அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகளையும் அவர் முடுக்கி விட்டார். தற்போது ஊழியர்கள் பலருக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும் வகையிலான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.

அதாவது யாஹூ ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த ஒர்க்கிங் பிரம் ஹோம், அதாவது வீட்டிலிருந்து பணியாற்றுவது என்ற சலுகையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார் மேயர்.

இனிமேல் யாரும் வீட்டிலிருந்து பணியாற்றக் கூடாது. அனைவரும் அலுவலகத்திற்கு வந்துதான் வேலை பார்க்க வேண்டும் என்று யாஹூ நிறுவனத்தின் மனித வளப் பிரிவு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து ஊழியர்களுக்கும் தகவல் தரப்பட்டுள்ளது.

ஊழியர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து வேலை செய்தால்தான் அவர்களுக்குள் நட்புறவு, தோழமையுணர்வு, புரிந்து கொண்டு செயல்படுதல், விட்டுக் கொடுத்தல் உள்ளிட்டவை ஏற்படும். இது வேலைக்கும் நல்லது, ஊழியர்களுக்கும் நல்ல அனுபவமாக இருக்கும் என்பது மேயரின் கருத்தாகும்.

 வீட்டிலிருந்து வேலை பார்ப்பது என்பது பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்குத் தரும் ஒரு சலுகையாகும். ஆனால் இதை தற்போது பல நிறுவனங்கள் ரத்து செய்ய ஆரம்பித்துள்ளன. அமெரிக்காவில் பல நிறுவனங்களில் இந்த முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது யாஹூவும் இதைக் கையில் எடுத்திருப்பது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!