Wednesday, February 27, 2013

19 1/2 மணி நேரத்தில் 740 கி.மீ. தூரம் பறந்து சாதனை படைத்த காஞ்சிபுரம் புறா

19 1/2 மணி நேரத்தில் 740 கி.மீ. தூரம் பறந்து சாதனை படைத்த காஞ்சிபுரம் புறா



ஆந்திரமாநிலத்தில் நடைபெற்ற புறா பந்தயத்தில் காஞ்சிரத்தை சேர்ந்த புறா 740 கி.மீ. வான்வெளி தூரத்தை 19.35 மணி நேரத்தில் பறந்து வந்து சாதனை படைத்துள்ளது.

காஞ்சிபுரம் ஹோமர் பீஜியன் அசோஷியேசனும், சென்னை பீஜியன் அசோஷியசனும் இணைந்து ஆந்திர மாநிலம் சிறுப்பூரில் இருந்து கடந்த 23ம் தேதி புறா பந்தையத்தை நடத்தின. இதில் மொத்தம் 11 புறாக்கள் பந்தயத்தில் கலந்து கொண்டன. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த லோகநாதனின் 2 புறாக்களும் போட்டியில் பங்கேற்றன.

பிப்ரவரி 23-ம் தேதி காலை 9.15 மணிக்கு புறாக்கள் பறக்க விடப்பட்டன. இந்த நிலையில் லோகநாதனின் புறா பிப்ரவரி 24-ம் தேதி மாலை 4.30 மணிக்கு அதாவது 19.35 நிமிடத்தில் (மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை கணக்கில் சேர்க்கப்படவில்லை) 740 கி.மீ. வான்வெளி தூரம் பறந்து வந்து முதல் பரிசைத் தட்டிச் சென்றது.

இது குறித்து லோகநாதன் கூறியது: கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக புறாக்கள் வளர்த்து வருகிறேன். கடந்த 5 ஆண்டுகளாக நான் வளர்த்து வரும் புறாக்களை பந்தயத்தில் பறக்கவிட்டு வருகிறேன். இப்போது சாதித்த புறா கடந்த ஆண்டு ஆந்திர மாநிலம் வாராங்கல் - காஞ்சிபுரம் இடையே 570 கி.மீ. வான் வெளி தூரத்தை 10.49 மணி நேரம் பறந்து சாதனை படைத்திருக்கிறது.

2 வயது புறா 500 கி.மீ. தூரம் வரைதான் பறக்கும். ஆனால் இந்த புறா முதல் ஆண்டிலேயே 500 கி.மீ. தூரத்துக்கு மேல் பறந்தது. இப்போது 2 வயதில் 740 கி.மீ. தூரம் பறந்து சாதனை படைத்துள்ளது. புறாவின் அடையாளத்துக்காக உறுப்பினர்கள் மற்றும் ஊரை குறிக்கும் வகையில் கால்களில் வளையங்கள் கட்டிவிடப்படும் என்றார் லோகநாதன். சூரியனின் திசைக்கேற்பவும், இரவில் நட்சத்திரங்களின் திசைக்கேற்பவும் இடங்களைக் கண்டுபிடிக்கும் திறமை புறாக்களுக்கு இயற்கையாகவே உண்டு. எனவே புறாக்களை எங்கு கொண்டுசென்று விட்டாலும்கூட அவைகள் தான் வசிக்கும் கூண்டுக்கு வந்து சேர்ந்துவிடும். மேலும் மணிக்கு 100 கி.மீ. தூரம் வரை பறக்கும் சக்தி புறாக்களுக்கு உண்டு.

குறிப்பாக ஹோமர் இன புறாக்கள்தான் நீண்டதூரம் வேகமாக பறக்கும் திறன் படைத்தது. எனவே புறா பந்தயங்களுக்காக ஹோமர் இன புறாக்களை காஞ்சிபுரத்தில் அதிக அளவில் வீடுகளில் வளர்த்து வருகின்றனர். இவ்வாறு ஹோமர் புறாக்களை வளர்க்கும் உரிமையாளர்கள் ஒன்று சேர்ந்து "காஞ்சிபுரம் ஹோமர் பீஜியன் அசோஷியேசன்' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!