Tuesday, August 21, 2012

புதிய வேகத்தை எட்டும் ஹைபர்சானிக் விமானத்தின் முயற்சி தோல்வி


புதிய வேகத்தை எட்டும் ஹைபர்சானிக் விமானத்தின் முயற்சி தோல்வி


 


ஒலியை விட ஆறு மடங்கு விரைவாக பறக்கக்கூடிய வல்லமை கொண்டது என்று கூறப்பட்ட ஒரு ஹைபர்சானிக் விமானம் பரிசோதனை ஓட்டத்தின்போது பசிஃபிக் பெருங்கடலில் விழுந்துள்ளது.

அமெரிக்க படையினரின் பயன்பாட்டுக்காக சோதிக்கப்பட்ட அந்த வேவ்ரைடர் விமானத்தால் ஒலியை விட ஆறு மடங்கு வேகத்தை எட்ட முடியவில்லை.

வேவ்ரைடர் விமானத் திட்டத்தில் இது இரண்டாவதாக ஏற்படும் தோல்வியாகும்.

கடந்த ஆண்டும் இதே போன்ற ஒரு சோதனை முயற்சி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வேவ்ரைடர் விமானம் புறப்பட்ட 31 விநாடிகளில் அது பசிஃபிக் கடலுக்குள் விழுந்தது.




பி 52 போர் விமானத்தில் இறக்கையில் இணைக்கப்பட்ட இந்த வேவ்ரைடர், 50,000 அடி உயரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து ஒரு ராக்கெட் உதவியுடன் உந்தி செலுத்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

அப்படி உந்திச் செலுத்தப்பட்ட வேவ்ரைடர் பின்னர் மணிக்கு 3,600 கிலோ மீட்டர் என்கிற வேகத்தில் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அந்த வேகத்தை அடையாமல் கட்டுப்பாட்டை இழந்து அது கடலில் விழுந்து நொறுங்கியது.

அடுத்த தலைமுறை ஏவுகணைகளை தயாரிக்க இந்த அளவுக்கு ஹைபர்சானிக் வேகம் தேவை என்று அமெரிக்க படைத்துறை தெரிவித்துள்ளது.

இந்த அதியுயர் தொழில்நுட்பத்துக்காக அமெரிக்க இரண்டு பில்லியன் டாலர்களை செலவழித்ததாக் கூறப்படுகிறது.

இந்தத் திட்டத்தை அமெரிக்கா எந்த அளவுக்கு முக்கியம் வாய்ந்ததாக கருதுகிறது என்பதை இது எடுத்துரைக்கிறது.

இந்த தொழில்நுட்பம் வெற்றி பெறுமாயின், தயாராகும் புதிய விமானங்களில் லண்டன்- நியூயார்க் இடையே பயணிக்க வெறும் ஒரு மணி நேரமே ஆகும்.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!