Tuesday, August 21, 2012

உயிரணுவை ஸ்டாக் வைக்கும் பாம்பு


உயிரணுவை ஸ்டாக் வைக்கும் பாம்பு




பொதுவாக எந்த ஒரு உயிரினமும் கலவி யில் ஈடுபட்டு ஆணின் உயிரணு மூலமாக கருத்தரிப்பதே இயற்கை. ஆனால் இதற்கு முரணாக சிலவகை பல்லிகள், பாம்புகள் போன்றவை ஆணின் உயிரணு இல்லாமல் - அதாவது, கலவியில் ஈடுபடாமலேயே கருத்தரிப்பதுண்டு. இதனை வெர்ஜின் பர்த் என்பார்கள். ஆனால், இதையும் தாண்டி இன்னொரு விநோதமான கர்ப்பத்தை சமீபத்தில் கண்டறிந்திருக்கிறது விஞ்ஞான உலகம். ஆம், கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்திலிருந்து பிடிக்கப்பட்ட ஒரு வகை விரியன் பாம்பு, தற்போது 19 குட்டிகளை ஈன்றுள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்த ஐந்து வருடங்களாக தனித்து வைக்கப்பட்டிருந்த இந்தப் பாம்பு, எந்த ஒரு ஆண் பாம்புடனும் உறவு கொண்டிருக்கவில்லை.

பிறகெப்படி கரு உண்டானது என்று ஆராயக் கிளம்பினார்கள், வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். முதலில், ஆணின் உயிரணு இல்லாமல் கருத்தரிக்கும் ‘வெர்ஜின் பர்த்’தாகத்தான் இது இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், பிறந்திருக்கும் குட்டிகளை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, தாய்ப் பாம்பின் டி.என்.ஏவோடு இன்னொரு ஆண் பாம்பின் டி.என்.ஏவும் அவற்றிடம் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. அப்படியென்றால் ஆண் பாம்பின் உயிரணு இல்லாமல் குட்டிகள் பிறக்க வில்லை. அந்த உயிரணு எங்கிருந்து வந்தது என்று ஆராய்ந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். அப்போதுதான் பல புதிய தகவல்கள் கிளம்பியுள்ளன. அதாவது, குறிப்பிட்ட அந்த விரியன் பாம்பு, ஒரு முறை ஆண் பாம்போடு உறவு கொண்டால் போதும்.

ஆணின் உயிரணுவை பல நாட்களுக்கு தன் உடலிலேயே பாதுகாப்பாக ஸ்டாக் வைத்துக் கொள்ளும் திறன் அதற்கு இருக்கிறது. அதன்பின் எப்போது தனக்கு கருத்தரிக்க ஆர்வம் இருக்கிறதோ, அப்போது கருவை அதுவே உருவாக்கிக் கொள்கிறது. கிழக்கு டயமன்ட் பேக் விரியன் என்று அழைக்கப்படும் இந்த ஒரு வகைப் பாம்புதான் இப்படியா? இல்லை, இன்னும் நிறைய விலங்குகள் இந்த ஸ்டாக் முறையைப் பயன்படுத்துகின்றனவா என்பது தெரியவில்லை. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு மேல் ஆணின் உயிரணுக்களை அழிந்து போகாமல் வீரியத்தோடு, உடலின் எந்த இடத்தில் வைத்து, எப்படி இவை பாதுகாக்கின்றன என்பதும் புதிராகவே இருப்பதாகச் சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!