Tuesday, August 21, 2012

குட்டிப்பாப்பாவுக்கு பசும்பால் கொடுக்கறீங்களா?


குட்டிப்பாப்பாவுக்கு பசும்பால் கொடுக்கறீங்களா?


 


பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்காமல் பசுவின் பால் கொடுப்பது நல்லதல்ல என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பாலில் உள்ள புரதச்சத்து குழந்தைகளின் சிறுநீரகத்தை பாதிக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

தாய்ப்பால்தான் பிறந்த குழந்தைகளுக்கு ஏற்ற ஊட்டச்சத்து மிக்க உணவு. ஆறுமாதம் வரை தாய்ப் பால் மட்டும் குடித்து வளரும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று குழந்தை நல நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தாய்ப்பாலுக்குப் பதிலாக பலரும் பசுவின் பாலை குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர். இதனால் குழந்தைகளுக்கு ஜீரணம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் என்பது நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

 

பசுவின் பாலில் அதிகளவு புரதச்சத்து உள்ளது. இந்தப் புரதச்சத்து, குழந்தைகளின் சிறுநீரகம் உரிய வளர்ச்சியைப் பெறாத நிலையில் இருக்கும் என்பதால் அவற்றில் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று தேசிய குடும்ப நல சர்வேயில் தெரியவந்துள்ளது.

தாய்ப்பாலில் குறைந்த அளவு கலோரிகளும், புரதச்சத்தும் உள்ளது. இதனை குடித்து வளரும் குழந்தைகள் வளர்ச்சி சராசரியாக இருக்கும். அதேசமயம் பசுவின் பாலில் தாய்ப்பாலை விட மூன்று மடங்கு புரதச்சத்தும், கொழுப்பும் அதிகமாக உள்ளது. இதனால் உடல் பருமன் சட்டென்று அதிகரிக்கும் என்கின்றனர். பெரியவர்களுக்கும், வளர்ந்த குழந்தைகளுக்கும் பசுவின் பால் நன்மை தரலாம் அதேசமயம் பிறந்த குழந்தைகளுக்கு இது ஏற்றதல்ல என்பதே நிபுணர்களின் அறிவுரை.

பசுவின் பால் கொடுப்பதனால் குழந்தைகளுக்கு ஜீரணமாகாமல் வாந்தி எடுத்துவிடும். வயிற்றுப்போக்கு ஏற்படும். வயிறு வலியால் அவதிப்படும். உதடு, வாய், தொண்டை போன்றவைகளினால் எரிச்சல் ஏற்படும். சளித் தொந்தரவுகள் ஏற்படும். தோல் அரிப்பு போன்றவைகளும் ஏற்படும் என்றும் எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள்.

எனவே உடல்நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில், தாய்மார்கள் இதுகுறித்து குடும்ப மருத்துவரைக் கலந்து ஆலோசித்து மாற்று வழி காண வேண்டுமே தவிர பசுவின்பாலைத் தரக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!