Friday, September 20, 2013

பூமியில் 175 கோடி ஆண்டுகள் வரை உயிரினங்கள் வாழலாம்: ஆய்வில் தகவல்

பூமியில் 175 கோடி ஆண்டுகள் வரை உயிரினங்கள் வாழலாம்: ஆய்வில் தகவல்


பூமியில் இன்னும் 175 கோடி ஆண்டுகள் வரை உயிரினங்கள் வாழலாம் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
லண்டனில் உள்ள கிழக்கு ஆங்லியா சுற்றுப்புறச் சூழல் அறிவியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி ஆண்ட்ரூ ரஷ்பி பூமியின் சுற்றுப்புறச் சூழல் பற்றி ஆய்வு நடத்தி வருகிறார்.

அவரது குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பூமியில் மனிதன் எத்தனை ஆண்டுகள் வாழலாம் என்பது பற்றி ஆய்வு நடத்தினார்கள்.

இந்த ஆய்வில் பூமியில் மனிதன் 175 கோடி முதல் 375 கோடி ஆண்டுகள் வரை வாழலாம் என்பது தெரியவந்துள்ளது.

இது பற்றி ஆய்வு நடத்திய விஞ்ஞானி ஆன்ட்ரூ ரஷ்பி கூறியது,

நமது பூமி சூரியனின் வெப்ப மண்டல பகுதிக்குள் செல்லும்போது பூமியின் வெப்பநிலை கடுமையாக அதிகரிக்கும்.

இதன் காரணமாக கடல் முழுவதும் ஆவியாகி விடும். இந்த கால கட்டத்தில்தான் உயிரினங்கள் பூமியில் வாழ முடியாத நிலை ஏற்படும்.

எங்களது ஆய்வின் மூலம், பூமியில் உயிரினங்கள் இன்னும் 175 கோடி முதல் 375 கோடி ஆண்டுகள் வரை வாழ முடியும் என்பதை கண்டறிந்துள்ளோம்.

சூரிய மண்டலத்திற்கு வெளியே புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களை பயன்படுத்தி , கிரகங்கள் வாழ்க்கை நடத்த சாத்தியமானதா என்பது பற்றி கண்டறிந்துள்ளோம்.

கிரகத்திற்கும் அதன் நடசத்திரத்திற்கும் உள்ள தூரம் மற்றும் அதன் மேற்பரப்பில் உள்ள தண்ணீருக்கு உகந்த வெப்பநிலையைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது.

விண்மீன்களின் வெப்ப அலை மாதிரிகள் மூலம் கிரகங்களின் வாழத் தக்க நாட்களை கணக்கீடு செய்தோம்.

கிரகங்களில் வசிக்கத்தக்க காலம் எவ்வளவு என்பதை அளக்கும் அளவீடானது, மற்ற கிரகங்களில் எவ்வளவு நாள்கள் வசிக்க முடியும் என்பதை அளவிட பெரிதும் உதவியாக இருக்கிறது.

ஒருவேளை இந்த ஆய்வு முடிவு துல்லியமாக இல்லாவிட்டாலும் கூட, பூமியானது 75 சதவீத வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளது. பூமிக்கு இன்னும் 25 சதவீத ஆயுள்தான் உள்ளது.

சூரிய குடும்பத்துக்கு வெளியே சுமார் 1,000 க்கும் மேற்பட்ட கிரகங்கள் இருப்பதை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கிரகங்களை வைத்துத்தான் விஞ்ஞானிகளால் கிரகங்களில் வசிக்கத்தக்க கால கட்டத்தை கணக்கிட முடிந்தது.

நாங்கள் இதேபோன்ற 8 கிரகங்கள் மற்றும் செவ்வாய்கிரகத்தின் தற்போதைய வசிக்கத்தக்க கால கட்டத்துடன் பூமியை ஒப்பீடு செய்துள்ளோம்.

எங்களது ஆய்வில் சிறிய கூட்ட நட்சத்திரங்களைச் சுற்றி வரும் கிரகங்கள் நீண்ட காலம் வசிக்கத்தக்கதாக இருப்பதை கண்டறிந்துள்ளோம் என்று ஆன்ட்ரூ ரஷ்பி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!