Tuesday, June 4, 2013

காரைக்கால் மீனவர் வலையில் சிக்கிய ராட்சத திமிங்கிலம் கரை வந்ததும் இறந்தது

காரைக்கால் மீனவர் வலையில் சிக்கிய ராட்சத திமிங்கிலம் கரை வந்ததும் இறந்தது


காரைக்காலில் மீனவர் வலையில் 2,500 கிலோ எடை கொண்ட புள்ளி திமிங்கிலம் மீன் சிக்கியது. காரைக்கால் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் தனக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் சிலருடன் சென்று நேற்று முன்தினம் இரவு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது வலையில் மிகப் பெரிய மீன் சிக்கியுள்ளது. இரவு நேரமென்பதால் வலையில் சிக்கியது என்ன என்பதை அவரால் கண்டுபிடிக்க முடிய வில்லை. எனவே, அதை கரைக்கு இழுத்து வந்தனர்.

நேற்று படகு கரைக்கு வந்து சேர்ந்ததும், வலையை இழுத்து பார்த்த போது, அதில் சிக்கியிருந்தது புள்ளி திமிங்கிலம் என்ற வகையை சேர்ந்த மீன் என்பது தெரிய வந்தது. தண்ணீரில் இருந்தவரை உயிருடன் இருந்த அது கரைக்கு வந்ததும் இறந்துவிட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து மீனவர்கள் மேலும் கூறுகையில், வலையில் சிக்கியது சுறா அல்லது திருக்கை மீன் என்றுதான் நினைத்தோம். அதனை கஷ்டப்பட்டு கரைக்கு கொண்டுவந்து சேர்த்தோம். பின்னர் கடலில் இருந்து 20 பேர் சேர்ந்து இழுத்து வந்தோம். 12 அடி நீளம், 3 அடி அகலம் கொண்ட இந்த புள்ளி திமிங்கிலம் மீன் 2,500 கிலோ எடையுள்ளதாக இருந்தது'' என்றனர்.

இது குறித்து மீன்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''இது ஹோம்ராஸ் என்னும் உணவுக்கு பயன்படாத வகையை சேர்ந்த மீன்'' என்றார். உணவுக்கு பயன்படுத்த முடியாது என்றாலும், முறையாக கையாண்டால் கருவாடாக பயன்படுத்தலாம் என்பதால் இதுகுறித்து ஆலோ சித்து முடிவு எடுக்கப்படும் என்று மீனவர்கள் கூறினர். இந்த புள்ளி திமிங்கிலத்தை ஏராளமானோர் வேடிக்கை பார்த்துச் சென்றனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!