Wednesday, February 13, 2013

2020 ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தம் அதிரடி நீக்கம்

2020 ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தம் அதிரடி நீக்கம்



2020ம் ஆண்டு நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இருந்து மல்யுத்த விளையாட்டு அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் லாசானே நகரில் நடந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி செயற்குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. ஒலிம்பிக் போட்டியில் தற்போது இடம் பெற்றுள்ள 26 வகை விளையாட்டுகளில் இருந்து ஒன்றை நீக்குவது என்றும், புதிதாக வேறு ஒரு விளையாட்டை இடம் பெறச் செய்வது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

வாள்வீச்சு, குதிரையேற்றம், நீச்சல், ஓட்டம் மற்றும் துப்பாக்கி சுடுதல் ஆகிய 5 விளையாட்டுகள் அடங்கிய மாடர்ன் பென்டத்லான் போட்டி நீக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மல்யுத்தம் நீக்கப்பட்டுள்ளது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் ஒலிம்பிக் கமிட்டியின் இந்த முடிவு இந்தியாவின் பதக்க வேட்டைக்கு வேட்டு வைப்பதாக அமைந்துள்ளது. ஏதன்ஸ் நகரில் 1896ம் ஆண்டு தொடங்கிய நவீன ஒலிம்பிக் போட்டியில் இடம்பெற்ற பெருமை வாய்ந்தது மல்யுத்தம் என்பது குறிப்பிடத்தக்கது.

லண்டன் ஒலிம்பிக் போட்டியிலும் 344 மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பிரீஸ்டைல் (11 பதக்கம்) மற்றும் கிரெகோ ரோமன் பிரிவில் (7 பதக்கம்) களமிறங்கினர். 2020 ஒலிம்பிக்கில் இடம் பெறுவதற்காக பேஸ்பால்/ சாப்ட் பால், மல்யுத்தம், கராத்தே, ஸ்குவாஷ், ரோலர் விளையாட்டு, மலையேற்றம், வேக்போர்டிங், வுஷு ஆகிய விளையாட்டுகள் சார்பில் விண்ணப்பிக்கப்பட உள்ளது. ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் மே மாதம் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, செப்டம்பரில் அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்சில் நடக்கும் கூட்டத்தில் இறுதி அறிவிப்பு வெளியாகும்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!