Wednesday, September 26, 2012

ஆண்மை ஆயுளை குறைக்கிறதா? Hot Report


ஆண்மை ஆயுளை குறைக்கிறதா? Hot Report






ஆண்களின் ஆண் தன்மைக்கு காரணமான ஹார்மோன்களே, அவர்களின் ஆயுட்காலத்தை குறைப்பதற்கான காரணியாக இருக்கக்கூடும் என்பதை குறிப்புணர்த்தும் ஆய்வின் முடிவு ஒன்று சமீபத்தில் வெளியாகியிருக்கிறது.

உலகம் முழுவதும் மனித இனத்தில் ஆண்களை விட பெண்களின் சராசரி வயது அதிகம். இதற்கு என்ன காரணம் என்று மருத்துவ உலகில் நடக்கும் தொடர் ஆய்வுகளில், ஒரு பகுதி விஞ்ஞானிகள், ஆண்களுக்கு ஆண்தன்மையை அளிக்கும் ஹார்மோன்கள், அவர்களின் ஆயுளை குறைப்பதில் முக்கிய பங்காற்றலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.

அதாவது ஆண்களுக்கு ஆண்தன்மையை அளிக்கும் டெஸ்டஸ்ட்ரோன் என்கிற ஆண்களின் பாலின தன்மைக்கான ஹார்மோன்கள், ஆண்களின் விதைப்பைகளில் பெருமளவு உற்பத்தியாகிறது. இந்த டெஸ்டெஸ்ட்ரோன் ஹார்மோன் ஆண்களின் நோய் எதிர்ப்புத்தன்மையை பாதிக்கக்கூடும் என்றும் ஆண்களின் இதயத்தை வலுவிழக்கச்செய்யக்கூடும் என்றும் இந்த தரப்பு ஆய்வாளர்கள் சந்தேகம் வெளியிட்டு வந்தனர்.

இவர்களின் இந்த சந்தேகம், மருத்துவ விஞ்ஞான உலகின் ஆய்வு நெறிகளுக்குட்பட்ட ஆய்வுகள் மூலம் இதுவரை முழுமையாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், இந்த கருதுகோள் கணிசமான மருத்துவ விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இவர்களின் இந்த சந்தேகம் நிரூபிக்கப்படவேண்டுமானால், விதைப்பை நீக்கப்பட்ட ஆண்களின் ஆயுட்காலம் சராசரியாக அவர்கள் வாழும் சமூகத்தின் மற்ற ஆண்களின் சராசரி ஆயுட்காலத்தை விட அதிகரிக்கிறதா என்கிற ஆய்வின் முடிவில் தான் அதை கணக்கிட முடியும். இப்படியான ஆய்வுகள் இதுவரை முழுமையாக நடக்கவில்லை என்றாலும், இதற்கு இணையான புதிய ஆய்வின் முடிவு இவர்களின் கருத்துக்கு வலு சேர்ப்பதாக இருக்கிறது.

கொரியாவில் பதினாறாம் நூற்றாண்டில் துவங்கி, பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை உயிர்வாழ்ந்த விதைப்பை அகற்றப்பட்ட ஆண்கள், அதாவது தற்போது அரவாணிகள் என்றும் திருநங்கைகள் என்றும் அழைக்கப்படுகிறவர்களைப் போன்றவர்களின் ஆயுட்காலம் பற்றிய புள்ளி விவரங்கள் தற்போது கிடைத்திருக்கின்றன.



இந்த காலகட்டத்தில் கொரியாவில் ஆட்சியில் இருந்த கோசுன் பேரரசில் பருவ வயதுக்கு வருவதற்கு முன்னரே விதைப்பைகள் அகற்றப்பட்ட திருநங்கைகள் அரண்மனை காவலுக்கு வைக்கப்பட்டிருந்தனர். இப்படி அரண்மனையில் முக்கிய பணியில் இருந்த திருநங்கைகள் 81 பேரின் புள்ளிவிவரங்களை ஆராய்ந்த இன்ஹா பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் கியுங் ஜின் மின் அவர்கள், இவர்கள் அனைவரும் சராசரியாக எழுபது வயது வரை உயிர் வாழ்ந்திருப்பதாக கூறுகிறார். இதில் மூன்றுபேர் நூறு வயதுக்கும் மேலாக உயிர்வாழ்ந்திருக்கிறார்கள்.

அதேசமயம், இவர்களை பணியில் அமர்த்தியிருந்த அரச வம்ச ஆண்களின் சராசரி வயது வெறும் 45 என்றும், அரண்மனையில் இருந்த மற்ற ஆண் அதிகாரிகளின் சராசரி வயது 50 தாண்டவில்லை என்றும் கூறும் இந்த பேராசிரியர், இவர்களின் வாழ்க்கைச் சூழல், வசதி வாய்ப்புகள் போன்றவை கூட இவர்களின் ஆயுட்காலத்தை நிர்ணயிக்கும் காரணிகளாக இருந்திருக்கலாம் என்றாலும், அந்த காரணிகளைவிட ஆண்தன்மைக்கான டெஸ்டஸ்ட்ரோன் ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் விதைப்பைகள் நீக்கப்பட்டதே திருநங்கைகளின் ஆயுட்காலம் அதிகரிக்க முக்கிய காரணி என்று அவர் கூறுகிறார்.

ஆனால் இந்த ஆய்வின் முடிவுகள் வாதப்படிக்கு ஏற்கத்தக்கதாக இருந்தாலும் இவற்றை இறுதியானதாக கொள்ளமுடியாது என்கிறார் லான்காஸ்டர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டேவிட் கிளான்ஸி. வேறு சில ஆய்வுகளில் விதைப்பை நீக்கப்பட்ட ஆண்களின் வயதுக்கும் நீக்கப்படாத ஆண்களுக்கும் சராசரி வயதுக்கும் இடையில் பெரிய வேறுபாடு காணப்படவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

இந்த வாதப்பிரதிவாதங்கள் ஒருபுறமிருக்க, டெஸ்டெஸ்ட்ரோன் ஹார்மோன்கள் இல்லாவிட்டால் ஆண்களுக்கு பாலியல் நாட்டம் இல்லாமல் போகும் என்பதை சுட்டிக்காட்டும் பேராசிரியர் கியுங் ஜின் மின் அவர்கள், எத்தனை ஆண்கள் தங்களின் ஆண்மையை பறிகொடுத்து ஆயுட்காலத்தை நீட்டிக்க விரும்புவார்கள் என்று கேள்வியை எழுப்புகிறார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!