Thursday, September 27, 2012

இங்கிலாந்தை கலக்கும் டாக்டர் ரோபோ

லப்டப் பார்க்கும்.. பீ.பி. அளக்கும் இங்கிலாந்தை கலக்கும் டாக்டர் ரோபோ





இங்கிலாந்து ஆஸ்பத்திரியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரோபோ டாக்டர், நோயாளிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. டாக்டரிடம் போகிறோம்.. என்ன செய்கிறார்? ஸ்டெதஸ்கோப் வைத்து பார்ப்பார். பீ.பி. செக் பண்ணுவார். நமது கண்ணை திறந்து பார்ப்பார். வாய்க்குள் டார்ச் அடித்து சோதிப்பார். இந்த வேலைகளை எல்லாம் இங்கிலாந்தின் நியூரி நகரில் உள்ள டெய்சி ஹில் ஆஸ்பத்திரியில் ஒரு ரோபோ செய்கிறது. இந்த ரோபோ டாக்டரின் பெயர் ‘ஆர்பி7’. பஸ், ரயில் நிலையங்களில் இருக்கும் எடை பார்க்கும் மெஷின் சைஸில் இருக்கிறது.

 நோயாளியின் ரத்த அழுத்தம், நாடி துடிப்பு, இதய துடிப்பு ஆகியவற்றை அளவிடும் கருவிகள் இதில் இருக்கின்றன. ரோபோ டாக்டரை ஆஸ்பத்திரியில் இருக்கும் ஊழியர்கள் இயக்கலாம். அல்லது, எங்கோ வீட்டிலோ, வெளியூரிலோ இருக்கும் ‘பெரிய’ டாக்டர்கூட ஜாய் ஸ்டிக் உதவியுடன் இயக்க முடியும். அவர்கள் உத்தரவிட்டால், டாக்டர் ரோபோ மெல்ல நகர்ந்து நோயாளியின் படுக்கைக்கு அருகில் வருகிறது. பின்னர், அவர்களது கையை நீட்டச் சொல்லி நாடி பார்க்கிறது.

அடுத்து, ஸ்டெதஸ்கோப் உதவியுடன் லப்டப் துடிப்பை பார்க்கிறது. பீ.பி. சோதிக்கிறது. இவை அனைத்தையும் ரோபோவில் இருக்கும் வெப்கேமரா உதவியுடன் டாக்டர் பார்ப்பார். ரோபோவின் மேல் பகுதியில் இருக்கும் மானிட்டரில் டாக்டரின் முகம் தெரியும்.  தேவைப்பட்டால், நோயாளியின் கண்ணை அகலமாக விரிக்கச் செய்து சிவந்திருக்கிறதா, வேறு மாற்றங்கள் தெரிகிறதா என்றும் தனது நவீன கேமரா உதவியுடன் ரோபோ ‘கூர்ந்து’ கவனிக்கும். இதையும் தன் இருப்பிடத்தில் இருந்தபடியே டாக்டர் பார்வையிடுவார். அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு உடனடியாக தரவேண்டிய முதலுதவிகள், அவசர கால மருந்துகள் ஆகியவற்றை டாக்டர் அங்கிருந்தபடியே வழங்குவார்.

‘ஆர்பி7 ரோபோ டாக்டரின் விலை ரூ.1.75 கோடி. மாரடைப்பு, ஸ்டிரோக் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டும் பிரசவ காலத்திலும் உயிருக்கு போராடிய பலர் ஆர்பி7 உதவியுடன் காப்பாற்றப்பட்டுள்ளனர்’ என்று டெய்சி ஹில் ஆஸ்பத்திரியின் இயக்குனர் டாக்டர் ஷேன் மோன் கூறினார். இன் டச் ஹெல்த் என்ற நிறுவனம் ஆர்பி7 ரோபோவை விற்பனை செய்து வருகிறது. இங்கிலாந்தின் ஷ்ராப்ஷயர் பகுதியில் மேலும் 2 ஆஸ்பத்திரிகளில் விரைவில் ஆர்பி7 ரோபோக்கள் ‘பணியை’ துவக்க உள்ளன.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!