Friday, November 29, 2013

மகாத்மாவுக்கு "தேசத் தந்தை' பட்டத்தை அளிக்க சட்டத்தில் இடமில்லை': உள்துறை அமைச்சகம்

மகாத்மாவுக்கு "தேசத் தந்தை' பட்டத்தை அளிக்க சட்டத்தில் இடமில்லை': உள்துறை அமைச்சகம்



மகாத்மா காந்திக்கு தேசத் தந்தை என்ற பட்டத்தை அளிப்பதற்கு சட்டத்தில் இடமில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னௌவைச் சேர்ந்த 6ஆம் வகுப்பு மாணவி ஐஸ்வர்யா பராஷார், காந்தியைப் பற்றியும், அவரை தேசத் தந்தை என அழைக்கப்படுவதற்கான காரணம் குறித்தும் விவரங்களைத் தருமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு செய்தார்.

அவருக்கு அளிக்கப்பட்ட பதிலில், "மகாத்மா காந்திக்கு அதுபோன்ற பட்டம் எதுவும் வழங்கப்படவில்லை' எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து "மகாத்மாவை தேசத் தந்தை என்று முறைப்படி அறிவிக்க வேண்டும்' என்று வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் ஐஸ்வர்யா கடிதம் எழுதினார்.

பின்னர் தனது கோரிக்கை மனுவின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது எனக் கோரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி மனு அளித்தார். அந்த மனு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்து உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

மகாத்மா காந்தியை தேசத் தந்தை என குடியரசுத் தலைவர் அறிவிப்பது தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏனெனில், அரசியல் சாசன சட்டம் பிரிவு 18(1)-ன்படி யாருக்கும் எந்தவிதமான பட்டத்தையும் அளிக்க இயலாது. கல்வித் துறை மற்றும் ராணுவத்தைச் சார்ந்தோருக்கு மட்டுமே பட்டங்களை அளிக்க முடியும்'' என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!