Friday, November 29, 2013

ஜெட்-ஏர்வேஸை அமெரிக்காவில் சிக்கலில் மாட்டிய ஒரு ‘வல்லவனுக்கு வல்லவன்’

ஜெட்-ஏர்வேஸை அமெரிக்காவில் சிக்கலில் மாட்டிய ஒரு ‘வல்லவனுக்கு வல்லவன்’


இந்திய தனியார் விமான நிறுவனம் ஜெட்-ஏர்வேஸ், அமெரிக்க விமானப் போக்குவரத்து கண்காணிப்பு அலுவலகத்தால் எடுக்கப்படவிருந்த கடும் நடவடிக்கை ஒன்றில் இருந்து ஒருவழியாக தப்பித்துக் கொண்டது.

“தலைக்கு வந்தது, தலைப்பாகையுடன் போனது” என்பதுபோல, 10,000 அமெரிக்க டாலர் ‘சிவில் அபராதம்’ செலுத்தி, சுமார் 2 வருடங்களாக தலைவலி கொடுத்துவந்த கேஸை முடித்துக் கொண்டது.

கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்க ஏர்போர்ட்டில் நடந்த சம்பவம் போல இனியும் நடக்காது என்ற உத்தரவாதம், ஜெட்-ஏர்வேஸினால் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த தடவை அதுபோன்ற சம்பவம் நடந்தால், ஜெட்-ஏர்வேஸின் அமெரிக்க ரூட்களுக்கு சிக்கல் ஏற்படலாம்.

அப்படி என்னதான் ஜெட்-ஏர்வேஸ் செய்துவிட்டது? கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்க ஏர்போர்ட்டில் நடந்த சம்பவம் என்ன?

2011-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி, அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை மோசமான பனிப்புயல் தாக்கியது. மாலையில் சுமார் 30 நிமிட காரிடோர் நேரத்தில், விமானங்களை தரையிறக்குவதே சிக்கல் என்ற அளவுக்கு விசிபிளிட்டி மோசமாகி, ரன்வேயே கண்ணுக்கு தெரியாத நிலை ஏற்பட்டது (zero visibility).

இதையடுத்து அந்த 30 நிமிட காரிடோரில் நியீயார்க்கு மேல் பறந்துகொண்டு, தரையிறங்க தயாராக இருந்த விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை. அருகிலுள்ள வெவ்வேறு விமான நிலையங்களுக்கு வானில் வைத்தே திசைதிருப்பி விடப்பட்டன. 28 விமானங்கள், பிராட்லி விமான நிலையத்துக்கு (Bradley Airport) திசைதிருப்பப்பட்டன.

அந்த 28 விமானங்களில் ஒன்று, இந்தியாவில் இருந்து வந்த ஜெட்-ஏர்வேஸ் விமானம்.

ஜெட்-ஏர்வேஸ் விமானம் தடம் இலக்கம் 9W 228, இந்தியாவில் இருந்து புறப்பட்டு, பெல்ஜியத்தில் டச் பண்ணிவிட்டு, நியூஜெர்சி நுவார்க் ஏர்போர்ட்டில் தரையிறங்க வந்துகொண்டிருந்தது. இதில் அன்று 217 பயணிகள் இருந்தனர். நியூயார்க் ஏர்-ட்ராபிக் கன்ட்ரோல் அறிவுறுத்தலின்படி, இந்த விமானம் திசை திரும்பி, பிராட்லி விமான நிலையம் சென்று பத்திரமாக தரையிறங்கியது.

பிராட்லியிலும், காலநிலை மோசமாகத்தான் இருந்தது. ஆனால், நியூயார்க் அளவுக்கு மோசமில்லை. எதிர்பாராத விதமாக 28 விமானங்கள் சடசடவென அங்கு வந்து இறங்கியதில், அவ்வளவு விமானங்களையும் ஹேன்டில் பண்ண முடியாதவாறு அந்த விமான நிலையம் திணறியது.

தரையிறக்கப்பட்ட விமானங்களை, விமான நிலைய டெர்மினலுக்கு கொண்டுவராமல், ஒதுக்குப்புறமாக ஆங்காங்கே நிறுத்தி விட்டார்கள். பயணிகளை தரையிறக்க வழியில்லை. தொடர்ந்து ஸ்னோ அடித்துக் கொண்டிருந்தது. விமான நிலைய டெர்மினலில் கேட் காலியாக, காலியாக, அமெரிக்கன் ஏர்லைன்ஸ், யுனைட்டட் ஏர்வேஸ் போன்ற பெரிய விமானங்களுக்கு இடம் கொடுக்கப்பட்டு, பயணிகள் டெர்மினலில் இறக்கப்பட்டனர்.

சில விமானங்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஜெட்-ஏர்வேஸூம் ஒரு ஓரமாக ‘அம்போ’ என்று நின்றிருந்தது. அதற்கு ஒரு காரணமும் இருந்தது.

இந்த இடத்தில் ஒரு ஏர்போர்ட் ஹேன்டிலிங் நடைமுறை பற்றி சொல்ல வேண்டும். பொதுவாகவே விமானங்கள் திசை திருப்பப்பட்டு எதிர்பாராத விமான நிலையத்தில் இறக்கப்பட்டால், அதற்கான ஹேன்டிலிங் கட்டணங்கள் உண்டு.

தரையிறக்க ஒரு கட்டணம், குறிப்பிட்ட நேரத்துக்குமேல் (பெரிய விமானங்களுக்கு 90 நிமிடங்கள்) நிறுத்தி வைக்க ஒரு கட்டணம், மேலதிக எரிபொருள் நிரப்ப ஒரு கட்டணம் என விமான நிலையம் சார்ஜ் செய்யும் கட்டணங்கள் உள்ளன. மோசமான காலநிலை காரணமாக திசைதிருப்பப்பட்டு தரையிறக்கப்பட்டால், இந்த கட்டணங்களை உடனே செலுத்த வேண்டியதில்லை. சாவகாசமாக விமான நிறுவனத்துக்கு ‘பில்’, அனுப்பி விடுவார்கள்.

இவை விமானங்களின் சேவைகளுக்கான நடைமுறை. ஆனால், மற்றொரு விவகாரமும் உள்ளது. பயணிகளின் சேவைகளுக்கான நடைமுறை. இவற்றை விமான நிலையம் கவனிப்பதில்லை. அங்குள்ள ஏர்லைன்ஸ்கள், அல்லது ஹேன்டிலிங் ஏஜென்ட்டுகள் கவனிப்பார்கள். அதாவது, பயணிகளை இறக்கி, ஏற்றல், லவுஞ்ச் ஏற்பாடுகள், உணவு வசதிகள், தேவை ஏற்படின் ஹோட்டல் ஏற்பாடுகள் அனைத்தும் இந்த வகையில் வரும்.

நம்ம ஜெட்-ஏர்வேஸோ, பிராட்லி ஏர்போர்ட்டுக்கு பறப்பதில்லை. இதனால், ஜெட்-ஏர்வேஸ் ஊழியர்கள் அங்கே கிடையாது.

அப்படியான சமயங்களில், அந்த ஏர்போர்ட்டில் சேவையில் ஈடுபடும் மற்றொரு ஏர்லைன்ஸூடன் ஒப்பந்தம் இருக்க வேண்டும். அப்போதுதான், இப்படியான அசாதாரண நேரங்களில் அந்த ஏர்லைன்ஸ், இவர்களது பயணிகளை கவனிப்பார்கள்.

ஜெட்-ஏர்வேஸ் தாம் வாழ்க்கையில் பிராட்லி ஏர்போர்ட்டில் தரையிறங்குவோம் என்று நினைத்திராத காரணத்தால், அந்த ஏர்போர்ட்டில் உள்ள எந்த விமான நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்திருக்கவில்லை. இதனால்தான் ஜெட்-ஏர்வேஸ் 217 பயணிகளுடன் ஒரு ஓரமாக ‘அம்போ’ என்று நின்றிருந்தது.

இதற்கிடையே நியூயார்க்கில் உள்ள ஜெட்-ஏர்வேஸ் ஸ்டேஷன் மேனேஜர், பிராட்லி ஏர்போர்ட்டில் உள்ள மற்றைய விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு ஹேன்டிலிங் செய்ய முடியுமா என விசாரித்துக் கொண்டிருந்தார். “சும்மா வெளாடாதிங்க மாப்ளை.. நம்ம பயணிகளை கவனிக்கவே ததிங்கிணத்தோம் போடுகிறோம். இதில், மேலும் 217 பயணிகளை கவனிப்பதா? தமாசு பண்ணாதிங்க” 

இப்படியான இழுபறியில் ஜெட்-ஏர்வேஸ் விமானம், பிராட்லியில் இருந்து புறப்பட்டு நியூஜெர்சி செல்ல அனுமதி கோரப்பட்டது. அனுமதி கிடைத்தது. பயணிகளுடன் 5 மணி நேரம், 47 நிமிடங்கள் காத்திருந்த நிலையில், ஒருவழியாக புறப்பட்டு சென்றது.

இதுதான் நடந்த சம்பவம். ஆனால், கதை அத்துடன் முடியவில்லை. அமெரிக்க விமான நடைமுறை சட்டப்படி, சர்வதேச விமானம் ஒன்று, எதிர்பாராத காரணங்களுக்காக திசை திருப்பப்பட்டால், தரையிறங்கிய நேரத்தில் இருந்து அதிகபட்சம் 4 மணி நேரம்தான் பயணிகளை விமானத்துக்குள் வைத்திருக்கலாம். அதற்குள் அவர்களை ஏர்போர்ட் டெர்மினலில் இறக்கிவிட வேண்டும்.

நம்ம வண்டியோ, 5:47 மணிநேரம் பயணிகளுடன் தரையில் நின்றிருக்கிறது. சிக்கல்தான்.

இதற்குள் ஜெட்-ஏர்வேஸில் உள்ள யாரோ ஒரு ‘சட்டத்தில் உள்ள ஓட்டை தெரிந்த’ நபர், TDR (Tarmac Delay Report) அறிக்கை தாக்கல் செய்தபோது, “ஜெட்-ஏர்வேஸ் விமானம் தடம் இலக்கம் 9W 228, பிராட்லி ஏர்போர்ட்டில் 4:47 மணிநேரம் பயணிகளுடன் தரையில் நின்றிருந்தது என தாக்கல் செய்துவிட்டார்.

அதாவது, ‘சட்டத்தில் உள்ள ஓட்டை தெரிந்த’ நபர், தரையில் நின்றிருந்த நேரத்தில் 1 மணி நேரத்தை சுட்டு விட்டார்.

‘சட்டத்தில் உள்ள ஓட்டை’ என்னவென்றால், அமெரிக்க 4 மணி நேர சட்டத்தில், ஒரு விதிவிலக்கு உண்டு. குறிப்பிட்ட விமான நிறுவனம், அமெரிக்க விமான நிறுவனமாக இல்லாது வெளிநாட்டு நிறுவனமாக இருந்து, அவர்கள் குறிப்பிட்ட விமான நிலையத்தில் இதற்குமுன் ஒரு தடவைகூட தரையிறங்காது இருந்தால், மேலும் 1 மணி நேரம் விதிவிலக்கு அனுமதி கோர முடியும்.

விமானம் 9W 228, பிராட்லி ஏர்போர்ட்டில் 4:47 மணிநேரம் பயணிகளுடன் தரையில் நின்றிருந்தது என TDR அறிக்கையில் குறிப்பிட்டு, இந்த விதிவிலக்கை பெற்றுவிட்டது ஜெட்-ஏர்வெஸ்.

அத்துடன், ‘யாவரும் நலம்’ என ஜெட்-ஏர்வேஸ் நினைத்திருக்க, கதையில் ஏற்பட்டது மற்றொரு திருப்பம்.

ஜெட்-ஏர்வேஸ் நிறுவனத்தில் சட்டத்தில் உள்ள ஓட்டை தெரிந்த ‘வல்லவன்’ ஒருவர் இருக்க, அந்த ‘வல்லவனுக்கு வல்லவன்’ ஒருவர், அதே ஜெட்-ஏர்வேஸ் விமானத்தில் பயணியாக இருந்திருக்கிறார்!

அவர் என்ன செய்தாரென்றால், மற்றொரு அறிக்கையை கையில் எடுத்தார். இதை ATCR என்பார்கள். விரிவாக்கம், Air Travel Consumer Report.

இந்த ரிப்போர்ட்டில், பிராட்லி விமான நிலையத்தில் ஜெட்-ஏர்வேஸ் எத்தனை மணிக்கு தரையை தொட்டது (actual touchdown time), எத்தனை மணிக்கு மீண்டும் சக்கரம் மேலேறியது (wheels up time) என்ற விபரங்கள் உள்ளன. அதை இணைத்து, US regulatorக்கு ஒரு புகாரை தட்டிவிட்டார்.

சிக்கிக் கொண்டது ஜெட்-ஏர்வேஸ்.

விமான நிறுவன அனுபவத்தில் சொல்கிறேன். பொதுவாக இப்படியான விஷயமறிந்த ‘வல்லவனுக்கு வல்லவன்கள்’ புகார் செய்வதற்கு முன், முதலில் விமான நிறுவனத்திடமே வருவார்கள். அவர்களை தட்டிக் கொடுத்து, இலவச பிசினெஸ் கிளாஸ் டிக்கெட் ஒன்றைக் கொடுத்து, குஷிப்படுத்தி விடுவார்கள் விமான நிறுவனங்கள்.

ஆனால் இவரோ, அண்ணா சொன்ன ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ கொள்கை உடையவர் போலிருக்கிறது. நேரே புகாருக்கு போய்விட்டார்.

விவகாரம் தெரிந்தவுடன் ஜெட்-ஏர்வேஸ், தாம் தாக்கல் செய்திருந்த TDR அறிக்கையை மாற்றப்போக, அது சிக்கலை ஏற்படுத்த, விசாரணை தொடங்க… என்ற பெரிய லீகல் கதையின் சுருக்கம்தான், நாம் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட, “தலைக்கு வந்தது, தலைப்பாகையுடன் போனது என்பதுபோல, 10,000 அமெரிக்க டாலர் ‘சிவில் அபராதம்’ செலுத்தி தப்பித்துக் கொண்டது”.

ஜெட்-ஏர்வேஸ், “இனிமேல் இப்படியான காரியம் எதையும் செய்வதில்லை” என உத்தரவாதம் கொடுத்ததில், “compromise civil penalty” என்ற வகையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சரி. இந்த நீதிக் கதையில் உள்ள ‘நீதி’ என்ன சொல்லுங்க பார்க்கலாம்?

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!