Thursday, December 5, 2013

'சிம்பன்சிக்கு சட்டரீதியான நபர் என்ற அந்தஸ்து தேவை'

'சிம்பன்சிக்கு சட்டரீதியான நபர் என்ற அந்தஸ்து தேவை'



சிம்பன்சி மனிதக் குரங்குகளை சட்ட ரீதியான ஆளாக அங்கீகரிக்க வேண்டும் என்று நியூயார்க் நீதிமன்றம் ஒன்றில் அமெரிக்க விலங்கு உரிமைக் குழு ஒன்று மனுத்தாக்கல் செய்துள்ளது.

மனிதரல்லாதோரின் உரிமைக்கான திட்டம் என்னும் பெயரைக் கொண்ட அந்த அமைப்பு ''டொமி'' என்னும் சிம்பன்சி ஒன்றுக்கு ''சட்ட ரீதியான ஆளந்தஸ்து'' கிடைக்க வேண்டும் என்றும்,அதன் மூலம் அது, ''உடலியல் சுயாதீனத்துக்கான அடிப்படை உரிமைகளைப் பெறும்'' என்றும் கூறுகிறது.

நியூயார்க்கில் வேறு இடங்களில் உள்ள மேலும் மூன்று மனிதக் குரங்குகளுக்காகவும் இதே மாதிரியான மனுவை தாக்கல் செய்ய அந்த அமைப்பு விரும்புகிறது.

இந்த நான்கு மனிதக் குரங்குகளும் அவை வைக்கப்பட்டிருக்கும் ஆய்வுக்கூடங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு, மனிதக் குரங்குகளுக்கான ஒரு சரணாலயத்தில் எஞ்சியிருக்கும் நாட்களைக் கழிக்கவேண்டும் என்றும் அந்த அமைப்பு கோருகின்றது.

அந்த மனிதக் குரங்குகள் சுயாதீனமானவை என்று நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவற்றுக்கு 'சட்ட ரீதியான ஆளந்தஸ்து கிடைத்துவிடும் என்று அந்த அமைப்பு கூறுகின்றது.

அந்தக் குரங்குகளுக்கு சுயநிர்ணயம், சுய விழிப்புணர்வு, தமது வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதை தெரிவு செய்யும் வாய்ப்பு எல்லாம் இருக்க வேண்டும் என்று அவர்கள் வாதிடுகிறார்கள்.

இந்த வழக்கில் பொதுவாக சட்டவிரோதமாக மனிதர்கள் அடைத்துவைக்கப்படுவதற்கு எதிராக பிரயோகிக்கப்படும் 'ஹேபியஸ் கார்ப்பஸ்' (ஆட்கொணர்வு மனு ) என்ற பழங்கால உரிமையை இந்த அமைப்பு பயன்படுத்தியிருக்கிறது.

18ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தொடுக்கப்பட்ட அடிமை வர்த்தகத்துக்கு எதிரான வழக்குகளும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த வழக்குக்கு ஆதாரமாக விஞ்ஞான ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!