Thursday, November 21, 2013

சச்சின் விளையாடிய 24 ஆண்டுகளில் 34 புதிய நாடுகளின் பிறப்பைக் கண்ட உலகம்...ஈழம் மட்டும் 'மிஸ்ஸிங்'!

சச்சின் விளையாடிய 24 ஆண்டுகளில் 34 புதிய நாடுகளின் பிறப்பைக் கண்ட உலகம்...ஈழம் மட்டும் 'மிஸ்ஸிங்'!



சென்னை: ரொம்ப சுவாரஸ்யமான விஷயம் இது.. சச்சின் டெண்டுல்கர் விளையாடிய அந்த 24 ஆண்டுகளில் உலகம் எத்தனையோ பல வியப்புகளை சந்தித்துள்ளது, விபரீதங்களை கண்டுள்ளது.. சச்சினுடன் சேர்ந்து உலகமும் பெரும் மாற்றத்தை சந்தித்துள்ளது.

ஒரு ஆங்கில நாளிதழ் இதை அழகான புகைப்பட ஆல்பமாக வெளியிட்டுள்ளது.

நம் வாசகர்களுக்காக அதிலிருந்து சில...

8 பிரதமர்களைக் கண்ட இந்தியா

சச்சின் விளையாடிய இந்த 24 ஆண்டுகளில் இந்தியாவில் 8 பிரதமர்கள் பதவியில் அமர்ந்துள்ளனர்.

5 பிரதமர்கள் மரணம்

இந்த 8 பிரதமர்களில் 5 பேர் தற்போது உயிருடன் இல்லை.

பயங்கர வளர்ச்சி கண்ட பொருளாதாரம்

சச்சின் விளையாட வந்த 1989ம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அளவு 300 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால் தற்போது அதாவது 2013ம் ஆண்டு இது 1.0 மில்லியன் டிரில்லியனாக எகிறியுள்ளது.

சென்செக்ஸும் எக்கச்சக்க உயர்வு

1989ம் ஆண்டு இந்தியாவில், சென்செக்ஸ் வெறும் 389 புள்ளிகளாக மட்டுமே இருந்தது. இது 2013ம் ஆண்டில், 20,896 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. அதாவது சென்செக்ஸ் உயர்வு 5257 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ரூபாய் மதி்ப்புதான் செம வீழ்ச்சி

1989ம் ஆண்டு ரூபாய் மதிப்பு நன்றாகவே இருந்தது. அதாவது ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதி்ப்பு 16.9 ஆக இருந்தது. ஆனால் தற்போது அது 62.64 ஆக வீழ்ந்துள்ளது.

உலக மகா ஊழல்கள்

சச்சினின் 24 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையின்போது இந்தியாவில் மிகப் பெரிய ஊழல்கள் அம்பலமாகி நாட்டையே பரபரப்பில் ஆழ்த்தின. போபர்ஸ் பீரங்கி பேர ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி ஊழல் ஆகியவை அவற்றில் சில.

உலக மகா தலைவர்கள் வலம் வந்த காலம்

சச்சின் கிரிக்கெட் விளையாடிய காலத்தில் உலகமும் பல மகத்தான தலைவர்களைக் கண்டது. கார்ப்பசேவ், ஜார்ஜ் புஷ் சீனியர், மார்கரெட் தாட்சர், ஹெல்மட் கோல் ஆகியோர் அவர்களில் சிலர்.

மாருதி 1000 முதல் போர்ட் ஈகோஸ்போர்ட் வரை

சச்சின் கிரிக்கெட் விளையாடிய காலத்தில்தான் மாருதி தனது 1000 ரக காரை அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர் மாருதி பெற்ற வளர்ச்சி நாடறிந்தது. இந்தியா மிகப் பெரிய கார் சந்தையாகவும் இன்று மாறி நிற்கிறது. ஈகோஸ்போர்ட் வரை வந்து விட்டது இந்தியாவின் கார்ச்சந்தை.

மாரடோனாவும், மைனே பியார் கியாவும்...

மாரடோனா எழுச்சி கண்டது இந்த காலகட்டத்தில்தான். இந்தியாவையே தனது வசீகரத்தில் கட்டிப்பட்ட மைனே பியார் கியா திரைப்படம் 1989ல்தான் வந்தது. அதேபோல சச்சின் விடைபெற்றபோது ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் வரலாறு படைத்திருந்தது.

போரிஸ் பெக்கரும், மைக் டைசனும்

டென்னிஸ் உலகை ஆட்டிப்படைத்த போரிஸ் பெக்கர், குத்துச் சண்டையில் பல பரபரப்புகளை நிகழ்த்திய மைக் டைசனும் இதே காலகட்டத்தில்தான் நம்மிடையே வலம் வந்தனர்.

அப்ப இவ்ளோதான் சம்பளம்

சச்சின் கிரிக்கெட் ஆட வந்தபோது, டெஸ்ட் போட்டிக்கு வீரர்களுக்கு இந்தியாவில், 40,000தான் சம்பளமாக தரப்பட்டது. ஒரு நாள் போட்டிக்கு 25,000 ரூபாய்தான் சம்பளம்.

இப்ப.. அம்மாடியோவ்...

ஆனால் இன்று இந்தியாவில் டெஸ்ட் போட்டி ஆடினால் வீரர்களுக்கு ரூ. 7 லட்சம் சம்பளமாக கிடைக்கிறது. அதேபோல ஒரு நாள் போட்டியில் ஆடினால், ரூ. 4 லட்சம் சம்பளமாகும்.

உருமாறிய கிரிக்கெட்

ஒரு காலத்தில் டெஸ்ட், ஒரு நாள் போட்டி என்று மட்டுமே இருந்து வந்த கிரிக்கெட்டில் சச்சின் காலத்தில் பல மாற்றங்களைக் கண்டது. கலர் பந்துகள், கலர் யூனிபார்ம், பகல் இரவு போட்டிகள் என கலர் கலராக மாறியது.

டுவென்டி 20 கிரிக்கெட்டின் பிறப்பு

மேலும் டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளை இன்று விழுங்கும் அளவுக்கு வளர்ந்துள்ள டுவென்டி 20 போட்டிகளும் சச்சின் காலத்தில்தான் பிறந்தன.

அசாத்திய பலத்துடன் இருந்த காங்கிரஸ்

சச்சின் கிரிக்கெட் விளையாட வந்தபோது லோக்சபாவில் காங்கிரஸ் கட்சிக்கு 404 எம்.பிக்கள் இருந்தனர். ஆனால் தற்போது சச்சின் விடைபெற்ற சமயத்தில் காங்கிரஸின் பலம் 209 தான். 1989ல் சுண்டைக்காய் போல இருந்த பாஜக இன்று முக்கிய எதிர்க்கட்சியாக திகழ்கிறது.

மேஷின்டோஷ் முதல் ஆப்பிள் ஐபோன் வரை

1989ல் மேஷின்டோஷ்தான் பாப்புலர். இன்று ஆப்பிள் ஐபோன்தானுக்குத்தான் கிராக்கி.. என்ன ஒரு மாற்றம் பாருங்கள்.

கீதாஞ்சலி அய்யரை விட்டால் அன்று ஆள் இல்லை..

சச்சின் கிரிக்கெட் விளையாட வந்தபோது டிவி செய்தி வாசிப்பாளர் என்றால் அத்தனை பேரும் கீதாஞ்சலி அய்யரைத்தான் சொல்வார்கள். ஆனால் இன்றோ.. விதம் விதமான செய்தி வாசிப்பாளர்கள், எத்தனை டிவி சேனல்கள்....

34 புதிய நாடுகளைக் கண்ட சச்சின்

சச்சின் விளையாடிய 24 ஆண்டுகளில் உலகம் 34 புதிய நாடுகளின் பிறப்பைக் கண்டுள்ளது. அதில், செக்கோஸ்லோவேகியாவிலிருந்து மட்டும் 5 நாடுகள் பிறந்தன. சோவியத் யூனியன் சிதறுண்டதில் பிறந்தவை 15. மற்றவை பிற நாடுகள்.

ஈழம் மட்டும்தான் மிஸ்ஸிங்

சச்சின் ஆடிய காலத்தில் உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது பிரபாகரன் தலைமையில் விடுதலைப் புலிகள் இலங்கை அரசுக்கு எதிராக நடத்திய சுதந்திரப் போர். ஆனால் சச்சின் விளையாடி முடித்தபோது அந்தப் போரும் முடிந்து போய் விட்டது. ஈழமும் பிறக்காமலேயே போய் விட்டது.

டாடாவின் 3 வாரிசுகள்

சச்சின் விளையாட வந்தபோது டாடா குழுமத்தின் தலைவராக ஜேஆர்டி டாடா இருந்தார். பின்னர் ரத்தன் டாடா வந்தார். தற்போது சைரஸ் மிஸ்ட்ரி இருக்கிறார்.

7 கேப்டன்களைக் கண்ட சச்சின்.. அவரையும் சேர்த்து

சச்சின் விளையாடிய காலகட்டத்தில் இந்திய அணி மொத்தம் 7 கேப்டன்களைப் பார்த்துள்ளது. அதில் சச்சினும் ஒருவர்.

9 ரூபாய்க்கு பெட்ரோல் விற்ற காலம்

1989ம் ஆண்டு பெட்ரோல் விலை இந்தியாவில் லிட்டருக்கு ரூ. 8.50தான். ஆனால் இன்று 70 ரூபாய்க்கு மேல் போய் நிற்கிறது.
நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்...!
 

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!