Tuesday, April 16, 2013

அண்ணாமலை பல்கலைக்கழகத்தை தமிழக அரசு ஏற்று நடத்த முடிவு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை தமிழக அரசு ஏற்று நடத்த முடிவு


சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை தமிழக அரசே ஏற்று நடத்த முடிவு செய்துள்ளது. இதையடுத்து நிறுவனர் பரம்பரையின் உரிமைகள் ரத்தாகும். இது தொடர்பான சட்ட திருத்தத்துக்கான சட்ட முன் வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பல்வேறு நிதி நெருக்கடிகள் ஏற்பட்டன. ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை இருந்தது.

இது குறித்து ஆய்வு நடத்திய தமிழக அரசின் கல்வித்துறையினர் நிதி நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதை கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமநாதனை சஸ்பெண்ட் செய்து ஆளுநர் ரோசய்யா உத்தரவிட்டார். இதையடுத்து, பல்கலைக்கழக நிர்வாக அதிகாரியாக தமிழக அரசின் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், அண்ணாமலை பல்கலைக்கழகத்தை தமிழக அரசு ஏற்கும் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து இதற்கான சட்ட திருத்த சட்ட முன் வடிவை சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் நேற்று தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த சட்ட முன்வடிவில் கூறியிருப்பதாவது:

ராஜா சர் அண்ணாமலை செட்டியார் என்பவர் சிதம்பரம் அருகே கல்லூரிகளை நடத்தினார். அதில் ஆங்கிலம், தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் உயர்கல்வி போதிக்கப்பட்டது. 1928ல் அந்த கல்வி நிறுவனங்களையும் அதனை சார்ந்த சொத்துகளையும் அப்போதைய உள்ளாட்சி அமைப்பிடம் ஒப்படைத்த அண்ணாமலை செட்டியார், அண்ணாமலை நகரில் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க ரூ.20 லட்சம் வழங்கவும் சம்மதித்தார். அவர் மற்றும் அவரது வாரிசுகள், அதிகாரங்கள் மற்றும் சலுகைகள் பெறத்தகுதியுடையவர்கள் என்று ஒப்புக் கொண்டிருந்தார்.

அதன்படி தமிழகத்தில் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்காக 1928ல் அண்ணாமலை பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. அதன் நிறுவனராக ராஜா அண்ணாமலை செட்டியார் அங்கீகரிக்கப்பட்டார். அதை தொடர்ந்து அவரது வாரிசுகள், உரிய அதிகாரங்களை பெற்று வந்தனர். பல்கலைக்கழக சட்டத்தின்படி நிறுவனரே பல்கலைக்கழக இணைவேந்தராக இயங்கி வருகிறார். சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நிறுவனர் 3 பெயர்களை கொண்ட பட்டியலை வேந்தருக்கு பரிந்துரை செய்தால் அதில் ஒருவரை துணைவேந்தராக வேந்தர் நியமனம் செய்வார். அவ்வாறு நியமனம் செய்யப்படும் துணைவேந்தர், முதன்மை நிர்வாக அலுவலர் என்ற வகையில் பிற ஊழியர்களை பணி அமர்த்தும் அதிகாரம் உடையவராகவும், வாரிய உறுப்பினராகவும் செயல்படுவார்.

நிறுவனர் பதவியானது வாரிசு அடிப்படையில் வாழ்நாள் முழுவதும் வகிக்கும் பதவியாகும். அவரது பரிந்துரையில் துணைவேந்தராகும் ஒருவரால் பல்கலைக்கழகம் நிர்வகிக்கப்படுகிறது. இந்த சலுகையானது சமூக ஒழுங்கு அமைவில் அனைவருக்கும் உரிமை என்ற கொள்கை, கோட்பாட்டின்படி ஏற்க இயலாததாக உள்ளது.

இந்த பல்கலைக்கழகத்தில் 2012 நவம்பரில் ஆட்குறைப்பு மற்றும் ஊதியம் குறைத்தல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுக்கள் உண்ணாவிரதம், வேலை நிறுத்தம், நுழைவாயில் கூட்டங்கள், போராட்டங்கள் போன்றவற்றில் ஈடுபட்டன. இதனால் அங்கு அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டது. தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.

 பல்கலைக்கழகத்துக்கு தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு வருடமும் பல கோடி ரூபாய் தொகுப்பு நிதியாக வழங்கப்படும் நிலையில், எப்போதும் இல்லாத வகையில் அந்த பல்கலைக்கழகம் நிதி நெருக்கடியில் சிக்கியது. தேவைக்கு அதிகமான ஊழியர்கள் நியமனம், மற்ற தேவைகளுக்கு பல்கலைக்கழக நிதியை பயன்படுத்துதல் ஆகியவற்றால் பல்கலைக்கழகத்துக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது.

மாணவர்களின் நலனை பாதுகாக்கவும், ஊழியர்களின் அச்சத்தை போக்கவும், அண்ணாமலை பல்கலைக்கழக நிதி மற்றும் பிற முறைகேடுகள் குறித்து தணிக்கை செய்து மதிப்பீடு வழங்கும் உள்ளாட்சி நிதிக்குழுவை தமிழக அரசு அமைத்தது. தணிக்கை குழு அறிக்கையை பகுத்தாய்வு செய்து அரசு பரிந்துரைக்கும் உயர்மட்டக்குழுவையும் அரசு அமைத்தது.

கடந்த 1928ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழக சட்டத்தில் உள்ள அம்சங்கள் பிற பல்கலைக்கழக சட்டங்களோடு ஒத்திருக்கவில்லை. அண்ணாமலை பல்கலைக்கழக நிறுவனருக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டதால் பல்கலைக்கழக நிர்வாகம் சீர்கேடான நிலைக்கு சென்றது. இதனால் இந்த சட்டத்தில் திருத்தங்கள் தேவை.

ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர் வாழ்வாதாரங்களை பாதுகாக்கும் கடமையும் அரசுக்கு உள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அண்ணாமலை நகருக்கு அருகில் உள்ள ஊரகப் பகுதி மாணவர்களுக்கு உயர்கல்வி அளிப்பதை உறுதி செய்யும் கடமையும் அரசுக்கு உள்ளது. எனவே தற்போதைய அண்ணாமலை பல்கலைக்கழத்தின் சட்டத்தை மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு இணையாக்கி சட்ட மாற்றம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த சட்ட முன்வடிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சட்ட முன்வடிவு மூலம் துணைவேந்தரின் அதிகாரங்களை செயல்படுத்த நிர்வாகி ஒருவர் அரசால் நியமிக்கப்பட வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படுபவர் பிற பல்கலைக்கழகத்திலோ, கல்லூரியிலோ பேராசிரியர் அல்லது அரசு செயலாளர் அந்தஸ்துக்கு குறையாதவராக இருத்தல் வேண்டும். இந்த சட்டத்தின் மூலம் அண்ணாமலை பல்கலைக்கழக கட்டிடங்கள், கருவிகள், புத்தகங்கள், மற்றும் நூலகம் உள்ளடங்கிய அசையும், அசையா சொத்து அனைத்தையும் அரசால் நியமிக்கப்பட்ட நிர்வாகியே செயல்படுவார். துணைவேந்தர், பதிவாளர் தவிர ஆசிரியர், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் பணியாற்றுவார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை பல்கலை வரலாறு

அண்ணாமலை பல்கலை.யின் வரலாற்றை திரும்பிப் பார்த்தால் ஆச்சரியங்களும் பெருமிதமும் கொட்டிக் கிடக்கின்றது. இந்த பல்கலை. முதலில் ஒரு கல்லூரியாக தொடங்கப்பட்டது.

* கடலூர் மாவட்டம் சிதம்பரம் திருவேட்களம் பகுதியில் 1920ம் ஆண்டு மீனாட்சி கல்லூரி என்ற பெயரில் செட்டிநாட்டரசர் அண்ணாமலை செட்டியாரால் துவக்கப்பட்டது.
* கல்லூரிக்கு முதலாவது முதல்வராக இருந்தவர், இன்றளவும் தமிழ் தாத்தா என பெருமையுடன் அழைக்கப்படும் உ.வே.சாமிநாத அய்யர். அப்போது, ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த சமயம், 1904ம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய பல்கலை. சட்டப்படி தமிழை பயிற்றுவிக்க முடியாமல் இருந்தது. தமிழ் மொழியை வட்டார மொழியாக ஆங்கிலேயர் அறிவித்து இருந்தனர். வட்டார மொழியில், பல்கலைக் கழகங்களை நடத்தக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தமிழகத்தில் (அப்போது சென்னை மாகாணம்) நீதிக் கட்சியின் ஆட்சி நடந்தது. அந்த அரசு இயற்றிய சட்டத்தின் வாயிலாக அண்ணாமலைப் பல்கலைக்கழகமாக மீனாட்சி கல்லூரி மாறியது.
* 1921,1948 வரை அண்ணாமலை செட்டியார் இணைவேந்தராக இருந்துள்ளார். முதலில் தமிழ், பொருளாதாரம் வகுப்புகள் நடத்தப்பட்டன. பின்னர் பிஏ வகுப்புகள் தொடங்கப்பட்டது. 1931ல் ஆனர்ஸ் வகுப்புகள் தொடங்கப்பட்டன.
* சென்னை, ஆந்திரா பல்கலைக்கழகங்களில் ஏம்.ஏ வகுப்பு தொடங்கும் முன்னே இங்கு தொடங்கப்பட்டது. இசை ஆராய்ச்சிக்கு என தனிப் பாடம் தொடங்கி முழுவதும் தமிழிலேயே பாடல்கள் கற்றுத் தரப்பட்டன.
* அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம் நகருக்கு மேற்கே 1,500 ஏக்கர் பரப்பளவில் அண்ணாமலை நகரில் அமைந்துள்ளது. 75 ஆண்டுகளில் 48 துறைகளாக வளர்ந்துள்ளது. தற்போது 12,500 ஆசிரியர்கள், ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். டொரொண்டோ, கனடா ஆகிய வெளிநாடுகளிலும் அண்ணாமலை பல்கலை.யின் படிப்பு மையங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!