Tuesday, March 19, 2013

கனடா சிறையில் இருந்து ஹெலிகாப்டரில் பறந்த கைதிகள்

கனடா சிறையில் இருந்து ஹெலிகாப்டரில் பறந்த கைதிகள்


கனடா நாட்டில் கியூபெக் மாகாணத்தில் உள்ள சிறையிலிருந்து பட்டப் பகலில் 2 கைதிகள் ஹெலிகாப்டர் உதவியுடன் தப்பினர். சினிமா காட்சி போல நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கனடாவின் கியூபெக் மாகாணத்தில் செயின்ட்,ஜெரோம் சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைக்கு மேலே நேற்றுமுன்தினம் பிற்பகலில் வானில் ஒரு ஹெலிகாப்டர் வட்டமடிக்க அதிலிருந்து போடப்பட்ட கயிற்றில் ஏறி 2 கைதிகள் தப்பினர். பெஞ்சமின் ஹூடன்,பார்பியா (36), டேனி புரோவென்கால் (33) என்ற அந்த கைதிகள் தப்பியது சில நிமிடங்களில் அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

உடனே, போலீசார் அந்த ஹெலிகாப்டர் எங்கு செல்கிறது என்று கண்காணித்து கார்களில் பின் தொடர்ந்தனர். எனினும், ஹெலிகாப்டர் சிறிது நேரத்தில் மறைந்து விட்டது. நீண்ட நேரத்திற்கு பின்னர், சுமார் 85 கி.மீ. தொலைவில் மாண்ட்,டிரம்பிளண்ட் என்ற இடத்தில் அந்த ஹெலிகாப்டர் தரையிறங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் விமானி மட்டுமே இருந்தார். மயங்கிய நிலையில் இருந்த அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரிடம் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, சிறையிலிருந்து சுமார் 50 கி.மீ. தூரத்தில் பெஞ்சமின் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பிய மற்றொரு கைதியான டேனி புரோவென்கால் இருக்கும் இடம் தெரிந்துள்ளது. அவர் சுற்றி வளைக்கப்பட்டுள்ளார் என்றும் போலீசார் தெரிவித்தனர். செயின்ட்,ஜெரோம் சிறை கண்காணிப்பு அதிகாரி வைவெஸ் காலர்நியோ கூறுகையில், ''எனது 30 ஆண்டுகால சர்வீஸில் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது இல்லை. வான் வழியாக தப்புபவர்களை தடுக்க இப்போதைக்கு சிறையில் எந்த வசதியும் இல்லை'' என்றார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!