Tuesday, February 19, 2013

இந்தியாவின் மாபெரும் பணக்காரர்கள் செய்யப் போகும் ஒரு உருப்படியான வேலை!


இந்தியாவின் மாபெரும் பணக்காரர்கள் செய்யப் போகும் ஒரு உருப்படியான வேலை!


இந்தியாவின் மாபெரும் பணக்காரர்கள் அடுத்த மாதம் ஒரு உருப்படியான வேலை ஒன்றை செய்யப் போகின்றனர்.

விபத்துகளில் சிக்கி தலையில் அடிபட்டும், மூளையில் பாதிப்பு ஏற்பட்டும் பரிதவிப்போருக்கு உதவுவதற்காக ஜோத்பூர் மகாராஜாவான கஜ் சிங் Indian Head Injuries Foundation என்ற அறக்கட்டளையை துவக்கினார்.

கலை பொக்கிஷங்களின் ஏலம்: 

இவரது மகன் சிவராஜ் சிங் கடந்த 2005ம் ஆண்டு போலோ விளையாட்டின்போது தலையில் கடுமையாக காயம் அடைந்ததையடுத்து இந்த அறக்கட்டளையை அவர் துவக்கி, தனது சொந்தப் பணத்தில் நாடு முழுவதும் தலையில் அடிபட்டு சிகிச்சைக்கு வழியில்லாமல் தவிக்கும் ஏழைகளுக்கு உதவி வருகிறார். இந் நிலையில் இந்த அறக்கட்டளைக்கு நிதி திரட்ட ஜோத்பூர் மெஹ்ரான்கர்க் அரண்மனையில் அடுத்த மாதம் 8ம் தேதி மாபெரும் கலை பொக்கிஷங்களின் ஏலம் நடக்கவுள்ளது.


ரூ. 7,500 கோடி வரை நிதி திரட்ட... 

இந்த ஏலத்தில் பண்டை கால ஓவியங்கள், நகைகள், சிற்பங்கள், நாற்காலிகள், கண்ணாடிப் பொருட்கள் உள்ளிட்ட படைப்புகள் ஏலம் விடப்படவுள்ளன. ஒரு கலைப் பொருளின் அடிப்படை விலையும் ரூ. 50 கோடியாகும். கிட்டத்தட்ட 150 பொருட்கள் ஏலம் விடப்படவுள்ளன. இதன்மூலம் குறைந்தபட்சம் ரூ. 7,500 கோடி வரை திரட்ட முடியும் என்று கருதப்படுகிறது.


அம்பானி, இளவசரர் ஆண்ட்ரூ, சுனிதா: 

இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீத்தா, ஏர்டெல் அதிபர் சுனில் பாரதி மிட்டல், தொழிலதிபர்களான கே.பி.சிங், சுனிதா ரெட்டி, அதுல் புஞ்ச், பிரமித் ஜவேரி, சஞ்சய் நாய் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் இங்கிலாந்து இளவசரர் ஆண்ட்ரூ, பிரான்ஸ் பில்லியரான பாட்ரிக் குர்ரான்ட் ஹெர்மிஸ், அமெரிக்க திரைப்படத் தயாரிப்பாளர் பாரஸ்ட் ஸ்டீவன் விடேகர், இங்கிலாந்து எழுத்தாளர் ஜெமீமா கான் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். இந்த ஏலத்தையொட்டி இங்கிலாந்து பாடகர் ஸ்டிங்கின் இசை நிகழ்ச்சியும், கைவினைப் பெருட்கள் கண்காட்சியும், யோகா பயிற்சிகளும் நடக்கவுள்ளன.


சுமித்ரா தேவி பிர்லா: 

இந்த ஏலத்தில் மகாராஜா கஜ் சிங் தவிர பண்டைய கால, விலை மதிப்பற்ற பொருட்களை வைத்திருக்கும் திருவாங்கூர், கபுர்தலா சமஸ்தான குடும்பத்தினர், சுமித்ரா தேவி பிர்லா உள்ளிட்ட பலரும் பங்கேற்று அதை இந்த நல்ல பணிக்காக இலவசமாகத் தரவுள்ளனர். இந்தப் பொருட்களில் எம்.எப்.ஹூசேனின் ஓவியங்களும் அடக்கம். பெங்களூரைச் சேர்ந்த Bid & Hammer நிறுவனம் தான் இந்த ஏலத்தை நடத்தவுள்ளது. இந்த அறக்கட்டளையின் தலைவராக எச்டிஎப்சி வங்கியின் தலைவரான தீபக் பரேக் உள்ளார். இதற்காக ஊதியம் ஏதும் பெறாமல் இலவசமாக இந்தப் பணியை அவர் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.



தலை காயத்தால்  பாதிப்பு: 


இந்தியாவில் வருடந்தோறும் 15 லட்சம் பேர் தலையில் காயமடைகின்றனர். இதில் 6ல் ஒருவர் மரணமடைந்துவிடுகிறார். இந் நிலையில் தான் இந்த அறக்கட்டளையைத் துவக்கி உதவும் பணிகளில் தொழிலதிபர்களையும் ஈடுபடுத்தவுள்ளார் மகாராஜா கஜ் சிங். உண்மையிலேயே இவர் 'மகா' ராஜா தான்!!


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!