Thursday, January 2, 2014

ஐஸ் கட்டிகளுக்குள் சிக்கி நிற்கும் ரஷ்ய கப்பலை மீட்கும் முதல் முயற்சி தோல்வி!

ஐஸ் கட்டிகளுக்குள் சிக்கி நிற்கும் ரஷ்ய கப்பலை மீட்கும் முதல் முயற்சி தோல்வி!



52 பயணிகள் (இவர்களில் பெரும்பாலானோர் கடல் ஆராய்ச்சியாளர்கள்) மற்றும் 22 மாலுமிகளுடன் கடல் நடுவே ஐஸ்கட்டிகளுக்குள் சிக்கி நிற்கும் ரஷ்ய கப்பல் பற்றிய கட்டுரையையும் போட்டோக்களையும் வெளியிட்டிருந்தோம்.  (அந்த கட்டுரையை தவறவிட்டவர்கள் இங்கே கிளிக் செய்யவும்)

இந்தக் கப்பலை பனிக்கட்டிகளில் இருந்து வெளியே இழுக்கும் மீட்பு நடவடிக்கைகளுக்காக இரு பெரிய கப்பல்கள் விரைகின்றன எவும் அந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம்.

ரஷ்யக் கப்பலை மீட்க அனுப்பி வைக்கப்பட்ட ஆஸ்திரேலிய கப்பல், பனிக்கட்டிகளுக்குள் சிக்கியுள்ள ரஷ்ய கப்பலை இன்னமும் நெருங்க முடியவில்லை. இன்று காலை 6 மணிக்கு (சிட்னி நேரம்) ரஷ்யக் கப்பல் உள்ள பகுதிக்கு ஆஸ்திரேலிய கப்பல் சென்றடைந்து விட்ட போதிலும், ரஷ்யக் கப்பலை சுற்றியுள்ள பனிக்கட்டிகளை உடைத்துச் செல்ல முடியாமல் தத்தளிக்கிறது ஆஸ்திரேலிய கப்பல். (ஆஸ்திரேலிய ஐஸ்பிரேக்கர் கப்பலின் மேல் தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட போட்டோவை மேலே பார்க்கவும்)

மீட்பு பணிக்காக சென்ற ஆஸ்திரேலியக் கப்பலின் பெயர், அவுரோரா அவுஸ்திரேலிஸ். ஐஸ்பிரேக்கர் (icebreaker) ரக கப்பல் இது. அதாவது இந்த ரக கப்பல்களின் அடிப்பாகம், கடலில் உள்ள ஐஸ் கட்டிகளை உடைத்துச் செல்லக்கூடியவை.

காலை 6 மணியில் இருந்து 9 மணிவரை ரஷ்யக் கப்பலை கூழ்ந்துள்ள ஐஸ் கட்டிகளை உடைக்கும் முயற்சியில் ஆஸ்திரேலிய கப்பல் ஈடுபட்ட போதிலும், அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. மாறாக, ஆஸ்திரேலிய கப்பலும் ஐஸ் கட்டிக்குள் சிக்கிக் கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டு விட்டது.

இதையடுத்து, ஆஸ்திரேலிய கப்பலின் கேப்டன் முர்ரே டோய்ல், மீட்பு முயற்சியை கைவிட்டு, தமது கப்பலை 2 கடல் மைல்கள் பின்வாங்க செய்துள்ளார்.

இங்குள்ள கடலில் ஐஸ்கட்டிகளுக்கு வெளியே உள்ள பகுதியில் அலைகள் மிக மோசமாக உள்ளதாக கூறியுள்ளார் ஆஸ்திரேலியக் கப்பல் கேப்டன். அத்துடன் தென்கிழக்கு நோக்கி மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்றும் வீசிக்கொண்டு உள்ளதால், மீட்பு முயற்சியில் எப்படி ஈடுபடுவது என்று தெரியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த சிக்கல் இந்த கடல் பகுதியில் கடல்மட்ட பனிப் புகார் (low-hanging fog) காரணமாக ஏற்பட்டுள்ள, எதிரே பார்க்க முடியாத தன்மை (no visibility). இதனால், ரஷ்ய கப்பலை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மீட்பு நடவடிக்கைகளுக்காக சென்ற ஆஸ்திரேலியக் கப்பல் தனது முதல் முயற்சியில் இருந்து பின்வாங்கியுள்ள நிலையில், மீட்புப் பணிக்காக வந்துள்ள இரண்டாவது ஐஸ்பிரேக்கர் கப்பல் இங்கு வந்து சேர்ந்துள்ளது. இந்த இரண்டாவது கப்பல், சீனக் கப்பல். பெயர், சூ லொங்.

தற்போதுள்ள சூழ்நிலையில் அந்த கப்பலும் ஐஸ் பாளங்களில் இருந்து விலகியே நிற்கிறது.

மொத்தத்தில் ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது போல இந்த மீட்பு நடவடிக்கை சுலபமாக இருக்கப் போவதில்லை. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஒருவேளை இரு கப்பல்களாலும் ரஷ்ய கப்பலை அணுக முடியாவிட்டால், ஹெலிகாப்டர் மூலம் பயணிகளை மீட்கும் நடவடிக்கை தொடங்கப்பட வேண்டும். அதற்கு, ஹெலிகாப்டர் தாங்கி கப்பல் ஒன்று இங்கு வந்து சேர வேண்டும்.



No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!