Tuesday, December 31, 2013

துபாயில் பிரிட்டிஷ் பிரதமருக்கு மூக்கு உடைந்தது: “போய்யா.. நீரும், உம்ம பிளேனும்”

துபாயில் பிரிட்டிஷ் பிரதமருக்கு மூக்கு உடைந்தது: “போய்யா.. நீரும், உம்ம பிளேனும்”




விமானம் தயாரிக்கும் மேலை நாட்டு நிறுவனங்களுக்கு, அவர்களது விமானங்களை விற்பதில் அந்தந்த நாட்டு தூதரகங்கள் உதவுவது என்பது சர்வசாதாரணம். தரகங்கள் உதவுவதற்கு ஒருபடி மேலாக சென்று, சில விமான தயாரிப்பு நிறுவனங்களுக்கு, அந்தந்த நாட்டு ஜனாதிபதிகளோ, பிரதமர்களோ உதவுவதும் அவ்வப்போது நடப்பதுண்டு 

அப்படியொரு முயற்சியில் இறங்கிய பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேம்ரொன், இந்த வாரம் மூக்குடைபட்டிருக்கிறார். அவருக்கு நோஸ்கட் கிடைத்துள்ள இடம், துபாய். கொடுத்துள்ள நாடு, ஐக்கிய அரசு அமீரகம்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் விமானப்படைக்கு, போர் விமானங்கள் வாங்க முடிவு செய்துள்ளார்கள். அவர்களுக்கு விமானம் விற்பனை செய்வதற்காக, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உட்பட பல மேலை நாட்டு விமான தயாரிப்பு நிறுவனங்கள் போட்டியிட்டன. பிரிட்டனின் BAE Systems Plc நிறுவனம், தமது யூரோபைட்டர் டைஃபூன் போர் விமானங்களை விற்பதற்காக பெரும் முயற்சி செய்தது.

பிரிட்டிஷ் ராணுவத்தின் பட்ஜெட்டில் ஏகப்பட்ட வெட்டுகள் செய்யப்பட்டுள்ளதால், சமீப காலத்தில் பிரிட்டன் புதிய விமானங்கள் எதையும் வாங்குவதாக திட்டமில்லை. இதனால் பிரிட்டிஷ் விமானத் தயாரிப்பு நிறுவனம், தமது விமானங்களை விற்பதற்கு வெளிநாட்டு விமானப்படைகளை நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலை.

இன்றைய தேதியில் விமானப்படைக்கு விமானம் விமானமாக வாங்கி குவிக்கும் நாடுகள், இந்தியாவும் அரபு நாடுகளும்தான். இந்தியா, தமக்கு தேவையான விமானங்களுக்கு ஏற்கனவே ஆர்டர் கொடுத்துள்ள நிலையில், மேலைநாட்டு விமானத் தயாரிப்பு நிறுவனங்களின் உயரதிகாரிகள் அரபு நாடுகளில்தான் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான், தமது நாட்டு விமானத் தயாரிப்பு நிறுவனமான BAEக்கு கைகொடுக்க முன்வந்தார் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன்.

இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு, பிரிட்டன் திரும்பும் வழியில், துபாய் சென்றார் அவர். அப்போது துபாயில் ஏர்-ஷோ நடந்து கொண்டிருந்தது. அனைத்து நாடுகளின் விமான தயாரிப்பு நிறுவனங்கள் போல BAE-ம் ஸ்டால் அமைத்திருந்தது.

பிரிட்டிஷ் பிரதமர் தாமே தனிப்பட்ட முறையில் பிரிட்டிஷ் விமானங்களை விற்பனை செய்வதற்கு ஐக்கிய அரபு அமீரக தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரிட்டிஷ் பிரதமரே தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டதையடுத்து, ஐக்கிய அரபு அமீரக விமானப் படைக்காக பிரிட்டிஷ் விமானங்களே வாங்கப்படும் (6 பில்லியன் பவுன்ட்ஸ் டீல்!) என ஏவியேஷன் வர்த்தகத்தில் உள்ள பலரும் ஊகம் வெளியிட்டிருந்தார்கள்.

ஐக்கிய அரபு அமீரக விமானப்படை அதிகாரிகளும், பிரிட்டிஷ் தயாரிப்பான யூரோபைட்டர் டைஃபூன் போர் விமானங்களை வாங்குவதையே விரும்புகின்றனர் எனவும் செய்திகள் வெளியாகின.

எல்லாமே பாசிட்டிவ்வாக இருந்த நிலையில், பிரிட்டிஷ் விமானங்களை வாங்குவதில்லை என இந்த வாரம் முடிவெடுத்துள்ளது ஐக்கிய அரபு அமீரகம்.

இந்த சறுக்கல், பிரிட்டிஷ் பிரதமரின் தனிப்பட்ட முயற்சிக்கு கிடைத்த தோல்வி என பிரிட்டிஷ் மீடியாக்கள் அலறுகின்றன.

அமீரகத்துக்கு விமானம் விற்பதில் பிரிட்டிஷ் நிறுவனத்துடன் நெக்-டு-நெக் போட்டியில் இருந்த நிறுவனங்கள், சுவீடன் நாட்டு விமான தயாரிப்பு நிறுவனம் Saab, மற்றும் பிரான்ஸின் Dassault Aviation நிறுவனம். இவர்களில் யாருக்கோ இந்த 6 பில்லியன் பவுன்ட்ஸ் டீல் அதிஷ்டம் அடிக்க போகிறதா தெரியவில்லை.

இதில் மற்றொரு விஷயமும் உள்ளது. Saab நிறுவனத்தின் கிரிப்பன் ஜெட் போர் விமானமும், Dassault Aviation தயாரிக்கும் ரஃபால் பைட்டர் விமானமும், பிரிட்டிஷ் யூரோபைட்டர் டைஃபூன் போர் விமானங்களை விட விலை குறைந்தவை என்பது உண்மைதான். ஆனால், விலைக்கு ஏற்ற வகையில் செயல்திறனும் குறைந்தவை.

வாசகர்களில் எத்தனை பேருக்கு பிரிட்டிஷ் யூரோபைட்டர் டைஃபூன் போர் விமானங்களுடன் பரிச்சயம் உள்ளது என்று தெரியவில்லை. பரிச்சயம் இல்லாதவர்கள் நாம் இணைத்துள்ள போட்டோக்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

அரபு நாட்டு காலநிலைக்கு நன்கு பொருந்தக்கூடிய விமானங்கள் இவை. அமீரக விமானப்படை அதிகாரிகளும், யூரோபைட்டர் டைஃபூன் போர் விமானங்களை வாங்குவதையே விரும்புகின்றனர் என்ற கூற்றும் நிஜம்தான் என்பதை, பிரிட்டிஷ் யூரோபைட்டர் டைஃபூன் போர் விமானத்தின் சில பிளஸ்களுடன் காட்டுகிறோம், பாருங்கள்.

போட்டோவை பாருங்கள். டைஃபூன் விமானம், அதிக பே-லோடுடன் சுலபமாக திரும்பக் கூடியது என்பதை கவனியுங்கள். அரேபிய பகுதியில் குறுகலான நாட்டு வான் பாதைகளில் சில நாடுகளை தவிர்க்க இது அவசியம். அல்லது, தேவையற்ற நாட்டு வான் எல்லைக்குள் விமானி தவறிப் போய் புகுந்துவிட வாய்ப்பு உண்டு.


போட்டோவில், டைஃபூன் போர் விமானத்தில் இருந்து ஏவுகணை ரிலீஸ் செய்யப்படும் நேர்த்தியை பாருங்கள் (கிராஃபிக் படம்),



அப்படியே போட்டோவில், டைஃபூன் போர் விமானத்தின் கீழ்ப்பகுதியில் பொருத்தப்படக்கூடிய ஆயுதங்களின் தொகையை பாருங்கள். இந்த பே-லோடுடன் முழுமையான இயங்கு திறனுடன் பறக்கக்கூடிய விமானம் இது.



போட்டோவில், டைஃபூன் போர் விமானத்தில் பறந்து கொண்டிருக்கும் ஒரு விமானியின் வியூவை பாருங்கள். மிராஜ் போன்ற விமானங்களின் காக்பிட்டில் இருந்து பார்த்தால், பதுங்கு குழிக்குள் இருந்து பார்ப்பது போல தெரியும்.



டைஃபூன் போர் விமானத்தின் காக்பிட்டில் இருந்தால், எதிரி விமானங்களை மிக தெளிவாக பார்க்கலாம். ‘வானத்து நாய் சண்டை’ (Sky Combat air-to-air dogfighting) எனப்படும் துரத்தித் துரத்தி  தாக்கும் யுத்தத்துக்கு சூப்பர் டூப்பர் வடிவமைப்பு, இந்த காக்பிட்தான். (காக்பிட்டின் இடதுபுறம் பறக்கும் மற்றொரு விமானத்தை பாருங்கள்.. எவ்வளவு தெளிவாக உள்ளது)

பிரிட்டிஷ் விமானத்தை வேண்டாம் என்று சொன்ன அமீரக விமானப்படை தற்போது பயன்படுத்தும் அமெரிக்க தயாரிப்பு F16E ரக போர் விமானத்தை போட்டோவில் பாருங்கள்.



சரி. அமீரகம் எதற்காக பிரிட்டிஷ் விமானங்களை நிராகரித்தது? காரணம் வெளிப்படையாக கூறப்படவில்லை. ஊகம் என்னவென்றால், சிரியாவுக்கு எதிராக பிரிட்டன் தாக்குதல் நடத்தவில்லை என்ற கோபத்தில் அமீரகக்காரர்கள் “போய்யா.. நீங்களும், உங்க பிளேனும்” என்று உதறி விட்டார்களாம்!

ஏங்க.. அப்படின்னா இனி அமெரிக்க விமானங்களையும் வாங்க மாட்டீகளோ!


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!