Thursday, January 2, 2014

கடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல்! வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது!!

கடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல்! வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது!!


50 பயணிகள் (இவர்களில் பெரும்பாலானோர் கடல் ஆராய்ச்சியாளர்கள்) மற்றும் 20 மாலுமிகளுடன் கடல் நடுவே பனிக்கட்டிகளுக்குள் சிக்கி நிற்கிறது, ரஷ்ய கப்பல் ஒன்று. இந்தக் கப்பலை பனிக்கட்டிகளில் இருந்து வெளியே இழுக்கும் மீட்பு நடவடிக்கைகளுக்காக இரு பெரிய கப்பல்கள் விரைகின்றன என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

கடல் ஆராய்ச்சிக்காக அன்டார்க்டிக்கா பகுதிக்கு சென்று கொண்டிருந்த ரஷ்யக் கப்பல் எம்.வி. அகாடிமிக் சொகால்ஸ்கி, ஆஸ்திரேலியா கடலுக்கு அருகே கடலில் ஏற்பட்ட ஐஸ் பாளங்களுக்கு இடையே சிக்கிக் கொண்டது. பல ஆண்டுகளுக்கு முன், பிரிட்டனின் டைட்டானிக் சொகுசுக் கப்பலுக்கு ஏற்பட்ட அதே கதிதான் இது.

ஆனால், டைட்டானிக் கப்பலை கட்டிய காலத்தைவிட, தற்போது கப்பல் கட்டும் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டதில், ஐஸ் பாளங்களில் மோதினால், கப்பலின் அடித்தளம் (hull) உடைந்து விடாத அளவில் தற்போது கப்பல்கள் கட்டப்படுகின்றன. இதனால், தற்போது இந்த ரஷ்யக் கப்பல் கடலில் மிதக்கும் ஐஸ் பாளங்களில் மோதியபோதும், அதன் கீழ்ப்பகுதி உடைந்து போகவில்லை.

அன்டார்க்டிக்கா போன்ற அதிக கப்பல் நடமாட்டமற்ற பகுதிகளில் இந்த மாதங்களில் கடல் தண்ணீர் பனிக்கட்டியாக மாறுவது சஜம்தான். பனிக்கட்டி என்றால், நீங்கள் குளிர்பானத்தில் மிதக்கவிடும் அளவான ஐஸ் கட்டி அல்ல. சில நூறு மீட்டர் தடிப்புக்கு ஐஸ் கட்டிகள் கடலின் மேல் பரப்பில் உருவாகிவிடும். இதில் இறங்கி நடக்கலாம் (ரஷ்ய கப்பலில் சென்றவர்கள் ஜாலியாக நடுக்கடலில் ஐஸ் பாளங்களின் மேல் நடப்பதை 6-வது, 7-வது போட்டோக்களில் பாருங்கள்).

இந்தக் கப்பல் நியூசிலாந்தில் இருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தபோதே நடுக்கடலில் ஐஸ் பாளங்களில் சிக்கி நிற்கிறது.

கப்பல் நகர முடியாது போகவே கப்பலின் கேப்டன் ரேடியோ மூலம் அபாய சிக்னல் அனுப்பியதில், இந்தக் கப்பல் சிக்கிக் கொண்ட விபரம் ஆஸ்திரேலிய கடல் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. ஆனால், கப்பல் சிக்கிக்கொண்டுள்ள இடம், வழமையான கப்பல் போக்குவரத்து பாதையல்ல என்பதால், அந்த இடத்துக்கு மிக அருகில் உள்ள பெரிய கப்பல்கள் மீட்பு நடவடிக்கைக்கு சென்றடைய இரு தினங்கள் பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பலில் உள்ள பயணிகளின் உயிர்களுக்கு எந்த ஆபத்தும் கிடையாது.

கப்பல் இன்னமும் அங்கிருந்து அசையவில்லை. ஆனால், கப்பலில் இருந்த பயணிகள் எடுத்து அனுப்பிய சில போட்டோக்கள் சட்டலைட் ட்ரான்ஸ்மிஷன் மூலம் வந்து சேர்ந்து விட்டன. கப்பலில் நடுக்கடலில் பயணம் செய்தபோது ஐஸ் பாளங்களில் சிக்கிக் கொண்ட அனுபவம் உங்களுக்கு உள்ளதா? இல்லையென்றால், சுவாரசியமான அந்தக் காட்சியை நாம் இணைத்துள்ள போட்டோக்களில் பாருங்கள்.

1-வது போட்டோவில் கப்பல் பயணித்த பாதை, மற்றும் சிக்கிக் கொண்ட இடத்தின் வரைபடம் உள்ளது. 2-வது, 3-வது போட்டோக்களில் ஐஸில் சிக்கிக் கொண்ட கப்பலை வெவ்வேறு கோணங்களில் காணலாம். 3-வது 4-வது போட்டோக்களில் உள்ளதுதான், கப்பலை இயக்கும் கன்ட்ரோல் ரூம். கப்பல் செல்லும்போது இதிலிருந்து கடலை பார்த்துத்தான் கப்பலை செலுத்த வேண்டும் (தற்போது கப்பல் அசையாது நிற்பதால், 4-வது போட்டோவில் பயணிகள் கன்ட்ரோல் ரூமுக்குள் இருக்கிறார்கள்).

இந்தக் கப்பலின் உட்பகுதி வசதியானதா? 8-வது போட்டோவில் கப்பலுக்கு உள்ளேயுள்ள உணவுக் கூடத்தை பார்க்கலாம். 9-வது போட்டோவில், கப்பலில் உள்ள பயணிகள் அறையை (கேபின்) பார்க்கலாம். பெரும்பாலும் மேல்தளத்தில் உள்ள கேபினில் தங்கி பயணிக்க கட்டணம் அதிகம். காரணம், நல்ல வியூ கிடைக்கும். கீழ்த்தள கேபின் என்றால் கட்டணம் குறைவு. வெளியே தண்ணீர் மட்டும் தெரியும்!

நீங்கள் நாளைக்கே கப்பலில் போகலாம். ஆனால், நீங்கள் பயணிக்கும் கப்பல் ஐஸில் சிக்கிக் கொள்ளும் என்று சொல்ல முடியாது அல்லவா? எனவே, கடலில் எப்போதாவதுதான் நடக்கும் இந்த சம்பவத்தின் போட்டோக்களை கீழேயுள்ள லிங்க்கில் கிளிக் செய்து பார்த்து வையுங்களேன்…













No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!