Monday, October 21, 2013

சார்.. உங்களுக்கு ஏன் தலைமுடி நிறைய நரைக்குதுன்னு தெரியுமா....?

சார்.. உங்களுக்கு ஏன் தலைமுடி நிறைய நரைக்குதுன்னு தெரியுமா....? 




இன்றைய இளைஞர்கள் சந்திக்கும் பெரிய பிரச்சனைகளில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது முடி நரைத்தல். இப்போதெல்லாம் இந்த பிரச்சனை பரவலாக பல பேரை தாக்குகிறது. முக்கியமாக இளம் வயது ஆண்களையும், பெண்களையும். வளர்ந்து வரும் ஒழுங்கற்ற வாழ்க்கை முறை மற்றும் இதர பல காரணங்களால் இன்றைய இளைஞர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. அதனாலேயே அவர்களின் தலை முடியும் வேகமாக நரைத்து விடுகிறது. 

இன்று பல இளைஞர்கள் சாம்பல் நிறம் முதல் வெண்ணிற இளநரை முடியுடன் சுற்றி திரிவதை காண்கிறோம். வெறும் 34 வயதான கேடீ ஹோம் என்ற ஹாலிவுட் நடிகையை சாம்பல் நிற நரைத்த முடியுடன், நியூயார்க் நகரத்தில் ஒரு உணவகத்தில் காண முடிந்தது. சங்கடத்தை ஏற்படுத்தக் கூடிய இந்த இளநரை வருவதற்கு பல காரணங்கள் உள்ளது. நம் நாட்டிலும் இந்த பிரச்சனை அதிகளவில் உள்ளது. இதை பற்றி வல்லுனர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாமா?

எப்படி ஆரம்பிக்கிறது? 

பொதுவாக அடர்த்தியான கருமையான முடி உதிர தொடங்கும் போது, மெல்லிய வெண்ணிற முடி தெளிவாக தென்பட தொடங்கும். இப்படி கொட்டும் முடி சில மாதங்களுக்கு நீடிக்கும். ஆனால் திடீரென ஒரு இரவில் கொட்டிவிடும் முடிகளால் கூட இது ஏற்படலாம். நரைப்பதற்கு கூட ஒரு அமைப்பு உள்ளது. 


ஆண்களுக்கு எப்படி ஆரம்பிக்கிறது? 

ஆண்களுக்கு தாடியில் ஆரம்பிக்கும் நரை, பின் மீசைக்கு வந்து அங்கிருந்து தலையின் பகுதிகளுக்கு பரவும். நெஞ்சு முடி நரைக்க சில வருடங்கள் ஆகும்.


பெண்களுக்கு எப்படி ஆரம்பமாகிறது? 

பெண்களுக்கோ உச்சந்தலையில் தொடங்கும். பின் இந்த நரை அப்படியே பிற இடங்களுக்கு பரவி, முதுமைத் தோற்றத்தைத் தரும்.


ஏன் இது நடக்கிறது? 

பல இளைஞர்கள் இந்த பிரச்சனைக்காக ஆலோசனை கேட்க வருவது அதிகரித்து கொண்டே போகிறது. ஹார்மோன் சமமின்மை, கூடுதல் தைராய்டு சுரப்பிச் செயலாக்கம், தாழ் தைராய்டிசம், ஊட்டச்சத்துக் குறைவு, இரத்த சோகை, உணவுச்சத்துப் பற்றாக்குறை, எலெக்ட்ரிக் ட்ரையர் மற்றும் கடுமையான முடி சாயம் பயன்படுத்துவது, மரபியல் சார்ந்த கோளாறு, ஹீமோதெரபி, கதிர்வீச்சு என பல காரணங்களால் இந்த பிரச்சனை உண்டாகிறது.

எப்போது வேண்டுமானும் முடியானது நரைக்கும் 

சில நேரங்களில் 8 வயதான சிறுவர்களுக்கு கூட, லேசாக முடி நரைப்பதுண்டு. பின் அவர்கள் வளர வளர நரை முடியும் அதிகரிக்கும். மேலும் 25 வயதை கொண்ட பெண்கள் இந்த முடி நரைக்கும் பிரச்சனையை பற்றி அதிகமாக கவலை கொள்கிறார்கள். இது ஆண்களுக்கும் பொருந்தும். அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளது.

முதல் காரணம் 

முதல் காரணம் தவறான உணவு பழக்கங்கள். உணவில் சில வைட்டமின் பி, இரும்புச்சத்து, தாமிரம் மற்றும் அயோடின் போன்றவற்றில் குறைபாடுகள் இருந்தால், இந்த பிரச்னை ஏற்படும்.

இரண்டாவது காரணம் 

இரண்டாவது மன கவலைகள். மன அழுத்தம் ஏற்பட்டால், தலை சருமம் கடுமையான டென்ஷனுக்கு உள்ளாகும். அது நல்ல முடி வளர்ச்சிக்கு அளித்து வரும் ஊட்டச்சத்திற்கு தடையாக நிற்கும். இதுப்போக மன அழுத்தம், இரத்த சோகை, ஆரோக்கியமற்ற தலை சருமம், தலை முடியை சரிவர பராமரிக்காமல் இருப்பது மற்றும் மரபியல் பிரச்சனைகளாலும் இளநரை உண்டாகிறது.

இதற்கான தீர்வு என்ன? 

நரைத்த முடியை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற முடியாமல் போனாலும், உணவு பழக்கத்தை மாற்றி, தேவையான ஊட்டச்சத்துக்களை பெற்று, தலைமுடி மேலும் நரைக்காமல் தடுக்கலாம். மேலும் டாக்டர் ஷாஹ் என்பவர் இதற்கான சில வழிகளை பரிந்துரைக்கிறார். "சீரான முறையில் ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுதல், சரியான முடி மற்றும் தலை சரும பராமரிப்பு மற்றும் மன அழுத்தத்தை நீக்கும் நடவடிக்கைகள் என இவை அனைத்தும் அவசியம். இதற்கு தற்காலிக, பாதி நிலை மற்றும் நிரந்தர தீர்வுகள் இருக்கிறது. முடிக்கு மருதாணி தடவினால், அது தற்காலக தீர்வாகும். சந்தையில் உள்ள ஹேர் டையை வாங்கி முடிக்கு தடவினால், அது பாதி நிலை தீர்வாக விளங்கும். அதிலும் அது அம்மோனியா கலக்காத டையாக இருக்க வேண்டும்." என்று அவர் கூறுகிறார்.


டிப்ஸ் 

தலைக்கு பிரிங்ராஜ் எண்ணெயை தடவ வேண்டும். மேலும் காபிக்கு பதிலாக கிரீன் டீயை பருக வேண்டும். அதேப்போல் போலிக் அமிலம் அடங்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். மேலும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டு, மன அழுத்தத்தை நீக்கி, ஒழுக்கமில்லாத வாழ்வு முறையை கைவிட வேண்டும். இவ்வாறெல்லாம் செய்தால், முடி நரைப்பதை தடுக்கலாம். மேலும் நல்ல ஆரோக்கியமான முடியையும் பெறலாம்.