Wednesday, March 6, 2013

வெனிசூலாவின் 'புரட்சித் தலைவர்' சாவேஸ் மரணம்!

வெனிசூலாவின் 'புரட்சித் தலைவர்' சாவேஸ் மரணம்!



வெனிசூலா அதிபர், அந்நாட்டின் இணையற்ற தலைவர் எனப் புகழப்பட்ட ஹியூகோ சாவேஸ் நேற்று மாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 58.

வெனிசூலாவின் புரட்சித் தலைவர் என்று புகழப்பட்டவர் சாவேஸ். சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பிறகும் நிலைத்து நின்ற கம்யூனிஸ அரசாங்கங்களில் முதலிடம் வெனிசூலாவுக்குதான். காரணம் சாவேஸ்.

இதனால் அந்நாட்டின் புரட்சித் தலைவர் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்களால் புகழப்பட்டார். சமீபத்தில் நடந்த தேர்தல்களில் பிரமாண்ட வெற்றி பெற்று நான்காவது முறையாக அவர் அதிபரானபோதுதான், உலகம் அவரது மக்கள் செல்வாக்கை உணர்ந்தது.

உலகின் எண்ணெய் வளமிக்க நாடுகளில் முதன்மையானது வெனிசூலா. அமெரிக்காவின் ஆதிக்கம் இங்கு நிலைகொள்ள முடியாமல் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார் சாவேஸ்.

ஆனால் இந்த வெற்றியையும் அவர் நினைத்த அரசியல் மாற்றங்களையும் செய்ய முடியாத அளவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டார் சாவேஸ். புற்று நோய் தாக்கப்பட்ட சாவேஸ், கடந்த டிசம்பர் மாதம் கியூபாவில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகும் அவர் உடல் நிலையில் தொடர்ந்து சிக்கல்கள் இருந்து வந்தன. எனவே அவருக்கு கடந்த இரண்டு மாதங்களாக புதிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

சிகிச்சை முடிந்து வெனிசுலா அதிபர் சாவேஸ் 19-ம் தேதி நாடு திரும்பினார். வீட்டில் ஓய்வெடுத்து வந்த சாவேசுக்கு திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டது. ராணுவ மருத்துவமனையில் அவரை அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

ஹியூகோ சாவேசுக்கு நேற்று புதிய நோய் தொற்றும் ஏற்பட்டது. இதனால் அவரின் உடல் நிலை மோசமடைந்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது.

இதனைத்தொடர்ந்து அவர் வெனிசுலா நாட்டின் நேரப்படி நேற்று மாலை 4.25 மணிக்கு மரணம் அடைந்ததாக துணை அதிபர் நிக்கோலஸ் மடுரோ அறிவித்தார்.

சாவேஸின் மரணம் அந்நாட்டு மக்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்குப் பின் வெனிசூலாவின் அரசியல் நிலைமை என்னாகுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/03/06/world-venezuela-s-hugo-chavez-dies-from-cancer-170994.html

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!